பெரியக்கா கொல்லப்படுகிறார்

Periakka-300x285மாதம் ரிம 95 மட்டும் பெற்று வரும் தன்னைப்போன்றோர் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்கிறார் பெரியக்கா.

கருந்தங்கம் விளைந்த பத்து ஆராங்கில் பிறந்து, வளர்ந்து, பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரையில் படித்து சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்த பெரியக்கா த/பெ சின்னையா இன்று தமது எழுபத்தேழாவது வயதில் உயிர்வாழ போராடுகிறார்.

திருமணமாகாத பெரியக்கா, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். தவறி விழுந்ததால் உடைந்து போன கால். எழுந்து நின்று சுயமாக நடக்க இயலாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பெரியக்காவுக்கு வருமானம் என்று எதுவும் கிடையாது. அவர் “தொம்பாங் பண்ணிக்கிட்டிருக்கும்” வீட்டுக்காரர்கள் கொடுப்பதைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

கடந்த 17 ஆண்டுகளாக அவருக்கு சமூக பொதுநல இலாகா மாதந்தோறும் அளித்து வந்த உதவித் தொகை கடந்த ஜூன் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இந்த உதவித் தொகை மாதத்திற்கு ரிம 50 என்று தொடங்கி சிறுகச் சிறுக ரிம 95 க்கு உயர்த்தப்பட்டது.

வெறும் ரிம95 தானா? இது போதுமா? என்று கேட்டதற்கு, “இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கக் கூடாது, ஏன்னா பூனைக்கு சாப்பாடு போடக்கூட இது போதாது என்று உங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் தெரிந்து இருக்கனும்”, என்று அந்தக் கால பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேசும் பாணியில் பெரியக்கா பதில் அளித்தார்.

மே மாதம் தேர்தல் வந்தது. ஓட்டுப் போட்டேன். அதற்கு வந்து கூட்டிக் கொண்டு போனார்கள். ஜூன் வந்தது. உதவிப் பணம் வரவில்லை. இப்போது ஆறு மாதம் ஆகிவிட்டது. நிறுத்தியாச்சு என்ற தகவல் கூட கிடையாது என்று கூறிய பெரியக்கா, “ஏன் உதவித் தொகை நிறுத்தப்பட்டது” என்று தமக்குத் தெரியவில்லை என்றார்.

கடந்து ஜூன் மாதத்திலிருந்து சமூக பொதுநல உதவிப் பணம் கிடைக்காமல் பலர் பத்து ஆராங்கில் இருப்பதாக பெரியக்கா கூறினார். தமக்குத் தெரிந்த வரையில் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றார்.

வயதானவர்களை, ஏழைகளை, அதிலும் இந்தியர்களை ஏன் இப்படி நடத்துகிறார்கள் என்று தமது கவலையைத் தெரிவித்த பெரியக்கா, “இதுக்குத்தான் நாங்கள் ஓட்டுப் போட்டோமா?”, என்று கேட்டார்.

Gunaraj1கடந்த வெள்ளிக்கிழமை காலை மணி 10.30 அளவில், செலயாங் நகராட்சிமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் பத்து ஆராங்கில் பெரியக்காவை சந்தித்து விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்தே சம்பந்தப்பட்ட இலாகாவினருடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.

ஏன் உதவிப் பணம் நிறுத்தப்பட்டது என்பதற்கு இலாகாவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. ஆனால், பெரியக்கா தம்மை மீண்டும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மட்டும் பதில் கிடைத்தது.

இதில் சம்பந்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து தேவைப்படும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு  குணராஜ் கேட்டுக் கொண்டார்.

Ji-Wi-Kathaiahஇதைப்பற்றி கருத்துரைத்த ஜிவி காத்தையா, “அரசாங்கத்தின் ஏழ்மை ஒழிப்பு என்பதிலிருந்து பெரியக்கா போன்றோர் ஒதுக்கப்படும் போது, அரசாங்கம் தனது தார்மீக கடமையில் இருந்து தவறுகிறது. இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. முதலாவது மாதம் ரிம 95 என்பது அவர் உயிர் வாழ போதுமானதல்ல. அடுத்தது, வங்கி புத்தகம் வைத்திருக்கும் அவருக்கு அந்தப் பணம் நிறுத்தப்பட்டது”, என்றார்.

இவர்களைப் போன்றோரின் பிரச்சனைகளைக் களைய உடனடி நடவடிக்கை தேவை. உணவின்றி இவர் இறந்தால், அது கொலையாகும். அதைச் செய்த குற்றவாளி அரசாங்கமாகும் என்கிறார் காத்தையா. “வெறும் ரிம 95 வைத்து உயிர்வாழ இயலாது, அவர் கொல்லப் படுகிறார்.”