பொதுப்பிரச்சனையா…………..? பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்…………..!

tscபொதுப்பிரச்சனையா…….? பொறுப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லாப் பிரச்சனைகளிலும் ஒன்று படாமல் பிரிந்து  கொண்டிருக்கிறோம். ஒரு பொறுப்பற்ற சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நாமே சிறந்த எடுத்துக்காட்டு!

இப்படிப் பொறுப்பற்ற ஒரு சமூகமாக எப்படி வளர்ந்தோம், எப்போது வளர்ந்தோம் என்பது ஆராய்ச்சிக்குரியது!

இந்த இனம் ஒர் ஒற்றுமையில்லாத, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னும் நிலைக்கு எப்படி வந்தது என்பது புரியாத புதிர்!

எடுத்ததற்கெல்லாம் சண்டை, எடுத்ததற்கெல்லாம் விதண்டாவாதம், தலைக்கனமானப் பேச்சு, அடாவடித்தனம், ஒன்றுமே தெரியாமல் எல்லாமே தெரிந்தது போல் பேசுவது, கையில் கால்காசுக் கூட இல்லை ஆனால் பேசுவதோ இந்த நாட்டையே வாங்கிவிடுவது போன்ற பேச்சு,  நல்லது நடக்கும் போது மூக்கை நுழைத்துக் குட்டையைக் குழப்புவது இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் கொண்டவர்கள் தாம் நாம்; நமது இனம்!

நல்லது நடக்கும் போது நாலு நாசக்காரர்கள் உள்ளே புகுந்து விடுகின்றனர். குட்டையைக் குழப்புகின்றனர். இப்போது நல்லதும் நடக்கவில்லை. நடக்கவிருந்ததையும் நாசமாக்கி விட்டனர்.

எடுத்துக்காட்டு: ஒரு பள்ளிக்கூடம். மாணவர் நலன் கருதி புதிய, பெரிய பள்ளிக்கூடம் கட்டப்படுகிறது. இப்போது இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தூரம். ஆபத்து ஆரம்பாமாகி விட்டது! இந்தத் தூரத்தை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது! தலைமை ஆசிரியர் தனது தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்னும் பயம். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரைக் கலந்து ஆலோசிக்கிறார்; தூண்டி விடுகிறார். புதிய பள்ளிக்கூடத்தைக் குறை சொல்ல முடியாது. கல்வி அமைச்சைக் குறை சொல்ல முடியாது. தூரம் ஒன்று மட்டுமே அவருக்குக் கிடைத்த ஆயுதம். தன் மேல் எந்தக் குற்றமும் வரக்கூடாது. அதே சமயத்தில் காயைச் சாமர்த்தியமாக நகர்த்த வேண்டும்.

பள்ளிகூடம் தூரம் என்பதால் மாணவர்கள் பள்ளி போவது பாதிக்கப்படும். குறைவான மாணவர்களே அங்கு போவார்கள்.

(பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சொல்லவில்லை).

புதிய பள்ளிக்குக் போக போக்குவரத்து செலவு ஆகும். பிள்ளைகளுக்குப் போகவர ஏதாவது காசு கொடுக்க வேண்டும். பாவம்! எல்லாம் ஏழைகள்! எப்படி அவர்களாள் சமாளிக்க முடியும்?

(தலைமை ஆசிரியர்,  தமிழ்ப்பள்ளி என்றால் ஏழை தான் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவான் என்று முத்திரைக்குத்தி விட்டார்!)

ஒர் ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி ‘எதற்கும் அவரைப் போய்ப் பாருங்கள். உதவினாலும் உதவுவார்.  அவரால் முடியாததா! இல்லைன்னா எதீர்க்கட்சிக்காரன போய்ப் பாருங்க! நீங்க வாயைப் பொத்திக்கொண்டு இருந்தீங்கனா உங்கத் தலைக்கு மேல  ஏறுவானுங்க! எல்லாம் உங்கக் கையிலத்தான் இருக்கு!’ என்று பெற்றோர்களை உசுப்பி விடச் சொல்லுவார்!

ஆக, அதை ஓர் அரசியல் பிரச்சனையாக்கி, பெற்றோர்களைக் கொடிப்பிடிக்க வைத்து, இங்கும் இல்லே! அங்கும் இல்லே! என்று ஒரு நிலையை உருவாக்கி, மாணவர்களைக் காட்சிப் பொருளாக்கி, பத்திரிக்கைகளில் போட்டு வதம் பண்ணியாகி விட்டது.

இது ஒரு பொதுப்பிரச்சனை. கல்விப்பிரச்சனை. நமது மொழி சார்ந்தப் பிரச்சனை. தமிழ் மாணவர்களின் எதிர்காலப் பிரச்சனை. பெற்றவர்களின் குழந்தைகளின் பிரச்சனை.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை அந்தத் தலைமை ஆசிரியர். தனது சுயநலத்தின் முன்னே எந்தத் தடையையும் உடைக்க அவர் தயார். அவர் தனது தலைமை ஆசிரியர் பதவியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர் வீட்டிற்கும் இப்போது இருக்கும் பள்ளிக்கும் சிறிதளவே தூரம். பள்ளிவிட்டுப் போகும் போது தேசியப்பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போக முடியும். அப்படியே தனது மனைவி பணி புரியும் பள்ளியிலிருந்து அவரையும் அழைத்துக் கொண்டு போக முடியும். ஒரு மாற்றம் என்று வரும் போது அனைத்தும் அடிப்பட்டுப் போகும். அவருடைய செலவுகள் அதிகரிக்கும்.

‘எனக்கு எனது வாழ்க்கை தான் முக்கியம். இதையெல்லாம் பார்த்தா ஒன்றும் நடக்காது. இவன்களை எல்லாம் நம்பினா நாம நாலுக்காசு பார்க்க முடியாது” என்பது தலமையாசிரியரின் நிலை.

இன்னொரு எடுத்துக்காட்டு: பெண்மணி ஒருவர் தனது மகளை வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவம் படிக்க அனுப்பிவைத்தார். வெற்றியும் பெற்றார். பாராட்டப்பட வேண்டியவர். நல்ல முயற்சி.

அவரின் நண்பர் ஒருவர் தனது மகளை மருத்துவம் படிக்க வெளிநாடு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். வழிமுறை தெரியவில்லை. ஏற்கனவே அனுபவமுள்ள அந்தப் பெண்மணியை நாடினார். ஆச்சரியம்! அந்தப் பெண்மணியிடமிருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை. எந்த ஒரு சிறிய தகவல் கூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையைச்  சொன்னால் அவர் வாயைத் திறக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொஞ்சம் விவரமானப் பெண்மணி. கடைசியில் அந்த நண்பர் பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அவர்களின் உதவியை நாடினார்.

இது தான் நமது பிரச்சனை. நமது இனம் தமிழ்ப் பத்திரிக்கைகளில் வருகின்ற விளம்பரத்தைப் பார்த்து ஏன் ஏமாறுகிறது என்பது இப்போது புரிகிறது அல்லவா!

நாம் பேச்சில் வல்லவர்கள். ஒருவருக்கொருவர் உதவுவதில், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுவதில் வில்லன்மார்கள்! ஒருவர் மேற்கல்விப் பயில நாம் உக்குவிக்க வேண்டும். அது நமது கடமை. நமது நண்பர்களுக்கு, நமது உறவுகளுக்கு, நமக்கு அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட,  அவர்களின் முன்னேற்றத்திற்கு, நாம் உதவத்தான் வேண்டும்.

எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை! அதுவும் நமது இனத்திற்குள்ளேயே! நமது இனத்தவன் டாக்டாரவது, வழக்கறிஞராவது, தொழில்அதிபராவது, கோடிஸ்வரனாவது நமது இனத்திற்குப் பெருமைதானே! அது அவன் சொந்த உழைப்பல்லவா?

நமது இனத்தவன் நல்ல நிலையிலிருந்தால் அவன் நாலு பேருக்கு உதவ  முடியுமே. அந்தக் கண்ணோட்டத்தில் அனைத்தையும் பாருங்கள். ஒரு தமிழன் கெட்டுப்போனால் அதனால் யாருக்கு என்ன நன்மை?

அனைத்தையும் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை நாலு பேருக்குத் தெரியப் படுத்துங்கள்.

நமது மக்கள் முன்னேற வேண்டும். அது தான் நமக்குத் தேவை. நமது இளைஞர்களைப் பற்றி மிகவும் கோபப்படுகிறோம். அவர்களுக்கு நாம் வழி காட்ட வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்புக்களை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

ம.இ.கா. தான் செய்ய வேண்டும் என்று நாம் அலட்சியமாக இருந்து விட  முடியாது. அவர்கள் கண்ணோட்டம் வேறு.

நமக்கு நாமே உதவி என்பார்கள். நமது குடும்பத்திற்கு மட்டும் அல்ல நமது சமூகத்திற்கும் நாம் தான் உதவி.

நமது சமூகத்தின் முன்னேற்றம் நமது கையில். அந்தப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது. அந்தப் பொறுப்பு யாருக்கும் குத்தைகைக்கு விடப்படவில்லை.

இன்று இந்த சமூகம் தலைக் குனிந்து நிற்பதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. காரணம் நாம் பெரும்பாலும் சுயநலவாதிகள்; பொறுப்பற்றவர்கள்; பொதுநலத்தைச் சிந்திக்காதவர்கள். ஏழைகளை ஏப்பம் விடுபவர்கள்.

நாம் மாறத்தான் வேண்டும். இழி மகன் என்று பெயர் எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளுவோம்.

 (கோடிசுவரன்)