“டிரஸ்ட் ஃபண்ட்”: தமிழ்ப்பள்ளிகளுக்கு சூதாட்ட நிறுவனங்களின் பெட்டகத்திலிருந்து நிதி உதவி பெற வகைசெய்யும் திட்டமா?

ஜீவி காத்தையா, பெப்ரவரி 14, 2014.

najibமலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கினால் அமைக்கப்பட்ட எதிர்கால தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டவரைவு குழு வரைந்துள்ள திட்டத்தின் மீதான இறுதி பங்களிப்புகளை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய அளவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன் கூறியதாக பெர்னாமா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளின் பத்து ஆண்டு காலத்திற்கான மேம்பாடு குறித்த அக்குழுவின் பரிந்துரைகள் விவாதிக்கப்படும் என்றும் அதன் பின்னர் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அது பிரதமர் நஜிப்பிடம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. [பெர்னாமா செய்தியில் கூறப்படதா ஒரு தகவலின்படி அந்த அறிக்கை கூட்டம் நடந்த அடுத்த நாளான சனிக்கிழமை அன்றே பிரதமர் நஜிப்பிடம் வழங்கப்படும் என்று அறியப்படுகிறது.] இக்கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களில் “குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளை இடமாற்றம் செய்தல், கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள், கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றின் தரம், மாணவர்களின் சாதனை, கூட்டு பாடதிட்ட நடவடிக்கைகளின் தரம், அறக்காப்பு நிதியம் (trust fund) (நிதி) மற்றும் பெற்றோர்-சமூக பங்கேற்பு ஆகியவை அடங்கும்” என்று இராஜேந்திரன் கூறியுள்ளார்.

அவர்கள் விவாதிக்கவிருப்பதாக கூறப்படும் முக்கிய விவகாரங்களில் நமது கவனத்தை ஈர்த்திருப்பது “அறக்காப்பு நிதியம்” (trust fund) என்பதோடு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக தமிழ்ப்பள்ளிக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமையும் நிதி ஒதுக்கீடும் பற்றி எவ்வித முன்மொழிதலும் இல்லாது இருப்பதாகும்.

 ஏன் அறக்காப்பு நிதியம்?

அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் ஒதுக்கீடுகள் மற்றும் பணித்துறை உதவித்தொகை தவிர, இராஜேந்திரனின் குழு ஓர் அறக்காப்பு நிதியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளதாக அவர் கூறுகிறார். அந்த அறக்காப்பு நிதியம் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு மன்றம் அமைத்துள்ளது போன்றிருக்கும். அதன் நோக்கம் குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் மாதாந்திர நன்கொடைகள்  மூலம் கல்விக்கு ஆதரவு அளிப்பதாகும் என்று அவர் கூறுகிறார்.

இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் அறக்காப்பு நிதியம்? தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டின் தேசிய கல்வி அமைவுமுறையின் ஓர் அங்கம்.

najib_rajendranஅந்த அமைவுமுறையில் தேசிய மற்றும் சீனமொழிப்பள்ளிகளும் அடங்கியுள்ளன. தேசியப்பள்ளிகள் அரசாங்கத்திடமிருந்து பெறும் ஒதுக்கீடுகள் மற்றும் பணித்துறை உதவித்தொகை தவிர, இப்படி ஓர் அறக்காப்பு நிதியத்தை கொண்டிருக்கின்றனவா? அவற்றுக்கு போதுமானதுக்கும் மேலான அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் அளிக்கப்படுவதால், அவற்றுக்கு மற்றவர்கள் போடும் பிச்சை தேவையில்லை. ஓர் எடுத்துக்காட்டு: 9 ஆவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம30.30தும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95தும் மற்றும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 தும் ஒதுக்கப்பட்டது. ஆகவே, தேசியப்பள்ளிக்கு அறக்காப்பு நிதியம் தேவையில்லை. இதை இராஜேந்திரன் மறுக்க மாட்டார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை. ஆகவே, இந்நாட்டு இந்திய மலேசிய மக்களிடமிருந்தும் பரிதாப்படும் இதர மக்களிடமிருந்தும் பிச்சை பெறுவதற்கு ஓர் அறக்காப்பு நிதியம் தேவைப்படுகிறது என்ற பரந்த நோக்கத்தில்  இராஜேந்திரன் குழு இந்த “டிரஸ்ட் பண்ட்” பரிந்துரையை முன்வைத்துள்ளது என்று கருதினால் அது தவறாகும் என்று கூறலாம்..

தேவைப்படும் நிதியை பெறுவதற்கு தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்கக்கூடாது.  அதற்கு வேறு வழிகளை தமிழ்ப்பள்ளிகள் நாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், அதற்கு வகைசெய்வதே இந்த “டிரஸ்ட் பண்ட்” முன்மொழிதலின் தலையாய நோக்கம்.

தாய்மொழிப்பள்ளிகள் நிதி ஒதுக்கீட்டிற்காக அதிகமாக அரசாங்கத்தை நம்பி இருக்கக்கூடாது என்று பிரதமர் நஜிப் நவம்பர் 1, 2012 இல் கூறியிருக்கிறார். தாய்மொழிப்பள்ளிகளுக்கு அரசாங்கம் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனியார் துறையின் பங்களிப்பை நாடுவதற்கான நேரம் வந்து விட்டது என்று நஜிப் அறிவித்தார். (த மலேசியன் இன்சைடர், நவம்பர் 1, 2012)

pasupathi_tamil_foundationஇந்த அறிவிப்புக்கு முன்பே, தனியார் துறையின் பங்காளிகள் தீர்மானிக்கப்பட்டு அவற்றின் பங்களிப்புகளை நிருவகிப்பதெற்கென்று “சமூகப் பெட்டகம்” (Community Chest) என்ற அறக்காப்பு நிதியம் செப்டெம்பர் 27, 2011 இல் கெந்திங் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமையில் செயல்பட தொடங்கியது. இந்த அமைப்பில் சம்பந்தப்பட்டவை சூதாட்ட மையங்களை நடத்தும் நிறுவனங்களாகும். ஆக, தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் சூதாட்ட மையங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பிரதமர் நஜிப்பும் கலந்துகொண்டுள்ளார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கான அரசாங்கத்தின் பொறுப்பை வாணிக சமூகத்தினரிடம் தள்ளி விடுவது குறித்து கடுமையாக விமர்சித்த மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி, தாய்மொழிப்பள்ளிகளுக்கான அரசாங்கம் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, வாணிப சமூகத்தின் தோள்களில் அமர்ந்து சவாரி செய்யக்கூடாது என்றார்.

மேலும், “பொது பள்ளிக்கூட அமைவுமுறையை நிலைநிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நஜிப் அவருடைய அடிப்படையான பொறுப்பை சாதாரணமாக தனியார்துறையிடம் தள்ளிவிட முடியாது”, (“It is the government’s responsibility to uphold the public school system. Najib simply cannot outsource his basic responsibility to the private sector.” )  என்று பசுபதி தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

பசுபதியின் மேற்கூறப்பட்ட கருத்திற்கு வலுவான அரசமைப்புச் சட்ட பின்னணி இருக்கிறது. தேசிய கல்வி அமைவுமுறைக்குட்பட்ட பள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காட்டுவது அரசமைப்புச் சட்ட பிரிவு 12 க்கு முரணானது. இப்பிரிவின் கீழ் எந்த ஒரு பள்ளியின் நிருவாகத்திலும் அதற்கான அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிலும் சமய, இன, மரபுவழி வருகை அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக வேறுபாடு காட்டக்கூடாது.

தேசியப்பள்ளிகளுக்கு முழு அரசாங்க நிதி ஒதுக்கப்படும் போது, இதர தாய்மொழிப்பள்ளிகளுக்கு முழுமையான அரசாங்க நிதி ஒதுக்கீடு இல்லை என்ற நஜிப்பின் நிலைப்பாடு அரசமைப்புச் சட்ட பிரிவு 12 ஐ மீறியதாகும்.

அரசமைப்புச் சட்ட பிரிவு 12 இன் கீழ் தேசியப்பள்ளி, சீன மற்றும் தமிழ் மொழிப்பள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காட்டப்படுவதை பலர் கண்டித்துள்ளனர். இந்த வேறுபாட்டை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கூறியுள்ளனர்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி வழங்கி அவற்றை பராமரிக்க வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு அரசமைப்புச் சட்ட பிரிவு 12 இல் தெளிவாக்கப்பட்டுள்ளது என்று அதிருட்டுக் கூறியுள்ளார் நாடாளுமன்ற செனட் அவையின் முன்னாள் தலைவரான ஜி. வடிவேலு.

அவர் கூறுகிறார், “The Government’s responsibility to fund and maintain Tamil schools is now clearly spelt out in Article 12(1) of the Federal Constitution which provides that there shall be no discrimination against any citizen on the grounds of religion, race, descent or place of birth … In providing out of funds of a public authority financial aid for the maintenance or education of pupils or students in any educational institution (whether or not maintained by public authority…)

வடிவேலு மேலும் கூறுகிறார்: “The conversion of all Tamil schools to the status of fully assisted school is vital for the survival of Tamil schools in this country and no stone must be left unturned to achieve this. As a last resort, parents should be ready to seek relief in courts since the right to equal opportunity is enshrined in the Constitution.”

மே மாதம் 1992 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் 2020 இலக்கை நோக்கி தமிழ்ப்பள்ளிகள்: ஒரு தேசியக் கருத்தரங்கு என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தலைவர் ச. சாமிவேலு, “தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் தற்போது நாம் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை, பள்ளிகளை Bantual Modal, Bantuan Penuh  என்ற பள்ளிகளின் பாகுபாட்டை களைவதாகும்… அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாட்டில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த நிதியில் தமிழ்ப்பள்ளிகளை Bantuan Penuh பள்ளிகளாக மாற்றத் தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே”, என்று கூறினார்.

13 ஆண்டுகளுக்குப் பின்னர், அதே மஇகாவின் அதே தலைவர் ச. சாமிவேலு  ஏழையான இந்தியர்கள் காலையில் வேலைக்குப் போய் மாலையில் வீடு திரும்புகின்றனர். அவர்களுடைய ஊதியம் சாப்பாட்டிற்கே போதுமானதாக இல்லை. அவர்களால் எப்படி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்ட முடியும். காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மாற்ற வேண்டும். அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டி அவற்றை பராமரிக்க வேண்டும் என்று 2005 ஆண்டில் பூச்சோங்கில் கூவியுள்ளார்.

1992 ஆண்டு மலேயா பல்கலைக்கழக கருத்தரங்கில் பங்கேற்றிருந்த என். எஸ். இராஜேந்திரன் தற்போதைய மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு திட்டவரைவு குழு தலைவராக இருக்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகளும் கூட, அப்துல் ரசாக்கின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையான தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்தல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதை அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் அறிந்துள்ளனர். என். எஸ். இராஜேந்திரனும் அவரது குழுவினரும் இதனை அறிவர் என்று நம்பலாம்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசமைப்புச் சட்டப்படி உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டும், வேறுபாடற்ற அரசாங்க நிதி ஒதுக்கீடு அளிக்கப்படாமலும் இருப்பதால், தமிழ்ப்பள்ளிகள் சீரழிந்து வருகின்றன. காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போய் விடும் என்பது நிச்சயம்.

இந்நிலையில், எதிர்கால தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டு திட்டவரைவுக் குழு கடந்த ஓர் ஆண்டுகாலமாக ஆய்வுகளை நடத்தி வந்துள்ளதாக கூறிக்கொள்கிறது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் விவாதத்திற்காக அக்குழு பரிந்துரைத்திருப்பது “குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளை இடமாற்றம் செய்தல், கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள், கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றின் தரம், மாணவர்களின் சாதனை, கூட்டு பாடதிட்ட நடவடிக்கைகளின் தரம், அறக்காப்பு நிதியம் (trust fund) (நிதி) மற்றும் பெற்றோர்-சமூக பங்கேற்பு” ஆகியவைதான். இவை அனைத்தும் நாம் ஆண்டாண்டாக கேட்டு வரும் ஒப்பாரிகள்தான். இவற்றில் தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணி சூதாட்டக்காரர்களிடமிருந்து நிதி பெறுவதற்கு வகைசெய்யும் அறக்காப்பு நிதியம் என்று திட்டவட்டமாக கூறலாம்.

இக்குழுவின் தலைவர் இராஜேந்திரனும் இந்த கருத்தரங்களில் பங்கேற்கவிருப்பவர்களும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது  மலேசிய அரசமைப்புச் சட்டப்படி தமிழ்ப்பள்ளிக்கு உரிய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் நஜிப்பிடம் வழங்குவதாகும். இதில்தான் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் இருக்கிறது.