திட்டம் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும்!

Naib Rajendran1வே. இளஞ்செழியன்.  கடந்த 14 பிப்ரவரியன்று  “டிரஸ்ட் ஃபண்ட்”, என்றத் தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார். பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணி”யாக அமையும் என்று கட்டுரை வருணித்தது.

“தமிழ்ப்பள்ளிக்கு உரிய உரிமைகளைநிலைநிறுத்து[ம்] தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் நஜிப்பிடம் வழங்கு[வதில்தான்] …

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்இருக்கிறது” என்றும் கட்டுரை திட்டவட்டமாகக் கூறியது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெரும்பகுதியான மலேசிய இந்தியர்களின் அறிவுக் கண்களைத் தமிழ்ப்பள்ளிகள் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும், அவற்றின் சேவையை நம் சமூகமோ அரசாங்கமோ முழுமையாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்ப்பள்ளிகள் தேவையா? அவை மூடப்படுமா? என்ற கேள்விகளைக் கேட்போர் இருக்கத்தான் செய்கின்றனர்.

elanjeliyanஅவற்றின் நீட்சியாக திரு. காத்தையாவின் கட்டுரையைப் பார்க்கிறேன். தமிழ்ப்பள்ளிகள் “சீரழிந்து” வருவதாகவும், அவை ஏதோ “சவப்பெட்டியில்” இருப்பதாகவும் காத்தையா கூறுகிறார். இது எவ்வளவு பெரிய தவறு! கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தரம் அபரீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் பத்து மாணவர்களில் மூவர் அல்லது நால்வர் மட்டுமே யுபிஎஸாரில் தேர்ச்சியடைவர் என்ற நிலை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது. அந்நிலை மாறி, இன்று அறுவர் தேர்ச்சியடைகின்றனர். இதே காலகட்டத்தில், தேசியப்பள்ளிகள் சொல்லத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்தாற்போல் குறைத்து மதிப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். நமது சாதனைகளையும் நமது பள்ளிகளையும் நாமே மதிக்காவிடின் மற்றவர்கள் மதிப்பரோ?

இன்றைய சிக்கல் தமிழ்ப்பள்ளிகள் நிலைக்குமா இல்லையா என்பதல்ல. அங்கு பயிலும் அனைத்து – அதாவது 100 விழுக்காடு – மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுகிறதா இல்லையா என்பதே. அத்தகைய கல்வியைத் தமிழ்ப்பள்ளிகளில் வழங்குவதற்கு வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளனவா என்று நாம் கேட்கிறோம். இக்கேள்விகளைத்தான் இராஜேந்திரனின் குழுவும் கேட்டது.

ஒரு நல்ல கல்வித்திட்டமானது மாணவனை மையமாகக் கொண்டிருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இக்கோட்பாட்டின் அடிப்படையில் கடந்தாண்டு வெளியிடப்பட்ட மலேசியக் கல்வி பெருந்திட்டமும் வரையப்பட்டிருக்கின்றது. ஆனால், அத்திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் போதுமான இடம் தரப்படவில்லை. அவை எதிர்நோக்கும் சிக்கல்களும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் போதுமான அளவிற்கு அலசப்படவில்லை.

அதனால்தான், தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் சிக்கல்களை ஆழ்ந்து அலசி, அவற்றின் உண்மையான தேவைகளை நிறைவுசெய்யும் பரிந்துரைகளை இராஜேந்திரனின் குழு முன்வைத்துள்ளது. கல்வியமைச்சில் நமக்குத் தேவையான ஆள்பலம் முதற்கொண்டு; கலைத்திட்டம்; ஆசிரியர்கள், அவர்களைத் தயார்படுத்தும் விதம்; பள்ளி நிர்வாகம்; உதவிப் பொருட்கள்; சிறார் பள்ளிகள்; பள்ளி வாரியம் வரை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து கூறுகளும் வரைவில் இடம்பெற்றுள்ளன.

நிதி என்ற தலைப்பின்கீழ், அரசு உதவி பெரும் தமிழ்ப்பள்ளிகளுக்கும், அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவற்றின் தேவைகளை நிறைவுசெய்வதற்குப் போதுமான நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை தேவைகளை நிறைவுசெய்தால் மட்டும் போதாது, உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளை ஏற்படுத்தும் பணிகளிலும் நாம் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அறங்காப்பு நிதியம் பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்த 12 ஆண்டுகளில் மொத்தம் 500 அரக்கட்டளைப் பள்ளிகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இப்பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரிம 1,000 கூடுதலாகச் செலவாகிறது. இச்செலவை ஈடுகட்ட அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் உதவியை எதிர்பார்க்கின்றது. இம்முயற்சிக்கு அறங்காப்பு நிதியம் உதவக்கூடும். தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிப்பதற்கும் இந்நிதி பயன்படலாம். இத்தகைய ஒரு நிதியை நம் சமூகம் கொண்டிருக்குமானால், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளே அதிகம் என்று தோன்றுகின்றது. தமிழ்ப்பள்ளிகளின் அழிவுக்கு நிதி வழிவகுக்கும் என்பது வீண் கவலையாக எனக்குத் தோன்றுகிறது.

தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டவரைவில் சிக்கல்களே இல்லையென கூறவியலாது. மாநாட்டில் கலந்துகொண்டோர் வரைவிலிருந்த பல குறைகளைக் கண்டறிந்து திருத்தங்களைக் கொடுத்தனர். இன்னும் பல குறைகளும் சிக்கல்களும் வரைவில் இருக்கலாம்; இருக்கும். அதனைச் சுட்டிக்காட்டுவது சமூகத்தின் கடப்பாடாகும். ஆனால், திட்டமே தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்குதான் என்று கூறுவது சரியானதாகத் தோன்றவில்லை.