வேதமூர்த்தி பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும்

K. Arumugam_suaramபதவி விலகிய வேதமூர்த்தி இண்ராப்ட்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தவறிய பிரதமர் நஜிப் மீது வழக்கு தொடர வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம்.

மலேசியாவின் கட்சி அரசியல் சார்பற்ற வகையில் இந்தியர்களின் முதலாவது துணை அமைச்சராக கடந்த வருடம் மே 16-இல் பதவியேற்ற  பொ. வேதமூர்த்தி கடந்த பிப்ரவரி 8-இல் தனது பதவியைத் துறந்தார். 268 நாட்கள் நீடித்த அந்தப் பதவி காலத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தன்னுடன் செய்த ஒப்பந்தத்தை நடைமுறையாக்க தவறி விட்டதாக கூறியுள்ளார்.

hindrafபதவி விலகிய வேதமூர்த்தி இண்ராப்ட்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தவறிய பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரின் மண்ணைக் கவ்விய சாணக்கியம் மற்றோர் அரசியல் பாடமாக இருப்பினும் அதை அவர் ஒரு திருப்புமுனையாக கையாள வேண்டும் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.  

பிரிட்டிஸ் அரசின் மீது ஒரு இந்தியருக்கு அமெரிக்க டாலர் 20 லட்சம் என்ற வகையில் 4 டிரிலியன் (4,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு நஷ்டஈடு கோரி 2007-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று இண்ராப்ட் ஒரு வழக்கைத்தொடுத்தது. அதன்வழி ஒரு பரந்த விழிப்புணர்வு  உருவானதை நம்மால் மறக்க இயலாது என்பதை ஆறுமுகம் சுட்டிக்காட்டினார். 

“2007 இண்ட்ராப் பேரணி முடிந்த அடுத்த நாளே இந்த வழக்கு சம்பந்தமாக  லண்டன் பயணமான வேதமூர்த்தி 56 மாதகாலம் லண்டனில் தஞ்சம் புகுந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கு சார்பாக பல நுண்ணிய பணிகளையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்கிறார்.

hindraf1பிரிட்டிஷ் ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு விடுதலை கொடுத்து விட்டு செல்லும் போது இனவாத அரசியலை அமைத்ததோடு அதில் பெரும்பான்மை இனதிற்கான ஆதிக்கச்சூழலை உண்டாக்கியதுதான் நமது ஏழ்மைக்கும் நாம் இரண்டாம் தர சமூகமாக வாழ்வதற்கும் காரணம் என்ற வகையில் ஒரு வரலாற்றுக்கடனை உருவாக்கி அதை நஷ்ட ஈடாக கோரப்பட்டதுதான் அந்த வழக்கின் அம்சமாகும்.

கடந்த வருடம் தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் 18ஆம் தேதி இண்ராப்ட் – தேசிய முண்ணனி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் வழி தேசிய முன்னணி அரசாங்கம் சுமார் ரிம 4.5 பில்லியன் (4,500.000.000) மதிப்புள்ள விசேசமான முதலீட்டை வறுமையில் வாழும் இந்தியர்களுக்காக ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டும்.

மேலும் விவரிக்கையில், “இந்த இண்ராப்ட்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தை பிரதமர் நஜிப் அவர்கள் மீறியுள்ளார். சுமார் ஒரு லட்சம் இந்தியக் குடும்பங்கள் வறுமையில் வாழ்பவர்களாக எடுத்துக்கொண்டால், இதன்வழி ஒரு குடும்பத்திற்கு ரிம 45,000 கிடைக்க வேண்டும். ஒப்பந்தம் மீறப்பட்டதால் இண்ராப்ட் ஒப்பந்தத்தை நம்பி தேசிய முன்னணிக்கு வாக்களித்த ஏழை இந்தியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்கிறார் அவர்.

“எனவே, வேதமூர்த்தி அவர்கள் பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என் கோருவதை வாபஸ் பெற்றுக்கொண்டு, அவர் மீது  இந்த வழக்கைத் தொடுக்க  முன்வரவேண்டும். தேசிய முன்னணிக்கு ஆதரவு நல்கிவரும் அனைத்து இந்திய கட்சிகளும் ஏழை இந்தியர்கள் நலன் கருதி இந்த வழக்குக்கு முழுமையான  ஆதரவை நல்க வேண்டும்”, என்று ஆறுமுகம் கேட்டுக் கொள்கிறார்.