வியாக்கியானங்களே வாழ்க்கையாகி விதியாவதா?

social ill1கி.சீலதாஸ். பகுதி 2. மிகவும்  மோசமான  நிலையில்  வாழ்ந்துகொண்டிருந்த  ஒருவனுக்கு  கடவுள்  உதவி  செய்ய  நினைத்து  கொஞ்சம் பணம்  கிடைக்கும்படி  செய்தாராம்.  பணத்தைப்  பெற்றுக்கொண்டவன்  வீடு  திரும்பும்போது  வழிப்பறி  கொள்ளையன்  தட்டிக்கொண்டு  போய்விடுகிறான்.

கடவுள்   பரிதாபப்பட்டார். வழிப்பறி  கொள்ளையர்கள் நிறைந்துவிட்ட  உலகில்  இப்படியும்  நடக்கலாம்  என்ற  எண்ணத்தில்  மீண்டுமொரு  முறை உதவுகிறார். பணத்தைப் பெற்றுக்கொண்ட  மகிழ்ச்சியில்  வீடு  திரும்புகிறான்.  இந்த  முறை  மோட்டார்கார்   அவனை  இடித்துத்  தள்ளியதால்   காயம்  அடைகிறான்.  மருத்துவமணைக்குக்  கொண்டு செல்லும்போது  மருத்துவத்  துறை  ஊழியர்கள்   காயம்  பட்டவனுக்குத்  தெரியாமல்  அவனிடமிருந்தப்   பணத்தை  எடுத்துக்கொள்கிறார்கள் – திருடிவிடுகிறார்கள்.

கடவுளுக்கு  இது  தெரிந்துவிடுகிறது.  இது  என்ன  கொடுமை?  நாம்  இவனுக்கு  எவ்வளவு  உதவி  செய்தாலும்  இவனால்  கிடைத்த   உதவியைச்  சரியாக  உபயோகிக்கத்   தெரியவில்லையே.  கொடுத்தப்   பணத்தை  அவனால்  பாதுகாக்க  முடியவில்லையே.  இப்படி  எல்லாம்  சிந்தித்த   கடவுளுக்கும்  சந்தேகம்  வந்துவிடுகிறது.  ஒருவேளை,  இப்படி  எல்லாம்  கஷ்டப்பட  வேண்டுமென்பது  அவன்  தலையெழுத்தோ!  என்று  சந்தேகப்படுகிறார்,  ஒரு  முடிவுக்கும்   வருகிறார்.

இவனுக்கு   நான்  உதவி  செய்வதால்  மட்டும்  இவன்  முன்னுக்கு  வரமாட்டான்.  சுலபமாக  பணம்  வரும் என்ற நம்பிக்கை  கூடாது.  அவனே  ஒரு  வழியைக்  காணட்டும்  என்று  கைகழுவி  விடுகிறார்.

இந்தத்  துணுக்கை   சொன்னபோது,  இதில்  பலப்  பிரச்சினைகள்  இருக்கின்றன   என்றார்  ஒருவர்.  அவர்  ஒரு  சமுதாயத்  தொண்டர்.  அவரின்  கருத்துப்படி   சமுதாயத்தில்  கொள்ளையர்களின்   ஆதிக்கம்   பெருகிவிட்டது.  இதற்குக்  காரணம்  காவல்துறை.  காவல்துறை   சரியாகச்   செயல்படவில்லை.  குற்றத்  தடுப்புச் சட்டம்  இருந்து என்ன   பயன்?  அமலாக்கம்   சரியாக  இல்லையென்றால்  குற்றச்செயல்கள்  அதிகரிப்பதைத்   தடுக்க  முடியாது.  குற்றச்   செயல்களால்   விளைகின்ற  கேடுகளைப்  பற்றி   கதைகதையாகச்  சொல்லுவதால்  எந்தப்  பலனும்  கிடைக்காது.  கேடுகள்  எப்படிப்பட்டவை,  தண்டனை  எப்படிப்பட்டது  என்பதை   உணர்த்த   வேண்டும்.  அதுதான்   கல்வி.  கல்வி  சரியாக  இல்லை   என்றால்  அது   கேடு  விளைவிக்கும்.  மற்றொரு  பிரச்சினையையும் கவனிக்கவேண்டும்.  எங்கெல்லாம்   ஏற்றத்தாழ்வு- பொருளாதார  சமயின்மை  நிலவுகிறதோ  அங்கெல்லாம்   குற்றச்   செயல்கள்  பரவலாக  இருக்கும்  என்பதும்  அவர்   கருத்து.

அது  ஒரு  புறம்  இருக்க  பிறர்  பொருளை  அபகரிக்காதே  என்று  நீதி  நூல்கள்   அறிவுறுத்திய  போதிலும்  அது  நிரந்தரமாக  மனதில்  பதியாமல்  போனதற்கான  காரணம்  என்ன என்பதை  அறிய  முற்பட்டவர்களின்   எண்ணிக்கை  அதிகம். திருடனைப்  பிடித்து  நல்லா  நாலு  சாத்து சாத்தினால்  எல்லாம்  சரியாகிவிடும்  என்கின்ற  வன்முறை  மனோபாவம்  தலைதூக்கி  ஆர்ப்பரிக்கும்போது,  மனித  நேய  அணுகுமுறை   மவுசு  இழந்தே   காணப்படுகிறதே.  எனவே,  காவல்துறையை  மட்டும்  குறைச்   சொல்லி   அவர்களைக்  குற்றப்படுத்துவது   நியாயம் அல்ல  என்ற  கருத்தும்   சொல்லப்பட்டது.

social ill 2அடுத்தவர்   ஓர்  அரசியல்வாதி.  இவரின் கருத்துப்படி  இது  ஒரு  சமூகப்   பிரச்சினை.  சமூகம்தான்  இபடிப்பட்ட   சூழ்நிலைகள்  வளருவதற்குக்  காரணியாக  இருந்துவிட்டது   எனவே,  சமூகம்  தன்  சிந்தனையில்  மாற்றம்   காணவேண்டும்.  திருடுவதால்   ஏற்படும்  கேடுகளை   உணர்த்தவேண்டும்.  திருடும் பண்பாடு  சமூகத்துக்கு   எதிரானச்  செயல்.  சமூக  விரோதச்   செயல்   என்பதை  கற்பிக்கவேண்டும்.  இந்தப்  படிப்பினையின்   ஆரம்பம்  பள்ளிக்கூடங்களில்  காணப்படவேண்டும்  என்கிறார்.

அங்கே  இருந்த  வழக்கறிஞர்,  சட்டத்தில்   கோளாறு  இருப்பதால்  அது   எல்லா  சமூகங்களையும்   பாதிக்கிறது  என்பதால் சட்டத்தில்   திருத்தம்  வேண்டும்.

மனோநிலை  மருத்துவர்  இதை  எல்லாம்  கேட்டபிறகு  “உங்கள்  கருத்து  ஒருவகையில்  நியாயமாகவும்,  ஏற்புடையதாகவும்  இருக்கலாம்.  ஆனால், உண்மையில்  ஒருசிலர்  பயங்கரமான  காரியங்களில்  ஈடுபட்டு  பிறருக்குத்  தொல்லை  கொடுக்கிறார்கள்  என்றால்   அதற்குக்  காரணம்  அவர்களுடைய  மனநிலை.

ஒருவன்  பெற்றோரிடமிருந்து  பலாத்கார   கலாச்சாரத்தைக்   கற்றுக்கொள்கிறான்.   பள்ளிக்கூடத்துக்குப்  போனதும்  அங்கேயும்  பலாத்கார   கலாச்சாரம்   வலுவாக   இருப்பதைக்   காண்கிறான்.  அவனுக்கு  இன,  சமய  வேறுபாடு   திணிக்கப்படுகிறது – நேரடியாக  அல்ல   மறைமுகமாக –அதுவே  சமூகங்களின்  அழிவுக்கு   வித்திடுகிறது   எனின்   பிழையாகாது.  இப்படிப்பட்ட   சூழ்நிலை பல்லின  மக்கள்  வாழும்  இடத்தில்   வெறுப்புணர்வு,  பிற  இனங்கள்  மீதான  சந்தேகத்தை  வளர  உதவுகிறது.  பலாத்காரத்தால்   அவனால்   எதையும்   சாதிக்க  முடியும்  என்ற  மமதை   அவனைக்  கொடுமையான  செயல்களுக்கு உந்துகிறது”   என்றார்.

இந்த  மனோநிலை, எல்லாம்   வளர்ப்பு  முறையிலும்  வளர்கின்ற   சுற்றுப்புற   சூழ்நிலையும்  காரணம்  என்பது  அவரின் கருத்து.

இறுதியாக  காவி  உடை  உடுத்திய   ஒருவர்.  “இதெல்லாம்   விதி   அப்பா.  கடவுள்  பணத்தை  இரண்டுமுறை   கொடுத்தும்   அந்த   ஏழையால்   பாதுகாக்க   முடியவில்லை.  அது  அவன்  தவறில்லை.  கொள்ளை  அடித்தவர்களின் தவறுமில்லை,  காரணம்   அவர்களின்   தலையெழுத்து,   கொள்ளை  அடித்துப்   பிழைக்க   வேண்டுமென்பதாகும்.  மருத்துவப்   பணியாளர்கள்  திருடியதும்  அவர்கள்  இப்படி  எல்லாம்   நடந்துகொள்ள   வேண்டுமென்ற விதி”.

காவி  உடுத்தியவரின்  கருத்தை  செவிமெடுத்தவர்களில்  சில  பேர்,  அதை  ஏற்றுக்கொள்ள  சங்கடப்பட்டனர்  என்பதை   அவர்களின்   முக  சுளிப்பிலிருந்து   காணமுடிந்தது.  மற்றும்  சிலர்  அப்படியும்  இருக்கலாம்   என்று  விதியின்மீது   பழிபோட   தயங்கவில்லை.  இதை  எல்லாம்   கேட்டுக்கொண்டிருந்த   கடவுள்  “கடைசியாக….என்மீதே   பழிபோட்டுவிட்டார்களே!”  என்று   கையைப்  பிசைந்துகொண்டு   அமர்ந்து   “இந்த  மனித  சமுதாயத்தை   எப்படித்தான்   காப்பாற்றுவது?”  என்று   சிந்தனையில்   ஆழ்ந்துவிட்டார்.

இதை   ஏன்   சொன்னேன் என்றால் ,  ஒரு   துணுக்காக   இருந்தாலும்   அது   பலவிதமான   வேறுபட்ட   வியாக்கியானங்களுக்கு   உட்படுகிறது   என்பதைக்   காட்டவே. தமிழர்கள்   பழமையை   நினைத்து,  பழையக்  கருத்துக்களை  சொல்லி  தங்களைத்  தாங்களே போற்றிக்கொள்வார்களே  அன்றி  அதன்   கருபொருளை   அறிய   முனையமாட்டார்கள்.

படித்ததையெல்லாம்  அப்படியே  நம்புபவன்  முட்டாள்  என்பது  ஜப்பான்  முதுமொழி.  அதில்  எத்தகைய  பொருள்  இருக்கிறது  என்பதைச்  சிந்தித்துப்   பார்த்தால்   உண்மை  புலப்படும். படித்ததை  முழுமையாக  நம்புவது  எளிது.  மூலைக்கு   வேலை இல்லை;  ஆனால்,  படித்ததை  சிந்தித்து  ஆய்ந்து  பார்க்கும்போது  அது  அறிவு   வளர்ச்சிக்கும்,  உலக  அனுபவம்   பெறுவதற்கும்  நல்ல   மனிதனாக,  மனித   நேய   மனிதனாக  வளர,  வாழ  உரமாக  அமைந்துவிடுகிறது.

பகுதி 1 – தமிழன்தான் முதல் குரங்கு என்றால் திருப்தியா?