கமலநாதன் கண்ணாமூச்சி ஆடுகிறார்! – வே. இளஞ்செழியன்

kamalanathanதமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டதாக திரு கமலநாதன் கூறியிருக்கிறார். (காண்க: http://www.semparuthi.com/?p=106997.) திரு. கமலநாதனின் இக்கருத்தில் பல சிக்கல்களுள்ளன என்று வே. இளஞ்செழியன் செம்பருத்திக்கு அளித்த தகவல்கள் காட்டுகின்றன.    

1) பினாங்கு மாநிலத்தில் ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 6,500 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கற்கின்றனர். அவர்களில் 10-15% மாணவர்கள் விடுபட்டுப் போனாலும், குறைந்தது 5,500 தமிழ்ப்பள்ளி மாணவர்களாவது இடைநிலைப்பள்ளிகளில் இருப்பரென்று கூறலாம். இது குறைந்த எண்ணிகையாகத் தோன்றவில்லை.

2) கடந்த ஆண்டு 837 தமிழ்ப்பள்ளி மாணவர்கள்தான் பி.எம்.ஆர் எழுதினர் என்று கூறியிருக்கிறார். எந்தக் கணக்கை வைத்து இம்முடிவுக்கு வந்தாரென்று தெரியவில்லை. பி.எம்.ஆர் தேர்வெழுதும் மாணவர்களின் தொடக்கக்கல்வியைக் கல்வியமைச்சு தெரிந்து வைத்திருப்பதில்லை என்று நம்புகிறேன். தேர்வில் தமிழ் மொழியைப் பாடமாக எடுத்தோரின் எண்ணிக்கையை வைத்து கமலநாதன் கருத்து தெரிவித்திருக்கக்கூடும்.

3) அது மட்டுமின்றி, 468 தமிழ்ப்பள்ளி மாணவர்கள்தான் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதினர் என்றும் கூறியிருக்கிறார். அது உண்மையென்றால், மீதம் 512 (ஏறத்தாழ 52%) மாணவர்களின் நிலையென்ன? (2008 ஆம் ஆண்டு 980 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆறாமாண்டில் கற்றனர். அவர்கள் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதியிருப்பர்.) இந்த ஐந்நூறு மாணவர்களும் ஐந்தாம் படிவத்தைக் கூட எட்டவில்லை என்று நாம் முடிவெடுக்கலாமா?

tamil_school_in_malaysia4) திரு. கமலநாதன் கூறுவதுபோல் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் பெரும்பான்மையினர் இடைநிலைப்பள்ளிகளில் விடுபட்டுப் போகின்றனரென்றால், இந்த இடைநிலைப்பள்ளிகள் நம்மின மாணவர்களுக்கு ஏற்ற கல்வியை வழங்குகின்றவா என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது. இத்தகையப் பயனற்றக் கல்விக்கூடங்களில் கற்பதற்குப் பதில் அவர்கள் தமிழ் இடைப்பள்ளிகளில் கற்றால் நிலை மாறக்கூடுமன்றோ?

5) திட்டத்திலுள்ள இடைநிலைப்பள்ளி, சீன இடைநிலைப்பள்ளிகளைப் போல, ஒரு தனியார் பள்ளியாகும். பள்ளியை மேம்படுத்துவதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறது. ஆகவே, அங்கு குறைந்த மாணவர்கள் பயின்றால், கல்வியைமைச்சுக்கு எவ்விதத்தில் நட்டமேடும்? பள்ளிக்குப் போதுமான மாணவர்கள் வருவார்களா இல்லையா என்பதைப் பள்ளியை மேம்படுத்துபவர்தானே கவலைகொள்ள வேண்டும்? கல்வியைமைச்சு ஏன் கவலைகொள்கிறது? பள்ளியை எழுப்பத் தேவைப்படும் நிதியில் ஒரு பகுதியைக் கல்வியமைச்சு தரும் எண்ணம் கொண்டுள்ளதா? ஒருகால், அதிக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கொண்ட சிலாங்கூர், ஜொகூர், பேராக் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ் இடைப்பள்ளிக்கான மனு அனுப்பப்பட்டால், சிக்கலின்றி அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது, பள்ளியைக் கட்டுவதற்கானச் செலவைத்தான் கல்வியமைச்சு ஏற்றுக் கொள்ளுமா?

நிற்க. சில நாட்களுக்கு முன்னர் திரு. லிம் கூவான் எங் வெளியிட்ட கல்வியமைச்சின் கடிதத்தில், “1996 ஆம் ஆண்டின் கல்வி சட்டம் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் நிர்மாணிப்புக்கு மட்டுமே வகை செய்கிறது,” என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் கைர் முகமட் யூசோப் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டது. (காண்க:http://www.semparuthi.com/?p=106432 .)

1 limஇக்கருத்திலும் சிக்கலிருக்கிறது. புதிய பள்ளிகளைப் பதிவுசெய்வதுபற்றி 1996 ஆம் ஆண்டின் கல்விச் சட்டம் 79 முதல் 86 வரையிலான உட்கூறுகளில் குறிப்பிட்டிருக்கிறது. ஒரு பள்ளியின் பதிவு மறுக்கப்படுவதற்கான ஏழு காரணங்களை உட்கூறு 84 பட்டியலிட்டிருக்கிறது. ஆனால், அவை எவையும் தேசிய இடைநிலைப்ப ள்ளிகளை மட்டுமே நிர்மாணிக்கலாமென்று கூறவில்லை.

தவிர்த்து, அச்சட்டத்தின் முதலாம் அட்டவணை, விதி 3, படிவம் ‘A’ (First Schedule, Regulation 3, Form A) இல் உள்ள ‘கற்பித்தல் மொழி’ என்ற ஐந்தாவது கேள்விக்கு அருகில், “மலாய்”, “சீனம்”, “தமிழ்”, “ஆங்கிலம்”, “அரபு”, “இதர (குறிப்பிடுக)”  என குறிப்பிட்டிருக்கிறது. தமிழ் இடைநிலைப் பள்ளிகளை அமைக்க முடியாதெனின், இப்படிவத்தை 1996 கல்விச் சட்டத்தில் இணைத்திருப்பதற்கான காரணமென்ன?

ஆகவே, 1996 ஆம் ஆண்டின் கல்விச் சட்டம் தமிழ் இடைநிலைப்பள்ளிகள் நிர்மாணிப்புக்கு இடம் தரவில்லை என்பது மிகவும் தப்பானக் கருத்தாகும்.

அதே வேளையில், திரு. லிம் குவான் எங் கல்வியமைச்சுக்குக் கடிதம் எழுதுவதற்கு பதில், முறையான படிவத்தை நிறைவு செய்து அதனைக் கல்விமைச்சிடம் சமர்ப்பிப்பாரென எதிர்ப்பார்ப்போம். செய்வாரா? எனவும் வினவுகிறார் வே. இளஞ்செழியன்.