லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள்தான் நமது அடையாளமா? தமிழினி

alcoholபிரிக்பீல்ட்ஸ் என்றவுடன் பலருக்கும் முதலில் அங்கிருந்த கள்ளுக்கடைதான் ஞாபகம் வரும். அந்த கள்ளுக்கடை அகற்றப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அந்த கள்ளுக்கடையை அடையாளப்படுத்தி சில பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் அங்கிருக்கிற கற்பக விநாயகர் கூட சிலவேளைகளில் கள்ளுக்கடை விநாயகர் என்றே அறியப்படுகிறார். அந்தளவுக்கு பிரிக்பீல்ட்ஸ் மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட ஒன்றாக கள்ளுக்கடை திகழ்ந்திருக்கிறது. சரி முன்னுரையை நிறுத்திக் கொண்டு சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

இப்போதெல்லாம் அந்தி சாயும் பொழுதுகளில் நீங்கள் பிரிக்பீல்ட்ஸ் பக்கம் வந்தீர்கள் என்றால் கையில் பியர் டின் அல்லது பியர் பாட்டில்களோடு பொது இடங்களில் சாவகமாக சத்தமாக பேசி சிரித்தபடி ‘தண்ணி’ அடித்துக் கொண்டிருப்பதை கண்டிப்பாக பார்த்து விடுவீர்கள். அந்த வகையில் எந்தவொரு கூச்சமுமின்றி நமது பையன்கள் (சில வேளைகளில் நமது பெண்களும் உடன் இருப்பார்கள்) மதுபானங்களை அருந்தி கொண்டிருப்பார்கள்.

Little Indiaமிக முக்கியமாக நான் அடிக்கடி பயன்படுத்தும் பெர்ஹாலா வீதியில் நடக்கும் இப்படியான சம்பவங்கள் குறித்து விரிவாக சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த பெர்ஹாலா வீதியில்தான் பிரிக்பீல்ட்ஸ் பட்டணத்தின் முக்கிய அடையாளமான புத்தர் கோவில் இருக்கிறது. ஓரு பிரசித்தி பெற்ற பன்னாட்டுப் பள்ளியும் பாலர்பள்ளியும் இருக்கிறது. மற்றுமோர் முக்கிய அடையாளமான மீள்கட்டமைக்கப்பட்ட தான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் வீடு இருக்கிறது. மலேசிய சமூக கல்வி அறவாரியத்தின் தலைமை அலுவலகமும் இங்குதான் இருக்கிறது. மிக முக்கியமான நுண்கலைகள் கற்றுத் தரும் நுண்கலை கோவிலும் இதன் அருகில்தான் இருக்கிறது. ஜான்சிராணிப் படையில் சேர்ந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய, மலேசியத் தேர்தல்களில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்கள் வசிக்கும் வீடு கூட இங்குதான் இருக்கிறது.

இப்படி முக்கியம் பெற்ற ஒரு வீதி – பாலர் பள்ளி குழந்தைகள் தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள்> நடனம் பயிலும் பதின்ம வயது பருவ பெண்கள், அவர்களின் தாய்மார்கள், முக்கிய தலைவர்கள், பௌத்த சமய குருமார்கள் என சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் வந்துபோகும் ஒரு வீதி இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாகிவிடும். அந்த வீதி முழுக்க கட்டப்பட்டிருந்த கல் இருக்கைகளில் அமர்ந்து அவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே! சிலவேளைகளில் மேல்சட்டைகளைக் கழற்றிவிட்டு அரை நிர்வாணத்தில் குடிவெறியின் உச்சத்தில் சுற்றியிருப்பர்களைப் பற்றி கிஞ்சிற்றும் அக்கறையின்றி கொச்சை வார்த்தைகளைப் பேசிக் கொண்டு நமது பையன்கள் செய்யும் அட்டகாசம் பொறுக்க முடியாது.

சரி. இவ்வளவு காலம் நடந்தது தானே. இப்போது என்ன அக்கறை என்கிறீர்களா… இனிதான் சொல்ல வந்த செய்தியே சூடு பிடிக்கப் போகிறது. கடந்த வாரம் இந்த வீதியே அமர்க்களமாகியது. நகராண்மைக் கழகம் இந்த வீதி முழுக்க கட்டப்பட்டிருந்த அனைத்து கல் இருக்கைகளையும் தகர்ந்தெறிந்துவிட்டது. பல வருடமாக சொல்லி கேட்காமல் இப்போதாவது நடவடிக்கை எடுத்தார்களே என பலரும் சொல்லியிருந்தார்கள்.

எண்ணற்ற மதுபானக் கடைகள்  

கல் இருக்கைகளை உடைத்து விட்டீர்கள். மகிழ்ச்சி. ஆனால் மிக முக்கியமான ஒன்று குறித்து அதிகாரத்துவ தரப்பு இன்றுவரை வாய் திறக்கவில்லையே. கடந்த 2 ஆண்டுகளில் பிரிக்பீல்ட்ஸ் முழுக்க எண்ணற்ற மதுபானக் கடைகள் முளைத்துவிட்டன. ஒரு சிறிய சுற்றுவட்டாரத்தில் அத்தனை கடைகளைத் திறக்க யார் அனுமதி கொடுத்தது?

கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் நகர் உருமாற்ற திட்டத்தின் கீழ் பெரும் பொருட்செலவில் மறுஉருமாற்றம் செய்யப்பட்ட லிட்டல் இந்தியா பிரிக்பீல்ட்ஸில் உருமாற்றத்தின் கருப்பு புள்ளியாக ஏன் இந்த மதுபானக் கடைகள்? எந்த பண்பாட்டை அடையாளப்படுத்த இத்தனை கடைகள்? கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு சில நொடிகளில் ஒரு 5 கடைகளாவது உங்கள் நினைவிற்கு வந்துவிடும். இந்த மதுபானக் கடைகளைப் பொறுப்பில் வைத்திருக்கும் பினாமிகளை ஆராய்ந்தால் ஒரு அரசியல் சுனாமிகூட ஏற்படலாம்.

பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள்> பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளின் உரிமங்களையும் இரத்து செய்து உடனடியாக அந்த கடைகளை மூடுவதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும். இந்த விசயத்தில் எல்லாம் அரசியல் தலைவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். பொதுமக்களாகிய நாம்தான் செய்வதை செய்ய வேண்டும்.

காலங் காலமாக குடிகார சமுதாயமாக அடையாளப்படுத்தப்படும் நாம் மீண்டும் மீண்டும் அதே சேற்றுக்குள் தான் மூழ்க வைக்கப்படுகின்றோம். இந்த பதிவை எழுதுகிற சற்று நேரத்திற்கு முன்புகூட நேரடியாக பார்த்தேன். கல்இருக்கைகள் பெயர்த்தெடுக்கப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிள்களை வைத்து அதில் அமர்ந்து வழக்கமான வேலை நடந்து கொண்டிருந்தது.

இதே போல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நமது இளைஞர்கள் விடிய விடிய குடிப்பதும் ஒரு சமூக பிரச்சனையாக உருவாகி வருகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் பொது இடங்களில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. நமது நிலைபாடு கடுமையாக இல்லாவிட்டால், அரசாங்கம் கெட்டு குட்டிசுவராகட்டும் இவர்கள் என்று நம்மை ஓரங்கட்ட இன்னும் அதிகமாக மது பான உரிமங்களை நமக்கு வழங்குவார்கள்.