தமிழ் பாலர்ப்பள்ளிகளின் எதிர்காலமும் சவால்களும் – தமிழினி

Preschoolபகுதி 1 நாடு விடுதலை அடைந்தது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்கள், கல்வி அறிக்கைகள் தொடங்கி அண்மையில் நடமுறைக்குக் கொண்டு வரப்பட்ட 2013-2025 கல்விப் பெருந்திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் புறந்தள்ளப்பட்டே வந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்ப் பாலர்பள்ளிகள் குறித்த முக்கியத்துவமும் விழிப்புணர்வும் இந்திய சமூகம் மத்தியில் குறைந்த கவனத்தையே பெற்று வந்துள்ளது.

பாலர்ப் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு மட்டுமே குறித்து நாம் தொடர்ந்து பேசி வருவது இந்த புறந்தள்ளப்பட்ட நிலைக்கு முக்கிய காரணமாகும்.

தமிழ்ப்பள்ளிகளில் கல்வி மேம்பாட்டிற்குத் தொடக்கப்புள்ளியாக அமையப் போவது  பாலர்க்கல்விதான். பாலர்ப்பள்ளி கல்வியைப் பெறாத மாணவர்கள் முதலாம் வகுப்பிலேயே கல்வியில் பின்னடைவைச் சந்திக்கின்றனர். பாலர்ப்பள்ளிக்குச் செல்கின்ற மாணவர்களோடு ஈடுகொடு;த்து அவர்களால் கல்வி கற்க முடிவதில்லை. இரண்டாண்டுகள் அல்லது குறைந்தபட்சம் ஓராண்டாவது பாலர்க்கல்வியை மாணவர்கள் கண்டிப்பாக பெற வேண்டும்.

இன்றைய நிலையில் பாலர்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு தேசிய நிலையில் அதிகரித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு வாக்கில் 100 விழுக்காடு பாலர்க்கல்வி அடைவுநிலையை அடைய மலேசியாவின் கல்வி பெரிந்திட்டம் இலக்காக கொண்டுள்ளது. ஆனால், அதில் எத்தனை விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் பாலர்ப்பள்ளிகளைப் பெறவிருக்கின்றன என்ற புள்ளிவிபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மாநில வாரியாக தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் பாலர்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும்  கீழ்க்காணும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 523 தமிழ்ப்பள்ளிகள் 33 விழுக்காடு அல்லது 176 தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே பாலர்ப்பள்ளிகள் இருக்கின்றன.

Slide 1

 

 

 

 

 

 

இருக்கின்ற அந்த 176 பாலர்ப்பள்ளிகளின் எண்ணற்ற சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

1. வகுப்பறைகள்  – பாலர்பள்ளிகளுக்கென சிறப்புத் துணைக்கட்டடம் அல்லது கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படுவதில்லை. இருக்கின்ற வகுப்பறைகளில் பாலர்ப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அல்லது பிற Preschool2வகுப்பு மாணவர்களோடு வகுப்றைகளைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். பாலர்ப்பள்ளிகளுக்கான வகுப்பறைகள் சிறப்பாக மாணவர்களை ஈர்க்கின்ற வகையில் இருக்க வேண்டும். அப்படி எந்த கட்டமைப்பும் இன்றி பாலர்ப்பள்ளி வகுப்பறைகள் இருக்கின்றன. மாணவர் எண்ணிக்கைக்கு ஈடு செய்கின்ற வகையில் இல்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு ஆகும். அதாவது முதலாம் ஆண்டு செல்லும் மாணவர் எண்ணிக்கை 100 என வைத்துக் கொள்வோம்.

ஆனால், 2 வகுப்பறைகள் கொண்ட பாலர்ப்பள்ளி மட்டுமே இருக்கும் பட்சத்தில் அதில், 50 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும். அரசாங்க பாலர்ப்பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு கூடியபட்சம் 25 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ள அனுமதி உண்டு.  மிச்சமிருக்கும் 50 மாணவர்கள் பிற வெளியிலுள்ள பாலர்ப்பள்ளிகளில் மட்டும்தான் கல்விப் பெற முடியும். இல்லையென்றால் பாலர்ப்பள்ளிக்குச் செல்லாமலே முதலாம் வகுப்பிற்குச் செல்கின்ற நிலை இன்று வரை ஒரு முக்கிய சிக்கலாக இருக்கின்றது.

2. வகுப்பறை உபகரணங்கள் – வகுப்பறை கட்டிக் கொடுத்தால் மேறை நாற்காலிகள் வழங்குவதில்லை. இருக்கின்ற வகுப்பறைகளில் பாலர்ப்பள்ளிகள் நடத்தும் பட்சத்தில் பழைய மேசை நாற்காலிகளையே பயன்படுத்தும் நிலையே தொடர்கிறது. பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கென பிரதியேக வகுப்பறை உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் தமிழ்ப்பள்ளிகளில் இருக்கும் பாலர்ப்பள்ளிகளுக்கு விநியோகிப்பதில்லை.

3. பாலர்ப்பள்ளி ஆசிரியர் – முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அனுப்பப்படுவதில்லை. சில தமிழ்ப்பாலர்பள்ளிகளில் மலாய் ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களால், எப்படி தமிழ்வழி கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கு முறையான பாலர்க்கல்வியை வழங்க முடியும் என்பது கேள்விக்குறியே.

4. கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் பாட நூல்களும் –  பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கென சிறப்புக் கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் பாட நூல்களும் அரசாங்கம் முறைப்படி வழங்குவதில்லை. பல பாலர்ப்பள்ளிகளில் படி எடுக்கப்பட்ட பாட நூல்களே பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில், பாலர்பள்ளிகள் நடத்துவதை இப்போது அரசாங்கம் தனது பொறுப்பாக எடுத்துக் கொள்ளாமல் அதனைக் குத்தகைக்கு விட்டு விட்டு அதன் மூலம் தனது கடமையைக் கைக்கழுவி விடும் நிலை கடந்த சில ஆண்டுகளாக அமலுக்கு வந்திருக்கிறது. அது குறித்து அடுத்த தொடரில் காண்போம்.