பகுதி 2. பாலர்ப்பள்ளிகளில் குத்தகை நடைமுறை குறித்து பேசும் முன் தமிழ் பாலர் பள்ளிகளின் தேவை குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
நிலை 1 :- இன்றைய நிலையில் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பள்ளிக்கு 2 வகுப்புகள் என வைத்துக் கொண்டாலும் நமக்கு 1,046 பாலர்ப்பள்ளி வகுப்புகள் தேவைப்படும். இது ஒரு சராசரி அனுமானம் மட்டுமே. இப்போது நமக்கு பயன்பாட்டில் 222 பாலர்ப்பள்ளி வகுப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில் நமக்கு மேலும் 824 பாலர்ப்பள்ளி வகுப்புகள் தேவைப்படும். இந்த அனுமானம் சரியானது அல்ல என்பதை அடுத்த நிலை காட்டுகிறது.
நமது பற்றாக்குறை 978 வகுப்புகள்
நிலை 2: ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 15,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் தங்களின் தொடக்கக் கல்வியைத் தொடங்குகின்றனர். தொடக்கக் கல்விக்கு செல்லும் முன் குறைந்தது ஈராண்டுகளாவது பாலர்க்கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்பது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். அந்த வகையில் 5 வயதில் 15,000 மாணவர்களும் 6 வயதில் 15,000 மாணவர்களுமான ஏறத்தாழ 30,000 மாணவர்களுக்கு ஓராண்டுக்கு பாலர்க்கல்வியை வழங்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. அந்த வகையில் ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் என்கிற நிலையில் நமக்கு 1,200 பாலர்ப்பள்ளி வகுப்புகள் தேவைப்படுகின்றன. பயன்பாட்டில் இருக்கும் 222 வகுப்புகள் போக நமக்கு ஏறத்தாழ 978 வகுப்புகள் பற்றாக்குறை நிலவுகிறது.
அரசாங்கம் பாலர்ப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கான சராசரி செலவு 300 ரிங்கிட் என கணக்கிட்டுள்ளது. அந்த நிலையில் நமது 30,000 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாலர்க்கல்வியை வழங்க 9 மில்லியன் ரிங்கிட் தேவைப்படும். (இந்தப் பத்தி திருத்தப்பட்டுள்ளது. கருத்துப் பிழையினை சுட்டிக்காட்டிய திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு நன்றி.)
இரண்டு விழுக்காடுதான் ஆனால் கிட்டவில்லை
2014-ஆம் மொத்த பட்ஜெட்டில் 21 விழுக்காடு கல்விக்காக ஒதுக்கப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை RM 54.6 பில்லியன் ஆகும். RM 54.6 பில்லியனில் பாலர்க்கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 530 மில்லியன் ஆகும். ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் ஒரு மாதத்திற்கு நமக்குத் தேவைப்படும் 9 மில்லியன் என்பது வெறும் இரண்டு விழுக்காடு மட்டுமே என்பது நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் அந்த 2 விழுக்காட்டை அரசாங்கம் செலவிட மறுப்பது ஒரு பெரும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. (இந்தப் பத்தி திருத்தப்பட்டுள்ளது. கருத்துப் பிழையினை சுட்டிக்காட்டிய திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு நன்றி.)
இதைத் தவிர 2014 பட்ஜெட்டில் 93 தேசிய வகைப் பள்ளிகளில் புதிய பாலர்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் எத்தனை பாலர்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன என்பது இன்றுவரை அறிவிக்கப்படவில்லை.
குத்தகை வழி குழிப்பறிக்கிறார்கள்
சரி. இப்போது குத்தகை வழிமுறைக்கு வருவோம். தமிழ்ப் பாலர்ப்பள்ளிகளின் நிர்மாணிப்பில் அக்கறை காட்டாத அரசாங்கத்தில் மேல் அதிருப்தி கொண்ட பல அரசு சாரா அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக நிதி திரட்டி அல்லது அவ்வப்போது கிடைக்கும் அரசு மானியங்களில் தொடர்ந்து பாலர்ப்பள்ளிகளை நாடு தழுவிய நிலையில் நடத்தி வருகிறது.
கடந்த 2012 தொடங்கி இந்த அரசு சாரா அமைப்புகள் நடத்தி வரும் பாலர்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் தனது பொருளாதார திட்டமிடல் பிரிவின் கீழிலிருந்து ஒரு கணிசமான ஒதுக்கீட்டினை தற்காலிக அடிப்படையில் வழங்கி வருகிறது. அந்த ஒதுக்கீடு அரசு சாரா அமைப்புகள் நடத்தி வரும் பாலர்ப்பள்ளிகளை விரிவுபடுத்துவதற்கும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பெருமளவில் உதவினாலும் இந்த ஒதுக்கீடுகள் நமக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தாது. காரணம் ஒதுக்கீடு நிறுத்தப்பட்டால் பாலர்பள்ளிகள் பாதிப்புக்கு உள்ளாகும்.
சமதர கல்வி அரசின் கடமை
மாணவர்களுக்கு முழுமையான சமதர கல்வியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், அரசு சாரா அமைப்புகள் நடத்தி வரும் பாலர்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடுகள் வழங்குவதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் நிரந்தரமான பாலர்ப்பள்ளிகளை கட்டமைக்கும் பணியிலிருந்து அரசாங்கம் விலகிக் கொண்டு தனது கடமையை மிக நாசூக்காக நமது தலையில் சுமத்துகிறது. தற்காலிகத்திற்கு இதற்கு நாம் ஆதரவளித்தாலும் நீண்ட கால தேவைக்குத் தமிழ்ப்பள்ளிகளில் பாலர்ப்பள்ளிகளை ஏற்படுத்தும் இலக்கு நோக்கி தொடர்ந்து அரசாங்கம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு துறையின் கீழ் நடத்தப்படும் ‘Perpaduan’ பாலர்ப்பள்ளிகள், சமூக நலத்துறை நடத்தும் ‘Kemas’ பாலர்ப்பள்ளிகள், இதைத்தவிர பிரதமரின் துணைவியாரின் மிகப் பெரிய ஆதரவுடன் நடத்தப்படும் ‘Permata’ பாலர்ப்பள்ளிகள், மலாய்ப்பள்ளிகளிலேயே இருக்கும் பாலர்ப்பள்ளிகள் என மலாய்க்காரர்களுக்குப் பாலர்க்கல்வி மிக எளிதாக கிடைக்கக் கூடிய கல்வியாக மாறிவிட்டது. Smart Readers Kids, Q-dees, Montessori என தனியார் பாலர்ப்பள்ளிகள் சீனர்களின் பாலர்க்கல்வி தேவையை நிறைவேற்றுகின்றன. பெரும்பாலான சீன தொடக்கப்பள்ளிகளும் முதல்நிலை பாலர்கல்வியை வழங்குகின்றன.
இவை இரண்டுமே தமிழ்ப்பள்ளிக்கு செல்லும் ஒரு மாணவனுக்கு எவ்வகையிலும் உதவ முடியாத நிலையில் முற்றும் முழுதாக தான் செல்லவிருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பாலர்ப்பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் இந்திய மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
பாலர்கல்வி அவசியமான அடிப்படை
பாலர்க்கல்வி என்பது ஒரு மாணவனின் மிக முக்கிய தேவையாகும். 4-லிருந்து 6 வயதிற்குட்பட்ட காலக்கட்டத்தில் மொழி, கணிதம், அடிப்படை தொடர்பாடல் போன்ற திறன்களை மிகச் சரியான முறையில் உள்வாங்கிக் கொள்வதற்கான அடித்தளத்தினைப் பாலர்க்கல்வியே ஏற்படுத்தித் தருகின்றது. அதனால் பிறந்தது தொடங்கி 8 வயது கற்கும் கல்வியானது பாலர்க்கல்வி என்றே அடையாளப்படுத்தப்படுகின்றது. முன்கல்வி என்று முன்பள்ளி என்றும் கூட பாலர்பக்கல்வியும் பாலர்ப்பள்ளியும் அழைக்கப்படுகின்றன.
பாலர்க்கல்வி பெறாமல் முதலாம் ஆண்டு செல்லும் மாணவன் தொடக்க நிலையிலேயே கற்றல் கற்பித்தலில் தாக்குப்பிடிக்க முடியாமல் பின் தள்ளப்படுகின்றான். சரியான வயதில் பாலர்க்கல்வியைப் பெறாத காரணத்தால் கிரகிக்கும் ஆற்றலும் விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் அவனிடம் இயல்பாகவே குறைந்து விடுகிறது.
தனக்குத் தெரியாத ஒன்று – தெரிகிறதா விளங்குகிறதா என்று கூட கேட்கப் படாமல் அவனிடம் திணிக்கப்படுகிற போது அவன் அதிகமான அழுத்தத்திற்குள்ளாகிறான். தாழ்வு மனப்பான்மை அவனைச் சூழ்ந்துக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக மெதுபயில் மாணவனாக மாறுகிறான்.
தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையும்
இந்த மாணவர்கள்ளில் பலர் ஆறு ஆண்டுகள் கல்வி கற்றும் தங்கள் சொந்தப் பெயரைக் கூட எழுதத் தெரியாத மாணவர்களாக, அடிப்படை கணிதங்களைக் கூட செய்ய முடியாத மாணவர்களாக, தாய்மொழியில் கூட வாசிக்கத் தெரியாத மாணவர்களாக மாறுகின்றனர்.
பாலர்க்கல்வி புறக்கணிக்கப்பட்டால் ஏற்படும், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அபாயம் இது. இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர செய்ய வேண்டியதை செய்ய வில்லை என்றால் தமிழ்வழி கல்வி பாதிப்படையும் அபாயம் உள்ளது.
நிரந்திர தீர்வு என்பது ஓர் அரசியல் முடிவாகத்தான் உருவாக வேண்டும் என்பதை சமூகம் உணர வேண்டும். அதைவிடுத்து தற்காலிக அரசாங்க ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு பாலர்கல்வி பிரச்சனையை கலைய முடியும் என வாதிடுபவர்கள் அதனால் உண்டாகும் சிக்கல்களையும் உணர வேண்டும்.
அரசியல்தான் வழிமுறை என்றால் எப்படி ? நமது ம இ கா அமைச்சர்களை நம்பியா ! தமிழ்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல்பள்ளிகளில் இடமில்லையா என்ற மக்களின் கேள்விக்கு , எனக்கு ஏதும் தெரியாது என்று சொன்ன ஒரு துணை அமைச்சரின் பதிலை தமிழ் நாளிதழில் படிக்கவில்லையா!!! இஈஇஈஇஈஇஈஇஈ……..
எனது பார்வையில் தமிழினியின் கருத்துகள் சரியானவை. இப்போது அரசங்க உயர் கல்வி மலாய்காரர்களுக்கு எ்ன்றாகி விட்டது. பாலர் கல்வியுக்கும் அந்த நிலை வரக்கூடாது். 2020-இல் 100% பாலர்கல்வி என்பது நமக்கும் கிடைக்க வேண்டும். இண்றாப் கேட்ட 4.5 பில்லியன்தான் கிடைக்க வில்லை. 9 மில்லியன்் கூடவா அரசாங்கம் ஒதுக்க முடியாது? இதை பெற இயலவில்லை என்றால் அரசாங்க கல்வி நியமனங்கள் பெற்ற தலைவர்கள்் பதவி விலக வேண்டும்.
மலேசியக் குடிமக்களின் கல்வி அரசாங்கத்தின் பொறுப்பு. கடப்பாடு. இதனை அரசு சாரா அமைப்புகளின் கைகளுக்கு சொற்ப நிதியோடு மாற்றிவிடுவதானது அரசு தன் சட்டப்படியான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதையே காட்டுகிறது. இதை அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முதலில் நாம் முடிவு செய்ய வேண்டும்.
உரிமையை விட்டுக்கொடுத்ததின் விளைவே இன்றைய நிலை. இதற்கு ம இ காவும் ஒரு முன்னோடி…. உண்மை நிலவரம் அறியாதது அல்ல, எமக்கு ஏன்டா இந்த பொல்லாப்பு என்ற அலட்சியப் போக்கு கொண்ட தலைவர்களை மீண்டும் மீண்டும் நம்பி ஆதரித்ததுதான் நாம் செய்த மாபெரும் தவறு… இனியாவது உண்மையாய் போராடும் அன்பர்களுடன் கைகோர்த்து நமது உரிமைக்காக குரல் கொடுப்போம்…. மறுமலர்ச்சி பிறப்பது உறுதி….!!!
தமிழினி போன்ற சமூக ஆர்வலர்களை கரம் கூப்பி வணங்குவது மிகையாகாது. நல்ல ஆய்வு, நல்ல கருத்து. பாலர் பள்ளி பிரச்சனை நமக்குத் தெரிந்து விட்டது. அதன் பயனைப் பெற இயலாத மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு பாதிக்கப் படும் என்பதை கண்கூடாக காண்கின்றோம். தமிழ் பள்ளிகளில் பாலர் பள்ளி வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அரசாங்கம் இதற்க்கு முழு பொறுபேற்று தனது கடமையைச் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதை செயல்முறைக்கு கொண்டு வர நாம் அரசாங்கத்தை தக்க முறையில் நெருக்க வேண்டும். சரியான வழிகளில் நமது வேண்டுகோளை வைக்க வேண்டும். வேலன், செய்வாரா?, சுப்பிரமணியம் செய்வாரா?, சரவணன் செய்வாரா? இல்லை பாலக்கிருஷ்ணன்தான் செய்வாரா?. தலை சரியா இருந்தாதானே வால் ஆடுவதற்கு. யாரை நம்பி நம் காலை எடுத்து முன்னே வைப்பது. ம.இ.க. -வை நம்பாமல் நேரிடையாக நம்பிக்கை நாயகனின் காலில்தான் விழ வேண்டும். பேராசிரியர் இராஜேந்திரனைக் கொண்டுதான் முன்னேற வேண்டும் போல் இருக்கு. இப்பொழுதே நம் கோரிக்கையை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் வேண்டுகோள் வைக்க விளைவோம்.
ஐயா பாலர் பள்ளி பற்றியும் தமிழ்ப்பள்ளி, கல்வி பற்றியும் சிலாங்கூர் இன்று என்று ஏட்டில் பார்த்தைன்.வாசகர்கள் நன்மைக்கு அதை இங்கு வெளியிடலாமே..