ஆஸ்ட்ரோ விழுதுகள் குழுவினருக்கு நன்றியும் சில கோரிக்கைகளும்… தமிழினி

2வழக்கமாக ஆஸ்ட்ரோ வானவில் விழுதுகள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பதுண்டு. மலேசிய இந்தியர்களின் குறிப்பாக மலேசிய தமிழர்களுக்குத் தேவையான அறிவுசார்ந்த ஓர் உள்ளுர் தொலைக்காட்சி தயாரிப்பாக விழுதுகள் நிகழ்வு திகழ்கிறது. செம்பருத்தியில் கடந்த ஓரிரு வாரங்களாக மலேசியாவில் தமிழ்ப்பாலர்களின் தேவையும் முக்கியத்துவத்துவமும் குறித்து தொடர் விவாதத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றைய விழுதுகள் நிகழ்வில் பாலர்ப்பள்ளி குறித்து பேசப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதில் மிக முக்கிய விடயம்  என்னவென்றால் நாட்டில் தமிழ்ப்பாலர்பள்ளிகள் குறித்த தொடர் நடவடிக்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களை இணைத்துக் கொண்டுள்ள 2 முக்கிய செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.  CHILD அறவாரிய பாலர்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்துக் கலந்துக் கொண்ட திரு.கா. ஆறுமுகம் அவர்களும் மலேசிய பாலர்ப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துக் கலந்து அதன் பாலர்ப்பள்ளி செயல்திட்ட இயக்குநர் திரு. பிரான்சிஸ் ஷேவியர் அவர்களும் நேர்க்காணலில் பங்கெடுத்திருந்தனர். இவ்வேளையில்  அவர்களுக்கு வாய்ப்பினை வழங்கிய விழுதுகள் குழுவினருக்கும் அதன் தற்போதைய தயாரிப்பாளர் திரு. சோதிராஜன் அவர்களுக்கும் நமது நன்றி.

DSC08002

திரு. ஆறுமுகம், 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து EWRF மற்றும்  CHILD அரசு சாரா அமைப்புகளின் ஊடாக மலேசியாவில் தமிழ்ப் பாலர்ப்பள்ளிகள் அமைப்பது குறித்த தொடர் நடவடிக்கைகளில் மருத்துவர் ஐங்கரன், திரு.கிருஷ்ண பகவான் ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர். நாடு முழுவதும் பயணம் செய்து புறநகர்ப்பகுதிகளில் பாலர்ப்பள்ளிகளின் தேவை குறித்தும் அதன் உருவாக்கம் குறித்தும் பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு களச்செயற்பாட்டாளர் ஆவார். மேலும், பாலர்ப்பள்ளிகள் – அதன் தேவைகள், சவால்கள் குறித்து பல கட்டுரைகள் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DSC07993திரு. பிரான்சிஸ் ஷேவியர் மலேசிய பாலர்ப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமைக்குறியவர். இந்த அமைப்பின் கீழ் இன்று மலேசியா முழுமைக்கும் 151 பாலர்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. 22 ஆண்டுகளாக பாலர்ப்பள்ளி தொடர்பான நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். செம்பருத்தி, மாத இதழாக வெளிவந்த காலகட்டத்தில் இவர்களின் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவருவதுண்டு.

இந்த இரு முக்கிய செயற்பாட்டாளர்களை உட்படுத்திய நேர்க்காணல் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது அதிர்ச்சியளித்தது எனலாம். பாலர்ப்பள்ளிகள் குறித்து பேசுவதற்கு இவர்கள் இருவரிடமும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அது குறித்து மிக அதிகமாக பேசுவதற்குறிய தேவையும் இன்றைய நிலையில் நமக்கு இருக்கிறது. வெறும் இடைச்செருகலாக இந்நேர்க்காணல் இடம்பெற்றிருக்க கூடாது என்பதே என்னுடைய கருத்து. வணிகம், உயர்க்கல்வி, இணையம் வழி வாணிகம் போன்றவற்றிற்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விழுதுகள் குழுவினர் தமிழ் பாலர்க்கல்வி தொடர்பான தொடர் நேர்க்காணல்களுக்கு வாய்;ப்பளிக்க வேண்டும்.

விழுதுகள் குழுவினரும் பாலர்ப்பள்ளிகள் குறித்த குறைந்தபட்ட தெளிவினைப் பெற்றிருக்க வேண்டும். எப்போதைக்கும்மில்லாத அளவிற்கு இன்றைய நிலையில் பாலர்ப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குத் விளக்க வேண்டிய  ஊடகங்களுக்கு இருக்கிறது. எனவே, பாலர்ப்பள்ளிகள் குறித்த தொடர் நேர்க்காணல்களுக்கு  விழுதுகள் குழுவினர் வாய்ப்பளிக்க வேண்டும். வாய்ப்பு வழங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…