நேற்று நன்கு அறிமுகமான பெரியவர் ஒருவரை யதேச்சையாக சந்தித்தேன். அவர் மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபா பல்கலைக்கழகத்தில் காட்டுவளம் சார்ந்த ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர். இப்போது என்ன செய்கிறார் எனக் கேட்டேன். நிரந்தரமாக எந்த வேலைக்கும் இதுவரை செல்லவில்லை என்றும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சிக்கு நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கமும் கல்வியமைச்சும் இது குறித்து விரைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். தனது மகளை ஒரு ஆசிரியர் ஆக்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாய் நிறைவேறும் என்ற கண்களில் கனவு மின்ன குறிப்பிட்டார்.
ஆனால், இந்த பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி 2011-ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பெரியவரின் மகளைப் போலவே எண்ணற்ற இந்திய பட்டதாரிகள் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சிக்கு இன்றுவரை நம்பிக்கையோடு காத்திருப்பதை பல நிலைகளில் நம்மால் அறிய முடிகிறது.
Kursus Perguruan Lepasan Ijazah (KPLI) என்றழைக்கப்படும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி கல்வியமைச்சின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்விப் பிரிவினால் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் ஒரு குறுக்கு வழியாகவும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட போதே நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே ஆசிரியர் பயிற்சி வழங்கப்படாதவர்கள் பட்டம் படிப்பிற்குப் பின்னான ஓராண்டுகால பயிற்சிக்குப் பின் நல்லாசியர்களாக உருவாக முடியுமா என்ற கேள்வி மிக முக்கியமான கேள்வியாக முன்வைக்கப்பட்டது.
இருந்தும் குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்த இத்திட்டம் முழுமையான ஆசிரியர் பயிற்சியைச் சார்ந்திராத பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்களை எல்லாம் ஆசிரியர்களாக்கியது. கல்வித் துறைக்கு சம்பந்தமில்லாத துறைகளில் பட்டம் பெற்றவர்கள் கூட ஆசிரியர்களானார்கள்.
இதில் வாய்ப்பு கிடைத்து இன்று நல்லாசிரியர்களாய் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் செம்பருத்தியின் வாழ்த்திற்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். ஆனால், தான் பட்டம் பெற்ற துறையில் இருக்கும் சவால்களுக்குப் பயந்து நல்ல சம்பளமும் விடுமுறையும் இன்ன பிற அனுகூலங்களும் கிடைக்கும் என்பதற்காகவும் இந்த பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி மூலம் ஆசியர்களானவர்கள் எங்கெங்கு நமது மாணவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். மேலும், இத்திட்டத்தின் வழி ஆசிரியர் பயிற்சி பெற்ற இந்திய மாணவர்களில் பலர் தேசியப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் ஒரு செய்தி.
எல்லாரும் ஆசிரியர்களாகிவிட முடியாது என்ற கூற்றை பெரும்பாலும் யாரும் மறுக்க மாட்டார்கள். ஏனெனில், ஆசிரியர் பணியானது மாணவனை செதுக்கும் பணி. அதற்கு கூடியபட்ட பொறுப்புணர்வும், சகிப்புத் தன்மையும், புதியனவற்றைக் கற்றறியும் திறனும் மிக அவசியம். தொடர் பயிற்சியின் மூலமும் சொந்த ஆர்வத்தின் வழியுமே அதனைப் பெற முடியும்.
இன்றைய நிலையில், எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழி, கல்வி நிலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாவது வரவேற்கத் தக்க ஒன்றாக இருக்கிறது. அதைத் தவிர, இவர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகால பயிற்சி வழங்கப்படுகிறது. தங்கள் பயிற்சிக்காலத்தில் நிறைய பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கற்றுத் தரவும் இவர்கள் கற்றுக் கொள்ளவும் நிறையவே வாய்ப்பு வழங்குகிறது. இதை நான் வரவேற்கிறேன். ஒரு தரமான ஆசிரியர் உருவாகுவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். இது குறித்து நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். கருத்துரைக்க விரும்புவர்கள் செம்பருத்திக்குக் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இந்த நிமிடம் வரை பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சியில் வாய்ப்பு வழங்கப்படும் எனக் காத்திருப்பவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தீவீரமாக முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறேன்.
என் மகள் நான்கு வருடம் ஆசிரியர் பயிற்சி பெற்று பட்டம் வாங்கிய பின் ஆசிரியர் வேலை செய்யும் போது சம்பந்தமே இல்லா படிப்பை மேற்கொண்டு வெறும் ஒரு வருட கால ஆசிரியர் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு கற்று தரும் ஆசியர்களின் தரம் சமமாகுமா. மலேசியாவின் கல்வி தரம் அகால பாதாளத்துக்கு போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணம் .கல்வி தரத்தில் வெய்ட்நாம் தாய்லாந்து போன்ற நாடுகளிடம் நாம் பின் தங்கி இருக்கிறோம் என்றால் வேட்க்க கேடான விசயம் அல்லவா
தரமற்ற ஆசிரியர்களிடமிருந்து தரத்தை எதிர்பார்ப்பது நடவாத செயல். ஆண்டவனுக்கே வெளிச்சம். எஸ் பி எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்று, ஆசிரியர் துறையில் ஆர்வம்கொண்டோரை பயிற்சிக்கு தேர்ந்தெடுப்பதே சாலச் சிறந்தது…. இல்லையேல் ஒருசிலரின் வயிற்றுப்பிழைப்புக்கு மாணவர்களின் எதிர்காலம் பலிகடாவாக அமையும் என்பதில் சற்றளவும் ஐயமில்லை!!!!!
மற்ற வேலை இல்லை அதனால் ஆசிரியராக வந்து சம்பளத்துக்கு வந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை வினாகதிங்க. ஒரு வருடம் பயிற்சி போதாது.
நமது கல்வி திட்டம் எப்படி அல்லோப்படுகிறது என்பதை பார்த்திர்களா.தமிழ் கல்வியே படிக்காத சில முட்டாள்களை இந்த திட்டத்தின் கிழ் தமிழ் பள்ளியில் பணிக்கு அமர்த்தி யுள்ளது அரசு.முறையாக தமிழ் படிக்காதவர்களை தமிழ் பள்ளிக்கு அனுப்பப் படுவதை இந்நாட்டு தமிழ் சமுதாயமே எதிர்க்க வேண்டும்.முறையாக ஆரம்ப கல்வியை தமிழ் பள்ளியில் படிக்காதவர்களுக்கு தமிழ் பள்ளியில் இடம் இல்லை என்பதை அரசுக்கு உரக்க சொல்ல வேண்டும்.இந்த தமிழ் அறிவீளிகளிடமிருந்து தமிழ் பள்ளியையும் நமது அப்பாவி தமிழ் மாணவர்களையும் காப்பாற்றுவோம் வாரீர்.
தெனாலி இந்த தலைப்பை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். கற்றது கைமண்.
நல்ல சம்பளமும் விடுமுறையும் இன்ன பிற அனுகூலங்களும் கிடைக்கும் என்பதற்காகவும் இந்த பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி மூலம் ஆசியர்களானவர்கள் எங்கெங்கு நமது மாணவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
முழுதும் வரவேற்கின்றேன்..5/10 நீங்கள் சொல்வது உண்மைதான்….3-5 வருடங்கள் ஆசிரியர் பயிற்சிக்கு என கல்வி கற்று வருபவர்கள் தான் இத்தொழிலுக்கு ஏற்றவர்கள். வெறுமனே சம்பந்தமில்லாத பட்டப்படிப்பு படித்து ஆசிரியர் தொழிலுக்கு வரக்கூடாது.
எனது நண்பரின் மகள் ஒருவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை! தனது எஸ்.பி.எம். கல்வியைத் தகுதியை வைத்து தற்காலிக ஆசிரியராக தமிழ்ப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து, வேலை செய்து கொண்டே ஆசிரியர் பயிற்சி பெற்று, அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து இடை நிலைப் பள்ளியில் வேலை மாற்றம் கிடைத்து இப்போது அங்கே வேலை செய்கிறார்.
ஆசிரியர் பணியில் தகுதி உள்ளவர்கள் பணியாற்றுவது சாலச்சிறந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வெறும் கல்வித் தகுதி மட்டும் போதுமா. கல்வியில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ளவர்களே இப்பணிக்கு ஏற்றவர்கள். நம் ஆசிரியர்களில் பலர் வேலை கிடைக்கும் வரை ரொம்ப ஆர்வலர் போல் பணியாற்றுகிறார்கள். பின் வேலை நிரந்திரன் ஆனவுடன் ஆசிரியர்களாக இருப்பதைவிட டியூசன் மாஸ்டர்களாக மாறிவிடுகிறார்கள். இதற்கு ஒரு நல்ல எ.கா என் பிள்ளைகள் படிக்கும் சிம்பாங் 5 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்தான். அப்பள்ளியின் 6ஆம் ஆண்டு தமிழ், கணிதம், மலாய் ஆசிரியர் சிலர் தன் வகுப்பில் பயிலும் மாணவர்களையே தம் டியூசன் மாணவர்களாக வைத்துள்ளனர். அதிகம் வசூலிக்கின்றனர். சமூக உணர்வு எல்லாம் ரெண்டாம் பச்சம்தான். பாவம் பெற்றோர். பெ.ஆ.சங்கத் தலைவர் வைத்து நடத்தும் கல்வி செண்டரில் இந்த ஆசிரியர்கள்தான் மாஸ்டர்கள். எப்படி மதிப்பார்கள். மாறுவார்கள். எல்லாம் பிஸ்னஸ்.
தொடக்கத்திலிருந்து ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களாக இருப்பினும் இரண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் தற்காலிக ஆசிரியர்களாக பணிப்புரிந்த இப்பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களின் நெழிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர்களாகவும் சிறந்த அனுபவசாலிகளாக இருப்பவர்களாதலால் இவர்களும் ஐந்து வருட காலப் பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு நிகரானவர்களே.குறிபிட்டுகூறின் இவர்கள் வயதிலும் முதிந்தவர்கள்; அனுபவக்கல்வி மிகுந்தவர்களுங்கூட.ஆக,இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வருடக் காலப் பயிற்சியும் வழங்கப்பட்டால் இவர்களும் நிச்சயம் சிறந்த ஆசிரியர்களாக உருவாக முடியும்.
தாங்கள் பட்டம் பெற்ற துறை ஆசிரியர் துறையை சார்ந்திராவிட்டாலும் ஆர்வத்தின் காரணத்தினாலே KPLI பயிற்சிக்கு விண்ணப்பம் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பல வருடங்களாக தற்காலிக ஆசிரியர்களாக பணிப்புரிந்தவர்களே. தற்போது ஆசிரியர் துறை மிகவும் சவால் மிகுந்த துறையாக மாறிக்கொண்டிருக்கிறது.இது அந்த ஆசிரியர்களுக்கே வெளிச்சம்.ஆகையால், இவர்கள் தாங்கள் பட்டம் பெற்ற துறையில் இருக்கும் சவால்களுக்கு பயந்தோ,அனுகூலங்களுக்காகவோ ஆசிரியர் துறையை தேந்தெடுப்பதில்லை.இது அத்துறையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமே.
தமிழ்ப்பள்ளிகளில் KPLI பயிற்சிக்குப் பிந்தைய ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போதைய நிலையில் சராசரி ஒவ்வொரு பள்ளியிலும் ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணிப்புரிகிறார்கள்.அப்படியிருக்க இவர்களால் மாணவர்கள் வதைக்கப்படுகின்றனர் என்ற கூற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தற்போதைய நிலையில் இடைநிலைப் பள்ளியில் கடைநிலை மாணவர்களாக இருந்தவர்கள்கூட பலர் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிப்புரிந்து வருகின்றனர். உண்மையில் இதுப்போன்ற அரைகுறை ஆசிரியர்களால்தான் மாணவர்கள் பெருமளவு வதைக்கப்படுகின்றனர்.இதில் தலைமையாசிரியர்களின் பங்கு அளப்பரியது.இதில் அதிர்ச்சித் தரும் விடயம் என்னவென்றால் SPM தேர்வில் தமிழ்மொழிப்பாடத்தில் தேர்ச்சிப்பெறாத ஒரு மாணவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையில் DIPLOMA பயிற்சியை மேற்கொண்டு இன்று ஒரு தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் போன்றோர் பல நேரங்களில் தேர்ச்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை.இப்பொழுதெல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் (Lump sum, cabel) போன்ற சொற்கள் பரவலாக பேசப்படுகின்றது. இதுப்போதாதென்று தற்போது தேசியப்பள்ளியில் பயின்ற இந்திய ஆசிரியர்களும் மலாய் ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். தமிழை படித்திராத,தமிழ்ப்பற்று இம்மியளவும் கொண்டிராத இதுப்போன்ற ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமிக்கப்ப்டும்போது நிலமை இன்னும் மோசமாகிறது. ஆய்வின்படி ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன் ஆங்கிலச் சொற்களை மொழிப்பெயர்ப்பு செய்ய முற்படும்போது அச்சொல்லின் பொருளை தாய்மொழியான தமிழிலே மொழிப்பெயர்ப்பு செய்கிறான். நிலமை இப்படியிருக்க இவர்களுக்கு தேசியப்பள்ளியில் பயின்ற இதுப்போன்ற இருமொழி திறமையில்லாத ஆசிரியர்களால் எப்படி அம்மொழியை செவ்வனே பயிற்றுவிக்க முடியும். இதுப்போன்ற நியமனங்களின் உள்நோக்கம்தான் என்ன ??? ஏன் தமிழ்ப்பள்ளியில் படித்து இப்பட்டதாரியான ஆசிரியர்களால் கற்பிக்க முடியாதா ???
உங்களுக்கு தெரியுமா ? பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளில் கலைக்கல்வி, இசைக்கல்வி, வாழ்வியல் கல்வி, குடியியலும் குடியுரிமையும் ஏன் நன்னெறிக் கல்விக் கூட முறையாக கற்பிக்கப்படுவதில்லை. இத்துறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையே இதற்கு காரணம். இத்துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும்போது நீண்டகாலமாக (Adjustment) என்ற நீக்குப்போக்கு யுக்தியே கையாலப்படுகிறது.இதனால் பல நேரங்களில் ஆசிரியர்களால் தரமான கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள இயலுவதில்லை. ஏன் இந்த பற்றாக்குறையை தீர்க்க இதுப்போன்ற துறைகளில் KPLI பயிற்சிகளை வழங்கலாமே? தற்போது பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள PBS எனப்படும் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறைமைகளிலும் அது சம்பந்தமான கோப்பு உருவாக்கங்களிலும் இப்பட்டதாரி ஆசிரியர்கள் திறமையாக செயல்படுத்தும் ஆற்றல் உடையவர்கள்.ஆகையால், இப்பட்டதாரி ஆசிரியர்களும் நிச்சயம் நல்லாசிரியராக உருவாக முடியும்.
தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் காப்பாற்றப்பட வேண்டும்!