-ஜீவி காத்தையா, மே 6, 2014.
எதையுமே அசூர வேகத்தில் செய்து முடிக்கும் திறன் பெற்றதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மலேசிய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகள் கட்டும் பணியில் நத்தையைவிட மெதுவாக நகர்வது வழக்கமான தொடர்கதை. அக்கதையை மீண்டும் யோங் பெங் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பில் காண்கின்றோம்.
தமிழ்ப்பள்ளிக்கூட சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும்; ஆனால் கூரை இருக்காது. கூரை இருந்தால் விளக்கு இருக்காது, மேசை நாற்காலி இருக்காது. சமீபத்தில் கிள்ளான் ஹைலேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளில் இந்த ஒப்பாரி முழங்கியது. இப்போது யோங் பெங் தமிழ்ப்பள்ளியிலும் அதே ஒப்பாரிதான்.
ஐயோ, மின்சாரம் இல்லை, ஐயையோ, மேசை நாற்காலி இல்லை, ஐயையோ-ஐயையோ, கரும்பலகை இல்லை, பிளாஸ்டிக் பாய் இல்லை என்று ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டு ஒப்பாரி வைப்பதேயே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் மஇகாவினர்.
தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கும் விவகாரத்தில் ஏன் இந்த மஇகா ஒப்பாரி? தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு அவர்கள் கெஞ்சிக் கூத்தாட வேண்டும்; நிலம் தேட வேண்டும்; நிதி திரட்ட வேண்டும். மலாய்ப்பள்ளி கட்டுவதற்கு அம்னோவினர் இந்தக் கெஞ்சல், கூத்தாடுதல் மற்றும் மாலை போடுதல் போன்ற பிச்சைக்கார செயல்களில் ஈடுபடுவதில்லை. மலாய்மொழிப் பள்ளிக்கு அரசாங்கம் அரசாங்கப் பணத்தை வாரிவாரிக் கொட்டுகிறது. தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் மஇகாவும் மசீசவும் கையேந்தி நிற்க வைக்கப்பட்டுள்ளன.
காஜாங் சீனமொழிப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர் தமது பள்ளிக்கு ஓர் இணைக்கட்டடம் எழுப்புவதற்கு அவரது வேலை முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் காஜாங் சுற்றுவட்டாரத்தில் வீடுவீடாகச் சென்று நிதி திரட்டிய அனுபவத்தையும், சீன மக்கள் அவரை எப்படி எல்லாம் திட்டினார்கள் என்பதையும் அவர் கடந்த ஆண்டு கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கண்ணீர்மல்க கூறினார். மசீச எப்படியோ இப்போதைக்கு சமாளித்து விடுகிறது. “இப்போதைக்கு”, எப்போதைக்கும் அல்ல. சீன இளைஞர் சமூகம் தேசியப்பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் அனைத்து உரிமைகளையும் சீனப்பள்ளிக்கு பெற்றுத்தர வேண்டும் என்று மசீச தலைவர்களின் சிண்டைப் பிடித்துக் குளுக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளியின் உரிமை என்ற விவகாரத்தில் மஇகாவின் நிலைமையை யோங் பெங் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு விவகாரம் தெளிவாகக் காட்டுகிறது: இப்பள்ளி திறக்கப்பட வேண்டுமென்றால் மஇகாவின் பங்கான ரிம1,841,309 ஐ அது திரட்டித்தர வேண்டும். அதுவரையில் அப்பள்ளி இருளில்தான் இருக்கும்!
யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கு மின் விநியோகம் இல்லாததாலும். மேசை நாற்காலி போன்ற உபகரணங்கள் இல்லாததாலும் தங்களுடைய “பிள்ளைகளை அருகிலுள்ள பிறமொழிப் பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.” (தநே 28.4.14) இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளை ஒழிப்பதற்கான அம்னோவின் இறுதிக் குறிக்கோள் அதன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
ம இகா ரிம1,841,309 திரட்ட வேண்டும்
யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கு தேவைப்படும் மின் வசதி மற்றும் மேசை நாற்காலி போன்ற பொருள்களுடன் இதர அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க இன்னும் ரிம18 இலட்சம் தேவைப்படுகிறது. இது மஇகாவின் பங்கு. இவ்விவகாரம் மஇகா தலைமைத்துவத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கு நிலவும் மெத்தனப் போக்கு பெற்றோர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. (தநே 28.4.14)
யோங் பெங் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படுவதில் ஏன் தாமதம் என்று ஜோகூர் சட்டமன்றத்தில் யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் சூ பெக் சூ எழுப்பிய கேள்விக்கி பதில் அளித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஜாயிஸ் சார்டே இப்பள்ளி ஜூன் 2013 இல் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்; இருப்பினும் ஜூன் 2014 இல் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறினார்: “இப்பள்ளியைக் கட்டுவதற்கான மதிப்பீட்டு செலவு ரிம4,161,309. அதற்கான நிதி பிரதமர்துறையிடமிருந்து ரிம2,000,000, மாநில அரசிடமிருந்து ரிம300,000 மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ரிம20,000. ஆக மொத்தம் ரிம2,320,000 கிடைக்கப் பெற்றது. தேவைப்படும் மீதமுள்ள ரிம1,841,309 ஐ மஇகா திரட்டி பள்ளி நிர்மாணிப்பை முடிக்க வேண்டும்”, என்று பதில் அளித்தார்.
மஇகா ஆதிக்கம் செலுத்தும் அப்பள்ளியின் கட்டடக் குழு தேவைப்படும் மிச்ச தொகையை கேட்டு பிரதமர்துறைக்கு கடிதம் எழுதி பதிலுக்காக காத்திருக்கிறது என்று முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். (செம்பருத்தி.கோம் 6.3.14) இதுதான் தமிழ்ப்பள்ளியை நிர்மாணித்து அதனைப் பராமரிக்கும் இலட்சனமா?
ஏன் மஇகா நிதி திரட்ட வேண்டும்?
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் சூ பெக் சூவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் பிரதமர்துறை, ஜோகூர் மாநில அரசு மற்றும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் யோங் பெங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு நிதி அளித்துள்ளனர். இப்பள்ளியின் நிர்மாணிப்பிற்கு நிதி அளிக்க எவ்வித சட்டப்பூர்வமான கடப்பாடும் இல்லாத மஇகா கிட்டத்தட்ட பிரதமர்துறை அளித்த ரிம20 இலட்சத்திற்கு சமமான நிதியை திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்நாட்டின் தேசிய கல்வி அமைவுமுறைக்கு உட்பட்ட ஒரு பள்ளியை நிர்மாணித்து அதைப் பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடப்பாடுடைய கல்வி அமைச்சியிடமிருந்து ஒரு சல்லிக் காசு கூட ஒதுக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பிரதமர்துறையிலிருந்து வழங்கப்படும் நிதி பூனைக்கு பால் வார்ப்பதிலிருந்து பூகம்பத்தால் தாக்கப்பட்டவர்கள் வரையில் பிரதமர் கருணையோடு வழங்கும் உதவியாகும். இதை பிரதமரிடமிருந்து கெஞ்சி கூத்தாடியும் பெறலாம். அதைத்தான் மஇகா செய்து கொண்டிருக்கிறது. பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கல்வி அமைச்சு நாடாளுமன்ற ஒப்புதலுடன் அளிப்பது நிதி ஒதுக்கீடாகும். யோங் பெங் தமிழ்ப்பள்ளியின் கட்டட நிர்மாணிப்பைப் பொறுத்தவரையில் கல்வி அமைச்சு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என்பது ஜோகூர் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலிலிருந்து தெளிவாகிறது.
யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சு ஒதுக்க வேண்டிய நிதியை மஇகா திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
மஇகா மாமன்னரின் அரசாங்க இலாகா அல்ல
மஇகா ஓர் அரசாங்க இலாகா அல்ல. அது கல்வி அமைச்சின் ஓர் இலாகா அல்ல. அரசாங்க இலாகாவின் பணியாளர்கள் அல்ல மஇகா உறுப்பினர்கள். அமைச்சர்களாக இருக்கும் மஇகாவின் தலைவர்கள் மஇகா அமைச்சர்கள் அல்ல. அவர்கள் மாமன்னரின் அமைச்சர்கள். இது மசீச, அம்னோ மற்றும் இதர கட்சிகளின் அமைச்சர்களுக்கும் பொருந்தும். அவர்கள் அனைவரும் மாமன்னரின் அமைச்சர்கள் (Ministers of the Crown). நாடாளுமன்ற எதிரணித் தலைவரும் மாமன்னரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவராவார் (His Majesty’s Leader of the Opposition in Parliament). அரசாங்க இலாகாகளும் மாமன்னரின் அரசாங்க இலாகாகளே. அரசியல் கட்சிகள் மாமன்னரின் அரசியல் கட்சிகள் அல்ல. அவற்றின் உறுப்பினர்கள் மாமன்னரின் அரசாங்க இலாகா பணியாளர்கள் அல்ல. அரசாங்க இலாகா பணியாளர்களின் பணியை ஆற்றும் உரிமையோ கடப்பாடோ அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு சட்டப்படி கிடையாது. ஆகவே, தமிழ்ப்பள்ளிக்கூடத்தை, யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கூடத்தை, கட்டி அதனைப் பராமரிக்க வேண்டியது மாமன்னரின் கல்வி அமைச்சரின், கல்வி அமைச்சின், சட்டப்பூர்வமான கடமை. அதற்கான அரசாங்க நிதியைத் திரட்டி வழங்குவது கல்வி அமைச்சரின் கடமை. அப்படி வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. இந்நிலைப்பாட்டை மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வழக்குரைஞரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான ஜி. வடிவேலு ஒரு பள்ளியை நிர்மாணித்து அதனைப் பராமரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளதோடு அதனை நிலைநாட்ட, தேவைப்பட்டால், பெற்றோர்கள் நீதிமன்றம் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேல் தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கம்தான் கட்டித் தர வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு பூச்சோங்கில் கூறினார்.
ஆனால், மஇகாவினர் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையில் தமிழ்ப்பள்ளிகளின் உரிமையை நிலைநாட்டவும், அவற்றின் மேம்பாட்டிற்காகவும் போராடாலாம்; போர் முரசு கொட்டலாம். மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தமிழ்மொழிப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக கல்வி அமைச்சரையும், சட்ட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏன், பிரதமரையும்கூட, உண்ணவிடாமல், உறங்கவிடாமல் வேட்டையாட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு துரோகம் செய்ய எண்ணுபவர் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவோம் என்று மஇகா உறுப்பினர்கள் சபதம் எடுக்க வேண்டும்.
அமைச்சரின் குற்றச் செயலுக்கு துணை போகக்கூடாது
மாறாக, தேசிய கல்வி அமைவுமுறைக்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு, யோங் பெங் தமிழ்ப்பள்ளி உட்பட, அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடு இருக்கக்கூடாது என்று வரையறுத்துள்ள மலேசிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 12 க்கு முரணாக தாய்மொழிப்பள்ளிகளுக்கு (தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள்) அரசாங்க நிதி ஒதுக்கீடு செய்வதில் வேறுபாடு காட்டும் கொள்கையை கல்வி அமைச்சு அமல்படுத்தி வருகிறது. இது குற்றமாகும். யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் கல்வி அமைச்சு இக்குற்றத்தை புரிந்துள்ளது. கல்வி அமைச்சு புரிந்துள்ள இக்குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட மஇகாவினர் துணை போய்யுள்ளனர். அதுவும் குற்றமே.
யோங் பெங் தமிழ்ப்பள்ளிக்கு மஇகாவின் பங்கு என்று கூறப்படும் ரிம1,841, 309 ஐ திரட்டும் திட்டத்தை மஇகா உடனடியாக நிறுத்தி விட்டு அத்தொகையை கல்வி அமைச்சுதான் அளிக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்க வேண்டும். இல்லையேல், அம்னோக்காரர்கள் தமிழர்களை வைத்தே தமிழ்ப்பள்ளிகளுக்கு சமாதி கட்டி விடுவார்கள். அதற்கான திட்டத்தையும் நஜிப் வகுத்து விட்டார்!
கல்வி…கல்வி…விமோசனம் இல்லாத சாசன பயணம்…இந்த தமிழ்
பாடசாலைக்கு இந்த நாட்டிலே…அரசாங்கம் செய்கின்ற இன திருவிளையாடல்லா..இல்லை அரசியல் செய்கின்ற தெருக்கூத்தா…
என்னை பொருத்தமட்டில்….இந்த காரணங்கள் கிடையாது…நமக்குள்
இருக்கின்றன அறியாமை விட…தமிழ் நமக்கு சோறு போடுமா…என்கின்ற
அலட்சியம்…சிலரது ஈன குணம்.!!!
துணைக் கல்வி அமைச்சர் என்று ஒருவரை வைத்துக்கொண்டு இது போன்ற விளையாட்டுக்களில் அம்னோவினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கமலநாதன் தான் இதனைச் சரிப்படுத்த வேண்டும். அரைகுறை மனதோடு செய்யாமல் முழுவீச்சுடன் கமலநாதன் இறங்க வேண்டும்.
ம இ கா ஒன்றே போதுமே !
கவலை படாதிர்கள் நமது துணை கல்வி அமைச்சர் கமலநாதன் நாளைக்கே நல்ல பதில் கொடுப்பார் என்று எதிர் பார்கிறேன் .அப்படி இல்லை என்றல் மஇகவுக்கு மானம் போய் விடும்
இந்தச் செய்தியை வெறும் இருவர் தான் facebook கில் share செய்துள்ளனர். முடிந்தவரை நாமும் share செய்து நம் தமிழ் மக்களுக்கு பரப்புவோம்.
கமல நாதனே குத்து வாங்கிட்டு அமைதியா இருக்காரு..அமைச்சும் இதுக்கு ஒன்னும் சொல்லலே.மறுபடியும் தேவை இல்லாம எதுக்கு குத்து வாங்கனும்னு வாயே தொறக்க மாட்டரு பாருங்கே…
Hi.
Whatever you all speak, no point.
Why not create a Sangam, get RM 1 from each tamilan for every month, and give it to all tamil school. we can help 1 tamil school each month. i dont think so RM 1 is big for per month from all working tamilans ? just dont ask MIC or other tamil sangam which is only give words via paper.
CREATE NEW SANGAM
WE CAN BRING CHANGES TO TAMIL MAKKAL.