சக்தி அறவாரியத்தின் இந்திய பண்பாட்டு விழுமியப் புதிர் போட்டி – சில சந்தேகங்கள்

அ.பாண்டியன், பினாங்கு. இந்திய பண்பாட்டு விழுமிய புதிர் போட்டி என்னும் மின்னியல் புதிர் போட்டியை பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சக்தி அறவாரியம் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த ஏற்பாடாகி உள்ள செய்தியை கடந்த வாரம் அறிந்தேன்.

கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் இந்த குழுவில் உள்ளது. வழக்கமாக நடத்தப்படும் ‘இந்துசமய புதிர்ப் போட்டி’ என்றில்லாமல் சற்றே வித்தியாசமாக ‘இந்திய பண்பாட்டு விழுமியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் சிரத்தை எடுத்து இப்போட்டி விபரங்களைக் கவனித்தேன்.

போட்டிக்கான கேள்விகள் ஜூன் மாதம் பதிவேற்றம் காணும் என்றாலும் அதற்கான தயார் நிலை இப்போதே தொடங்கிவிட்டதை காணமுடிகிறது. இப்போட்டியின்  விபரங்கள் கொண்ட அகப்பக்கத்தில் (www.kuizmoralsakti.com). இப்போட்டியின் நோக்கங்களின் முதல் நோக்கம் ‘’ மாணவர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் நன்னெறிக் கூறுளையும் இந்தியத் தத்துவங்களையும் கற்றுணர்வதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்” என்று கூறுகிறது.

அதோடு இப்போட்டியின் ஐந்து சுற்றுகளில் முதல் மூன்று சுற்றுகளை மாணவர்கள் இணையம் வழி பெற்றோர், ஆசிரியர் உதவியுடன் விடையளிக்க முடியும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இப்போட்டியின் முத்தாய்ப்பாக இப்போட்டிக்கான வழிகாட்டி நூலாக மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் மு. ராஜேந்திரனும் திரு க. சில்லாழியும் இணைந்து எழுதியுள்ள நூல் ஒன்றும் மின்நூலாக இணைக்கப்பட்டுள்ளது. நூலின் தலைப்பு “இந்து சமயப் பாரம்பரியமும் சிந்தனைகளும்”

சற்றே கூர்ந்து நோக்கிய போது இப்போட்டியின் மொத்த நோக்கமும் அதன் தளமும் மிக துள்ளியமாக தெளிவுபட்டன. மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி என்றாலும் இதன் வழி போட்டி ஏற்பாட்டாளர்கள் கட்டமைத்துள்ள ‘பண்பாட்டு விழுமியங்களை’ பெற்றோர்கள், ஆசிரியர்களின் மூளையிலும் புகுத்த முனையும் திட்டம் புரிந்தது. ஆகவே இது மாணவர்களுக்கான போட்டிதானே என்று சும்மா இருந்துவிடாமல் இது குறித்து உரையாடவேண்டியது அவசியமாகிறது.

போட்டியின் தலைப்புக்கும் போட்டி வழிகாட்டி நூலின் தலைப்புக்கும் காத தூரம் வேறுபாடு இருப்பதால் சந்தேகத்துடன் நூலை வாசிக்க தொடங்கினேன். இந்நூலை எழுத இருநூறுக்கும் மேம்பட்ட தமிழ் ஆங்கில மூலநூல்களை இதன் ஆசிரியர்கள் மேற்கோள் கொண்டுள்ளனர். ஆனால் இவ்வளவு அதிகமான மேற்கோள்களை காட்டும் அளவுக்கு இதில் எந்த புதிய கருத்தும் இல்லை. புதிய பார்வையும் இல்லை. எல்லாம் முழுக்க முழுக்க ‘வெள்ளாவி போட்டு கழுவி எடுக்கப்பட்ட’ இந்து சமய வரலாற்றை அடியொற்றிய தகவல்கள் மாத்திரமே உள்ளன.

அதிலும் இந்து சமய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள், பதிவுகள் பலவும் வெறுமனே கடந்து செல்லப்படுகின்றன. உதரணமாக, சமயத்திற்குள் மையமிட்டு, பன்னெடுங்காலமாக பல அழிவுகளுக்கும் உட்பூசல்களுக்கும் சமுதாய போராட்டங்களுக்கும் காராணமாக விளங்கும் வர்ணாசர்ம தர்மம் பற்றியோ, தேவ மொழி தகுதி குறித்தோ எந்தவித விளக்கமும் இல்லை. மறுப்பும் இல்லை. மேலும் சமணர் பெளத்தம் குறித்த மாற்று பார்வையும் இல்லை.

சமண பெளத்தர்கள் வேதத்தை மறுத்தனர் என்று மட்டும் கூறிவிட்டு அவர்கள் அதை எதிர்க்க என்ன காரணம் என்று தெளிவுபடுத்தவில்லை. இந்து சமய தளத்தில் மட்டுமே நின்று ‘இந்திய பண்பாடு’ குறித்து ஆராய முனைவதால் இந்திய மண்ணில் தோன்றிய பிற சமயங்களின் பண்பாட்டு, அறிவு கொடைகள் முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளன.

பண்பாடு, சமய சிந்தனை, சமய தத்துவம், இந்திய தத்துவம், இந்திய ஞான மார்க்கம், போன்ற சொற்களுக்கான விளக்கத்தை பேரா.ராஜேந்திரனுக்கு சாதாரணன் நான் சொல்லி விளக்கப்படுத்த தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போட்டி நடப்பில் இவை அனைத்து சொற்களும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. அது ‘இந்து சமயம்’ என்பதாகும். இந்திய தத்துவம் குறித்த வரலாற்று கண்ணோட்டமோ அகண்ட பார்வையோ கொஞ்சமும் இல்லாமல் ‘இந்து சமயத்திற்குள்’ எல்லா இந்திய ஞானங்களையும் அடைக்கும் முயற்சியாகவே இந்நூலை கருத முடிகிறது.

போட்டியின் நோக்கம் இந்திய தத்துவத்தை வாசித்துணர வாய்ப்பு வழங்குவதாக இருந்தாலும் இந்த வழிகாட்டி நூலில் இந்திய தத்துவம் குறித்த மெய்யான தகவல் எதுவும் விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப்போட்டியின் நோக்கம் மாணவர்களிடையே முழுமையான உண்மையான இந்திய பண்பாட்டு விழிப்புணர்வை கொடுக்கக்கூடியதாக இருக்க முடியுமா என்னும் சந்தேகம் எழுகிறது.

sakthiஅதேப்போல் தமிழ் மெய்யியல் குறித்த கட்டுரையில் சில தகவல்கள் வைதீக சமயத்தினின்று தனித்து நிற்பது தெளிவாக தெரிந்தாலும் அது குறித்து எந்த கவனமும் இன்றி பிரமாணியமும் தமிழ் இறை மரபும் சேர்ந்ததுதான் இன்றைய இந்து மதம் என்று கூறிச் செல்வது மிகச் சாதுர்யமான சமாளிப்பு ஆகும். தமிழர்கள் தமிழர் மெய்யியல் குறித்து எந்த தனிப்பட்ட கருத்தையும் முன்வைக்க இடம் கொடாமல் வேதத்தையும் இந்து சமயத்தையும் மட்டுமே முன்னிருத்தி பேசும் ‘இந்துத்துவா’ சிந்தனையின் வெளிப்பாடாகவே இதை கொள்ளலாம். இதைத்தான் ஏற்பாட்டு குழுவினர் பண்பாட்டு விழுமியம் என்று குறிப்பிடுகிறார்கள் போலும்.

தமிழ் இறைச்சிந்தனை எப்படி வைதீக சமயங்களுக்குள் புகுந்தது அல்லது வைதீக சமயங்கள் எப்படி தமிழர் வாழ்வியலில் மாற்றங்களை நிகழ்த்தின? பல்வேறு சமய மரபுகள் எவ்வாறு இந்திய பண்பாடாக திரண்டு உருபெற்றன?  நாம் எவற்றை தமிழர் பண்பாடு என்று கூறுகிறோம்? எவற்றை சமய பாரம்பரியம் என்று கூறுகிறோம்? என்று தொடரும் பல கேள்விகளுக்கு எந்தவித விளக்கமும் இந்த நூல் கொடுக்கவில்லை.

ஆகவே, இந்நூலை வாசிக்கும் யாருக்கும் இன்றைய சூழலில் நிலவும் சமயம் சார்ந்த குழப்பங்களுக்கும் சரிவுகளுக்கும் தமிழ் இன மொழி, ஆன்மீக சருக்கல்களுக்கும் எந்தவித விளக்கங்களையும் பெறமுடியாது. இன்றைய வாழ்வியலோடு எந்தவித வரலாற்று தொடர்பையும் காட்டாத ‘ இந்து பாரம்பரிய சிந்தனைகளின்’ தொகுப்பாகவே இந்நூல் அமைந்துள்ளது. அதாவது இந்நூல் இந்து சமய மேண்மைகளை மட்டுமே கூறும் ஒரு நூலாகவே இருக்கிறது.

இந்திய பண்பாடு, இந்திய தத்துவம் போன்ற உச்சங்களை தொடக்கூட முடியாத ஒரு நிலையையே இந்த நூலில் காணமுடிகிறது.  இதன் காரணமாக,  இந்நூலை அடிப்படையாக கொண்டு புதிர் போட்டியில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ எவ்வகையில் இந்திய பண்பாட்டு  விழுமியங்களை அடையாளம் காட்டவல்லதாக இருக்ககூடும் என்னும் சந்தேகம் வழுவாகிறது. ஆகவே இச்சிக்கல்களை தீர்க்க  இப்போட்டியின் தலைப்பை வழக்கம் போல் ‘ இந்து சமய புதிர்ப் போட்டி’ என்று வைத்துக் கொள்வதே சிறப்பு.