தமிழினி. இசான் பள்ளிக்கூடம் செல்லப்பிடிக்காத ஒரு எட்டு வயது சிறுவனாவான். ஒவ்வொரு பாடமும் அவனுக்கு கடினமாக இருப்பதுடன் அவன் என்றென்றும் தேர்வில் தோற்றுக்கொண்டே இருக்கிறான். மேலும் அவன் உடலில் இயக்கிகளின் ஒருங்கிணைப்பு செயற்திறன் குறைவாக உள்ளதால், அவன் ஒரு பந்தை நேர்கோட்டில் தூக்கி எறிய சிரமப்படுவான். அவனுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, அவன் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பில் படிக்கும் தோழர்கள் அவனை எப்போதும் அவமதித்துக்கொண்டே இருப்பார்கள். அதே வேளையில், இசானுடைய அந்தரங்க உலகம் வளமான அற்புதங்களால் நிறைந்திருப்பதை யாரும் பாராட்டியதாக தெரியவில்லை.
“தாரே ஜமீன் பார்” என்ற 2007 ஆம் ஆண்டில் அமீர் கான் இயக்கிய விருதுகள் பெற்ற ஒரு இந்தித் திரைப்படம் இசானை மையமாக கொண்டது. “தாரே ஜமீன் பார்” என்றால் “பூமியின் நட்சத்திரங்கள்” என்பதாகும். கருத்து ஒவ்வொரு குழந்தையும் ஒரு நட்சத்திரம், அதை பிரகாசமாக்குவது நமது கையில்தான் உள்ளது எனக் கொள்ளலாம்.
டிஸ்லெக்ஸியா (dyslexia) எனப்படும் புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு என்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட நிலையால் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவாற்றல் உள்ளது, அதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும் என்பதுதான் கதை.
நன்றாக பொறுப்புணர்வோடு கற்றுத் தரும் ஆசிரியர்களுக்குத் தங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு சில மாணவர்களுக்கு எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் அவர்களால் அதைக் கிரகித்துக் கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வருத்தமும் எப்போதும் இருக்கும். பெற்றோர்களுக்கும் அதே நிலைதான்.
தமிழ்ப்பள்ளிகளும் பெற்றோர்களும்
பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஏச்சுகளையும் அடிகளையும் சுமந்துக் கொண்டு இறுதி வரை அவர்களின் குறைப்பாடுகளுக்கான காரணம் என்ன என்று தெரியாமலேயே கடைநிலை மாணவர்களாக முத்திரைக் குத்தப்பட்டு ஆறாம் ஆண்டிலிருந்து வெளியேறும் போதும் இன்னும் பலர் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவத்திலிருந்து வெளியேறும் போதும் கூட தங்களின் சொந்தப் பெயரைக் கூட எழுதத் தெரியாத அவலத்திற்கு ஆளாகின்றனர்.
இவர்கள் இந்நிலைக்கு ஆளாவதற்கு அவர்களின் குறைப்பாடுகளுக்கான காரணங்களைத் தொடக்கத்திலேயே அறியாத அவர்களது பெற்றோர்களும் 11 ஆண்டுகள் அவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களும் தான் முதல் பொறுப்பாளி ஆகின்றனர்.
குழந்தையின் கற்றறறியும் ஆற்றலுக்கு முதல் தொடக்கத்தைப் பெற்றோர்களே இடுகின்றனர். குழந்தைகளின் எல்லா குறைபாடுகளுக்கான காரணங்களும் முதலில் பெற்றோர்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருக்கும் பட்சத்தில் பெரும்பாலான கற்றல் குறைப்பாடுகளுக்கான காரணங்களை மெல்ல மெல்ல கலைய முடியும்.
ஆனால், பள்ளிக்குச் சென்ற பிறகுதான் புத்தகத்தை முதல் முதலாக தொடுகின்ற குழந்தைகளும் அப்போதுதான் பென்சில் பிடித்து எழுதத் தொடங்குகிற குழந்தைகளும் தங்களுக்கென முப்பதுக்கும் குறையாத மாணவர்களையும் மலைப்போன்ற கடமைகளையும் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாகவே மாறிவிடுகின்றனர்.
மேலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் குறைப்பாடுகளுக்கான காரணங்களை உணர மறுக்கின்றனர். அதுகுறித்து அறிந்து கொள்வதற்கான குறைந்தபட்ச ஆர்வமும் அவர்களுக்கு இருப்பதில்லை. சில சமயம் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்ததுவதாக அவர்களோடு முரண்படுகின்றனர்.
அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சுமை இதற்குக் காரணம் என நாம் சமாதானம் செய்து கொண்டாலும் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது பெற்றோர்களின் கைகளிலேயே தொடங்குகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.
கற்றல் குறைபாடுகளுக்கான காரணங்கள் ஒரு நோயல்ல என்பதை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர வேண்டும். இன்றைய சூழ்நிலையில் கூட கற்றல் குறைப்பாடுகளோடு குழந்தைகள் பிறந்து வளர்க்கிறார்கள் என்ற உண்மை கூட பலருக்குத் தெரிவதில்லை. பிறந்தது முதல் குழந்தைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவதானித்து வருவதன் மூலமே குழந்தைகளில் காணப்படும் குறைப்பாடுகளை நாம் கண்டறிய முடியும்.
எடுக்காட்டுக்கு சில கற்றல் குறைபாடுகளுக்கான காரணங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
ஆட்டிஸம் – Autism
இக்குறைப்பாடு எதனால் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை. இக்குறைப்பாடு ஒரு பரம்பரை குறைப்பாடாகவும் மரபணு சார்ந்த குறைப்பாடாகவும் இருக்கலாம் எனக் கண்டறிப்பட்டுள்ளது. பிறந்தது தொடங்கி குழந்தையின் மூளை வளர்ச்சி அடைவதைப் பொறுத்தே இக்குறைப்பாடு அளவிடப்படுகிறது. இக்குறைப்பாட்டினை இரு வகையாகப் பிரிக்கின்றனர். மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையை Asperger Syndrome என்றும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டு வரும் வகையை High Functioning Syndrome என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஆட்டிஸத்தின் பாதிப்புகளை ஒரு கூறுக்குள் அடக்க முடியாது. பேச்சு, செயல், உள்வாங்கி புரிந்து கொள்ளுதல், மொழியைக் கற்றுக் கொள்ளுதல், அதனைத் தகுந்த இடத்தில் கையாளுதல், நினைவு வைத்தல், மனம் போன்ற பல்வேறு தள நிலையில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், சுமார் 3 வயதிலேயே இக்குறைப்பாட்டை நாம் அடையாளம் காண முடியும்.
இக்குறைப்பாடுடைய குழந்தைகள் தனித்து இருப்பதை விரும்புவார்கள். இவர்களுக்கு மற்றவர்களைப் பார்ப்பது, அவர்கள் பேசுவதைக் கேட்பது, அவர்களது முகத்தைப் பார்த்து பேசுவது, சிரிப்பது இப்படி பிற குழந்தைகள் இயல்பாக செய்வதைச் செய்ய மாட்டார்கள். சில வேளைகளில் தொடர்பே இல்லாமல் பல மணி நேரங்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் பிறரோடு இணைந்து விளையாடவோ நட்பு பாராட்டவோ மாட்டார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது. மற்றவர்களது உணர்ச்சிகளையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் பெரும்பாலும் பேசுவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள். சிலர் பேசவே மாட்டார்கள்.
பழக்கப்படுத்தபடாமல் அப்படியே விட்டு விடுவதால் சிலவேளைகளில் அவர்களுக்கு மொழி கூட விளங்குவதில்லை. மிக முக்கியமாக செய்த வேலையையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். பொருட்களை கலைத்து பின் அடுக்கிக் கொண்டே இருப்பது, எப்போதும் ஒரே வகையான உணவுகளைச் சாப்பிடுவது, ஆடை அணிவது எல்லாற்றிலும் வழக்கமான குழந்தைகளைவிட மாறுபட்டிருப்பார்கள்.
டிஸ்லெக்ஸ்சியா – Dyslexia, or Developmental Reading Disorder
இக்குறைப்பாடு எழுத்துகள் சரியாக புரியாததால் ஏற்படுகிறது. இக்குறைப்பாடு உடைய குழந்தைகள் வாசிப்பதில் பெரும் சிக்கலை எதிர்நோக்குவார்கள். எழுத்துகளை இவர்களின் முதல் எதிரியாகவே கருதுவார்கள். இவர்களால் சீராக வாசிக்கவோ எழுதவோ முடியாது.
டிஸ்கால்குலியா – Dyscalculia
இவ்வகையான குறைப்பாடு உடைய குழந்தைகள் கணிதம் கற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவார்கள். அவர்களால் எண்களை விளங்கிக் கொள்ளுதல், அதன் மதிப்புகளை நினைவு வைத்திருத்தல், கணித சூத்திரங்களை விளங்கிக் கொண்டு கையாளுதல் போன்றவற்றில் பெரும் சிக்கலை எதிர்நோக்குவர். ஒவ்வொரு முறையும் எண்களையும் அதன் மதிப்புகளையும் மாற்றி மாற்றி எழுதுவார்கள்.
டிஸ்க்ராபியா – Dysgraphia
இக்குறைப்பாடு உள்ள குழந்தைகளும் எழுத்துகள் தொடர்பான குழப்பங்களைத் தொடர்ந்து எதிர்நோக்குவர். திரும்ப திரும்ப எத்தனை முறை கற்றுக் கொடுத்தாலும் சில குறிப்பிட்ட வகை எழுத்துகளை திருப்பி அல்லது மாற்றி தவறாக எழுதுவார்கள். இவர்களின் கையெழுத்து சீராக இல்லாமல் தாறுமாறாகவும் சில வேலைகளில் தொடர்பு இல்லாமலும் இருக்கும்.
கவனக்குறைவு,செயல் தீவிர குறைப்பாடு – Attention Deficit Hyperactivity Disorder
இக்குறைப்பாடு உடைய குழந்தைகள் மேற்குறிப்பிட்ட பிற குறைப்பாடுகள் உள்ள குழந்தைகளோடு மாறுபட்டிருப்பார்கள். இக்குழந்தைகள் மிகை ஊக்கம் உடையவர்களாக எப்போதும் துறு துறுவென்று எங்கேயாவது ஓடிக் கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு விசயத்திலும் தொடர்ந்து இவர்களால் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. தொடர்ந்து அடம் பிடிப்பார்கள். அதிகம் கோபப்படுவார்கள். வயதிற்கு மீறியும் சில வேளைகளில் பேசுவார்கள். பெரும்பாலும் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்றாலும் இப்படியான நடவடிக்கைகள் ஐந்து வயதிற்கு மேல் அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால் கண்டிப்பாக குழந்தைகள் நல மருத்துவரைக் கண்டு ஆலோசனைப் பெறுவது நல்லது. இவர்களின் இக்குறைப்பாடு இவர்கள் சீரிய முறையில் கல்வி கற்க தடையாகிறது.
இவ்வகையாக குறைப்பாடுகளுக்கு மருத்துவ ரீதியில் உடனடித் தீர்வுகள் இல்லை என்றாலும் தொடர் முயற்சியால் இக்குறைப்பாடு உள்ள குழந்தைகளும் சாதிக்கிறார்கள். இதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. மிகுந்த பொறுமையோடு பக்குவத்தோடு இவர்கள் நடந்து கொள்ள வேண்டும். குழந்தையின் குறைப்பாட்டினை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு முகாமையான கவனத்தினை அவர்கள் மேல் வைக்க வேண்டும்.
தடைகளை வென்ற நட்சத்திரங்கள்
தாமஸ் ஆல்வா எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை இவர் உலகத்திற்கு அளித்துள்ளார். ஒளி விளக்கு, திரைப்பட கருவி, ஒலிவரைவி (கிராமஃபோன்), மின்குமிழி, மின்சக்தி சேமிப்புக்கலன் போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்களாகும். இவர் ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்தவர். சிறு வயதில் இவருடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்ததில்லை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது. அதைத் தவிர டிஸ்லெக்ஸியா எனப்படும் வாசிப்புத் திறன் குறைப்பாட்டாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இப்பிறவிக் குறைப்பாடுகள் எடிசனைப் பெருமளவில் பாதித்திருந்தது.
சிறுவயதிலேயே தொடர் காய்ச்சலினாலும் அவதிப்பட்ட அவர் எட்டரை வயதில்தான் பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது. எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும். பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். எடிசனிடம் இருந்த குறைப்பாடுகளைத் தொடர் முயற்சியின் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு ஒத்துவர தக்க வகையில் மாற்றி அவரை பார் போற்றும் விஞ்ஞானி ஆக்கி அவரின் பெற்றோர் சாதனைப் படைத்தனர்.
ஓவியர் பாப்லோ பிக்காசோ
பிக்காசோ ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். இவரும் இளம் வயதிலேயே டிஸ்லெக்ஸியா குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார்.தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார்.
பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும் பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார். பிக்காசோ கண்டிப்பாக படித்து பட்டம் பெற்றாக வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியிருந்தால் இன்று உலகம் போற்றும் பிக்காசோவின் ஓவியங்கள் நமக்குக் கிடைத்திருக்காது. இயற்கையான கற்றல் குறைப்பாடு இருந்தாலும் தன்னிடமிருந்த தனித்திறமையால் சாதித்தவர்களில் பிக்காசோ குறிப்பிடத்தக்கவர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அநேகமாய் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான விஞ்ஞானி ஆவார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இளமைக் காலத்தில் டிஸ்லெக்ஸியா குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து மிகச் சிறந்த விஞ்ஞானியான இருக்கிறார்.
“நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி ஆகவில்லை என்றால் ஒரு இசைக்கலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப்பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன். என் பகல் கனவு இசையிலேயே கழியும். நான் வாழ்க்கையை இசையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன். என்னுடைய வயலினில் இருந்து வெளிப்படும் இசையில் நான் என் வாழ்கையின் அதிகப்படியான மகிழ்ச்சியினை காண்கிறேன்.” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இவர்களைத் தவிர்த்து, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி கலிலியோ கலிலி , புகழ்ப்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக் கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியருமான லியொனார்டோ டா வின்சி, மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கிய உலகப் புகழ் பெற்ற மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரான வால்ட் டிஸ்னி, நவீன சிங்கப்பூரின் சிற்பி என புகழப்படும் முதல் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ, புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களான அபிசேக் பச்சன், டோம் குரூஸ் என உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்கள் பலர் இளவயதில் கற்றல் குறைப்பாடுகளோடு இருந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (விக்கிபீடியாவின் துணைக்கொண்டு இத்தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.)
தமிழ்ப்பள்ளிகளின் தாரே ஜமீன் பார்களுக்கு என்ன செய்யலாம்
உங்கள் குழந்தைகளுக்கு இப்படியான குறைப்பாடுகள் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரின் உதவியை நாடுங்கள். குழந்தை வளரட்டும் என பாதிப்பைக் கண்டறிந்து உறுதிப்படுத்துவதில் தாமதம் செய்யாதீர்கள். எவ்வளவு சீக்கிரம் இக்குறைப்பாடுகள் கண்டறியப்படுகின்றனவோ அவ்வளவு சீக்கிரத்தில் அதன் தீவிரத்தைக் குறைத்து குழந்தைகள் அவர்கள் குறைப்பாட்டை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டு மீண்டுவர செய்யலாம்.
ஆசிரியர்களின் பங்கும் இக்குறைப்பாடுடைய குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. இவர்களுக்கு வழக்கமான பாணியில் கற்றுக் கொடுப்பதெல்லாம் சரிப்படாது. இவர்களுக்கு மாற்று வழியில் புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சற்று கூடுதல் கவனமும் கூடுதல் நேரமும் இக்குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
இக்குறைப்பாடுகள் அனைத்தையும் பொறுத்த வரை தீவிர மருத்துவ சிகிச்சையைவிட இக்குறைப்பாடுகள் பற்றிய புரிதலும் குழந்தைகள் மீது செலுத்தப்படும் கவனமுமே மிக முக்கிய சிகிச்சையாக மாறுகிறது. எப்போதும் அன்பான சூழலில் இக்குறைப்பாடுகள் உடைய குழந்தைகளை வைத்திருப்பது கூடுதல் நலனைக் கொண்டு வரும். குறைப்பாடுகளைச் சுட்டிக் காட்டி எப்போதும் அவர்களை வதைத்துக் கொண்டிருப்பதை அவர்களால் செய்ய முடிகிற செயல்களை எப்போதும் பாராட்டி அதில் அவர்களின் கவனத்தைத் திரும்பி சுய திறன்களில் அவர்கள் மேம்பட பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான் ஆவன செய்ய வேண்டும்.
சம்பத்தப் பட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொஞ்சம் சிரத்தை எடுத்து தங்கள் குழந்தைகள் இது போன்ற பிரச்சனைகள் உள்ளனவா என கண்டறிந்து களைவது அவசியமாகும். இல்லையேல் இந்த சமுதாய பல திறமைசாலிகளை இழக்க நேரிடும்.
தமிழினி , முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்துகள். அருமையான , காலத்தின் கட்டாய கட்டுரையாக, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வரைந்த இந்த கட்டுரை உண்மையிலேயே வரவேற்க தகுந்தது. ஆசிரியர்கள் இந்த கட்டுரையை படித்து காரணங்களை அடுக்கி நடவடிக்கையை எடுக்க இயலாத நிலையை காட்டுவதை விட, தங்களின் சக்திக் கேட்ப சமுதாய உணர்வோடு இந்த ‘ தாரே ஜாமீன் பார்’ குழந்தைகளை கரம் பிடித்து கரை சேர்த்தால் இந்த உலகம் ஆசிரியர் பணியை மீண்டும் பக்தி உணர்வோடு திரும்பி பார்க்கும்.
பல்லோரும் ஏத்த பணிந்து என்று சொல்வதற்குரிய சிறப்பான அறிவார்ந்த கட்டுரை. வாழ்த்துக்கள் தமிழினி.
அருமை வாழ்த்துக்கள் தமிழனி
ஆசிரியர் அன்புடையவராகவும், சமயோசித புத்தி உடையவராகவும் இருந்து, குறையுடைய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்தம் பெற்றோர் உதவியுடன் இத்தகையோர்களை சிறந்த மனிதர்களாக்கலாம் என்பதற்கு தமிழினி மேற்கோள் காட்டிய உன்னத மனிதர்களே சாட்சி. அரசாங்கம் கொடுக்கும் ஊதியத்தை மட்டும் தெய்வமாக நினைத்துக் கொண்டு, வாங்கிய ஊதியத்திற்கு மட்டும் வேலை செய்தால் தமிழ்ப்பள்ளிகளின் ‘தாரே ஜமீன் பார்களுக்கு’ விமோசனம் பிறக்காது. பல தமிழ் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளியில் மலாய், ஆங்கில மொழியில் முறையாக எழுத படிக்க தெரியாத சூழ்நிலையை இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் (மலாய்க்காரரும், இந்தியரும்) நம்மிடம் சொல்லும்பொழுது மனம் குமுறுகின்றது. ஆசிரியர்களைக் குறை சொல்வதா, பெற்றோர்களைக் குறை சொல்வதா? . இரு தரப்பினருமே, ஒருவர் மற்றொருவரை குறை சொல்லும் நிலையே நீடிக்கின்றது. மாற்றம் வேண்டும். நம் பெற்றோர்களிடமும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களிடமும் மாற்றம் வந்தே ஆகவேடும். எதிர்கால தலைமுறையினர் தலை நிமிந்து வாழ. ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
நமது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் சுமார் 90% நிச்சயம் இந்த அருமையான கட்டுரையை படிக்கக் கொடுத்து வைக்காதவர்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு செம்பருத்தி படிக்க “நேரமில்லை”. அதிலும் ஒரு சிலருக்கு செம்பருத்தி இணையத்தளம் இருப்பதே தெரியாது. வருத்தம்மான ஒன்று. சமூக நலனில் அவர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு.
இன்று ஆசிரியர்கள் நோக்கம் எல்லாம் எப்படி பணம் பண்ணலாம் என்றுதான் .பிள்ளைகள் மீது அக்கறை காட்ட தவறி விடுகிறார்கள் .
தன் பிள்ளை மட்டும் நன்றாக படித்தல் போதும் என்று எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் .மாதா,பிதா,குரு ,தெய்வம் என்ற வரிசயிளிருண்டு இவர்களை வெளியேற்ற வேண்டும்.அர்த்தமில்லாமல் போய் விட்டது .சேவையை செய்ய மறுக்கிறார்கள் .ஆசிரியரிடம் மாற்றம் வந்தால் தான் தமிழ் பிள்ளைகளுக்கு வெளிச்சம் .இல்லையேல் இன்னும் 10/20 வருடத்தில் நம் சங்கதியினர் வேலை இல்லது அல்லல் பட வேண்டியதுதான் .மாற்றம் தேவை .
நம்
சிறப்பான கல்வியியல் கட்டுரை. தமிழினிக்கு வாழ்த்துக்கள். ஆசிரியர்கள் மட்டும் இன்றி பெற்றோர்களும் வாசித்து தங்கள் பிள்ளைகளின் கல்வி உலக சிக்கல்களை அறிந்துகொள்ளவேண்டும்
சபாஷ் தமிழினி தமிழர்கள் ஒவொருவரும் பதிவு செய்து வைக்க
வேண்டிய கட்டுரை. வாழ்த்துகள்.தமிழ் மாணவர்கள் படிக்க வேண்டும்.
kamapo நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. ஓர் ஆய்வு செய்து பாருங்கள் பெரும்பாலான ஆசிரியர்கள் செம்பருத்தியைப் படிப்பதில்லை…அப்படி ஒரு இணைய இதழ் இருப்பதையும் அறிந்திருக்கவில்லை…தினசரியையும் படிப்பதில்லை…தொலைகாட்சி செய்தியும் பார்ப்பதில்லை…இதற்கு நான் அவர்களைக் குறைசொல்ல விரும்பவில்லை, நம் நாட்டின் கல்வி முறை லட்சணம் அப்படி…அதற்கு பலிகடா ஆகியிருக்கும் இவர்கள்…கர்த்தர்தான் காப்பாற்ற வேண்டும்.
மிக அருமையான கருத்து ஐயா .நானும் ஓர் ஆசிரியர் தான் .தற்பொழுது அமெரிக்க பதின்ம தமிழ் மாணவர்களின், தமிழ் ஆளுமையும் நமது தமிழ் சமுதாய வளர்ச்சியில் அவர்களின் பங்கு என்ற தலைப்பில் கலந்து பேசஇங்கு வந்துள்ளேன் . உங்களின் அருமையான் கருத்து எங்களுக்கு பெரிதும் உதவுகிறது . கண்டிப்பாக நம் மாணவர்களின் கல்வி மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு உதவுவேன்.அவர்களுக்கு தமிழ் உணர்வையும் சமூதாய சிந்தனையையும் புகட்டுவேன் .உலக அளவில் தொழில் நுட்ப துறையில் அவர்களை சிறந்து விளங்க பாடு படுவேன் .நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் .