சாந்தலட்சுமி பெருமாள். ‘ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’ என்ற சொல்லை வேதவாக்காக கருதி, பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றல் கற்பித்தல் திறன்களைத் திறம்படக் கற்று, அவற்றை மாணவர்களுக்குப் போதித்து வரும் நம்மை கல்வியாளர்களாக இந்தச் சமூகம் பார்க்கிறது. எதிர்கால தலைவர்களை உருவாக்கும் பணியிலிருக்கும் கல்வியாளர்களான நாம் சுயமாக சிந்திந்து, சுதந்திரமாக செயல்படுகிறோமா என்றால்… இக்கேள்விக்கு நம்மில் பலரிடம் பதில் கிடையாது.
மே 1-ல், நடந்த பொருள் சேவை வரி எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட அரசு பணியாளர்களைத் ‘தேசத்துரோகிகள்’ என வர்ணித்துள்ளார் கியூபெக்ஸ் தலைவர் ஆஷி முடா. அரசாங்கத்தின் கொள்கையை எதிர்க்கும் இவர்கள் அரசு பணியாளர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள், மேலும், அவர்கள் கலந்துகொண்டது நிரூபிக்கப்பட்டால் , அவர்களைப் பொது சேவை ஒழுக்க சுற்றறிக்கையின் படி பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளதாக மிரட்டி இருந்தார்.
அரசு பணியாளர்கள் அரசாங்கத்தின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமேயன்றி, அவற்றை எதிர்க்கக் கூடாது என வலியுறுத்தி இருந்தார். அவரின் கூற்றை, நாட்டின் தலைமை செயலாளர் தான்ஸ்ரீ டாக்டர் அலி அம்சா ஆமோதித்து பேட்டியளித்தார்;.
அர்சியல்வாதிகள் அடுத்த தேர்தல் பற்றிதான் கவலை கொள்வார்கள், ஆனால் ஆசிரியர்கள் அடுத்த தலைமுறைக்காக அறம் செய்பவர்கள், அவர்கள் அரசியல் அடிமைகள் அல்ல.
உலகிலேயே அதிகமான அரசு பணியாளர்களைக் கொண்ட அரசு நமது மலேசியா என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார். 1.4 மில்லியன், அதாவது, நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தியில் 10மூ அரசு பணியாளர்கள். லிம் கிட் சியாங் அதிகமான அரசு பணியாளர்கள் தேவையில்லை, இதனால் பண விரயமாகிறது எனக் கூறக்கேட்ட நமது பிரதமர், ‘அரசாங்கம் அரசு ஊழியர்களின் நலனில் அக்கரைக் கொண்டது. திடீர் ஆட்குறைப்பினால் பலர் பாதிக்கப்படலாம். அதனால், அவர்களைக் குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை,’ எனக் கூறியிருந்தார். ஆனால், அவர் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேசினாரா அல்லது தனது அரசாங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பேசினாரா என்பது தெரியவில்லை.
காரணம், தற்போதைய பாரிசான் அரசாங்கம் தனது கொள்கைகளைப் பரப்பவும், தேர்தல் காலத்தின் போது தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யவுமே அரசு இயந்திரங்களை அதிகம் பயன்படுத்துகிறது. அரசு இயந்திரமென்றால், இதில் உயர்திணை மற்றும் அஃறிணை என இரண்டும் அடங்கும்.
அரசாங்க ஊழியர்கள் ஆளுங்கச்சிக்கு அடிபணிய வேண்டுமா?
அரசு பணியாளர்களில் 421,393 பேர் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்கள் அரசியல் பேசக்கூடாது எனக் கூறும் அரசாங்கம், அவர்களை ஆளுங்கட்சி பிரச்சாரத்திற்கும் பணிகளுக்கும் மட்டும் அனுமதிப்பது ஏன்? பாரிசானில் அங்கத்துவம் பெற அனுமதியுள்ள போது, மக்கள் கூட்டணியில் இணைய மட்டும் ஏன் தடை.
ஒரு குழந்தை கருவாகி, அது மண்ணுக்குள் மறையும் வரை இங்கு எல்லாமே அரசியல்தான். இதில், ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் உரிமை பெற்ற ஆசிரியர்களுக்கு அரசியல் பேச உரிமையில்லை என்பது எந்த வகையில் நியாயம்?
அரசு பணியாளர்கள் ஆளும் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல. பல ஆசிரியர்கள், ‘என்ன செய்வது? கையெழுத்து போட்டுவிட்டோம். விருப்பமோ இல்லையோ, பேசாமல் இருக்க வேண்டியதுதான். இல்லையென்றால், வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள்,’ எனப் புலம்ப கேட்டுள்ளேன். ஓர் அரசாங்க ஊழியரான நான், அரசாங்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டேன் என வாக்குறுதி அளித்திருந்தேன்.
அதன் பொருள் , பாரிசான் தனது ஆட்சி அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ள, நான் ஒரு பொருளாக பயன்படுவேன் என்பதல்ல. ஆளும் அரசாங்கத்தின் திட்டங்கள் என்னைப் பாதிப்புக்குள்ளாக்கும் போது, கைகட்டி வேடிக்கைப் பார்க்க என்னால் முடியாது. இந்த ஜனநாயக நாட்டின் குடிமகளான எனக்கு, சுயமாக சிந்தித்து முடிவெடுக்க, குரலெழுப்ப உரிமை இல்லையா? இதனை நான், என் மீது திணிக்கப்படும் ஓர் ஒடுக்குமுறையாகவே பார்க்கிறேன். விருப்பமிருந்தால் வேலை செய், இல்லையென்றால் அரசாங்க வேலையை இராஜினாமா செய் என சில தலைவர்கள் (ஏன் தலைமையாசிரியர்கள் கூட) கூறுகின்றனர். இது நான் எடுக்க வேண்டிய முடிவல்லவா?
இன்று பாரிசானுக்கு ‘சரி’யெனப்பட்டது, நாளையோ அல்லது 5 வருடங்களுக்குப் பிறகோ மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் தவறாகக் கருதப்படலாம். அப்போது, அரசு ஊழியரான நான் எனது நிலைபாட்டை மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? இது, சுயமாக சிந்திக்கும் எனது திறனை முடக்குவது எனப் பொருள்படும்.
இது போன்ற செயல்களாலேயே, அரசு பணியாளர்களை மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்;கள். அரசு பணியாளர்கள் நிபுணத்துவம் அற்றவர்கள் , அரசாங்கத்தின் தலையாட்டி பொம்மைகள் என சிலர் கூறுவது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?
கடந்த தேர்தலில், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில், வடக்கு தொடங்கி தெற்கு வரை , ஆளும் அரசியல்வாதிகள் அரசாங்க ஊழியர்களை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. பல கூட்டங்கள், பல விருந்துகள். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என மேலிடத்திலிருந்து கடிதங்கள்.
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால், இதில் விருப்பமின்றி கலந்துகொண்டனர். அக்கூட்டங்களில் அம்னோ, மஇகா, மசீச, பிபிபி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்; (தேர்தல் பிரச்சார தேதிக்கு முன்பே) பாரிசானுக்காக பிரச்சாரம் செய்தனர். சிறிதும் வெட்கமின்றி, பல பொய்களை அள்ளி தெளித்து, உண்மை நிலவரங்களை மறைத்து தங்களுக்காக ஓட்டு கேட்டனர். சிலருக்குப் பரிசுகள் கொடுத்தனர். இதில் கற்றல் கற்பித்தல் நேரம் பாதிக்கப்பட்டதைக் கல்வி அமைச்சுகூட கண்டுகொள்ளவே இல்லை.
இப்படியாக, பல தருணங்;களில் பாதிப்புக்குள்ளாகும் ஆசிரியர்கள், இந்தப் பொருள் சேவை வரியினாலும் (ஜி.எஸ்.தி.) அதிகம் பாதிக்கப்படுவர் என்பது உறுதி. தனக்கு பாதிப்பு வருங்கால் , விலங்குகள்கூட எதிர்த்து போராடும், ஆனால், இந்த பாரிசான் ஆட்சியில், அரசு பணியாளர் எனும் முத்திரைக் குத்தப்பட்ட எனக்கு அந்த உரிமைகூட இல்லையென்பது வேதனை.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க மக்களிடமிருந்து பணம் பறிக்கும் திட்டங்களை அறிவிக்கும் முன் , ஓர் அரசாங்கம் அதன் செலவுகளையும் பணவிரயத்தையும் குறைக்க வேண்டும். ஊழலை அழிக்க வேண்டும். காரணம், ஜி.எஸ்.தி. அமல்படுத்தாத எத்தனையோ நாடுகள் உலகில் சிறப்பாக இருக்கின்றன.
அதே சமயம், மக்களிடமிருந்து ஜி.எஸ்.தி.-யைப் பறித்த கிரீஸ் நாடு இன்று திவாலாகிவிட்டது. ஆக, ஒரு நாடு திவாலாவதும் ஆகாததும் தலைமைத்துவதின் நிர்வாகத் திறமையிலேயே உள்ளது என்பது என் திண்மையான கருத்து. அதனைவிடுத்து, நாடு திவாலாவதிலிருந்து தடுக்கவே ஜி.எஸ்.தி.-யை அமல்படுத்துகிறோம் என்று நம் பிரதமர் கூறுவது வேடிக்கை.
வசூல் மன்னர்கள் – ஆனால் இலவச உயர்கல்வி கிடையாது
அண்மையில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில், 62% மக்கள் ஜி.எஸ்.தி.-யை எதிர்ப்பதாகக் கூறப்பட்டது. மக்களுக்கு முன்னுரிமை என்று கூக்குரலிடும் அரசாங்கம், ஏன் மக்களின் இந்தக் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை? ஆட்சியில் அமர்ந்ததும், பல உதவித் தொகைகள் பரிசீலிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன, பொருள்கள் மற்றும் நீர் மின்சாரம் போன்றவற்றின் விலை ஏற்றப்பட்டது, அடுத்து ஜி.எஸ்.தி. என மக்களுக்குப் பல அதிரடியான பாதிப்புகள். இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமென்றால், நான் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.
உணர்வுள்ள எனக்கு அதில் உடன்பாடில்லை. அதே சமயம், இந்த வேலையை இராஜினாமா செய்யும் எண்ணமும் எனக்கில்லை. காரணம், நான் தவறேதும் செய்யவில்லை, நாட்டை அந்நியனுக்குக் காட்டியும் கொடுக்கவில்லை. ஆஷ முடா மற்றும் டாக்டர் அலி அம்சா கூறியதைப் போல நான் தேசத் துரோகியும் அல்ல. தாய் நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்ட பற்றினாலேயே நான் இவ்வாறு செயல்படுவதாகக் கருதுகிறேன்.
கருத்து சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை ஜனநாயக உரிமை. அது முடக்கப்படுமானால், சுதந்திர நாட்டின் அடிமைகளாகத்தான் நாம் வாழ வேண்டியிருக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும், மக்களின் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். மக்கள்தான் அரசியல், மக்களுக்காகத்தான் அரசாங்கம் என்பதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். என்னால் மே-1, தொழிலாளர் தினப் பேரணியில் கலந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி நான் வருத்தப்படுகிறேன்.
இறுதியாக, ஆசிரியர்களின் பணி அறிவார்ந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதேயன்றி, அரசாங்க இயந்திரங்களாக செயல்படுவதல்ல! இதனைக் கருத்தில் கொண்டு பயணிப்போம். என் சக ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
ஆசிரியார் தின வாழ்துகள். அரசாங்க ஊழியர்கள் எல்லாம் அரசாங்க அடிமைகள் இல்லை. கருதுனர்வுள்ள கட்டுரை. BANTAH GST
நல்ல கருத்துக்கள்,இதில் எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சேர்கின்றனர் என்பதும் அடுத்த தலைமுறையை செதுக்கும் முக்கிய பணிகளில் ஒன்று.(இக்கேள்வி எம்மொழியர்களுக்கு மட்டுமே).
அலி ஹம்சா, சிறப்பாக தமிழ் பேசக் கூடியவர். அவருக்கு இந்த கட்டுரையை யாராவது ஈ-மெயில் – ல் அனுப்பினீர்களானால் சிறப்பாக இருக்கும். கட்டுரையாளர் கவலைப் படத் தேவை இல்லை. இது ஓர் அறிவுபூர்வமான கருத்தே தவிர அரசாங்கத்தை அவமதிக்கும் கட்டுரை அல்ல. அவரும் படித்து விட்டு சிந்திப்பார். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார். அவர் அறிவாளி. வாழத் தெரிந்தவர்.
கடமைக்கும் உரிமைக்கும் நல்ல வேறுபாடு கொண்ட சிறந்த தெளிவான கருத்து. உரிமையை இழந்தவன் ஜடத்துக்கு சமம் என்பதை தெளிவாக விவரித்துள்ளார். அறிவார்ந்த மக்களை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு எம் மனம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்…
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..தொழில் தர்மத்திற்கு அரசியல்லா்ல் இழுககாகி விட்டது…என்ன செய்வது? இதுதான் அரசியல் தர்மம்…
என்கிறார்கள்…அன்னமிட்ட வீட்டீல் கன்னம்மிடலமா!! இதனால் என்னவவோ..உப்பிட்டவரை உள்ளலவும் நினை!! என்பதா!!
கல்வியில் தேராதவள் தான் ஆசிரியை தெரியுமா உங்களுக்கு,கடைசி வாய்ப்பே ஆசிரியை தொழில்.யாறும் விரும்பி வராத தொழில் ஆசிரியர் தொழில்.கோட்பாடை கற்று இங்கு வந்து கற்பிக்கின்றனர் அவ்லோதான்.இதுகளுக்கு ஏன் விழா தேவையா,நாராயண நாராயண.
அனைத்து ஆசிரியர்களுக்கும் முக்கியமாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகள் தமிழ்ப்பள்ளியில் பயில்வதை உறுதிசெய்யுங்கள்.
கல்வி கண்களைத் திறந்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களைச் சிறப்பிக்கக்கூடாது என்பவர் நன்றி மறந்த மடையர்கள்.
வரவேற்கத்தக்க நல்ல கருத்துகள். ஆசிரியர்களும் சரி பிற அரசு ஊழியர்களும் சரி ….. பெரும்பாலோருக்கு ஆளும் அரசாங்கத்திடம் பயம் உண்டு என்று சொன்னால் அது மிகையில்லை. என்ன செய்வது ..! சாமானிய மனிதன் என்ன செய்ய இயலும் என்று எண்ணுங்கால் மனம் கனக்கிறது! கண்முன்னே நடக்கும் நியாயமற்ற செயல்களைத் தட்டிக் கேட்கும் ஆற்றல் அதிகமாகவே இருந்தும், கைகட்டி வாய்பொத்தி இருக்கவே வேண்டியுள்ளது! இல்லையென்றால், ‘வந்தேறிகள்’, ‘அழையாமால் நுழைந்தவர்கள்’ என்றெல்லாம் நம்மைப் பழிப்போரைப் பொறுத்துக் கொண்டிருப்போமா? இருப்பினும் தமிழாசிரியர்கள், ஆங்காங்கே கல்வி புகட்டுவதோடு, நம் சமுதாயத்தினருக்கு காலத்திற்கேற்ற விழிப்புணர்வையும் வழங்குவதையும் கடமையாக எண்ணிட வேண்டுகிறேன்! இன்றைய சூழ்நிலையில் ஆர்ப்பாட்டமும் வேண்டும், தொடர்ச்சியான அமைதியான அணுகுமுறையும் வேண்டும்!
விருப்பமோ இல்லையோ, பேசாமல் இருக்க வேண்டியதுதான் உங்கள் கடமை.இல்லையென்றால், வேலையிலிருந்து விலகி போராடுங்கள். ஓர் அரசாங்க ஊழியரான நீங்கள், உங்களின் அறப்பணிக்கு பாதகம் விளைவிக்காமல் எங்கள் பிள்ளைகளை நல்லவர்களாக வல்லவர்களாக ஆக்க முழு ஈடுபாட்டைக் கற்பித்தலில் காட்டுங்கள். முழு நேர அரசியல்வாதிகளும் போராட்டவாதிகளும் நீங்கள் சொல்லும் பணியைச் சிறப்பாக செய்கின்றனர். செய்வர். 5 ஆண்டுக்கு ஒருமுறை எந்த அரசுக்கும் பயப்படாமல் உங்கள் ரகசிய ஓட்டைப் போடுங்கள். மாநில அரசாகட்டும் (எ.கா:பினாங்கு, சிலாங்கூர்) மத்திய அரசாகட்டும் (Govrn ஒப் தி டே)க்கு ( ஏட்டளவிலாவது) விசுவாசமாக இருப்பது அரசு ஊழியரின் கடமை. ஆசிரியர்கள் வாழ்க.
பாரிசான் ஆட்சியில், அரசு பணியாளர் எனும் முத்திரைக் குத்தப்பட்ட எனக்கு அந்த உரிமைகூட இல்லையென்பது வேதனை. அருமையான வரி. உடனே மானத்தோடு வாழ முடிவு எடுங்கள். பதவியைவிட்டு வெளியே வாருங்கள். நம் துணை முதல்வர்வழி பினாங்கில் பணிக்கு அமருங்கள். நீங்கள் நினைப்பதையெல்லாம் பயமில்லாமல் செய்யலாம். பாரிசான் வழங்கும் நல்ல சம்பளத்துக்காக சோரம் போகாமல் வாழ அன்புடன் அழைக்கின்றேன்.
ஆசிரியர் அருண் அவர்களே, விசுவாசம் என்பதற்கும், உரிமை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் எப்படி ஆசிரியர் ஆனீர்கள். நல்ல வேலையாக எம் பிள்ளைகளுக்கு தாங்கள் ஆசிரியராக வராமல் போனது மகிழ்ச்சியே!. எம் பிள்ளைகள் சாந்தலட்சுமி பெருமாளிடம் படித்திருந்தால் பெருமை பட்டிருப்பேன்.
விசுவாசம் என்பது அரசன் அவையில் தற்காலிகம்தான். ஆட்சி மாறினால் அந்த விசுவாசத்தில் செய்யும் செய்கையும் தப்பாகலாம், தண்டனையும் வரலாம்!. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில், கள்ளக் காதலன் ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்த பெண்மணி, இராணுவ வீரரான தன் கணவர், ஹிட்லர் அரசை குறை சொன்னார் என்று ஜெர்மனியின் இராணுவத்திற்கு தகவல் கொடுத்து கணவருக்கே தண்டனை வாங்கிக் கொடுத்தார். அன்று இது ஹிட்லர் ஆட்சியின் மீது இருந்த விசுவாசம் என்று விளம்பரப்படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அந்த தகவலைக் கொடுத்த பெண்மணிக்கே அவர் செய்தது தப்பு என்று நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப் பட்டது (தெய்வம் நின்று கொன்றது). வரலாறு தெரியாமல் வாய் கொடுக்க வேண்டாம்.
அடுத்த தலைமுறையை ஆசிரியர் என்றும் அந்த ஆசிரியர்களை தலைமை தாங்கும் ஆசிரியருக்கு தலைமையாசிரியர் என்று சிறப்பு பேரிட்ட தமிழன்
பத்திரிக்கை ஆசிரியர்களை ஏன் தலைமை ஆசிரியர்
என்று அழைக்கிறான் , ஆங்கிலத்தில் editor என்ற வார்த்தை
உண்டு அதற்கு தமிழ் மொழியில் வார்த்தை இல்லையா ,எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் ,புனிதமான ஆசியர் தொழிலை செய்யும் கல்வி போதனை யாளர்களை ஆசிரியர் என்று கூறுவது சிறப்பு ,ஆனால் செய்தியை போட பிரமுகர்களிடம் காசு வாங்கும் கயவர்களை குறிப்பாக தினக்குரல் இப்போது புதிய பார்வை நாளிதளின் எடிடோரை எப்படி தலைமை ஆசிரியர் என்று
அழைப்பது .
அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கும் ஆசிரியர் போற்றப்பட வேண்டியவர். ஞானத்தைப் போக்கி அறியாமையில் தள்ளும் ஆசிரியர் அஞ்ஜடிக்காரர். அப்படியாப்பட்ட ஆசிரியரைக் கொண்ட பத்திரிகையை வாங்காதீர்கள் தமிழ் பித்தரே. அது தானாகவே துவண்டுவிடும். பத்திரிக்கைத் துறையிலும் பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி துணை ஆசிரியரும் உண்டு. அவர்களை மிஞ்சி பணத்துக்காக எதை வேண்டுமானாலும் எழுதும் தலை இல்லாத ஒரு தலைமை ஆசிரியர் உண்டு. அது ஒரு முண்டம்.
தேனீ உங்கள் அறிவுரைக்கு நன்றி ,