சுதா சின்னசாமி. அவசரமான வாழ்க்கை. அன்றாடம் பம்பரம் போல் சுழலும் சூழல். காலையில் எழுந்ததிலிருந்து வேலை, பணி, கடமைகள். இதில் எங்காவது செல்வது என்றால் கூட அரக்கப் பறந்து, பிறரையும் அவசரப் படுத்தும் நிலை. என் மகளுக்கு இப்போது தான் நான்கு வயதாகிறது.
காலையில் எழுந்ததிலிருந்து உறங்கும் வரை அவள் கேட்கும் வாசகங்கள் பெரும்பாலும், “சீக்கிரம் பாலைக் குடி, சீக்கிரம் குளி, சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் தூங்கு”. என்னை அறியாமலேயே இந்த “சீக்கிரம்” என்ற வார்த்தை வீட்டில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதில், வெளியே செல்லும் போதும் “சீக்கிரம் நட”, “சீக்கிரம் காரில் ஏறு”, “சீக்கிரம் பள்ளிக்குச் செல்ல வேண்டும்”, “சீக்கிரம், இசை டீச்சர் திட்டுவார்”. அவள் மனதில் இந்த “சீக்கிரம்” என்ற சொல் பதிந்தாற் போல், ஒரு நாள் தனக்குப் பிடித்த பஞ்சு மிட்டாயை ஆவலுடன் வாங்கி அமைதியாக கையில் பிடித்து ரசித்தபடி, என்னைப் பார்த்தாள். “அம்மா, சீக்கிரம் சாப்பிட்டு விடுகிறேன்” என்றதும் என் மனம் சற்றே கனத்தது.
சில நாட்களுக்கு, எதற்காக இப்படி அவசரப்படுகிறோம் என்று நிதானித்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில் அந்த சின்னஞ்சிறு இதயம், கண்கள், இவ்வளவு பெரிய உலகை ரசித்து கொண்டிருக்கிறது. சிறு சிறு அசைவுகளையும் உற்று நோக்குகிறது. ஒவ்வொரு நாள் வெளியில் நடக்கும் போதெல்லாம் ஓடி ஓடி சின்னஞ்சிறு மலர்களை எனக்காகப் பறிக்கும் அவள் கரங்கள்; வீட்டில் சிறு எறும்பு, ஈக்கள் வந்து விட்டால், அதனைத் தொடரும் அவள் பாதங்கள்; “அம்மா, எறும்புக்குத் தன் வீட்டு பாதை தெரியவில்லை” எனும் அவள் குரல்; வானத்தில் வண்ண வில் வந்து விட்டதும், ஒவ்வொரு அறைக்குள் ஓயாமல் ஓடி ஓடி ரசித்து மகிழும் அவள் உள்ளம்.
இப்படி எத்தனையோ சிறிய சிறிய (நம் பார்வையில் மட்டும்) ஆசைகளும் ஆவல்களும் நிறைந்த நம் இளந்தளிர்களுக்கு நாம் விதைக்கும் விதிமுறை “சீக்கிரம்”.
அவர்களை அவசரப்படுத்தி அவர்களின் எண்ண அலைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறோமா? உலகை தன் சாயலில், தன்னிச்சையில், தன் பாணியில், தன் பாதையில் (at their own pace, space and leisure) அனுபவிக்கும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்ல விளைகிறோம்? “சீக்கிரம் செய்!”
நடுத்தர வயதில் நமக்குள்ள பல பிரச்சனைகளில், பொறுப்புகளில், குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுகிறோம் அல்லவா? ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்காக, நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்காக ஓயாமல் வேலை செய்கிறோம். பணம் கிடைப்பதால்! குடும்பப் பொறுப்புகளைச் செய்கிறோம். கடமை உணர்ச்சி என்பதால்! சில சமயங்களில் காலம் தவறிதான் சில விசயங்களை உணர்கிறோம்.
பருவம்வரை வளர்த்து விட்ட பெற்றோரை அன்று நாம் மறந்து கடந்து விட்டுவிடுகிறோம். “அஞ்சு நிமிசம் பொறுத்துக்கோ, சாதம் தயாராகிவிடும்” என்று சொன்ன தாயிடம் முறைத்துக்கொண்டு வெளியில் சாப்பிட கிளம்பிய தருணங்கள். ஆனால், காலங்கடந்ததும் தாயின் ஒரு பிடி உணவுக்காக ஏங்கி கிடப்பது, வைரமுத்து சொன்னது போல வெறுச்சோடிய வேதாந்தங்களாகத்தான் மிஞ்சி நிற்கிறது.
என்றாவது அத்திப்பூத்தது போல அப்பா திட்டிவிட்டால், கடுங்கோபங்கொண்டு, நண்பர்களிடம் முறையிட்டு துடுக்கிட்டிருந்தோம். ஆனால், நம் திறமையை கறந்து, பணத்தை சம்பளமாய் தரும் முதலாளி திட்டினால், சூடு சுரணை இல்லாத கல்லாய், தன்மானம் அற்று நின்று நிதானமாய் வாங்கிக்கொண்டு, வருடம் முழுக்க முக பூசனையும் செய்கிறோம்!
இப்படி, நம்மோடுவாழும் ஒவ்வொரு ஜீவன்களுக்கும், ஏன் மிருகங்களுக்கும் கூட உணர்வுகள், எண்ணங்கள், ஏக்கங்கள், இருப்பது மறுக்கப்பட வேண்டியதா? மறக்கப்பட வேண்டியதா? பல தருணங்களில் இந்த உணர்வுகளை நாம் வார்த்தைகளில் வெளிகொணர்வதும் கிடையாது (we take everything for granted). உயிரற்ற பொருள்களையும், பரிசு சின்னங்களையும் அன்பின் அடையாளமாய் கொடுப்பதில் என்னபயன்? உயிருள்ள மனிதர்களை, (மிருகங்களையும் தான்) அவர் தம் உணர்வுகளை மதித்து, மரியாதை கொடுத்து, அவர்களின் சின்னச்சின்ன ஆசைகளுக்கு இடமளித்து மகிழ்ச்சியைத் தருவதில் தாழ்ந்துவிடுவோமா?
இன்று நானும் என் மகளின் பார்வையில், சாயலில்வாழ்க்கையை, இயற்கையை, மெல்ல மெதுவாக, நின்று நிதானித்து அவள் கரம்பிடித்து நடந்து செல்கிறேன்…
அன்பின் சுதா, உங்கள் குழந்தையால் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் உலகம் அழகானது. இயல்பானது. நாம்தான் அதை நமது வேகத்திற்கு நகர்த்துகிறோம். அந்த நகர்த்தல் மிக ஆபத்தானது என்பதை நாம் உணர்வதே இல்லை. குழந்தைகள்தான் நாம் தொலைத்துவிட்ட நமது குழந்தை உள்ளத்தை மீட்டுத் தருகிறார்கள்… ஒரு மெல்லிழையால் மனதை நெருடுகிறது உங்கள் கட்டுரை… தொடர்ந்து குழந்தைகள் குறித்து எழுதுங்கள்… காலத்திற்கு மிக தேவையான கட்டுரை இது. உங்களுக்காக ஒரு கவிதை…
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.
சுதா உங்களின் அனுபவமும் அதனை சார்ந்த ஆலோசனையும் சி்ந்திக்க வைக்கின்றன. இந்த அப்பாக்களுக்கு இதை உப்படி உணர வைப்பது?
மீனா அவர்கலே ,அனேக அப்பாக்கள் இதை உணர்ந்துள்ளனர்(நான் உட்பட) .ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலை ,நிரந்தரமற்ற வாழ்க்கை செலவினங்கள் மற்றும் வேலை பலு ஆகியவை அனேக குடும்ப தலைவர்களை முடக்கியுள்ளது .
அள்ளித் தெளித்துக் கொண்டு ஓடும் அவசர காலத்தில், நிதானித்து நடந்துச் செல்ல நேரம் இல்லையம்மா!. காலம் நம்மை வேகமாக விரட்டுகின்றது. என்ன செய்ய. பிஞ்சு மழலைகளிடம் பேசி மீளமுடியாமல் தவிக்கும் தாத்த பாட்டிமார்கள்தான் எவ்வளவு பேர். இனி பிள்ளைகள் நம்மை “சீக்கிரம்” என்று சொல்லும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
என்ன செய்றது….!!நாமாக தேடிக்கொண்டது..எதற்கெடுத்தாலும் அவசரம்
சீக்கிரம்னு….சுடுத்தண்ணீ கால்ல ஊத்துன மாதிரி நேரத்தை தேடி ஓடுகிறோம்…கேட்டா? சில சாக்கு போக்கு சொல்லி நாமே..நம்ம ஏமாற்றிக்
கொள்கிறோம்…ஐயா!! காலமும் நேரமும் எங்கும் போகவில்லை…வாழ்கையின் அவசியத்திற்கு..சில தேவையில்லாத அவசியத்திற்கு…நாம் வாழ்கையை நேரத்திற்கு அடகு வைத்து விட்டோம்.
அன்றும் இன்றும் ஒருநாளில் 24 மணி நேரம் மட்டுமே,அதை நிர்வகிக்கும் முறையை மாற்றி அமைத்தால் எல்லாம் சரியாகி விடும்.time management is essential.
சிறப்புக் கட்டுரை; சிந்திக்க வைக்கும் கட்டுரை.எழுத்தாளருக்கு பாராட்டுக்கள். குழந்தைகள் நமது உண்மையான செல்வங்கள்.
“பருவம்வரை வளர்த்து விட்ட பெற்றோரை அன்று நாம் மறந்து கடந்து விட்டுவிடுகிறோம்”…. என்பது மட்டுமல்ல…. மழலைகளின் கொஞ்சு மொழிதனையும் , சிறு பிராய சுட்டி தனங்களையும் , பிள்ளைகளின் வளர்ச்சியில் காட்ட வேண்டிய அக்கறைகளையும் இன்றைய நாகரீக வாழ்வெனும் காரிருளில் மறந்து கடந்து விட்டுகொண்டிருக்கிறோம்..
“நாகரீக வாழ்வு” என்பது இன்று அநாகரீகமாக போய் கொண்டிருக்கின்றது என்பதை பலர் அறியாமலேயே வாழ்க்கை நடத்துகின்றார்கள். “அநாகரீகமே நாகரீகமாக மாறிவிட்டது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினாலும் தகும்.
படித்ததில் பிடித்தது. அருமை. நன்றி. வாழ்த்துகள் சுதா சின்னசாமி.
சு. துளசிதாஸ்
மலேசியா தேசிய பல்கலைகழகம்