தாய்மொழிப்பள்ளிகள்: எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வது ஏன்?

-ஜீவி காத்தையா.

இந்தியர்களுக்கு திடீரென்று மீண்டும் வீரம் வந்து விட்டது! தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டுமா? உனக்கு என்ன கொம்பு முளைத்துள்ளதா? நாங்கள் யார் தெரியுமா? என்ற தோரணையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாயன் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஸஹாரின் ஹசிம் பேசியதாக கூறி அவருக்கு எதிராக நாளிதழ்கள் வழியாக கண்டனம் தெரிவித்துள்ளனர் நமது இந்தியர்களில் சிலர்.

ஸஹாரின் ஹசிம் நேரடியாக தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறவில்லை. நாட்டின் ஒற்றுமையை மேலோங்கச் செய்ய ஒரே மொழி போதனைப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு வவசான் பள்ளி முறை அதற்கான ஒரு வழி என்ற அடிப்படையில் பேசியுள்ளார்.

வவசான் பள்ளி எந்த அளவிற்கு மாணவர்களுக்கிடையே தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்குகிறது என்பதைக் காண வேண்டுமென்றால் சுபாங்ஜெயாவிலுள்ள வவசான் பள்ளிக்கு சென்றால் புரியும். அதிகமான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிக்கு இரண்டே மாடி, குறைவான மாணவர்களைக் கொண்ட மலாய் (தேசிய) பள்ளிக்கு நான்கு மாடி. இன்னும் பல வேறுபாடுகளைக் காணலாம்.

அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்

தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று ஸஹாரின் நேரடியாக கூறவில்லை என்றாலும் அவரின் உள்நோக்கம் அதுதான்.

ஸஹாரின் ஹசிம் மக்களால் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல. சுயேட்சையாக மாறிக்கொண்டவர். அவர் அம்னோ ஆதிக்கத்திலிருக்கும் பாரிசான் அரசாங்கத்திற்கு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஏன்?

தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை நேரடியாக அல்லது மறைமுகமாக விடுக்கப்படுவது இது முதல் தடைவையும் அல்ல; இது கடைசித் தடவையாகவும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், தமிழ்மொழிப்பள்ளிகளையும் சீனமொழிப்பள்ளிகளையும் மூட வேண்டும் என்பது பாரிசானை ஆளும் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” (“Ultimate Objective”) ஆகும்.

அம்னோவை ஆதரிப்பவர்கள், பாரிசானை ஆதரிப்பவர்கள் அம்னோவின் தாய்மொழிப்பள்ளிகள் அழிப்பைக் கருவாகக் கொண்ட “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை ஆதரித்தே ஆகவேண்டும். அம்னோவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கும் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு ஆதரவாக அளிக்கும் வாக்காகும்.

“இறுதிக் குறிக்கோள்” கொள்கையை அகற்றுங்கள்; இல்லையேல் இந்தியர்களின் வாக்குகள் அம்னோவுக்கு இல்லை என்று அம்னோவிடம் மஇகா கூற முடியுமா? கூறுமா? மசீசவுக்கு அந்தத் தைரியம் உண்டா? அம்னோவுடன் ஒட்டிக்கொண்டுள்ள, ஒட்டிக்கொள்ளத் துடியாய்த்துடிக்கும் துரும்புகளை விட்டுவிடுவோம்.

அரசியல் விபச்சாரி

இந்த ஸஹிராயின் ஹசிம் ஓர் அரசியல் விபச்சாரி. ஒரு கட்சியின் வேட்பாளராக தேர்தலில் தம்மை அடையாளம் காட்டி மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான ஸஹிராயின் ஒரு கொள்கையற்ற கீழ்மட்ட விபச்சாரியைப்போல்  (உடலை விற்கும் அனைத்து பெண்களும் கீழ்மட்டமானவர்கள் அல்லர்) ஆதரித்தவர்களை ஏமாற்றி விட்டு சுயேட்சையாக மாறிவிட்டார்.
ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகிக்கொள்ளவே முடியாது என்ற விதி இருக்க முடியாது, இருக்கக்கூடாது. ஆனால், அக்கட்சியிலிருந்து விலகியவர் அக்கட்சியின் சார்பில் வகிக்கும் பதவியைத் துறக்க வேண்டும். அதுதான் நேர்மை.

ஆனால், ஸஹிராயின் அதனைச் செய்யவில்லை. அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கு துணை  தேடும் படலத்தில் இறங்கியுள்ளார். அம்னோ தீவிரவாதிகளின் ஆதரவைப் பெற்று அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவின் வேட்பாளராவதற்கு ஸஹிராயின் எடுத்துள்ள ஆயுதம்தான் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்”, தாய்மொழிப்பள்ளிகளின் அழிப்பு கொள்கை என்று கூறலாம்.

முகைதின் யாசின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை ஆதரிக்கிறார்

அம்னோவின் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கும் “இறுதிக் குறிக்கோள்” கொள்கை அம்னோ உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு கவர்ச்சியான ஆயுதம்.

1950 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்த ஆயுதம் அம்னோ தலைவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்கால கல்வி அமைச்சர் அப்துல் ரசாக் “இறுதிக் குறிக்கோள்” ஆயுதத்தை கையிலெடுத்தார். அதன் பின்னர், பல அம்னோ பெரும் புள்ளிகள் அதனைச் செய்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலுவால் “மகாதீரர்” என்று போற்றப்பட்ட, மகாதிர் முகமட்டின் மகன் முக்கிரிஸ் மகாதிர் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்றார்.

மார்ச் 8 பொதுத் தேர்தலில் மூக்குடைக்கப்பட்ட பின்னரும் அம்னோ அதன் தாய்மொழிப்பள்ளிகளின் அழிப்பு “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை விடவில்லை.

நஜிப் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கத்தின் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். ஒரே மலேசியா என்ற ஓட்டைப் படகின் உரிமையாளரும் மஇகாவின் கடுகளவும் குறையாத ஆதரவைப் பெற்றவருமான நஜிப் ரசாக் அவரது தந்தையால் உருவாக்கப்பட்ட அம்னோவின் தாய்மொழிப்பள்ளி அழிப்பு “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த முகதின் யாசினை கண்டிக்கவில்லை, அப்படியான ஒரு கொள்கை முறையற்றது என்று கூறவில்லை, அவரது உறவினரான முன்னாள் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் கூறியதுபோல் அக்கொள்கை “வழக்கற்றப்போனது” (Malaysiakini 7 March, 2007) என்று கூறவில்லை. மாறாக, அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இறுதிக் குறிக்கோள், அந்த தாய்மொழி அழிப்புக் கொள்கை (Ultimate objective), அமலாக்கப்படும் என்றார்!

அம்னோக்காரர்கள் கட்சியின் கொள்கையை பல்வேறு வழிகளில் அமல்படுத்தும் போக்கைக் கொண்டவர்கள். துங்கு அப்துல் ரஹ்மான் சிரித்தே ஏமாற்றியவர். அப்துல் ரசாக் மிரட்டியே காரியம் சாதித்தவர். ஹுசேன் ஓன் வாயைத் திறக்காமலே ஒடுக்கியவர். மகாதிர் முகமட் இப்படி, அப்படி, எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் உழப்பி ஊழலையும் இனவாதத்தையும் வளர்த்தவர். மஇகாவின் தலைவருக்கு என்றுமே தலைவரான அப்துல்லா பாடாவி தமக்கு பெரிய காது இருக்கிறது, கூறுங்கள் என்று கூறி எதையும் கேட்டுக்கொள்ளாதவர். இன்றைய நஜிப் ரசாக் அனைவரையும் ஒரே மூச்சில் ஏமாற்றிவிட உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அம்னோ தலைவர்கள் கட்சியின் கொள்கையை அடைய ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட பின்னர் அமல்படுத்தப்படும் என்கிறார் நஜிப். அனைத்து மக்களும் இக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்  என்பது நஜிப்புக்கு தெரியும்.

நாட்டின் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் ஆதரவின்றி அம்னோ வெற்றி பெறும் நாள் வரும். அன்று “இறுதிக் குறிக்கோள்” அமல்படுத்தப்படும். அதுதான் அம்னோவின் கணிப்பு. நாட்டின் மக்கள்தொகை 75 மில்லியனாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தவர் மகாதிர். அந்நிய மக்களுக்கு மலேசிய அடையாள அட்டையையும் குடியுரிமையையும் வழங்கியவர்கள், வழங்கிக் கொண்டிருப்பவர்கள் யார்? எதற்காக? அந்த நாள் வரும், வர வேண்டும் என்பதற்கா!

அம்னோ பகிரங்கமாக உறுதிமொழி அளிக்காவிட்டால், இந்தியர்களின் வாக்குகள்?

சம்பந்தனின் “தந்தை”, மாணிக்கவாசகத்தின் “சித்தப்பா”, சாமிவேலுவின் “மகாதீரரப்பா” ஆகியோர் நம்மைக் காத்து அருள் புரிவர் என்று ஐம்பது ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு கடைநிலை சமூகமாக்கப்பட்டு விட்டோம். இதனை மஇகாவின் தலைமைத்துவமே ஒப்புக்கொண்டுள்ளது.

இனியும் ஏமாறக்கூடாது. குறிப்பாக அம்னோவின் தாய்மொழிப்பள்ளிகள் அழிப்பு “இறுதிக் குறிக்கோள்” கொள்கை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு அவசியம்.

சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள் அழிக்கப்படாதிருப்பதை உறுதி செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அம்னோ பகிரங்கமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழி அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும். அந்த உறுதிமொழி வழங்க அம்னோ மறுத்தால், இந்தியர்கள், சீனர்களுக்கும் அது பொருந்தும், பாரிசான் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பகிரங்க அறிவிப்பை செய்ய வேண்டும்.

அந்த அறிவிப்பைச் செய்ய இன்று ஸஹாரினுக்கு எதிராக நாளிதழ்கள் மூலம் அறிக்கை விடும் இந்தியர்கள் தயாரா?

அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை காலம் வரும்போது அமலாக்க காத்திருக்கும் அம்னோ தலைவர் நஜிப்பின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது இந்தியர்களின் கடமை என்று கொக்கரிக்கும் மஇகா தலைவர்கள் தயாரா? மசீச தயாரா?

நஜிப்பிற்கு அளிக்கும் வாக்கு அம்னோவுக்கும் முகைதின் யாசினுக்கும் அளிக்கும் வாக்காகும். முகைதின் யாசின் யார்? முதலில் மலாய்க்காரர், அடுத்துதான் மலேசியர் என்று பகிரங்கமாக நஜிப்பை போல் நாடகமாடாமல்  கூறியவர். எஸ்பிஎம் தேர்வுக்கான 10 பாடங்கள் மற்றும் இண்டர்லோக் விவகாரங்களில் மஇகா தலைவர்களை மண்டியிட வைத்தவர். தாய்மொழிப்பள்ளிகளுக்கு சமாதி கட்டும் இறுதிக் குறிக்கோள் கொள்கையை பகிரங்கமாக ஆதரிப்பவர். அடுத்த பிரதமராக காய் நகர்த்திக் கொண்டிருப்பவர். இவருக்கும் இவர் துணைத் தலைவராக இருக்கும் அம்னோவுக்கும் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மஇகா தலைவர்கள் கூறுவது தாய்மொழிப்பள்ளிகளை அழிப்பதற்கு இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு சமமாகும்.

அந்த உறுதிமொழியை அம்னோ வழங்கத் தவறினால், இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?

பக்கத்தானுக்கா? பக்கத்தான் அம்னோவின் பாதி! அன்று அம்னோ அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக இருந்த அன்வார் இப்ராகிம் இன்று பக்கத்தான் தலைவர். அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் சீனமொழிப்பள்ளிகளுக்கு ஏற்படுத்திய தொல்லைகள் ஏராளம்.

இன்று, அன்வார் இப்ராகிம் மாறியிருக்கலாம். ஆனால், எவரையும் “தந்தை”யாக ஏற்றுக்கொண்டு இந்தியர்கள் சீரழிந்து போக வேண்டிய கடப்பாடு வரலாறாக இருக்கக்கட்டும். இனிமேல், யாராக இருந்தாலும் கேள்விக்கு நேரடியாக பதில் கூற வேண்டும்.

தாய்மொழிப்பள்ளிகள் நிரந்தரமானது என்பதை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டம் கொண்டு வருவதற்கான உறுதிமொழியை பக்கத்தான் தேர்தலுக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பகிரங்கமாக விடப்பட வேண்டும். அந்த உறுதிமொழியை பக்கத்தான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
 
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு வட்டமேசை கூட்டத்தில் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை அழிப்பதற்கான அறிவிப்பு அன்வாரிடமிருந்து வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பங்கேற்ற இரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது குறித்து அன்வாரின் முடிவைப் பெறும் பொறுப்பு வழங்கப்பட்டது.

அம்னோ தமிழ்ப்பள்ளிகளின் தூண்கள் என்று அம்னோவுக்கு ஐஸ் வைத்து வசனம் பேசுவதை விடுத்து அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு இறுதி முடிவு எடுக்கப்படும், அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களாக களமிறங்கவிருப்பவர்களும், ஒவ்வொரு இந்திய வாக்காளருக்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளிக்காத கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் இந்தியர்களின் வாக்குகள் இல்லை என்று இந்தியர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தனிப்பட்டவர்களைத் தாக்கி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதில் பயன் இல்லை. தாய்மொழிப்பள்ளி அழிப்பு கொள்கை அம்பை எய்தது அம்னோ. இந்தியர்கள் பாய வேண்டியது அம்னோ மீது! அம்னோவை ஆதரிப்பவர்கள் மீது!!