சிலாங்கூரில் அரசியல் நாடகம்!

– கே. சீலதாஸ், செப்டெம்பர் 2, 2014.

siladassஇந்த  நாட்டின்  அரசியல்  இலக்கு – நாடாளுமன்ற  கோட்பாடு  எப்படிப்பட்ட  இலக்கை  நோக்கிச்  செல்கிறது  என்பது  பெரும்  கேள்வியாக  மட்டுமல்ல –  சங்கடம்  தரும்  கேள்வியாக  மாறிவிட்டதை  மறுக்கமுடியாது.  அப்படி  எல்லாம்  ஒன்றுமில்லை,  நாடாளுமன்றத்தில்  நமக்கு  அப்பழுக்கற்ற  நம்பிக்கையுண்டு  என்று  நம்மை  நம்பச்   செய்யும்  அரசியல்வாதிகளின்  முயற்சி  கேவலமான  நிலையை   அடைந்துவிட்டது  என்பதை  சிலாங்கூர்  மாநில  மந்திரி  புசார்  சகாப்தம்  வெளிப்படுத்துகிறது.

சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிம் நீதிக்கட்சியின்  உறுப்பினர். நீதிக்கட்சி  மக்கள்  கூட்டணியில்  அங்கம்  வகிக்கிறது.  நீதிக்கட்சி காலிட்டை  மாநிலச்  சட்டமன்றத்  தேர்தலில்  வேட்பாளராக   நிறுத்தி அவரின்   வெற்றிக்கு  உழைத்தது.  மக்கள்  கூட்டணியில்  அங்கம்  பெறும் மற்ற  கட்சிகளும்  காலிட்டின்   வெற்றிக்கு  உழைத்தன.  வெற்றி  பெற்ற  காலிட்டை  மந்திரி புசாராக   நியமிக்கும்படி  பரிந்துரை  செய்தது நீதிக்கட்சி.  அதை  ஏற்றுக்கொண்டது  மக்கள்  கூட்டணியிளுள்ள  ஜனநாயக  செயல் கட்சியும்  பாஸ்   கட்சியும்.

சிலாங்கூர்  மாநில  அரசமைப்புச்  சட்டத்தின்படி  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  உறுப்பினர்களின்  நம்பிக்கையுடையவரைcand  மந்திரி  புசாராக   நியமிக்கவேண்டியது  மாநில   ஆட்சியாளரின்  கடமையாகும். இதில்  மாற்றுக்  கருத்துக்கு  இடமில்லை.  சிலாங்கூர்  சட்டமன்றத்தில்   எந்தக்  கட்சி  அல்லது  கட்சிகள்   ஒன்று   சேர்ந்து  ஒருவரைத்  தங்களின்  சட்டமன்றத்  தலைவராகத்  தெரிவு  செய்கிறதோ  அவரே  மந்திரி  புசாராக  நியமிக்கப்படவேண்டும்.  சந்தேகத்திற்கும்  குழப்பத்திற்கும்  இடம்  தராத  ஓர்  அரசியல் முறை இது –  நாடாளுமன்ற,  ஜனநாயக  முறை.  அப்படிப்பட்டச்  சூழலில்தான்  காலிட்  சிலாங்கூர்   மாநிலத்தின்  மந்திரி   புசாராக  நியமிக்கப்பட்டார்.  அதாவது  நீதிக்  கட்சி,  ஜனநாயக  செயல்,  கட்சி  பாஸ்  ஆகிய மூன்று   கட்சிகளும்  இணைந்து காலிட்டை மந்திரி  புசாராக நியமிக்க  சிலாங்கூர்   மாநில   ஆட்சியாளரிடம்  பரிந்துரைத்தது.  அந்தப் பரிந்துரை  ஏற்றுக் கொள்ளப்பட்டு  காலிட்   சிலாங்கூரின்  மந்திரி  புசாராக நியமிக்கப்பட்டார்.

காலிட்டுக்கும்  அவர்   சார்ந்திருக்கும்  கட்சிக்கும்  இடையில்   பிரச்சினை  எழுந்திருக்குமானால்  அதைப்  பொருட்படுத்த  வேண்டிய  அவசியம் மாநில  ஆட்சியாளருக்கு   இல்லை.  மாநில  ஆட்சியாளரைப்  பொறுத்தவரையில் யார்   சட்டமன்ற  அங்கத்தினர்களின்   பெரும்பான்மை  நம்பிக்கையைக்  கொண்டிருக்கிறார் என்பதை  மட்டும்  கருத்தில்  கொள்ளவேண்டும்.  வேறு  பிரச்சினைகளைக்  கருத்தில்  கொள்ளவேண்டிய அவசியமில்லை.  காரணம் மந்திரி  புசார்  சட்டமன்றத்தில்   பெரும்பான்மை  உறுப்பினர்களின்  நம்பிக்கையைக்   கொண்டவராக   இருக்கவேண்டும்.  அந்த  நம்பிக்கையை அவர்  இழந்துவிட்டிருந்தால்   அவர்  பதவி  விலகவேண்டும்.

PKR - Khalid defianceஇப்போது  சிலாங்கூர்  மாநிலத்தில்  நடப்பது  என்ன?  காலிட்   தம்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுவிட்ட  நிலையில்  அவர்  கட்சியற்றவர்   என்றவராகிவிட்டார்.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்  தமக்குப்  பெரும்பான்மை  ஆதரவு  இருக்கிறது  என்று  கூறும்  காலிட்  அதை   நிரூபிக்க  நடவடிக்கை   ஏதும்   எடுக்காதது  மட்டுமல்ல  அதை    வெளிப்படுத்தவுமில்லை.  நிற்க  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டவர்  இயக்கங்களின்   பதிவதிகாரியிடம் (ROS) புகார்   கொடுத்திருப்பதானது  அது  கட்சியின் உள்விவகாரம்.  மந்திரி  புசாரின்   பதவிக்கும்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டதற்கும்  எந்தத்   தொடர்பையும்   ஏற்படுத்த  இயலாது.

பொதுத்தேர்தலில்  மாநில சட்டமன்றத்தில்  மக்கள்  கூட்டணி   கொண்டுள்ள   பெரும்பான்மை  நீதிக்கட்சி  சட்டமன்றத்துக்குத்   தேர்ந்தெடுக்கப்பட்ட  தம்  உறுப்பினர்  ஒருவரை   மந்திரி  புசாராக  நியமிக்க  அனுமதிக்கிறது.  எனவே,  மந்திரி புசாரை  நியமித்த  கட்சி  அதன்  உறுப்பினர்  மீது  அதிருப்தியினாலோ அல்லது   சந்தேகத்தினாலோ  அவரை  கட்சியிலிருந்து  வெளியேற்றுவற்கு  அதிகாரம்  கொண்டிருக்கிறது.  அதுபோலவே,  அவரை  மந்திரி  புசார்  பதவியிலிருந்தும்  ஒதுங்கச் சொல்லலாம்.  கட்டளை  இடலாம்.  இதைத்  தடுக்க  யாராலும்   முடியாது.  இப்படிப்பட்ட  சர்ச்சையில்  மாநில  ஆட்சியாளர்  தலையிடாமல்  ஒதுங்கியிருப்பதே  விவேகமான   அணுகுமுறை.  அதோடு  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  நம்பிக்கையை  யார்   கொண்டிருக்கிறார்கள் என்பதை  மாநில ஆட்சியாளர்  கவனத்தில்  கொள்ளலாம்.  இன்றைய நிலை  மக்கள்  கூட்டணியின்  முப்பது   உறுப்பினர்கள்  டாக்டர்  வான்  அஸிஸாவுக்கு ஆதரவு தெரிவித்து  சத்தியப் பிரமாணப்  பத்திரம்  வழங்கிவிட்டனர்.  சட்டமன்றம்  வான்  அஸிஸாவின்   பெரும்பான்மையை  உறுதிப்படுத்திவிட்டது.

இதற்கிடையில்   வான்  அஸிஸாவின்  மந்திரி  புசார்  பதவிக்கு  எதிர்ப்பு  தெரிவிக்கும்  ஒருசிலர்  அவருடைய  பெண்மையைச் She can1 சிறுமைப்  படுத்தும்  வகையில்  பேசுவதும்  எழுதுவதும்  அவர்களின்  அரசியல்  முதிர்ச்சியற்றத்  தன்மையையே   காட்டுகிறது.

நடுவன்  அரசில்  பெண்கள்  அமைச்சராகப்  பணீயாற்றவில்லையா?  இன்றைய  தேசிய  பொருளகத்தின்  ஆளுநர் (Bank Negara)   ஸெட்டி  பெண்ணல்லவா?  இன்று  நீதித்துறையில்  பல பெண்களும்   பணியாற்றுகின்றனர்.  அவர்களில்  யாருக்காவது   பிரச்சனை  ஏற்பட்டதா?  வான்  அஸிஸாவுக்கு எதிராகப்  பேசுபவர்கள்   இருபத்தோறாம்   நூற்றாண்டின்  நாகரிகவாதிகள்   என்று  சொல்லிக்கொள்கிறார்களே  தவிர – அவர்களின்   மனம்  பழமை  மடிந்த பின்னோக்கவாதிகளின்   எண்ணமாக  இருப்பதை  உணரலாம்.  இவர்களைப் பார்த்து,  இவர்களின்  பேச்சைக்கேட்டு  உலகமே  சிரிக்கிறது  என்றால்  மிகையாகாது. 

ஆகமொத்தத்தில்,  காலிட்  தம்மைத்   தேர்தெடுத்த மக்களையும்  தம்மை  மந்திரி  புசாராக  நியமித்த   கட்சியையும்,  மதிக்காமல்  செல்வாக்கு  இழந்து நிற்கும்   போது  மாநில  ஆட்சியாளரின்  கட்டளைப்படி  நடப்பேன்  என்று  பிடிவாதமாக   இருப்பது  ஜனநாயகத்துக்குக்  காட்டும்   மரியாதையன்று.  அதுமட்டுமல்ல,  தம்மின்   சொந்த நலனுக்காக  மாநில  ஆட்சியாளரை  சம்பந்தப்படுத்தியிருப்பது  தம்முடைய  அரசியல்  ஆயுளை   நீட்டிப்பதற்காக மேற்கொள்ளப்படும்   செயலாகவே   மக்கள்  கருதுவர்.  அதை  நாகரிக  அரசியலாக  ஒருபோதும்  கருத  இயலாது.