இடைநிலைப்பள்ளி, உயர்க்கல்வி கழகங்களில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் திட்டவரைவு மீதான கருத்தாய்வரங்கம் இன்று, 6 செப்டம்பர் 2014 காலை 8.00 மணி தொடங்கி 2.00 மணிவரை தோட்ட மாளிகையில் நடைப்பெற்றது.
மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வியமைச்சின் அதிகாரிகள், பள்ளி ஆய்நர்கள், தமிழ்ப்பள்ளி இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் என இக்கருத்தாய்வரங்கத்திற்கென சிறப்பாக அழைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர். மைநாடி அறவாரியத்தின் இயக்குநர் திரு. இரவி வரவேற்புரையாற்றினார். இக்கருத்தாய்வரங்கத்தினைக் கல்வித் துணையமைச்சர் ப.கமலநாதன் தொடக்கி வைத்தார்.
இத்திட்ட வரைவு பணிக்குழுவின் தலைவராக கல்வியலாளர் திரு. கு. நாராயணசாமி அவர்கள் செயலாற்றி வருகின்றார். முதல் அரங்கத்தின் பேச்சாளராக திரு. கு. நாராயணசாமி அவர் கள் திட்ட வரைவின் நோக்கங்கள், தரவுகள் சேகரிக்கப்பட்ட முறைகள், அதன் சிக்கல்கள் குறித்து பேசினார். அவரைத் தொடர்ந்து இரண்டாம் அரங்கத்தில், மலாக்கா ஸ்டாம்போர்ட் கல்லூரி முதல்வர் திரு. க. நாராயணசாமி, கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான நிர்வாக பிரிவு, தமிழ்மொழிக்கான ஆசிரியர் பயிற்சி, பணித்திற மேம்பாடு, தமிழ்மொழிக்கான கால அட்டவணை குறித்து மிகத் தெளிவாக விளக்கப்படுத்தினார்.
மூன்றாவது அரங்கத்தில், கற்றல் மூலங்கள், அடிப்படை வசதிகள் , இணைப்பாட நடவடிக்கைகள் , ஆறாம்படிவ (எஸ்டிபிஎம்) நிலையில் தமிழ்மொழி குறித்து செகி பல்கலைக்கழக விரிவுரைஞர் திரு. மு. சிதம்பரம் அவர்கள் விளக்கமளித்தார்.
பொதுவாக இத்திட்டவரைவு இடைநிலைப்பள்ளிகளிலும் உயர்க்கல்வி கழகங்களிலும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலின் செயலாக்கத்தையும் தரத்தினையும் மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. இத்திட்டவரைவு உருவாகுவதற்கு மைநாடி அறவாரியம் மிக முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது.
இந்நாட்டில் ஏறக்குறைய ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றுள் ஏறக்குறைய 600 பள்ளிகளில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 500 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து, பகுதிநேரத் தமிழ்மொழி ஆசிரியர்களும் இப்பணியினைச் செய்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சற்றேறக்குறைய 30000 இந்திய மாணவர்கள் தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்கின்றனர். எனினும், சுமார் 11000 மாணவர்களே பிஎம்ஆர் நிலையில் தமிழ்மொழித் தேர்வில் அமர்கின்றனர். அதே வேளையில், சுமார் 8,000 மாணவர்களே எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழியை ஒரு பாடமாக தெரிவு செய்கின்றனர். அதில் ஏறக்குறைய 500 மாணவர்கள் மட்டுமே எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்ப்பாடம் எடுப்பதாக இன்றைய கருத்தாய்வரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைச் செம்மையாக செயல்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், இவ்வெண்ணிக்கை மேலும் சரியக்கூடும்.
திட்ட வரைவின் முன்மொழிவுகள்
கல்வி அமைச்சின் தாய்மொழிக் கொள்கை
இரசாக் அறிக்கையின்வழி இடைநிலைப்பள்ளிகளில் தாய்மொழிக் கற்றல் கற்பித்தல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ்மொழியும் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை நிலைநிறுத்த வேண்டும். மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் (2013-2025) குறிப்பிடுவது போன்று, பிரெஞ்சுமொழி, ஜப்பானிய மொழி மற்றும் அரேபியமொழி போன்று தமிழ்மொழி கூடுதலான மொழியாக கருதப்படக் கூடாது.
தமிழ்மொழி பாடம் தேசியக் கல்வி ஏற்பாட்டில் முதன்மைக் கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுதல் வேண்டும். ஆண்டுத் தொடக்கத்திலேயே இடைநிலைப்பள்ளிகளின் கால அட்டவணையில் இணைக்கப்பட்டு, அது முறையாகக் கற்பிக்கப்படுவதோடு, உயர்க்கல்விக் கழகங்களிலும் அதற்குறிய இடம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்மொழியைக் கற்கும் வாய்ப்பினை வழங்குதல்
எல்லா மாணவர்களுக்கும் தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்கும் வாய்பினை வழங்க வேண்டும். மாணவர்களின் தாய்மொழி கற்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய சூழலில், இவ்வாய்ப்பினை மாணவர்கள் பலர் பெறுவதில்லை. மேலும், பள்ளி நிலையிலான மதிப்பீட்டின் அறிமுகத்திற்குப் பின்னர், தமிழ்மொழிப் பாடம் பயில மேலும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதனை உணர வேண்டும்.
கல்வி ஏற்பாட்டில் நிகழும் எவ்வித மாற்றங்களும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழியினை ஒரு தேர்வுப் பாடமாக தெரிவு செய்வதற்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தக் கூடாது. தமிழ்மொழிப் பாடத்திற்கும் பிற பாடங்களுக்கு வழங்கப்படுவது போன்ற அங்கீகாரத்தை வழங்குவதோடு, சான்றிதழ்களிலும் அது முறையாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
உயர்க்கல்விக் கழகங்களில் மேலும் அதிகமான மாணவர்கள் தமிழ்மொழி சார்ந்த கல்வியைப் பயில வாய்ப்பளிக்க வேண்டும்.
கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான நிர்வாக பிரிவு
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து, அதன் அமலாக்கத் தரத்தினை உறுதி செய்வதற்கு ஏற்ற கல்வித் தகுதியினை உடைய பணியாளர்களைக் கல்வி அமைச்சு நிலையிலும் மாநில, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் நிலையிலும் பணியிலமர்த்தப்பட வேண்டும்.
தமிழ்மொழிக்கான ஆசிரியர் பயிற்சியும் பணித்திற மேம்பாடும்
இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ்மொழி பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழிக் கற்பித்தலுக்குப் போதிய ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, இடைநிலைப்பள்ளிகளுக்கான தமிழ்மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கக் கூடுதலான உயர்க்கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்மொழிக்கான ஆசிரியர் ஒதுக்கீடு மற்றப் பாடங்களுக்கான இயல்பான ஒதுக்கீட்டிலிருந்து தனித்துக் கணக்கிடப்படவும் வேண்டும்.
தமிழ்மொழிக்காகப் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்கள் தமிழ்மொழிப்பாட கற்றல் கற்பித்தலுக்கே பள்ளிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கான கண்காணிப்பு
கல்வி அமைச்சில் தமிழ்மொழிக்கான ஆய்நர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைக் கண்காணிக்கத் தகுதிபெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் செயலாக்கங்களின் மேலாண்மையைச் செம்மையுறச் செய்யும் வகையில் தொடர்புடைய பணியாளர்களின் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இதன்வழி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை நன்கு ஆய்ந்தறியவும் கண்காணிக்கவும் ஏற்ற ஆலோசனைகளை வழங்கவும் இது வழிவகுக்கும்.
பள்ளி நிலையிலான மதிப்பீடு
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அல்லது முழுநேர தமிழாசிரியர்கள் மட்டுமே பள்ளி நிலையிலான மதிப்பீட்டை இடைநிலைப்பள்ளிகளில் நடத்துதல் வேண்டும். முழுநேர பாட ஆசிரியர்களால் மட்டுமே பள்ளி நிலையிலான மதிப்பீட்டின் அமலாக்கத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தமிழ்மொழிக்கான கால அட்டவணை
இடைநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பல்வகைப் பாடங்களில் சுமைகளால் கால அட்டவணையில் தமிழ்மொழிக்கான கற்றல் கற்பித்தலை இடம்பெறச் செய்தல் அத்துணைக் கடினமானதன்று. பல பள்ளிகளில் இதனை அமலாக்கம் செய்து வருகின்றன. இதனை எடுத்துக்காட்டாக கொண்டு பிற பள்ளிகளும் செயல்பட வேண்டும். இது மேலும் அதிகமான மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்க வழிவகுக்கும்.
கற்றல் மூலங்களும் அடிப்படை வசதிகளும்
கல்வி அமைச்சு தமிழ்மொழிப் பாடநூல்கள் போதிய அளவிற்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி அமைச்சு தமிழ்மொழிக்கான பாடநூல்களின் செம்மையான விநியோக முறையையும் செம்மைப்படுத்துதல் வேண்டும்.
இணைப்பாட நடவடிக்கைகள் (தமிழ்மொழிக் கழகங்கள்)
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக உள்ளதால், தமிழ்மொழிக் கழகங்களும் இயக்கங்களும் இணைப்பாட நடவடிக்கையின் முறைசார்ந்த பகுதிகளாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவற்றின் நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இணைப்பாட நடவடிக்கைகளின் மதிப்பீட்டில், தமிழ்மொழிக் கழக மாணவர்களின் பங்களிப்பைக் கவனத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இந்த அங்கீகாரம் மாணவர்களின் முழுமையான ஆற்றலைப் பிரதிபலிப்பதோடு, அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
ஆறாம்படிவ (எஸ்டிபிஎம்) நிலையில் தமிழ்மொழி
ஆறாம் படிவ மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடத்தைக் கால அட்டணையில் இடம்பெறச் செய்தல் வேண்டும். மலேசிய தேர்வு வாரியத்தில் தமிழ்மொழிக்கான சிறப்பு அதிகாரி/பணியாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
ஆறாம் படிவத்திற்கான பாடத்திட்ட வரைவிலும் தேர்வுக் கருவிகளின் உருவாக்கத்திலும் ஆறாம் படிவத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும். ஆறாம் படிவத்திற்குப் பொருத்தமான பாடநூல்களை வழங்கும் பொறுப்பினை கல்வி அமைச்சே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உயர்க்கல்விக் கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி
மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இந்திய ஆய்வியல் துறை அதன் இன்றைய நிலையிலேயே நிலைநிறுத்தப்பட வேண்டும். இப்பகுதியில் மேலும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
தமிழ்மொழியில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களிலும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொதுச் சேவைத் துறையும் பிற நிறுவனங்களும் பட்டத்திற்குப் பிந்திய மேற்கல்வியைத் தொடர மேலும் அதிகமான மாணவர்களுக்குக கல்வி உதவிநிதியினை வழங்க வேண்டும்.
இடைநிலைப்பள்ளிகளிலும் உயர்க்கல்விக் கழகங்களிலும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் வெற்றி எந்த அளவிற்கு அரசைச் சார்ந்துள்ளதோ அந்த அளவிற்குச் சமூகம் சார்ந்ததாகவும் உள்ளது. அரசு செய்ய வேண்டிய கடப்பாடுகள் சில உள்ளன. அதே சமயத்தில், சமுதாயம் ஆற்ற வேண்டிய பொறுப்புகளும் உள்ளன. அதே வேளையில், பள்ளி சார்ந்த சமூகமும், குறிப்பாகப் பெற்றோர்கள், பள்ளியின் தலைமைத்துவத்தோடு மிகவும் அணுக்கமாகவும் இணக்கமாகவும் செயல்பட்டுத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் திட்டம் வெற்றிப் பெற பாடுபட வேண்டும்.
(இக்கட்டுரை இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்ட திட்டவரைவு கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது)
(தொகுப்பு : – பூங்குழலி வீரன்)
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.இடைநிலைப்பள்ளி செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முழு எண்ணிக்கையில் தமிழ்மொழிப் பாடம் எடுப்பதில்லை. தமிழ்மொழிப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே பின் தங்கிய மாணவர்களை ஒதுக்கிவிடுகிறனர். பின் எப்படி மாணவர் எண்ணிக்கை உயரும் ? முதலில் தமிழ் மொழிப் பாட ஆசிரியர்கள் மொழி பற்றாளர்களாக இருத்தல் மிக அவசியம். நம் மாணவர்களை அரவணைத்துச் செல்லுபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
ஆய்வரங்கத்தை நடத்தி நடத்தி இன்னும் எத்தனை ஆண்டுகளில் உங்கள் திட்ட வரைவை செய்து முடிக்கப் போகிறீர்கள்??? கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு!!!!! என் பிள்ளைகள் காலம் முடிந்து பேரப்பிள்ளைகள் காலமும் வந்து விட்டது. ஏதோ, தமிழ் மொழியை கொல்லாமல் இருந்தாலே போதும்.!!!!!
இது எப்படி இருக்கு? எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போன கதையாக நாங்களும் எங்க பங்குக்கு – வாங்கும் பணத்துக்க இதையாவது பண்ணி வைப்போமே என்று தான் இதுவம் அமைந்திருக்கிறது. இது தமிழ் மக்களை அமைதிப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு முயற்சியே தவர வேறெதுவும் இல்லை. நம்பவில்லையா? உங்களால் – .
1. தமிழ்ப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே பொது பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு.
2. தமிழ்மொழியில் நல்ல தேர்ச்சி பெற்ற தமிழர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு. என்று அரசாங்கத்தை வலியுறுத்த முடியுமா?
ஆரம்பப் பள்ளியிலேயே எல்லா பாடமும் தமிழில் இல்லை…இடைநிலைப் பள்ளியில் தமிழ்ப் படித்தும் – தமிழறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. உங்களால் தமிழ்ப்பாடத்தை பள்ளி நேரத்திலேயே போதிக்கும் ஏற்பாட்டைக்கூடச் செய்ய முடியாது. அதாவது உங்களால் எந்த ஆணியையும் _____ முடியாது. மாறாக தமிழ் மொழியை அழித்தே ஆகவேண்டும் எனும் கொள்கையைக் கொண்டுள்ள அரசுக்கு துணைப் போக மட்டுமே உங்ளால் முடியும். மனசாட்சி இருந்தால் உங்களால் மறுக்க முடியாது.
மன்னிக்க வேண்டும். அதெப்படி உங்களால் வெளியே நின்று கொண்டு இயங்கிக் கொண்டிருப்பவர்கள் மீது எச்சிலைத் துப்ப முடிகிறது. நீங்கள் யார்? இந்த சமூகத்தில் நீங்கள் இல்லையா? இந்த திட்ட வரைவை எப்படி செம்மைப் படுத்தலாம் என்று மட்டும் கருத்துரையுங்கள். இதற்காக இதுவரை நீங்கள் எந்த ஆணியையாவது _______________ இருக்கிறீர்களா? பிறகு எதற்கு வீண் வாய்ச்சவடால். இயங்குபவர்களுக்கு மட்டுமே கருத்துரைக்க தகுதி இருக்கிறது… மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி கொள்ளுங்கள். இயங்க முடியாத உங்களால் எப்படி அடுத்தவரின் இயக்கம் குறித்து எதிர்மறையான கருத்துகளை வெளியிட முடிகிறது? ஏன் அரசாங்கத்தை இதைச் செய்பவர்கள் மட்டும்தான் வலியுறுத்த வேண்டுமா? எதிர்மறையான கருத்துகளை மட்டுமே முன்வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் எதைக் கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பல என்ஜிஓ அரவாரியத்துடன் இணைந்து பல வழிமுறைகளை எடுத்துரைத்து, எந்த ….. முடியாது என்று உணர்ந்தே மக்கள் கருத்துரைக்கின்றனர். இதுவரை தமிழ் மொழியின் எதிர்காலத்துக்காக எந்த … ஆணியத்தான் முறையாக ….. யுள்ளீர்கள் அல்லது ….கப் போகபோகிறீர்கள் என்று விவரமாக அறிவியுங்கள். உங்கள் கூற்று நலம் பெருமானால் ஆதரவு கரம் கொடுக்கிறேன்…
இதைக்கூட பல என்ஜிஓக்கள் ஒன்றிணைந்துதான் செய்கிறார்கள் தராசு அவர்களே. சரி. எனக்கு ஒரு சந்தேகம். இதற்கு முன்பதாக எந்த என்ஜிஓவில் இருந்து கொண்டு இது குறித்து நீங்கள் பேசி முட்டி மோதி போராடி தோல்வி அடைந்திருந்தீர்கள்? தெளிவாக சொன்னீர்கள் என்றால் இப்போது இதை முன்னெடுத்திருப்பவர்களுக்கு அது ஒரு படிப்பினையாகவோ வழிகாட்டியாகவோ அமையும். அவர்கள் ஆணியை சரியாக _____________ உதவியாக இருக்கும். அதை விடுத்து பொத்தாம் பொதுவாக மக்கள் கருத்துரைக்கிறார்கள் என்ற கதையெல்லாம் இனி வேண்டாம். இப்படி கதையளப்பவர்களை நாங்கள் கடந்து போய்க் கொண்டே இருப்போம். தொடர்ந்து உழைப்பவனும் உழைத்துக் கொண்டிருப்பவனும் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றைக் குறித்து கருத்துரைக்க தகுதியுடையவன். இதுவரை தன சொந்த சமூகத்தின் நன்மைக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காதவனுக்கு அது குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என்பது என் கருத்து.
இடை நிலைப்பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப் பட வேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பலர் தமிழ் படித்துக் கொடுப்பதில் ஆதரவு கொடுக்கின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் அடாவடித்தனம் பண்ணுகின்றனர். நமது மாணவர்கள் பலர் தமிழ் படிப்பதில் ஆர்வம் காட்டாததால் அவர்களுக்கு இன்னும் எளிதாக போய்விட்டது. இதில் தமிழ் படித்துக் கொடுக்கும் நமது ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளுகின்றனர். அரசாங்கத்தால் நமக்குப் பல தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக நாம் சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தால் இறுக்கமாக ஆணியடித்து சுடுகாட்டுக்குக் கொண்டு போய்விடுவார்கள். கல்விமான்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நாம் ஆதரவு கரம் நீட்டுவோம். அத்தோடு நமது இயக்கங்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வாழ்க தமிழ்!
செயலாமை கொண்ட என்ஜிஓவை சுட்டிக்காட்டுமுன், சிறிது காலம் பொறுத்திருந்தே பார்க்கிறேன். குறைக்கூறளைக் கண்டு தளரா முயற்ச்சிக்கு பாராட்டு. எமது மாற்று கருத்து எதிர்ப்பார்த்து அலுத்துப்போன ஆதங்கமே!!. நீங்கள் கடந்து போய்க்கொண்டே இருங்கள், நல்லது. நல்லதே நடக்கட்டும்.
நல்லதே நடக்கும் என்பது – இயலாதவர்களின் – கையாலாகாதவர்களின் வாதம். 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை, போதனை நேரம், அவற்றின் தரம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். மேலும் தமிழ்ப்பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பாத, அனுப்ப விரும்பாத பெற்றோர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறியுங்கள். அது மட்டும் அல்ல. இந்த திட்ட வரைவு எப்படி இருக்கும்? இந்தக் குழு முடிவில் என்ன பதில் சொல்லும்? ‘நாங்கள் திட்ட வரைவை அரசிடம் (கல்வியமைச்சிடம்) முன் வைத்துவிட்டோம். செயல்படுத்துவதும் தள்ளிவைப்பதும் அவர்கள் பாடு’ இது தானே? அதாவது ஏட்டுச்சுரைக்காயை நாங்கள் சாமயல்காரரிடம் கொடுத்து விட்டோம், சமைப்பதும் பரிமாறுவதும் அவர் பாடு என்றால் எப்படி? மேலும், நம் இந்திய சமுதாயத்தின் குறிப்பாக தமிழினத்தின் நாடித்துடிப்பு அரசுக்கு மிக மிக நன்றாகவே தெரியும். நம் எதிபார்ப்பு என்ன என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, என்ன தேவை என்பதை அறிந்த (இவ்விடத்தில் தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பள்ளி) அரசே நேரடியாகச் சென்று ‘செய்யலாமே’… மற்றபடி ‘செய்வது’ எல்லாம் எல்லாம் காலவிரயம்…பணவிரயம் தான். இன்னும் சொல்லவதென்றால் உங்களுக்கெல்லாம் கோபம் வரும். அதாவது ‘எதுவுமே ‘_டுங்கப்படாது’ – இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
எத்தனையோ முயற்சிகள். அதில் இதுவும் ஒன்று. இறுதியில் ஏதாவது ஒன்றாவது தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வழி வகுக்கட்டும்.!!!
நல்லது நடக்கும் என்பதை வைத்தே முயற்சிகள் தொடருகின்றன. நாமோ ஒரு பலவீனமான சமுதாயம். எதைச் செய்தாலும் ஒருமித்த சிந்தனை இல்லை. ஒரு பக்கம் “ஆம்” ஒரு பக்கம் “இல்லை”. பேச்சிலே அடாவடித்தனம் அதிகம். காட்டிக் கொடுப்பதற்கு ஆள்கள் வரிசையில் நிற்கிறார்கள். இவ்வளவையும் மீறித்தான் காரியங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது. கையாலாகத்தனம் தான். என்ன செய்வது? அதற்காக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா! நம்மால் தான் செய்ய முடியவில்லை. செய்பவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.
தமிழ் மொழியில், தமிழர் பண்பாடில் உள்ள ஆர்வத்தை தூண்டக்கூடிய வற்றை ஒரு அனைதுலக குழு அமைத்து தேர்வு செய்யுங்கள்.குமரி கண்டம், 10000 ஆண்டுக்கு முந்திய பூம்புகார், சோழ பேரரசு முதல் இன்றைய சினிமா, தமிழர் பரவியுள்ள பல நாட்டு தமிழ், தமிழர் பற்றிய தகவல் இருக்க வேண்டும். அதை கட்பிப்படக்கு கணினி, இணையம் மற்றும் முல்டிமீடியா போன்ற வற்றை நிறைய பயன் படுடிக்கொல்லுங்கள். Syllabus ஆசிரியர் சொல்லி கொடுத்தல் தான் புரியும் என்று இருக்க கூடாது. யாரும் அதை சொந்த மாக படிடுக்கொல்ள்ளலாம் என்று இருக்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் பற்றி தெரியாத விபரம், நகைச்சுவை, கலை, பண்பாடு, ஆன்மிகம், என்று பல கோணங்களில் இருக்க வேண்டும். அதை படித்தால் ஒரு தன்னம்பிக்கை, கௌரவம் என்று படிப்பவரை உற்சாக படுத்தா வேண்டும். தமிழ் கணினி programming, வியாபார நுணுக்கம் என்று கூட சேர்க்க வேண்டும், தமிழ் சோறு போடும என்று கேட்பார்களே அவர்களுக்கு பதில் அது. ஆரியர்களுக்கு முன்பு இந்திய முழுதும் பேசப்பட்டது தமிழ், தமிழர் குருகுலத்தில் படிக்கச் ஆரியர் (foreigner) வந்தனர், அவர்கள் சொந்த மொழியும் தமிழும் கலந்து, சம கருத்து (samaskrit) மொழி உருவாகியது. இந்த விபரமும் இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு சபாக்ஷ். இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சொன்னால் இவையெல்லாம் கல்வியமைச்சின் பாடத்திட்டத்தில் இல்லை எனவே இவற்றை நாங்கள் சேர்த்துக் கொள்ள முடியாது என்பார்கள். ஆனால் சீனர்களிடம் இந்த ஈகோ வும் பயந்தாங்கொள்ளித்தனமும் கிடையாது. அவர்களின் கலாச்சாரத்தையும் மொழியயையும் இன்னும் ஆழமாக பயிற்றுவிப்பதற்காகவே சிறப்பு வகுப்புக்களை சனிக்கிழமைகளில் நடத்துகிறார்கள். அதுவல்லவோ அர்ப்பணிப்பு…மொழிப்பற்று..! ஆசிரியர் தினத்தை அவர்கள் கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கிறது. நம்ம ஆசிரியர்களுக்கு ‘மே தினம்’ மட்டும் போதும் என்று சொல்லத்தோனுகிறதே…அதுவும் தொழிலாளர் தினம் அல்லவா? நம் ஆசிரியர்களும் மாதம் முடிந்ததும் வெறும் சம்பளத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் தானே…இந்தக் கருத்துக்கும் எதிர்ப்பு இருக்கும் பாருங்களேன்…
ஒவ்வோராண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் படித்துவிட்டு இடைநிலைப்பள்ளிகளுக்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். ஆனால், ஐந்தாம் படிவத்தை எட்டுவதற்குள் இவர்களில் ஒரு பெரிய தொகையினர் விடுபட்டுப் போய்விடுகின்றனர். இதுபற்றி நாம் பல வேளைகளில் பேசியிருக்கிறோம். இதைத்தான் ஆய்வின் அடிப்படையில் நிறுவி, அதற்கான காரண காரணிகளை ஆய்ந்து ஆக வேண்டிய காரியங்களைத் திரு. கு. நாராயணசாமி அவர்களின் குழுவினர் நம்முன் வைத்திருக்கின்றனர். அவர்களின் இச்செயல்பாட்டையும், அவர்களுக்கு ஆதரவு நல்கிவரும் மைநாடியையும் நாம் பாராட்டியே தீர வேண்டும். காலத்தின் தேவையை உணர்ந்த மிக, மிக நல்ல முயற்சி! இப்பரிந்துரைகள் பிரதமர் நஜிப்முன் வைக்கப்படும் என நம்புகிறேன். ஆனால், பிரதமரை மட்டும் நம்புவது போதாது. சிக்கல் மிகப்பெரியது. கல்வி அமைச்சு லேசுபட்ட அமைச்சு அல்ல. அங்கு இனவெறி புரையோடிக் கிடக்கிறது. ஆதலால், சமூகம் தொடர்ந்தாற்போல் அரசின் மீது அழுத்தம் செலுத்த வேண்டும். கமலநாதன் போன்ற அரசியல்வாதிகளை நாம் மாதா மாதம் தலையில் தட்டி, “என்ன சாதிச்சே? என்ன செஞ்சிக்கிட்டு இருக்கே? என்ன செய்யப் போரே?” என்று கேற்க வேண்டும். அடிமேல் அடி வைக்க வேண்டும். அதற்கு, நம் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும், நம் சமூகத்தின் சக்தியை ஒருமுகப்படுத்தும் ஒரு நிலையான தளம் — ஒரு சமூக அமைப்பு — தேவை. இத்தேவையை நிறைவு செய்வதகான பணிகளை முன்னெடுப்பது யார்?
ஒரு சமூக அமைப்புத் தேவை. உண்மை தான். முன்னெடுப்பதற்கு ஆள் தேவை. நம் சமூகத்தில் ஆளா இல்லை! ஆனால் அடுத்த வினாடியே செனட்டர் பதவிக்கு ஆளாய் பறப்பார்களே! இப்போது செயல்படுகிற அமைப்பே இதனை முன்னெடுத்துச் செல்லட்டும். மொழி, இன உணர்வு உள்ளவர்கள் எங்கே போய் தேடுவது?