தீபாவளி: பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கிறார்

-ஜீவி காத்தையா.

தீபாவளி நாளான புதன்கிழமை அக்டோபர் 26, 2011 காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நாட்டின் மூன்று இடங்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

மலேசிய இந்து சங்கத்தின் அறிவிப்பின்படி இந்நிகழ்ச்சி காலை மணி 9.30 லிருந்து பிற்பகல் மணி 1.00 வரையில் நடைபெறும்.

பத்துமலை திருத்தலத்திலும் அதே நேரத்தில் பிரதமர் தரிசனம் அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, ஒரு டத்தோவின் பிறந்த நாளுடன் சேர்த்து நடத்தப்படும் நிகழ்ச்சியிலும் அதே நேரத்தில் பிரதமர் தரிசனம் அளிப்பார்.

இம்மூன்று இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நஜிப் தரிசனம் அளிப்பார்.

இம்மூன்று நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்ளுமாறு இந்துக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கலந்துகொள்வதற்கு இந்துக்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து காலை மணி 9.00 க்கு முன்னதாகவே கிளம்ப வேண்டியிருக்கும்.

பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கும் இம்மூன்று நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க விரும்பும் இந்துக்கள் அவர்களுடைய இல்லங்களில் தீபாவாளி திருநாளை தங்களுடைய குடும்பத்தினருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் கொண்டாடுவதற்கான கடமையை பிரதமரின் தரிசனத்தைப் பெறுவதற்காக விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது.

“இத்திருநாளில் இந்துப் பெருமக்கள் காலையில் எழுந்து நல்லெண்ணய் தேய்த்து நீராடினால் லட்சுமியும், சக்தியும் தங்களது இல்லத்துக்கு வருவார்கள் என்பது ஐதீகம். எண்ணெய் லட்சுமி என்றும், தண்ணீரை கங்காதேவி என்றும் புராணிகர் கூறுகின்றார்கள். இத்திருநாளில் இந்துப் பெருமக்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து தங்களின் இல்லங்களில் விளக்கேற்றி, உற்றார் உறவினர்களுடன் அன்பைப் பகிர்ந்து, மூத்தவர்களிடம் ஆசி பெற்று, இனிப்புகள் வழங்கியும் ஆலையங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்தும் இத்திருநாளைக் கொண்டாடும்படி”, தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார். (தநே.25.10.11)

இனிமேல், பிரதமர் வருவார் என்று எதிர்பார்க்கலாமா?

தேவஸ்தான தலைவர் நடராஜா கூறியிருப்பதைத்தான் மலேசிய இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர் என்று கூறினார் அதில் தவறு இருக்காது என்று கூறலாம்.

அதிகாலையிலிருந்து இரவு வரையில் அல்லது குறைந்தபட்சம் மதிய உணவு வரையில் இந்துக்கள் இத்திருநாளை தங்களுடைய இல்லங்களிலிருந்து கொண்டாடுகின்றனர்.

ஆனால், நாளை புதன்கிழமை அக்டோபர் 26 இல், பல ஆயிரம் ஆண்டுகளாக அனுசரிக்கப்படும் தீபாவளி சம்பரதாயங்களை ஒதுக்கி வைத்து விட்டு காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 வரையில் பிரதமர் நஜிப்பின் தரிசனத்திற்காக கோலாலம்பூரில் இந்துக்கள் கூட வேண்டும் என்று அழைப்பு விடுப்பது முறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று பிரதமருக்காக தீபாவளி சம்பரதாயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால், இன்னொரு நாளில், “அப்பா, நான் என் காதலரை போய் பார்த்து விட்டு வந்த பின்னர் உங்கள் காலில் விழுந்து ஆசியர்வாதம் பெற்றுக்கொள்கிறேன். ஓகேவா, அப்பா”, என்று ஒரு மகள் அல்லது மகன் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

இக்கேள்வி சரிதான். ஆனால், பிரதமர் வருகிறேன் என்று கூறும்போது எப்படி மறுப்பது என்ற பதில் கேள்வி வந்தது.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவது யார்? பிரதமரா? அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகளா?

மலேசிய இந்து சங்கம் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நவம்பர் 5 அல்லது 6 இல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், பிரதமர்துறையைச் சார்ந்தவர்கள் வேறுவிதமாக திட்டமிட்டிருந்தனர். ஆகவே, மலேசிய இந்து சங்கம் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

“மலேசிய இந்து சங்க தீபாவளி திறந்து இல்ல உபசரிப்புக்கு பிரதமர் வருவது பெருமைக்குரியதாகும். நாங்கள் அதனை நவம்பர் 5 அல்லது 6 இல் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், பிரதமர்துறையினர் கேட்டுக்கொண்டதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது”, என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் தொடர்பு கொண்டபோது கூறினார்.

“எதிர்வரும் காலங்களில் இது கவனத்தில் கொள்ளப்படும்”, என்று அவர் சற்று உறுதியான தொனியில் கூறினார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரதமர் நமது நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவர் சமாதானம் கூறினார்.

இன்னும் சில டத்தோக்களிடம் வினவப்பட்டபோது அவர்களின் பதிலில் நடுக்கம் காணப்பட்டது. “செய்யக்கூடாது; ஆனால் செய்ய வேண்டியிருக்கிறதே!”, என்பது அவர்களின் பொதுவான கருத்தாக இருந்தது என்று கூறலாம்.

அக்கிரமத்தையும் ஆணவத்தையும் அழித்து மனிதனை நல்லவனாக்க ஆக்குவதற்கு வழிகோலும் செயல்பாடுகளைக் கொண்டது தீபாவளி சம்பரதாயங்கள். அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். எதற்காகவும் அவற்றில் எதனையும் தள்ளி வைக்கக்கூடாது. அக அழுக்கை சுத்தம் செய்வதற்கான அதிகாலைக் குளியலிருந்து பெற்றோரை வணங்கி நின்று ஆசி பெற்று வருவோரை வற வேற்று உபசரிக்க வேண்டிய ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதை மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் எம். பாலதர்மலிங்கம் சுட்டிக் காட்டினார்.