இன்று 2015 பட்ஜெட்: அதில் பத்து ஆராங் பெரியக்காளுக்கு நஜிப் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாரா?

 

Periakka-300x2851இன்று நாட்டின் ஆறாவது பிரதமர் நஜிப் ரசாக் நிதி அமைச்சர் என்ற முறையில் 2015 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

அந்த பட்ஜெட்டில் பத்து ஆராங்கில் வாழ்ந்து வரும் சி. பெரியக்காள் என்ற 77 வயதான மாதுக்கு ஜூன் 2013 லிருந்து, 2013 ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து, நிறுத்தப்பட்டுள்ள அவருக்கு உரிய சமூக நல இலாகா நிதி உதவி மீண்டும் தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு இந்த 2015 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நஜிப் ரசாக் ஒதுக்கியுள்ளாரா என்பது தெரிய வேண்டும்.

இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகளின்படி, இன்று தாக்கல் செய்யப்படும் 2015 ஆண்டிற்கானnaj பட்ஜெட், “முழுக்க முழுக்க மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை கருத்தில் கொண்ட மக்கள் பட்ஜெட்டாக இருக்கும்” என்று பிரதமரும், நிதி அமைச்சருமான நஜிப் ரசாக் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப் கூறியதாக சொல்லப்படும் மக்களில் பெரியக்காளும் ஒருவர் என்றால், பட்ஜெட் 2015 அவருக்கு உரிய நிதி உதவியை அளிக்க தேவைப்படும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பெரியக்காளுக்கு சமூகநல இலாகா கொடுத்து வந்த உதவித் தொகை நியுசீலந்திருந்து இறைச்சி இறக்குமதி செய்து, சமைத்து விருந்துண்ணும் அளவிற்கு பெரிதான தொகையல்ல. கடந்த மே 2013 இல் அவருக்கு கொடுக்கப்பட்ட கடைசி மாதாந்தர நிதி உதவித் தொகை ரிம95 மட்டுமே. 17 ஆண்டுகளுக்கு முன் அது வெறும் ரிம50 ஆகத்தான் இருந்தது.

 

“பூனைக்கு சாப்பாடு போடக்கூட இது போதாது”

 

catவெறும் ரிம95 தானா? இது போதுமா? என்று நவம்பர் 2013 இல் கேட்டதற்கு, “இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கக் கூடாது, ஏன்னா பூனைக்கு சாப்பாடு போடக்கூட இது போதாது என்று உங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் தெரிந்து இருக்கனும்”, என்று அந்தக் கால பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேசும் பாணியில் பெரியக்கா பதில் அளித்தார்.

மே மாதம் தேர்தல் வந்தது. ஓட்டுப் போட்டேன். அதற்கு வந்து கூட்டிக் கொண்டு போனார்கள். ஜூன் வந்தது. உதவிப் பணம் வரவில்லை. இப்போது ஆறு மாதம் ஆகிவிட்டது. நிறுத்தியாச்சு என்ற தகவல் கூட கிடையாது என்று கூறிய பெரியக்கா, “ஏன் உதவித் தொகை நிறுத்தப்பட்டது” என்று தமக்குத் தெரியவில்லை என்றார்.

கடந்த (2013) ஜூன் மாதத்திலிருந்து சமூக பொதுநல உதவிப் பணம் கிடைக்காமல் பலர் பத்து ஆராங்கில் இருப்பதாக பெரியக்கா கூறினார். தமக்குத் தெரிந்த வரையில் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றார்.

வயதானவர்களை, ஏழைகளை, அதிலும் இந்தியர்களை ஏன் இப்படி நடத்துகிறார்கள் என்று தமது கவலையைத் தெரிவித்த பெரியக்கா, “இதுக்குத்தான் நாங்கள் ஓட்டு போட்டோமா?”, என்று கேட்டார்.

பெரியக்காவின் இக்கேள்விக்கு பட்ஜெட் 2015 இல் பதில் இருக்குமா? பெரியக்காளும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்க அமைச்சர்கள் இருக்கிறார்களா? தலைவர்கள் இருக்கிறார்களா?