“வந்தேறிகள்”: வரலாறு என்ன சொல்கிறது?

-ஜீவி காத்தையா, அக்டோபர் 20, 2014.

Go back1அமெரிக்கா ஒரு பல்லின மக்களைக் கொண்ட  நாடு. அங்கு நிற அடிப்படையிலான குமுறல்கள் இன்று வரையில் நடந்து கொண்டிருந்தாலும், அந்நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் “வந்தேறி” என்றோ  “திரும்பிப் போ” என்று கொக்கரிப்பதில்லை. ஏனென்றால் “திரும்பிப் போ” என்பது அந்நாட்டு மக்கள் அனைவரையும், சிவப்பு இந்தியர்களைத் தவிர, அந்நாட்டை விட்டு  வெளியேற்றி விடும்.

நமது நாடான மலேசியாவும் பல்லின மக்களைக் கொண்ட நாடு. பல்லின மக்களின் உழைப்பால் செழிப்படைந்த நாடு. இங்கும் “வந்தேறிகள்” மற்றும் “திரும்பிப் போ” என்ற கூப்பாடுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இதற்கு தூபம் போட்ட பெருமை நாட்டின் பெரும் தலைவர்கள் என்று கூறப்படும் ஓன் பின் ஜாபார், துங்கு அப்துல் ரஹ்மான், மகாதிர் முகமட் மற்றும் பல தலைவர்களைச் சாரும். புழு பூச்சிகளுக்குக்கூட இவர்களின் பின்னணி தெரியும். ஆனால் இவர்கள் என்னவோ மலேசிய மண்ணுக்குள்ளிருந்து முளைத்தவர்கள் போல் மற்றவர்களை திரும்பிப் போ என்று கூறுகிறார்கள்.  தற்போதைய பிரதமர் நஜிப் ரசாக் பகிரங்கமாக தமது இந்தோனேசியnajib சுலாவாசி  பூர்வீகத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக இவரை செம்பருத்தி மாத இதழ் பாராட்டியுள்ளது. ஆனால், நஜிப் பிரதமர் மற்றும் அம்னோவின், பாரிசானின் தலைவர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் ஊமையாக இருக்கிறார்.

ஆகவே, “திரும்பிப் போ” என்ற கூப்பாடு  இன்றும் தொடர்கிறது.  இன்று அக்கூப்பாடு மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் அக்கூப்பாட்டிற்கு எதிர்ப்பும் வலுவடைந்து வருகிறது.

நாட்டின் குடிமகனை திரும்பிப் போ என்பது அவனது உரிமைக்குச் சவால் விடுவதாகும். அச்சவால் நாட்டில் நிலவும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை சீரழிக்கும் தன்மை கொண்டதாகும்.  அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் எங்கே பிறந்தோம் என்ற கேள்விக்கு இன்றைய உலகில் இடமில்லை. இந்நாட்டின் சில மலாய்க்கார தலைவர்களின் பெயரை குறிப்பிட்ட பின்னர், இந்நாட்டில் உண்மையான மலாய்க்காரர்கள் யார் என்று வினவிய மரினா மகாதிர், “நான் இல்லை” என்ற பதிலையும் கூறினார். இதில்தான் இந்நாட்டின் எதிர்காலம் இருக்கிறது.

நேற்று, கெராக்கான் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் அம்னோ தலைவர்கள் சீனர்களையும் இந்தியர்களையும் “வந்தேறிகள்” என்று கூறும் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நாட்டில் ஓராங் அஸ்லி, சபகான்ஸ் மற்றும் சரவாக்கியர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் வந்தேறிகள்தான் என்றாரவர். “மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய அனைவரும் வந்தேறிகள்தான்”, என்று டான் கூறினார்.

Pendatang1“சீனர்களை வந்தேறிகள் என்று அடிக்கடி கூறும் அம்னோ உறுப்பினர்கள் அவர்களும்கூட வந்தேறிகள்தான் என்பது பற்றி சிந்திப்பதே இல்லை” என்றும் அவர் கூறினார்.

இன்று, பல மலாய் அரசு சார்பற்ற அமைப்புகள் கெராக்கான் கட்சி டான் லாய் சூனை கட்சியிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதோடு அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப் போவதாக தெரிவித்துள்ளன. எல்லாவற்றிலும் தாங்களே உயர்ந்தவர்கள்; எல்லாம் தங்களுக்கே சொந்தம் என்பது அவர்களுடைய போக்காகும். இது நெருப்புக்கோழியின் மயக்கத்தைக் காட்டுகிறது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட வரலாறு என்ற மாத்திரை கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மாத்திரை ஓர் இடத்திலிருந்து மட்டும் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பல இடங்களிலிருந்தும் பெறலாம். அவற்றில் ஒன்று இங்கு தரப்படுகிறது.

 

“மலாயாவில் பூர்வீக குடிகள்

 

முதலில் தென்கிழக்கு ஆசியாவிலும் மலாயாவிலும் வசித்தவர்களுக்குச் சீமாங்கியர் அல்லது பங்கனியர் என்னும் பெயர்களும் வழங்குகின்றன. இவர்கள் இந்தியாவிலுள்ள ஆதிக்குடிகளின் வம்சத்தைத் சேர்ந்தவர்கள்.  மானிட வர்க்க ஆராய்ச்சியாளர்கள் (Ethnologists) இவர்களை ‘பொலிநீஷியர்’ என்றும் கூறுவர்.

இவர்களுடைய வம்சத்தார் இப்போது பேரா, பஹாங், கிளந்தான், மடகாஸ்கர், பிலிப்பைன், வட ஆஸ்திரேலியா, அந்தமான் தீவுகள் முதலியவிடங்களில் காணப்படுகிறார்கள்.

மலாயவில் இவர்களுடைய ஜனசங்கியை சுமார் 2,000. இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் வசிக்கிறார்கள். இவர்களுடைய உறைவிடங்கள் இலைகளினால் மூடப்பட்ட சிறு பரண்கள். இவ்விதப் பரணின் தரையில் கம்புகள் அடுக்கி அவற்றின் மேல் உறங்குவார்கள். அவ்வேளையில் காட்டுத்தீ மூட்டி வைத்திருப்பார்கள். போக்குவரவு செய்வதற்குப் படகுகளையோ மற்றவிதமான வாகனங்களையோ உபயோகிப்பதில்லை. வீடு வாசல்கள் இல்லை. காடுகளில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, பட்சி, மிருகம் இவைகளே இவர்களது உணவாகும். சிகிமுகிக் கற்களால் செய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்களை உபயோகிக்கிறார்கள். அம்பும் வில்லுமே இவர்களது முக்கியமான ஆயுதங்கள். இவர்கள் உணவுகளைச் சேமித்து வைப்பதில்லை. குடும்பக் கூட்டமாக வசிப்பார்கள். இவர்களுக்குத் தலைவன் இல்லை. இவர்கள் கள்ளங்கபடமற்றவர்கள். இவர்களுடைய் பெண்கள் கற்பில் சிறந்தவர்கள். இடியையும் மின்னலையும் சீமாங்கியர் வணங்கி வருகிறார்கள்; இவற்றுக்குப் பயப்படுகிறார்கள்; இவற்றைச் சமாதானப்படுத்தத் தங்கள் கெண்டைக் காலின் முன்புறத்திலிருந்து இரத்தம் எடுக்கிறார்கள். இவர்களுடைய வட்டத் தலையும் நீண்ட தலையும் உடைய இரண்டு பிரிவினர் உண்டு. கறுப்பு நிறமாகவும், சுருட்டை மயிர் உள்ளவர்களாகவும், பார்ப்பதற்கு விகாரமாயுமிருப்பார்கள். சீமாங்கியர் சக்கேயருடன் கலப்பு மணம் செய்திருக்கிறார்கள். சக்கேயர்களிடமிருந்தே ஊது குழலின் உயயோகத்தை அறிந்திருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, சக்கேயர் அல்லது செனேயர் என்பவர்கள் யூனானிலிருந்தும் (Yannan)  மலைப் பிரதேசங்களிலிருந்தும் வந்து மலாயாவில் குடியேறியவர்கள்; மங்கோலிய-இந்தோனேஷிய வம்சத்தவர்கள்; மங்களான மஞ்சள் நிறைமுடையவர்கள். இவர்கள் பேசும் மொழி இந்து-சீனாவைச் சேர்ந்த ‘மொன் அன்னம்’ மொழியாகும். சீமாங்கியரைவிட அழகிலும் உயரத்திலும் நிறத்திலும் சிறந்தவர்கள். இவர்களுடைய தலை நீண்டும் மயிர் சுருண்டுமிருக்கும். இவர்கள் தங்களுடைய தேகத்தில் பச்சை குத்திக் கொள்வார்கள். நீண்ட ஒரு ஊதுகுழலே இவர்களுடைய ஆயுதமாகும்.  இவர்களுடைய இருப்பிடம் மரங்களின் மேலும் மரத்தூண்கள் மேலும் ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளாகும்.

இவர்களுடைய ஜனத்தொகை 20,000. பேரா, பகஹாங், சிலாங்கூர் இப்பிரதேசங்களிலுள்ள காடுகளிலே நதிக்கையோரமாக இவர்கள் வசிக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில் நெற்பயிரும், சமவெளிகளில் கரும்பு, வாழை, சோளம், புகையிலை இவற்றையும் பயிரிடுகிறார்கள். இவர்களுள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவனுண்டு. இக்கூட்டங்கள் ஓரிடத்தில் அகப்படும் உணவுகள் முடிந்தவுடன் வேறிடத்திற்குப் பெயர்ந்து செல்லும். சக்கேயர் பேய் பிசாசுகளுக்கும் பலவித நோய்த் தேவதைகளுக்கும் பயந்தவர்கள். அவற்றை அணுகவொட்டாமல் தடுப்பதற்காகத் தம் வீடுகளின் வெளிப்புறத்தில் காய்ந்த தேன் கூட்டையும், துவாரங்கள் இட்ட தேங்காய் ஓட்டையும் கட்டித் தொங்க விடுவார்கள். இறந்தவர்களின் பிரேதக் குழிகளின் மேல் உணவும்

ஆயுதங்களும் வைப்பார்கள். இங்ஙனம் செய்வதால் செத்தவர்களின் ஆவி இறந்தவர்களது உலகத்தை சீக்கிரமாக அடையுமென்பது சக்கேயரது நம்பிக்கை. மந்திரத்தில் நம்பிக்கையுடையவர்கள்; மாந்திரிகள் இறக்குந் தறுவாயில் பழகிய புலி ஒன்று வந்து அவன் உடலைக் கிழித்து அவனது உயிரை விடுவிக்கும் என்ற நம்பிக்கை சக்கேயருக்கு உண்டு.

கிராமங்களின் அண்மையிலிருக்கும் சக்கேயர்கள் மெல்ல மெல்ல நாகரிகம் பெற்று வருகிறார்கள்.

மூன்றாவதாக ஜக்கூனியர் அல்லது ஆதிமலாயர். இவர்கள் யூனானின் வடமேற்கு மலைப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள்; ‘மங்கோலிய-இந்தோனேஷியா’ வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது வகுப்பார் நகிரிசெம்பிலான், தென்பஹாங், ஜொகூர், சுமத்திரா முதலிய இடங்களில் காணப்படுகிறார்கள்.

கல், கட்டை போன்ற ஜடப்பொருள்களிலும் தேவதைகள் இருப்பதாக நம்புவார்கள். இந்து தெய்வங்களையும் ஆவாகனம் செய்யக் கற்றுக் கொண்டார்கள். ஜக்கூனியரது உடம்பில் இந்தியர்களுடைய தேகக் கூறுகளின் அமைப்பும் பொலிநிஷியரது தேகக்கூறுகளின் அமைப்பும் காணப்படுகின்றமையால், அவர்களுக்குப் பின் கூறிய இரு வகுப்பார்களுக்குமிடையே பண்டைக் காலத்திலே கலப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜக்கூனியர்களில் அநேகருக்கு உருண்டைத் தலையும், மிருதுவான மயிரும் உண்டு. இவர்கள் ஒருவிதமான கொச்சை மலாய் பாஷை பேசுகிறார்கள். அதில் அந்நிய சொற்கள் கலந்தொலிக்கும். இவர்கள் பெரும்பாலும் தனிமையான ஆற்றங்கரையோரங்களிலும், மறைவான கடற்கரையோரங்களிலும் வசித்து வருகிறார்கள். மீன் பிடித்தல், வேட்டையாடல், சொற்பமாக விவசாயஞ் செய்தல் ஆகியவை இவர்களது தொழில்களாம். இவர்களுக்குத் தலைவர்கள் உண்டு. ஜக்கூனியரின் வீடுகள் குத்துக் கட்டைகளின் மேல் கட்டப்பட்டு அத்தாப்பாலும் புல்லாலும் மூடப்பட்டிருக்கும்.

முற்காலத்திலே இவர்களில் அநேகர் கடற்கொள்ளைக்காரார்களாய் இருந்தனர். இப்பொழுதும் அவர்களுக்கு ‘ஓராங் லாவுட்’ (ஓராங் = ஆள்; லாவுட் = கடல்; கடல் மனிதன்) என்னும் பெயர் வழங்கப்படுகிறது. ஏனென்றால், இவர்களில் அநேகர் ஓடங்களிலேயே தங்களது வாழ்நாட்களைக் கழிக்கின்றனர். முந்நாட்களில் இந்திய சீன வர்த்தகர்கள் ஜக்கூனியர்களின் துணையைக் கொண்டே காடுகளிலுள்ள கற்பூரம், சாம்பிராணி, பிசின்கள் முதலிய பொருள்களை எடுத்தார்கள்.

கடைசியாக மலாயர்கள். இவர்களும் ஜக்கூனியரும் ஒரே பாரம்பரியத்தவர்கள். இவர்கள் யூனானிலிருந்து கி.மு. 2000 ஆண்டளவில் வந்து முதலிலே மீகொங், மீனம் என்ற நதிகளின் பள்ளத்தாக்குகளிலும், இந்து-சீனாவிலும் குடியேறினார்கள். பின்னர் தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சுமத்திரா, ஜாவா முதலிய இடங்களை அடைந்தார்கள். அவ்விடங்களிலிருந்து ஒரு பகுதியார் இறுதியாக மலாய் நாட்டில் வந்து குடியேறினார்கள். மலாயர்கள் பாவித்து வந்த நாற்கோணமான வாய்ச்சிகளும் கயிற்றுக்கோடுகளினால் சித்தரிக்கப்பட்ட பானைகளும் தென்சீனா, இந்து-சீனா, சுமத்திரா, ஜாவா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைதான் அவர்களது சஞ்சாரத்தை அனுமானித்து அறிய ஏதுவாகவுள்ளன.

மலாயர், நெல், வாழை, தென்னை, சோளம், கரும்பு, புகையிலை, வெற்றிலை இவற்றைப் பயிரிடக் கற்றிருந்தனர்; நெல், சோளம் இவற்றிலிருந்து சாராயம் காய்ச்சினார்கள்; படகு ஓட்டவும், மீன் பிடிக்கவும், வேட்டையாடவும் இவர்களுக்குத் தெரிந்திருந்தது. மலாயர்களின் மூதாதையர்கள் நாம் முன்னர்ப்படித்த புதிய கற்கால நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மனித மூளையையும் புசித்ததுண்டு. மூங்கில் கம்புகளாலான பொறிகளைக் கொண்டே மீன் பிடித்தார்கள். ஜக்கூனியர்களைப் போலவே குத்துக் கட்டைகளின் மேல் வீடுகள் கட்டுவார்கள். தளத்துக்கும் பக்க அடைப்புகளுக்கும்மூங்கிலை உபயோகித்தார்கள்; கட்டும் வேலைக்குப் பிரம்பு நார் உபயோகிக்கப்பட்டது. பன்றி, எருமை, ஆடு, மாடு இவைகளை வளர்த்தார்கள். மரவுரிகளாலான உடை தரித்தார்கள். ஆயிரம் வரை எண்மானம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நட்சத்திரங்களைப் பற்றிய அறிவும் அவர்களுக்கு ஓரளவு இருந்தது. ஆராய்ச்சிக்காரர் மலாயர்களது மண்டையோடானது நாம் முன்னர்ப் படித்த ஏனைய ஜாதியாரது மண்டையோட்டைக் காட்டிலும் உருவத்தில் பெரியது என்று கூறுகிறார்கள். இதனால் இவர்களுக்கு அறிவும் அதிகமாக இருக்க வேண்டுமென்பது தெளிவு.

தற்போதைய மலாயரது உடலில் தனி மலாய இரத்தம் ஓடவில்லை. ஏனென்றால், அவர்களது சஞ்சாரத்திலே அவர்களுக்கு முன்னிருந்த சீமாங்கியர், சக்கேயருடனும், பின்வந்த இந்தியர், சீனர், சீயங்காரர், பூகிஸ்காரர், அராபியர், ஐரோப்பியர் முதலியோருடனும் இரத்தக் கலப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால், மலாயர்களில் பலருக்குத் தேக உறுப்புத் தோற்றங்கள், பலவிதமாக வாய்ந்திருக்கின்றன.

இந்தியர், சீனர், ஜாவானியர், பூகிஸ்காரர், அராபியர், ஐரோப்பியர் முதலியோர்களிடமிருந்தே பல நாகரிகமுறைகளை மலாயர்கள் கற்றுக் கொண்டார்கள். இச்சாதியர்களிடமிருந்தே மலாயர் விவசாயம், வியாபாரம், நாணயப் புழக்கம், இரும்பு, வெள்ளி, தங்கம் இவற்றின் உபயோகம், ஆடை நெய்தல், வீடுகள் அமைத்தல், படகுகள் கட்டுதல், அரசியல் முறைகள் முதலியவற்றைத் தெரிந்து கொண்டார்கள். இவர்கள் பேசும் வார்த்தைகளிற் பல அந்நியர்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவையே.

கடந்த சுமார் 600 ஆண்டுகளாக அராபியர்களிடமிருந்து இஸ்லாமிய சமயத்தையும் தற்போது எழுதும் எழுத்துக்களையும் பெற்றார்கள். மலாய் ஆடவரும் பெண்டிரும் நல்ல சம்பிரதாயம் உடையவர்கள். மேலே நாம் கண்ட ஏதுக்கள் எல்லாம் அவர்களுக்கு இத்தன்மையை அளித்திருக்கின்றன. மலாயர் விவசாயம் அல்லது கிராம வாழ்க்கையையே இயல்பாக விரும்புகிறார்கள். அவர்களது அகவாழ்வு சுமுகமானது.

இது வரையிலும் நாம் படித்ததிலிருந்து மலாயர் மலாய் நாட்டுச் சுயகுடிகள் அல்லர் என்பது நன்றாகத் தெரிய வருகிறது. ‘மலாயா’ என்னும் சொல் ஒரு தமிழ்ப் பதமாகும். இந்தப் பெயர் எப்படி உண்டாயிற்று? பழைய காலத்திலே முதன்முதலாகக் கிழக்கிந்திய நாடுகளுக்கு வந்து ஆங்காங்கே இராச்சியங்களை நிறுவினவர்கள் தென்னிந்தியாவிலுள்ள கிழக்கு மலைத் தொடரைச் சார்ந்த தமிழர்களே. இவர்களை மலைப் பிரதேசங்களிலிருந்து வந்தபடியாலும் மலேஷியா நாடுகளில் மலைகள் நிறைந்திருந்தமையாலும் தாங்கள் ஸ்தாபித்த இராச்சியங்களுக்கு ‘மலாயா’ (மலை) என்னும் பெயரைச் சூட்டினார்கள். இதனின்றே மலாயர், மலேஷியா என்னும் சொற்கள் பிறந்தன. முதன்முதல் மலாய் ஜாதியாருக்கு நாகரிகம் அளித்தவர்கள் தமிழர்களே. அவர்களைப் பற்றித்தான் அடுத்த சில பாடங்களில் படிக்கப் போகிறோம். இன்னும் மகதம், வங்காளம், யாதவம் முதலிய வட இந்திய நாட்டவரும் மலாயருக்கு நாகரிகமளிப்பதில் தமிழரோடு ஓரளவுக்குப் பங்கெடுத்திருக்கிறார்கள்.”

————————————————————————————————————————————————————————————————–

நன்றி: மலாயா சரித்திரம். ஆக்கியோர் சுவாமி சத்தியாநந்தா.

முதற்பதிப்பு: 1949  மறுபதிப்பு: ஜூலை 2013. பதிப்பு ஆசிரியர் ஆ. சோதிநாதன்.

உமா பதிப்பகம், 85 CP, Jalan Perhentian, Sentul, 51100 Kuala Lumpur.