லங்கா சுக மன்னர்கள் – மாறன் மஹாவங்ஸன்

-சுவாமி சத்தியானந்தா

King Maran Mahawangsaமலாய் மொழியிலுள்ள வரலாறுகளினின்றும் லங்கா சுகம், கடாரம், கங்கா நகரம் முதலிய பழைய இராச்சியங்களை ஆண்ட சில மன்னர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

லங்கா சுகத்தை முதன்முதல் ஆண்டவன் மாறன் மஹாவங்ஸன் எனக் கூறப்படுகிறான். அவன் பாடலிபுரத்தில் கி.மு.300 ஆவது ஆண்டில் அரசு செலுத்தி வந்த மித்திர குப்தா ராஜ பரம்பரையில் வந்தவன். அவன் நாட்டிலே குடிஜனங்கள் அவனை அன்போடு தர்மராஜா என்று வழங்கினார்கள். மாறன் மஹாவங்ஸன் ஆட்சியிலே லங்காசுகம் சீரும் செழிப்பும் பெற்று ஓங்கிற்று. அதன் மூலப் பொருள்கள் வீணாக்கப்படவில்லை.

காடுகளிலே புலிகளும் யானைகளும் எதேச்சைகளாகத் திரிந்தன. நாட்டின் பூர்வ குடிகள் வனாந்தரவாசிகளாய் இருந்தனர். அவர்கள் வேட்டையாடிச் சீவித்தனர்; குள்ளமானவர்கள், அவர்களது முகம் பழுப்பு முதல் மஞ்சள் ஈராய் இருந்தது. அவர்களது கண்கள் சிவந்தும், மயிர்கள் தடித்தும் நீண்டும் இருந்தது. அவர்கள் குடிசைகள் மரக்கிளைகளின்மேல் அமைக்கப்பட்ட பரண்கள்; இன்னும் அவர்கள் மலைக்குகைகளுக்குள்ளும் வசித்தனர். அவர்கள் முகத்தில் விசித்திரமான கோடுகளை வரைந்து கொள்வார்கள். ஆடவர் தம் ஆண்மைக்கு அறிகுறியாக முள்ளம்பன்றிகளின் இரு வக்கிர தந்தங்களைக் கன்னங்களின் இரு பக்கத்திலும் அணிந்து கொள்வார்கள். இதனால் விலங்குகளையும் அவர்கள் அச்சுறுத்த முடிந்தது. அவர்கள் வெகு எளிதான உடை அணிந்து, மிருகங்களின் எலும்புகள், ஓடுகள், கற்கள், மூங்கில் இவைகளினாலான ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நடமாடித் திரிந்தார்கள்.

இவ்விதச் சூழ்நிலை அமைந்த தேசத்தை மாறன் மஹாவங்சன் ஒரு வனவாச ஸ்தலம் எனக் கொண்டிருந்தான். அவனும் அவன் பரிவாரங்களும் முதலிலே கடலோரத்தில் குடிசைகள் கட்டி வாழ்ந்தனர்; இந்து முறைப்படி கடவுளை வணங்கினர்; தங்களுக்கு ஆக்கமும் ஆற்றலும் அளிக்கும்படி கடவுளைப் பிராத்தித்தனர்.

மாறன் மஹாவங்ஸன் ஆட்சிக் காலத்திலே இந்தியாவிலிருந்து பல கப்பல்கள் தொடர்ந்து லங்காசுகத்திற்கு வந்தன. இரவு வேளையிலே அக்கப்பல்கள் மீது விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். கப்பலில் வந்தவர்கள் தங்களுக்கெனக் கடற்கரையில் கூடாரங்கள் அடித்துக் கொண்டனர். தங்கள் பாதுகாப்பின் பொருட்டும் நிரைக்கட்டைகள் அடித்துக் கொண்டார்கள். மலாயாவின் பூர்வ குடிகள் இவை எல்லாவற்றையும் கண்டு முதலில் அச்சம் எய்தினர் என்றாலும், பிறகு நாட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு ஆக்கிக் கொடுக்கத் துணிவுற்று முன் வந்தார்கள். ஆயினும், அவர்களில் சிலர் இரவு நேரத்தில் தம் ஆயுதங்களைக் கொண்டு மாறன் மஹாவங்சனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அடிக்கடி இடர்ப்படுத்தி வந்தார்கள்.

பூர்வ குடிகள் இவ்வாறு நடந்து கொண்டது மாறன் மஹாவங்சன் கூட்டத்தாருக்கு ஓர் அறைகூவலாய் இருந்தது. ஆகையால், பூர்வ குடிகளை எதிர்த்துச் சண்டை செய்தார்கள். பூர்வ குடிகளிற் சிலர் தோற்கடிக்கப்பட்டார்கள். வேறு சிலர் கைதிகளாயினர். மற்றையவர்கள் அதிக சேதத்துடன் காடுகளுக்குள்ளே ஓடினர். மாறன் மஹாவங்ஸன் படையினர் அவர்களைத் தொடர்ந்து விரட்டினார்கள். இதனால், சுயகுடிகள் பயங்கொண்டு தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதன் பொருட்டு மாறனின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அமைதியுடன் வாழ்ந்து மாறனை ஒரு தெய்வமெனக் கொண்டாடினார்கள். அதிலிருந்து பூர்வ குடிகளை மாறன் அன்பு ஆதரவுடன் நடத்தினான்.

மாறன் தன் ஆதிக்கத்தின் கீழ் வந்த பிரதேசத்திற்குக் கோமானானான். தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு கோட்டை கட்டினான். ராஜாங்கத்தின் பல இலாகாக்களை ஏற்படுத்தினான். நிர்வகிப்புக்குச் சுய குடிகளோடு இந்தியாவிலிருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்தான். லங்கா சுகத்தை நிறுவி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்குப் புலெள பரிச்சா (Pulau Percha) என்று சொல்லப்படும் தீவைத் தன் ராஜ்யத்துடன் சேர்த்துக் கொண்டான். இதற்கே புலெள லங்காவி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. காவி என்பது ரிஷிகள் சன்னியாசிகள் தம் ஆடைகளுக்குத் தோய்க்கும் காவியாகும்.

மாறன் தன் நாட்டை எட்டு ஜில்லாக்களாகப் பிரித்திருந்தான். அவைகளின் பெயர்:- பலித் (இப்போது பெர்லிஸ்), கெடா, சேது (இப்போது செட்டுள்), திரங், சத்துன், கங்கா, தமெலன், லங்காபுரம்.

மாறன் பள்ளிக்கூடங்கள் நிறுவித் தன் மொழியைச் சுய குடிமக்களுக்குப் படிப்பித்தான். ஆலயங்கள் கட்டிச் சைவ தெய்வங்களை அங்கே நிலை நாட்டி குடிஜனக்களுக்குள்ளே சமயப் பற்றை வளர்த்தான். புது மொழியைச் சுய குடிமக்கள் ஆவலுடன் கற்றனர்.

மாறன் ஓர் அகண்ட சாம்ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினான். தன் மக்களை மூன்று திக்குகளுக்கு அனுப்பினான். அவனது மூத்த மகன் ஒரு பெரிய படையுடன் வடக்கே சென்று, மீனம் நதியை அடைந்தான். அந்நதிப் பிரதேசம் எழிலும் செழிப்பும் நிறைந்திருந்தது. அங்கே ஒரு குறிச்சியை ஏற்படுத்தி அதற்கு அயோத்தியா என்று பெயரிட்டான். இது வட இந்தியாவிலுள்ள அயோத்தி மாநகரை நினைவூட்டும் பெயராகும்.

அயோத்திப் பிரதேசத்திலிருந்த சுய குடிகள் இவ்விளவரசனையும் அவனது பரிவாரத்தையும் அடிக்கடி தாக்கி வந்தார்கள். என்வே ஒரு நாள் இளவரசன் அவர்களைத் துரத்திச் சென்று முறியடித்தான். அது தொடக்கம் சுய குடிகளின் தொல்லை ஒழிந்தது.

மாறனின் இரண்டாவது மகன் காஞ்சி சர்ச்சனன் என்பான் ஒரு படையுடன் தெற்கே சென்று இன்று பேரா நதி என்று வழங்கப்படும் ஆற்றுப் பிரதேசத்தை அடைந்தான். அங்கே சுதேசிகள் அவனை எதிர்த்துச் சண்டை செய்து தோல்வி அடைந்தார்கள். பிறகு காஞ்சி சர்ச்சனன் தன் தெய்வத்தை வணங்கி இந்திர சக்தி என்னும் பெயர் கொண்ட அம்பை எய்தான். அது சென்று தைத்த இடத்திற்கு கங்கா நகரம் என்று பெயரிட்டான்.

மஹாவங்சனின் மகள் படையுடன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்று அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் கடந்து 6000 சதுர மைல் கொண்ட தேசத்தை அடைந்தாள். கம்பீரமும் அழகும் நிரைந்த அவளது தோற்றம் அங்குள்ள சுய குடிகளை அவளுக்கு அடிபணியச் செய்தது. அவர்கள் அவளைத் தெய்வமென வணங்கினர். அவள் அங்கு நிறுவிய நாட்டிற்குப் பத்தினி என்று பெயரிட்டாள். இன்று அவ்விடம் பட்டாணி என்று சொல்லப்படுகிறது.

இவை இவ்வாறிருந்துகொண்டிருக்க, மாறன் மஹாவங்சனுக்கு உடல் நோய் கண்டு, அவன் சுகத்துக்காக திமோர் தீவுக்குச் சென்றான்.. அங்கு வேட்டையாடச் சென்றிருந்த வேளையில் நரம்புத் தளர்ச்சியடைந்து இறந்து விட்டான். அவனது பிரேதம் லங்காசுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு ஜெறைக் குன்றின் அடிவாரத்தில் புதைக்கப்பட்டது. மஹாவங்சன் இறந்தபின் சாம்ராச்சியத்தில் பிளவுகள் உண்டாயின. ஒவ்வொருவரும் தத்தம் பிரதேசத்தை லங்கா சுகத்தினின்றும் பிரித்துக் கொண்டு சுய ஆட்சி புரியத் தொடங்கினர்.

 

———————————————————————————————————————————————————————————————-

மலாயா சரித்திரம். ஆசிரியர் சுவாமி சத்தியானந்தா.

பதிப்பு ஆசிரியர் ஆ. சோதிநாதன், உமா பதிப்பகம், 85 CP, Jalan Perhentian, Sentul, 51100 Kuala Lumpur.