-ஜீவி காத்தையா, நவம்பர் 11, 2014
கடந்த நவம்பர் 3 இல், நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இரு முக்கிய விவகாரங்களை வலியுறுத்தினார். அவை:
1. நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை.
2. நாட்டின் தாய்மொழிக் கல்வியின் தகுதி தெள்ளத் தெளிவாக தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் எழுதப்பட்டிருக்கிறது.
பாரபட்சமற்ற நிதி ஒதுக்கீடு
அ) பள்ளிகளின் நிருவாகச் செலவிற்கான நிதி ஒதுக்கீடு
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் பாரபட்சமற்ற தன்மைக்குச் சான்றாக 2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தேவை அடிப்படையில் 8,300 தேசிய தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு ரிம10.9 பில்லியனும், 1,294 சீனப்பள்ளிகளுக்கு ரிம2.4 பில்லியனும், 523 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம0.97 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளின் 2015 ஆண்டிற்கான நிருவாகச் செலவுக்காக மட்டும்தான். இதில் பள்ளி ஆசிரியரின் சம்பளம் மற்றும் இதர செலவீனங்கள், பள்ளியில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணம் போன்றவை, அடங்கும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியாகும்.
பள்ளிகளின், குறிப்பாக சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின், நிருவாகச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்பது நாடறிந்த இரகசியாகும். இதனை சீன மற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடமிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
ஆ) பள்ளிகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் அதன் ஐந்தாண்டு திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாறான நிதி ஒதுக்கீடு மலேசிய ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக செய்யப்படும் நிதி ஒதுக்கீடு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
இதனைச் சற்று கவனிக்க வேண்டும். மலாய், சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்:
6 ஆவது திட்டம் (1991-1995)-தேசியப்பள்ளி 89.72%; சீனப்பள்ளி 8.14%; தமிழ்ப்பள்ளி 2.14%.
7 ஆவது திட்டம் (1996-2000)-தேசியப்பள்ளி 96.54%; சீனப்பள்ளி 2.44%; தமிழ்ப்பள்ளி 1.02%.
8 ஆவது திட்டம் (2001-2005)-தேசியப்பள்ளி 96.10%; சீனப்பள்ளி 2.73%; தமிழ்ப்பள்ளி 1.17%.
9 ஆவது திட்டம் (2006-2010)-தேசியப்பள்ளி 95.06%; சீனப்பள்ளி 3.60%; தமிழ்ப்பள்ளி 1.34%.
|
All primary schools | National primary schools | % of total | Chinese primary schools | % of total | Tamil primary schools | % of total | |
Total no. students | 3,044,977 | 2,300,729 | 75.6 | 645,669 | 21.2 | 98,579 | 3.2 |
9MP Development-Million | 4,837.3 | 4,598.2 | 95.1 | 174.33 | 6 | 64.8 | 1.3 |
RM per student for 5 years | 1,589 | 1,998 | 270 | 659 | |||
RM per student per month | 26.48 | 33.30 | 4.50 | 10.95 |
இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி மாணவனுக்குரிம 10.95 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமான தகவல். இந்த அடிப்படையில் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது படுபயங்கர பாரபட்சத்தைக் காட்டுகிறது. பாரபட்சம் இல்லையென்றால், தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் ஒவ்வொரு மாணவனுக்குமான நிதி ஒதுக்கீடு ரிம26. 48 ஆக இருந்திருக்க வேண்டும். இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்க அட்டவனையில் காணலாம்.
அடுத்து, 10 ஆவது மலேசிய திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மேற்கூறப்பட்டுள்ள அடிப்படையில் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது? அதன் விபரம் முழுமையாக இன்றுவரையில் கிடைக்கவில்லை.
அந்த விபரத்தைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலமாக 17.10.2011 இல் கேள்வி கேட்கப்பட்டது. கேள்வி இதோ:
“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan, Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan perplanjaan ini.”
டிசம்பர் 2011 கடைசி வாரத்தில் குலசேகரனின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரால் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட பதில்:
Kategori Sekolah | RMKe – 9 (RM) | RMKe – 10 (RM) |
SJK ( C ) | 6,457,080,807 | 1,716,393,676 |
SJK ( T ) | 2,481,674,380 | 584,382,340 |
இந்தப் பதில் கேள்விக்கான பதில் இல்லை. ஒரு மாணவனுகு ஒரு மாதத்திற்கான ஒதுக்கீடு என்ன என்பது கேள்வியாகும். அதற்கான பதில் இல்லை என்பதோடு, தேசியப்பள்ளிக்கான ஒதுக்கீடு என்ன என்பது கூறப்படவே இல்லை. ஏன் அது தவிர்க்கப்பட்டது? இக்கேள்வி ஏன் கேட்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட கல்வி அமைச்சர் அதற்கான பதிலைத் தவிர்த்து விட்டார் என்று கூற வேண்டியுள்ளது.
மேலும், 9 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையே ரிம174.33 மில்லியன் மற்றும் ரிம64.88 மில்லியன் மட்டுமே. இதனை மேலே தரப்பட்டுள்ள 9ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு விளக்க அட்டவணையில் காணலாம்.
6 ஆவதிலிருந்து 9 ஆவது வரையிலான மலேசிய ஐந்தாண்டு திட்டங்களில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 95 விழுக்காட்டிற்கு மேல் தேசியப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 க்கும் குறைவான விழுக்காடு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது என்பதை அரசாங்கப் புள்ளிவிபரம் காட்டுகிறது. 95+ விழுக்காடும் 5- விழுக்காடும் பாரபட்சமற்ற நிதி ஒதுக்கீடா?
10 ஆவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் கொடி கட்டிப்பறக்கும் என்பதை அதிரிட்டுக் கூறலாம். 11 ஆவது திட்டம், கேட்கவே வேண்டியதில்லை!
தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் தாய்மொழிக் கல்வியின் தகுதி
நாட்டின் தாய்மொழிக் கல்வியின் தகுதி தெள்ளத் தெளிவாக தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் எழுதப்பட்டிருக்கிறது என்று கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். என்ன எழுதியிருக்கிறது என்று அவர் கூறவில்லை.
இருபது மில்லியன் ரிங்கிட் கொடுத்து மேல்நாட்டவர்களால் தயாரிக்கப்பட 288 பக்கங்கள் அடங்கிய தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் தேசியப்பள்ளி மற்றும் சீன, தமிழ்ப்பள்ளிகளின் தகுதி எவ்வாறு இருக்கும் என்று இரண்டு இடத்தில் கூறப்பட்டுள்ளது:
1. தேசியப்பள்ளிகள் தேர்வு செய்யப்படும் பள்ளியாக வேண்டும் என்ற இறுதிக் குறிக்கோள் உறுதி செய்யப்படுவது மீது கல்வி அமைச்சு கவனம் செலுத்தும். (7-17)
2. சீன மற்றும் தமிழ் மொழிகளைப் போதணை மொழியாகக் கொண்ட தேசிய மாதிரி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும். (7-18)
தேசியப்பள்ளிகள்தான் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதன் மூலம் இந்நாட்டில் ஒரே மொழிக் கொள்கையை அமலாக்கலாம் என்பது அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கான புதிய வழிகளில் ஒன்று.
மேற்கூறப்பட்டுள்ள அம்னோவின் இறுதிக் கொள்கையை (Ultimate Objective) நேரடியாக அமல்படுத்த இயலாது என்பதை உணர்ந்து கொண்ட அம்னோ இப்போது விட்டுப் பிடித்து வெற்றி பெறும் திட்டத்தைப் பின்பற்றுகிறது. அதனைக் காட்டுவது இந்த “தேசிய மாதிரி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்” என்று தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் “தெள்ளத் தெளிவாக” கூறப்பட்டுள்ள முன்மொழிதலாகும்.
இந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்படிருக்கும் உரிமையின் அடிப்படையிலா? இல்லை.
இந்த முடிவு தேசிய கல்விப் பெருந்திட்டம் பற்றி தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தேசிய கலந்துரையாடலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. “This decision is in line with the majority views raised during the National Dialogue and following the launch of the preliminary version of this Blueprint.” (7-18)
இதன் அடிப்படையில், தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படுமா அல்லது மூடப்படுமா என்பதை முடிவு செய்யும் சட்டப்பூர்வமான அதிகாரம் அரசமைப்புச் சட்டத்திலிருந்து தேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முடிவிற்கேற்ப கல்வி அமைச்சர் செயல்படுவார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இதன் உள்நோக்கத்தை மக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இது நிச்சயமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியாகும். இம்முறை தேசிய கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பெருந்திட்டத்தில் கூறப்படுள்ளது. அடுத்த முறை இன்னும் பெரிய அளவிலான தேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அதன் அடிப்படையில் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படும் என்பதற்கான முன்னறிவிப்பது இது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
இது கற்பனை அல்ல. இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமீபத்தில் அம்னோ சார்ந்த மலாய் முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகள் கலந்துரையாடல்கள் நடத்தின. அவற்றில் யுஐடிஎம் வேந்தர் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நோர் போன்றோர் தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிராகப் போர் முரசு கொட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்..
மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி தாய்மொழிப்பள்ளிக்கு அரசமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டவில்லை என்று கூறுவதை உண்மை என்று பலர் ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், கல்வி அமைச்சரும் தாய்மொழிப்பள்ளிகள் அவருடைய ஆளுங்கட்சியின் தயவில்தான் நிலைத்திருக்க முடியும் என்ற மாயத்தை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 29 இல், புத்ராஜெயாவில் தேசிய கல்வி பெருந்திட்டம் குறித்து தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் நிலை குறித்து சில தரப்பினர் தேவையில்லா அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டில் தேசிய முன்னணி ஆட்சி இருக்கும் வரை இப்பள்ளிகள் நிலைத்திருக்கும் என்பது உறுதி. ஆகையால், இது குறித்து மக்கள் ஐயுறத் தேவை இல்லை”, என்று கூறியுள்ளார். (தமிழ் நேசன் 30.8.14)
இதன் அர்த்தம் இதர கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தாய்மொழிப்பள்ளிகளை மூடி விடுவார்கள் என்பதாகும். அப்படி என்றால், தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதும் இல்லாததும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாகிறது. இப்படி கூறுவதின் நோக்கம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக நடத்தப்படும் சதி. இது அரசமைப்புச் சட்டத்தைக் கீழறுக்கும் சதி என்றும் கூறலாம்.
கல்வி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான கருத்தை, அதுவும் வேண்டுமென்றே, வெளியிட்டது மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
தாய்மொழிக் கல்வி கற்கும், போதிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ளது. இதைத்தான் அமைச்சர் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கல்வி விவகாரத்தில் அரசாங்கம் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக வேறுபாடு காட்டக் கூடாது என்பதும் அரசமைப்புச் சட்டமாகும். இதைத்தான் கல்வி அமைச்சர் கூறியிருக்க வேண்டும்.
மேலும், நாட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அரசாங்கம் அதன் நிதியிலிருந்து வழங்கும் நிதி ஒதுக்கீடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்பதும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நாளிதழ் ஆசிரியர்களிடமும் நாட்டு மக்களிடமும் கூறியிருக்க வேண்டும்.
முகைதின் யாசின் மேற்கூறியவாறு நடந்துகொள்ளவில்லை. ஏனென்றால், அவர் ஒரே மொழிக் கொள்கையை முற்றாக ஆதரிப்பவர்.
தாய்மொழிக் கல்வியில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஆர்வலர்கள், அமைப்புகள் இந்த விவகாரத்தை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் மாணவர்களும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் வெளியிட்ட தேசிய கல்வி பெருந்திட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகள் யாரோ கூறிய கருத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட ஏளனமாக கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“உண்மையில், தாய்மொழிப்பள்ளிகளை ஓர் அமைச்சர் மூடுவது சட்டவிரோதமானதாகும்”, என்று முகைதின் யாசின் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்து தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கான உரிமையின் உறைவிடம் அரசமைப்புச் சட்டமே தவிர பாரிசான் ஆட்சியோ, வேறு எவரோ எடுத்த முடிவோ அல்ல என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.
கர்ணா!
மகாபாரத கர்ணனை நாம் அறிவோம். மகா கர்ணன் என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோவை நாம் அறிவோம். இப்போது இங்கு நமக்கு மிட்டாய் கொடுக்கிறார் என்று ஒரு கர்ணன் … (தொடரும்)
கல்வி அமைச்சனா இவன் மீன் பிடி துறைக்கு தலைவன் இவன் pbs மூலம் பல கோடி சம்பாரித்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் பகடைக்காயாக நினைக்கிறான் இவனுக்கு கான்செர் வந்துதான் சாவான்
பொறுப்பான அமைச்சர்களில் ஒருவரான ஹிஸாம் மூடின் சொல்கிறார் வரும் அம்னோ பொதுப் பேரவையில் தாய் மொழிப் பள்ளிகளை அழிக்க { சீன , தமிழ் } இப்போதே ஆட்களை தூண்டி விடுகிறார்கள். இவர்கள் தானா நமது பள்ளிகளுக்கான நிதி ஒதிக்கீடு முறையில் சரியாக செய்யப் போகிறார்கள்..?
ஐயகோ ,இந்த கம்பத்து கார … அடிங்கப்பா
திரு காத்தைய அவர்களே ராஜேந்திரன் இதுக்கு என்ன சொல்கிறார்???
எல்லாம் வருடம் வருவு செலவு மலாய் முதல் இடம் கரணம் மஜோரிட்டி. எனஒரு கரணம் பங்களா ,இந்தோன்சிய எல்லாம் bumiputera ஆகயால் அதிக ஜன தொகை அதிக வருவு செலவு .
நமது மொழியை காக்க நாம் நம் பிள்ளைகை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்போவோம்.