தேசிய ஒற்றுமையைப் பேணுவதில் தாய்மொழிப்பள்ளிகளை விட தேசியப்பள்ளிகள் எந்த வகையிலும் உயர்ந்தவை அல்ல!

 

10380271_599846473455461_2387166416526634375_nதாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாக கல்விமான்கள், தொழிலியர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆதாரம் எங்கே?

தேசியப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஆக்கரமாக தாய்மொழிப்பள்ளிகளை விட எந்த வகையிலும் உயர்வான பங்கை ஆற்றியுள்ளனவா? ஆதாரம் எங்கே?

தாய்மொழிப்பள்ளிகள் (சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள்) குறித்த அரசாங்கத்தின்  அதிகாரப்பூர்வமான கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லாமலிருக்கையில், சில ஆர்ப்பாட்டக்காரர்களும், சில அம்னோ தலைவர்களும் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கொள்கை ஆய்வாளரான டாக்டர் லிம் டெக் கீ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) கோலாலம்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என்று வர்ணித்த டாக்டர் லிம், இனக் கலவரத்தைத்10403209_599846253455483_1221822156733195736_n தூண்டிவிடுவதில் முனைப்புக் காட்டும் இவர்கள் நாட்டின் இன உறவுகள் நெருக்கடிக்கு தாய்மொழிப்பள்ளிகளை பலிகடாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று “மலேசியாவில் ஒரே பள்ளி போதணை முறைதான் இருக்க வேண்டுமா.?” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசுகையில் கூறினார்.

அரசாங்கத்தின் இனவாதக் கொள்கை

அலிரான், இக்ராம், கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளிம் மண்டபம், எல்எல்ஜி மையம் மற்றும் தமிழ் அறவாரியம் ஆகியவற்றுடன் இணைந்து ஜிபிஎம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய டாக்டர் லிம், முழுமையாக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பள்ளிகளில்தான் ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாறாக ஒற்றுமையின்மையும் அவநம்பிக்கையும் மேலோங்கி நிற்பதற்கான ஆதரம் இருக்கிறது என்றார். 1968-69 ஆம் ஆண்டுகளில் 34 பள்ளிகளில் 7,000 மாணவர்கள் பங்கேற்ற ஓர் ஆய்வில் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சமவாய்ப்புக்கான நடவடிக்கைதான் (race-based affirmative action) அப்பல்லினப் பள்ளிகளின்  மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கைக்குக் காரணமாகும் என்று லிம் மேலும் கூறினார்.

இப்போதைய புதிய ஆய்வுகள் இதனை மேலும் உறுதிப்படுத்தும் என்று கூறிய டாக்டர் லிம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சரிவுக்காக அரசாங்கத்தின் இன, சமய, பொருளாதார மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கொள்கைகள் ஆராயப்பட்டு அவற்றுக்காக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றார்.

தேசியப்பள்ளிகளை விட தேசிய மாதிரி பள்ளிகளில்தான் அதிகமான பல்லின மாணவர்கள் சேர்கின்றனர் என்ற விபரம் தேசிய பெரும் கல்வித்திட்டத்தில் இடம் பெற்றிருப்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

போட்டி நிறைந்த உலகளவிலான பொருளாதாரத்தில் பல்வகைமையானக் கல்வி முறைகள் சிறந்த அனுகூலமாகும் என்பதை பெரும்பாலான மலேசிய பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். மேலும், குழந்தைகள் தொடக்கத்தில் அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கப்படும் போது சிறப்பாக கல்வி பயில்கின்றனர் என்றும் லிம் கூறினார்.

வெள்ளை அறிக்கை வேண்டும்

பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் பாகுபாடு காட்டுகின்றது என்றும், தாய்மொழிப்பள்ளிகள் “மாற்றாந்தாய் குழந்தைகளாக” நடத்தப்படுகின்றன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது என்பதையும் குறிப்பிட்ட லிம், அரசாங்கம் அளிக்கும் நிதி ஒதுக்கீடு குறித்த முழு விபரத்தையும் கல்வி அமைச்சு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரசாங்கம் செய்யும் நிதி ஒதுக்கீடு நியாயமாகவும் பாரபட்சமின்றியும் இருக்கிறது என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய லிம், அந்த நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நிது ஒதுக்கீடு குறித்து அரசாங்கம் ஓர் அதிகாரப்பூர்வமான (white paper) அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.

 

பழைய புருஷ்யா “மாதிரி” நமக்கு வேண்டாம்

 

“நமது பள்ளிகள் அமெரிக்க மற்றும் ஜெர்மனிய பள்ளிகளைவிட சிறந்தவை என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறுகிறார்,10616698_599847746788667_3427027985737543782_n நம்புகிறீர்களா? என்ற கேள்வியுடன் தமது உரையைத் தொடங்கிய ஐடியாஸ் என்ற சிந்தனைக்குழாமின் தலைமை அதிகாரி வான் சைபுல், நமது கல்வி அமைவுமுறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் அரசியலிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

நமது கல்வி அமைவுமுறை ஒரே மையப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களை விட அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. இப்போக்கு சமுதாயத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றாரவர்.

இக்கல்வி முறை பழைய புருஷ்ய பேரரசு 1806 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றிய மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று கூறிய வான் சைபுல், அம்முறை ஆமாம் சாமி போடும் படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களை உருவாக்குவதற்கு ஏற்றதாகுமே தவிர ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்களை உருவாக்காது என்றார்.

குறைந்த வருமான பெறும் 1,300 பெற்றோர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல் பற்றி குறிப்பிட்ட வான், தாங்கள் கல்வி கற்றவர்கள் அல்ல என்றும், அதனால் தங்களால் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்களை கேள்வி கேட்க இயலவில்லை என்றும் கூறியதாக அவர் தெரிவித்தார். இந்நிலை மாற வேண்டும், பெற்றோர்கள் தங்களுடைய விருப்பப்படி தேர்வு செய்யும் நிலை ஏற்பட வேண்டும் என்றார்.

கல்வி விசயத்தில் முக்கியமானவர்கள் பெற்றோர்கள். தரமான கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டியது அரசாங்கம். எப்பள்ளியில் தரமான கல்வி போதிக்கப்படுகிறதோ அப்பள்ளியை பெற்றோர்கள் தேர்வு செய்வர்.

ஒற்றுமை என்று கூறப்படுவதை ஒரு கபட நாடகம் என்று வர்ணித்த வான், இயற்கையான ஒற்றுமையை வளர்க்க தரமான கல்வி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தரம் அனைவரையும் ஈர்க்கும் என்றாரவர்.

அரசாங்கம் தொடர்ந்து தனிப்பட்ட மாணவர்களுக்கு நிதி வழங்க வேண்டும், பள்ளிகளுக்கு அல்ல. அப்போது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை எந்தப் பள்ளிக்குக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்வர் என்று வான் மேலும் கூறினார்.

நாட்டில் ஒரே மொழி கல்வி அமைவுமுறை இருக்கக்கூடாது. ஒரே மொழிக் கல்வி முறை வேண்டும் என்று கோரக்கூடாது. அது தாராண்மைவாதத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்று வான் சைபுல் கூறினார்.

 

ஒரே மொழிக் கல்வி அமைவுமுறைக்கு இடமே இல்லை 

 

1002531_599846636788778_5578759996540337733_nஒரே இனம், ஒரே மொழி போன்ற சித்தாந்தங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வழக்கற்றுப் போய் விட்டன. பல்லின சமுதாயங்கள், பன்மொழிப்பள்ளிகள் போன்றவைதான் இன்று ஆளும் சித்தாந்தங்களாக இருக்கின்றன. நமது நாட்டின் தேசிய கல்விச் சித்தாந்தமும் அதைத்தான் கூறுகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்தான் கோளாறு இருக்கிறது என்று இக்கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம் கூறினார்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் இயங்குவதற்கும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் உரிமைகள் உள்ளன என்று கூறிய ஆறுமுகம், 1950 ஆம் ஆண்டில் கல்வி சம்பந்தமாக வெளியிடப்பட்ட பார்ன்ஸ் குழுவின் அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கம் பல்வேறு கல்வித் திட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், அவற்றில் மிக அண்மைய அறிக்கை தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 என்றார்.

இந்தக் கல்விப் பெருந்திட்டத்தில் கூட தாய்மொழிக் கல்விக்கு கொட்டுக்கப்பட்ட இடம் ஒரே ஒரு பத்திதான் என்றாரவர்.

அரசாங்கம் வெளியிட்ட ஒவ்வொரு திட்ட அறிக்கையிலும் கல்வியை மத்திய அரசின் கீழ் மையப்படுத்தும் போக்கிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே மொழிக் கல்வி திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தாய்மொழியில் குழந்தைகள் கல்வி பயலும் வாய்ப்பு அகற்றப்படும். ஆனால், இந்நாட்டில் ஒரே மொழிக் கல்வி அமைவுமுறைக்கு இடமே இல்லை.  தாய்மொழிக் கல்வியை ஒடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளே அதனை ஓங்கச் செய்யும் என்று  கா. ஆறுமுகம் அதிருட்டுக் கூறினார்.

தொடக்கத்தில் குழந்தைகளுக்கு அவற்றின் தாய்மொழியில்தான் கல்வி போதிக்க வேண்டும், ஏனென்றால் தாய்மொழியில்தான் சிறப்பாக கல்வி கற்க இயலும் என்பது உலகளாவிலான கருத்தாகும். இக்கருத்து ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை ஆறுமுகம் சுட்டிக் காட்டினார்.

நமது நாட்டு கல்விமான்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மலாய் மொழியை போதணை மொழியாகக் கொண்டுள்ள தேசிய பள்ளிக்குச் சென்ற ஏழை தமிழ் குழந்தைகளின் தேர்ச்சி தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்களை விட மிக மோசமாக இருந்தது கண்டறியப்பட்டது என்று ஆறுமுகம் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில்தான் அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

தாய்மொழியில் இவற்றை விரைவாகக் கற்றுக்கொள்ள இயலும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

தொடக்க முதல் முடிவு வரை தவறு

இந்நாட்டு பள்ளிகளின் இன்றைய நிலை பற்றி குறிப்பிட்ட ஆறுமுகம், 96 விழுக்காடு சீன குழந்தைகள் சீனமொழிப்பள்ளிகளிலும், 56 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளிலும் இருக்கின்றனர். இவர்களின் பட்டப் படிப்பிற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவே என்றார்.

பூமிபுத்ராக்களுக்கென்றே இயங்கும் யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாரா போன்றைவை இருந்தும், பொதுப்பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பிற்காக இடங்களைப் பெறுவதற்கு மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளதை ஆறுமுகம் சுட்டிக் காட்டினார். அ

வேறு வழியின்றி மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களை நாட வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மனவேதனைக்கு என்ன நியாயம் இருக்கிறது என்று கா. ஆறுமுகம் வினவினார்.

இச்சூழலில், ஒருமைப்பாடு எவ்வாறு ஏற்படும் என்று அவர் மேலும் வினவினார்.

கல்வியைப் பொறுத்த வரையில் நாம் தொடக்க முதல் முடிவு வரை தவறு செய்து விட்டோம் என்றார் ஆறுமுகம்.