-ஜீவி காத்தையா.
இன்று தீபாவளி திருநாள். இருப்பவர்களுக்கு ஒளிமயமான நாள். இல்லாதவர்களுக்கு இருண்ட நாள்.
அனைத்து வசதிகளையும் உடைய பிரதமர் நஜிப் அவருடைய எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக தீபாவளியை வீதி வீதியாகச் சென்று கொண்டாடுகிறார். இந்தியர்களின் காலைப் பிடித்துப் பார்க்கிறார், கையைக் குலுக்கிப் பார்க்கிறார். வசதி படைத்த இந்துப் பெருமக்களின் தலைவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை மேலும் வளப்படுத்திக்கொள்ள பிரதமருடன் சேர்ந்து தீபாவளியை குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.
இன்று மலேசிய இந்து சங்கமும் இதர இரண்டு அமைப்புகளும் பிரதமருக்கு தீபாவளி விருந்தளித்து அவரது எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வர் என்று நம்பலாம்.
ஆனால், ஒளிமயமற்ற இருளில் வாழ்க்கையை ஓட்டும் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களில், குறிப்பாக இந்தியர்களில், ஒரு 12 வயதான சிறுமி தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அச்சிறுமி லட்சுமி ஒரு மலேசிய குடிமகள். அவர் இருதயத்துளை நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அவரது அக்காள் செல்வி. அவர் ஒரு நோயாளி. வேலைக்குச் செல்ல முடியாத நிலை. ஆறு குழந்தைகளுக்குத் தாயான அவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்.
தனது தங்கை லட்சுமியின் சிகிட்சைக்கு நிதி உதவி கோரி ஜொகூர் சமூகநல இலாகாவிடம் கையேந்தி நின்றும் அவ்விலாகா அதிகாரிகள் எவ்வித உதவியையும் அளிக்க முன்வரவில்லை.
இத்தகவலை அறிந்த ஜொகூர் பாரு தொகுதி மஇகா இளைஞர் தலைவர் எஸ்.தேவா தாமான் பிளந்தோங் உத்தாமாவிலுள்ள செல்வியின் வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் ஜொகூர் சமூகநல இலாகாவினர் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளமல் அலட்சியப் போக்குடன் இருந்ததை அறிந்து சீற்றமடைந்த அவர் “தேசிய முன்னணி அரசின் நம்பகத் தன்மைக்கு மாசு கற்பிக்கும் அதிகாரிகள் அரசுத்துறையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.” (தநே.23.10.11)
இந்தியர்கள் வந்தேறிகள், குடிகாரர்கள், பிச்சைக்காரர்கள், நாய்க்குப் பிறந்தவர்கள், வெங்காயம் தின்பவர்கள் (இது புதிய கண்டுபிடிப்பு) என்றெல்லாம் பிரதமர்துறையின் ஒரு பிரிவான பிடிஎன் (BTN) பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்களை பணியாளர்களாகக் கொண்டு இயங்கம் அரசாங்க இலாகாகள் இந்தியர்களின் தேவைகளை, கோரிக்கைகளை பொருட்படுத்துவதில்லை. அதில் ஒன்றுதான் செல்வியின் கதை.
இருதயத்துளை நோயால் அவதிப்படும் செல்வியின் தங்கை லட்சுமியின் வைத்திய செலவுக்கு பல மில்லியன் ரிங்கிட் தேவைப்படாது. அப்படியே தேவைப்பட்டாலும் அதனை அரசு வழங்க வேண்டும். அதுதான் மக்களுக்கு அரசு ஆற்றும் சேவை. ஏன் உதவி அளிக்கப்படவில்லை?
மலேசியா அரசாங்க இலாகாகள் எத்தனை பில்லியன் ரிங்கிட்களை பாழடித்துள்ளன, கொள்ளையடித்துள்ளன? பல பில்லியன்கள். இதனைக் கூறுவது லிம் கிட் சியாங் அல்லது அன்வார் இப்ராகிம் அல்லது கர்பால் சிங் அல்ல.
நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மலேசியாவின் ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்த 2010 ஆம் ஆண்டிற்காக கணக்கறிக்கையில் பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்துறைகள் விரயமாக்கிய, கொள்ளையடித்த பில்லியன்கள் பற்றிய விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
செல்வி மற்றும் அவரது தங்கை லட்சுமியின் பரிதாப நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது பாரிசான் வெற்றிக்காக அடிமைபோல் உழைக்கும் மஇகாவின் உறுப்பினர்களில் ஒருவர். அவர் ஜொகூர் சமூகநல இலாகா அதிகாரிகளின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்துள்ளார். தமது கடமையை ஆற்றிய அவர் பாராட்டிற்குரியவர்.
மலேசிய அரசாங்க பொதுச்சேவைக்கு பொறுப்பானவர் பிரதமர். அச்சேவையின் பணியாளர்களின் நடத்தைக்கு பொறுப்பேற்கும் கடப்பாடு பிரதமருக்கு உண்டு. ஜொகூர் சமூகநல இலாகா அதிகாரிகள் லட்சுமி விவகாரத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு அவருக்கு உதவி அளிக்காமல் இருந்தது குறித்து பிரதமர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதலில் லட்சுமிக்கு தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று பிரதமர் நஜிப்புக்கு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வழங்கும் மலேசிய இந்து சங்கம் லட்சுமியின் வாழ்க்கையை ஒளிமயமாக்க பிரதமரின் காதில் ஓத வேண்டும்.