பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகா உதவித் தொகையை மீண்டும் பெற்றார்

 

Periakka-300x2851பதிமூன்று மாத கால போராட்டத்திற்குப் பின்னர் பத்து ஆராங் சி. பெரியக்காள் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 11) சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து அவருக்குரிய உதவித் தொகையை மீண்டும் பெற்றார்.

13 ஆவது பொதுத் தேர்தல் நடந்த மே மாதம் வரையில் பெரியக்காள் சமூகப் பொதுநல இலாகாவிடமிருந்து உதவித் தொகையைப் பெற்று வந்தார். 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜூன் மாதத்திலிருந்து பெரியக்காளுக்கு 17 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டது.

தொடக்கத்தில் அளிக்கப்பட்ட உதவித் தொகை ரிம50. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தொகை ரிம95 ஆக உயர்த்தப்பட்டது.  கடைசியாக மே 2013 இல் பெரியக்காளுக்கு கொடுக்கப்பட்ட உதவித் தொகை ரிம95. ஜூன் 2013 லிருந்து நவம்பர் 2104 வரையில், 18 மாதங்களுக்கு, பெரியக்காளுக்கு சமூகப் பொதுநல இலாகா ஒரு சல்லிக் காசு கூட கொடுக்கவில்லை.

ஏன் 17 ஆண்டுகாலமாக கொடுக்கப்பட்டு வந்த உதவித் தொகை 13 ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த அடுத்த மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டது? உதவித் தொகை நிறுத்தப்படுவது பற்றி பெரியக்காளுக்கு தெரிவிக்கப்பட்டதா?

நாட்டின் குடிமகளாகிய சி. பெரியக்காள் அரசாங்கத்தின் சமூகப் பொதுநல உதவித் தொகை பெறுவதற்கான உரிமை பெற்றவர். அவருக்கு அளிக்கப்பட்ட உதவித் தொகை ஏன் நிறுத்தப்பட்டது என்பது பற்றியோ, உதவித் தொகை நிறுத்தப்படுவது பற்றிய தகவலோ அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

திருமணமாகாத 77 வயதான சி. பெரியக்காள் உடல்நிலை பாதிக்கப்பட்டவர். எதிர்பாராத ஒரு சந்திப்பில் அவரது பரிதாப நிலை தெரிய வந்தது. அச்சந்திப்பைத் தொடர்ந்து அவரது பிரச்சனை சமூகப் பொதுநல இலாகாவின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டது.

அந்த இலாகா அதிகாரியுடன் காரசாரமான விவாதம் நடத்தப்பட்டது. ஏன் உதவித் தொகை நிறுத்தப்பட்டது? உதவித் தொகை நிறுத்தப்பட்ட தகவல் ஏன் பெரியக்காளுக்கு தெரிவிக்கப்படவில்லை?

அந்த அதிகாரி அவசர அவசரமாக எதை எதையோ நோண்டிப் பார்த்தார். பின்னர், உதவித் தொகை பெறுவோர் அதற்கான விண்ணப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றார். அப்படியா, பெரியக்காள் கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிப்பித்த விண்ணப்பத்தை காட்டுங்கள் என்று கேட்டவுடன், மேலும் கீழும் பார்த்த அந்த அதிகாரி, கம்பியூட்டர் பழுதாகி விட்டது என்றார். ஏன் பெரியக்காவிடம் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, நாங்கள் போஸ்ட்லே போட்டு விட்டோம் என்றார்.

பெரியக்காள் கடந்த 17 ஆண்டுகளில் அவரது உதவித் தொகைக்கான மனுவை புதுப்பித்ததே இல்லை. ஆகவே, இந்த வீண் விளையாட்டெல்லாம் வேண்டாம் என்று அவரிடம் அடித்துக் கூறப்பட்டதும், அவர் இரு பாரங்களைக் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு கூறினார்.

பாரங்களை பூர்த்தி செய்து கொண்டு வருவதற்கு ரிம100 வேண்டும் என்ற அவரிடம் கேட்கப்பட்டது. பத்து ஆராங்கிலிருந்து பத்துகேவ்ஸ்க்கு போய் வர டெக்சி செலவு ரிம100 ஆகும். அச்செலவை இலாகாதான் தர வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டதோடு பெரியக்காளின் உடல்நிலையைப் பார்த்து அதற்கு ஏற்ப செயல்படுங்கள் என்று அவரிடம் சற்று காட்டமாகவே கூறப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து இவ்வாண்டு நவம்பர் வரையில் அந்த இலாகா அதிகாரியுடன் இடைவிடாது தொடர்பு கொண்டதைத் Periakkaதொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சமூக பொதுநல இலாகா அதிகாரி பத்து ஆரங்கிற்கு சென்று டிசம்பர் மாதத்திற்கான அவரது உதவித் தொகையான ரிம50 அல்ல, ரிம95 அல்ல, ரிம300 ஐ சி. பெரியக்காளிடம் அவரது வீட்டில் வழங்கினார்.

இங்கும் ஒரு குழப்பம். பெரியக்காளுக்கு உதவித் தொகை கொடுக்கப்படவிருக்கும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. அங்கிருந்த ஒருவரின் உதவியோடு பெரியக்காளின் வீட்டை கண்டுபிடித்து போக வேண்டியதாயிற்று.

கடந்த ஆண்டு ஜூனிலிருந்து இவ்வாண்டு நவம்பர் வரையில் எவ்வித உதவித் தொகையும் கிடைக்காமல் வாழ்ந்து வந்த சி. பெரியக்காள் இப்போது கொடுக்கப்பட்ட உதவித் தொகையை, அதுவும் ரிம300 ஐ, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். அடுத்த மாதத்திலிருந்து அந்த உதவித் தொகை அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

தமக்கு அறிமுகமில்லாத “அவர்” தமது நிலைமையை அறிந்து உடனடியாகவும், விடாமலும், விட்டுக்கொடுக்காமலும் போராடி அரசாங்கம் தமக்கு கூடுதல் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்த அவருக்கு தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பெரியக்காள் கூறினார்.

 

பெரியக்காள் போன்றவர்கள் இல்லாத இடமே இல்லை

 

மேலும், பத்து ஆராங்கில் தம்மைப் போன்ற இன்னும் பல வயதான இந்தியர்களும் சீனர்களும் எவ்வித உதவியும் இன்றி சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் உதவ வேண்டும் என்று பெரியக்காள் கேட்டுக் கொண்டார்.

பெரியக்காள் குறிப்பிட்ட “அவர்” செலயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஜி. குணராஜ்.

இது குறித்து குணராஜுடன் தொடர்பு கொண்ட போது, இவ்விவகாரத்தில் சமூகப் பொதுநல இலாகாவினரிடம் விடாப்பிடியாகவும் சற்று கடுமையாகவும் நடந்து கொண்டது தவிர்க்க முடியாதாக இருந்தது. பெரியக்காள் போன்றவர்களை அரசாங்க இலாகா அலட்சியப்படுத்தக்கூடாது. இருப்பினும், இறுதியில் அந்த இலாகா அதிகாரி தமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதற்காக அவருக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக குணராஜ் கூறினார்.

Gunarajஅரசாங்க இலாகா பணியாளர்கள் மக்களுக்கு பணி புரியம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். அதுவும் பெரியக்காள் போன்ற முதியவர்களை, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அன்றாடம் கண்காணிக்கும் கடப்பாடு அரசாங்கப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

மக்கள் அவர்களைத் தேடி வர வேண்டும் என்று அரசாங்க ஊழியர்கள்  அவர்களுடைய அலுவலகத்தில் அமர்ந்திருக்காமல், அவர்கள் மக்களைத் தேடி அவர்களுடைய இல்லங்களுக்குச் சென்று உதவ வேண்டும் என்று  சில வாரங்களுக்கு முன்பு அரசாங்க தலைமைச் செயலாளர் அரசு ஊழியர்களுக்கு அறிவுரை கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டிய குணராஜ், அது தலைமைச் செயலாளர் கூறிவிட்டார் என்பதால் நடந்துவிடப் போவதில்லை. மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் இனம், சமயம், கட்சி ஆகியவற்றுக்கு அப்பால் சென்று போராடத் தயாராக இருக்கிறார்கள், போராடுவார்கள் என்பதை அரசு பணியாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான் அது நடக்கும் என்றார்.

பெரியக்காள் போன்றவர்கள் இல்லாத இடமே இல்லை. அவர்களுக்கு உதவுவதற்கு அவர்கள் வசிக்கும் இடங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டு, பத்து ஆராங்கில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அது எந்த ஓர் அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதாக இருக்கக்கூடாது. அக்குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாவுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய திண்மையுடையவராக இருக்க வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு தொண்டு செய்யும் பண்புடையவராக இருக்க வேண்டும். மக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குணராஜ் ஒரு கேள்வியையும் முன்வைத்தார்: ஜூன் 2013 லிருந்து நவம்பர் 2014 வரையிலும் பெரியக்காளுக்கு சேர வேண்டிய உதவித் தொகை கொடுக்கப்படவில்லை. இது அரசாங்கம் கட்ட வேண்டிய கடன் இல்லையா?