ஜாவி வருகிறது: ஜாக்கிரதை!

 

Jawi1இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்திற்கு மலாய் மொழி எழுத்தை இப்போது பயன்படுத்தப்படும் ரூமி எழுத்திலிருந்து ஜாவி எழுத்திற்கு மாற்றுவது நல்ல பலனத்தரும் என்ற நோக்கத்தில் ஜாவி எழுத்தைத் திணிக்கும் முயற்சி ஆரவாரமின்றி நடந்து வருகிறது.

அம்முயற்சியின் ஓர் அங்கம்தான் மலாக்கா மாநிலத்திலுள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளிலும் “ஜாவி பயன்படுத்தும் முறை அமல்படுத்த வேண்டும்” என்று எடுக்கப்பட்டுள்ள முடிவு என்று கூறலாம்.

மாநில கல்வி இலாகாவின் இஸ்லாமியக் கல்வி பிரிவின் தலைவர் அஹமட் ஹமிஸி அபு ஹசான் இதற்கான அறிக்கையை வெளியிட்டார்.

இவ்வாண்டு நவம்பர் 2 ஆம் தேதியிடப்பட்டுள்ள அவரின் அறிக்கையில் அனைத்து மத்திய மற்றும் மாநில அமைப்புகள், இலாகாகள் ஆகியவற்றோடு மாநிலத்துள்ள உயர்க் கல்வி கழகங்களிலும் பள்ளிகளிலும் ஜாவி எழுத்து அமல்படுத்துவதை மாநில அரசும் மலாக்கா, மலேசிய கலைக் கழகமும் தொடங்கியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

“ஆகவே, மலாய் மொழியை (ரூமி மற்றும் ஜாவி எழுத்து) தேசிய மொழியாக மேன்மையாக்கும் மாநில அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ரூமி எழுத்தை அமல்படுத்துவதுடன் ஜாவி எழுத்தையும் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநில இஸ்லாமியக் கல்வி பிரிவின் தலைவர் அஹமட் ஹமிஸியின் இந்த அறிக்கைக்கு மலாக்கா சீனக் கல்வி முன்னேற்ற மன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பணிய வேண்டாம்

மலாக்கா சீனப்பள்ளி குழுக்களில் சில அவர்களுடைய பள்ளிகளின் பெயர்ப்பலகையில் ஜாவி எழுத்து சேர்க்கப்பட வேண்டும் என்று மாநில இலாகா கேட்டுக்கொண்டுள்ளதாக தம்மிடம் புகார்கள் செய்துள்ளன என்று சீனக் கல்வி முன்னேற்ற மன்றத்தின் தலைவர் யாங் யின் சோங் தெரிவித்துள்ளார்.

சீனப்பள்ளிகளின் சொத்துரிமை பள்ளி குழுக்களுக்குச் சொந்தமானதாகும் என்பதோடு பள்ளிகளின் பெயர்ப்பலகைகளில் மலாய் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய யாங், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு ஜாவி எழுத்து அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் தெரிவித்தார்.

யாங் யின் சோங் அத்துடன் நிற்கவில்லை. கல்வி இலாகா வெளியிட்டுள்ள இந்தக் கட்டளை நியாயமற்றது. ஆகவே, அனைத்து பள்ளி குழுக்களும், பெற்றோர்-ஆசிரியர் மன்றங்களும் ஒன்றிணைந்து இது போன்ற கட்டளைகளுக்கு பணிந்து போகாத உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று யாங் வலியுறுத்தியிருக்கிறார்.

சும்மா, ஊக்குவிப்புதான்

Jawi2ஜாவி எழுத்தை நாடு முழுவதிலும் பரவலாக பல்வேறு வகைகளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் காணலாம்.

அதில் ஒரு கட்டம்தான் மலாக்கா மாநிலத்தில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை. ஜாவி எழுத்து அதிகாரப்பூர்வமான, அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள எழுத்தல்ல என்பது மலாக்கா கல்வி இலாகாவின் இஸ்லாமியக் கல்விப் பிரிவின் தலைவர் அஹமட் ஹமிஸிக்கு தெரியாத ஒன்றல்ல.

ஏமாளிகள் இருப்பார்கள். சமயம் பார்த்து ஜாவி எழுத்தை திணித்து விடலாம் என்ற கணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுதான் இந்த நடவடிக்கை. ஜாவி எழுத்தை பயன்படுத்துவதால் என்ன பிரச்சனை என்று அவர்கள் இப்போது எழுப்பும் கேள்வியின் தொனியிலிருந்தே இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்நாட்டு அரசியல் தலைவர்கள், ஓன் பின் ஜாபார், துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ராசாக், மகாதிர் முகமட், நஜிப் போன்றவர்கள், மற்றும் அரசாங்க மேல்மட்ட பணியாளர்கள் அவர்கள் கூற விரும்பிய அடிப்படை நோக்கத்தை கூறிவிட்டு பின்னர் அகப்பட்டுக் கொண்டால் தங்களுடைய தொனியைத் தளர்த்திக் கொண்டு இன்னொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பது புதினான ஒன்றல்ல என்பது தெரிந்ததுதான்.

அதே வியூகத்தைத்தான் இந்த விவகாரத்திலும் பின்பற்றுகின்றனர். ஜாவி எழுத்து பயன்படுத்துவதற்கு எதிராக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மலாக்காவிலுள்ள சீனப்பள்ளிகள் ஜாவி எழுத்தை அவற்றின் பெயர்ப்பலகையில் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது ஓர் “ஊக்குவிப்புதான்” என்று சீனப்பள்ளிகள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு சமாதானம் கூறுகிறார் மலேசியா கலைக் கழகத்தின் நிருவாகி (பதில் யாருடையது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்) முகமட் நசாருடின்.

மாநில அரசு ஜாவி எழுத்தை மேம்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிதான் ஜாவி எழுத்தை பயன்படுத்துமாறு பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டதின் நோக்கம் என்று நசாருடின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ஜாவி எழுத்தை தங்களுடைய பெயர்ப்பலகைகளில் சேர்த்துக் கொண்டால் அப்பள்ளிகள் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான தகுதியைப் பெறும். கூடுதலான ஜாவி எழுத்துகளை பெயர்ப்பலகையில் சேர்த்துக்கொண்ட பள்ளி ரிம2,000 ஐ பரிசாகப் பெறும் என்றும் அவர் கூறினார். இது ருசி காட்டுதலாகும். இது இரு அடிகளை முன்வைக்க தயார்படுத்துக் கொள்ளவதற்காக ஓர் அடி பின்வாங்கும் வியூகம்.

ஜாவியை மேம்படுத்துவதால் என்ன பிரச்சனை?

ஜாவி எழுத்து பயன்படுத்துவதற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தால் நசாருடின் குழப்பமடைந்துள்ளாராம். கிளந்தான் மாநிலத்தில் ஜாவி எழுத்து வழக்கமான ஒன்றாம்.

“இது ஒரு எழுத்து. இது ஒரு சித்தாந்தம் அல்ல. இல்லை, வெறும் எழுத்துதான்” என்று அவர் ஏதோ சூதுவாதற்றவர் போல் கூறுகிறார்.

கிளந்தானில் இஸ்லாமிய பாஸ் கட்சி ஆட்சி செய்கிறது. ஜாவி படிப்பது சமய வளர்ச்சிக்கு உதவும். அதுதான் இவரது நோக்கமா? அது வெறும் எழுத்துதான். வெறும் எழுத்து என்பதால் மட்டும் அதனைப் பயன்படுத்தலாம் என்றால், தமிழ் எழுத்தும், மாண்டரின் எழுத்தும் வெறும் எழுத்துகள்தான் அவற்றை மலாக்காவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்த நசாருடின் சரி என்பாரா?

நேப்பாளம், இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. அதைப் போலவே ஜாவியை மேம்படுத்த பிரச்சாரம். இதில்  என்ன பிரச்சனை என்று அவர் கேட்கிறார்.

 

கரன்ஸி நோட்டில் கணபதி!

 

Ganesh in Indonesaian currencyநசாருடின் தவறான இடத்தில் கையை வைத்து விட்டார். அவர் குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளிலும் சமஸ்கிருதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதைப் போல் அதை எதிர்த்தும் பிரசாரம் செய்யலாம். அந்த ஜனநாயக பண்பாட்டை வரவேற்க நசாருடின் தயாரா?

இந்த மூன்று நாடுகளிலும் ஒன்று மிக நீண்ட வரலாற்றை கொண்டிருப்பதும், அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக இருந்து வருவது இந்து சமய வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களும் என்பது உலகமறிந்த உண்மை. இதனை நடைமுறைப்படுத்த நசாருடின் தயாரா?

நேப்பாளத்தை சுட்டிக் காட்டுகிறார். கம்யூனிசவாதிகளின் ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவால் மன்னராட்சி முடிவுற்றது. அதனைப் பின்பற்ற நசாருடின் தயாரா?

இந்தியாவை பார் என்கிறார். இந்தியாவில் எத்தனையோ மொழிகள்; எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. ஆனால், மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை கொண்டுள்ள நாடு இந்தியா.

இந்தியாவில் காந்தியை சுட்டுக் கொல்வார்கள். பிரதமரை சுட்டுக் கொல்வார்கள். இத்தாலிய நாட்டுப் பெண்ணை இந்திய நாடாளுமன்ற எதிரணித் தலைவாராக்குவார்கள், பிரதமராக்கவும் தயாராகவுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட நசாருடின் தயாரா?

அபுல் கலாம் அஸாத்தும் அப்துல் கலாமும் முறையே இந்தியாவின் இடைக்கால பிரதமராகவும் அதிபராகவும் பதவி வகித்துள்ளனர். இதற்கு நசாருடின் தயாரா?

இந்தியாவுக்கு வெளியில் அதன் சமயம், கலை மற்றும் கலாச்சாரத்தின் உறைவிடமாக இருந்து வரும் முக்கிய நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.

Sukarnoஇந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகார்ணோ. மகாபாரத கர்ணனனைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று அவரது தந்தையார் அவருக்கு சுகார்ணோ (மகா கர்ணன்) என்று பெயரிட்டார்.

இந்தோனேசிய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள். ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் 100 விழுக்காடு இந்துக்கள் என்று சுகார்ணோ கூறியிருக்கிறார்.

சுகார்னோவின் புதல்வியும் பிற்காலத்தில் அதிபருமான மேகலாவதியின் ஞான குரு சுவாமி விவேகனந்தா!

இந்தோனேசியாவில் ஐந்து சமயங்கள் அதிகாரப்பூர்வமான சமயங்களாக இருந்து வருகின்றன.

இந்தோனேசியாவின் தாள் நாணயத்தில் இந்து தெய்வம் விநாயகரின் உருவம் பொரிக்கப்பட்டுள்ளது.

ஆக, நேப்பாளம், இந்தியா மற்றும் இந்தோனேசிய போன்ற நாடுகளை சமஸ்கிருததிற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை மட்டும் மேற்கோள் காட்டி நாம் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்று கேட்டால் மட்டும் போதாது. அந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும் என்று நசாருடின் கூற வேண்டும். நசாருடின் தயாரா?

மலாக்கா கல்வி இலாகாவின் இஸ்லாமியக் கல்விப் பிரிவு வெளியிட்ட அறிக்கையும் அதன் விளைவாக எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும் கருத்துரைத்த கல்வி அமைச்சின் துணை அமைச்சர் பி. கமலநாதன் மலாய் மொழியை தேசிய மொழியாக நிலைநிறுத்தும் ஆர்வ அடிப்படையில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்பட்ட கடிதத்தில் கட்டாயம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். இவரிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மலாய் மொழியை தேசிய மொழியாகவும் ரூமியை அதன் எழுத்தாகவும் மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏராளமான ஆங்கிலச் சொற்கள் ரூமியில் எழுதப்பட்டு மலாய் மொழி வளப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ரூமி எழுத்தில் எழுதப்பட்டுள்ள மலாய் சொற்களை ஜாவி எழுத்தில் எழுதுவதால் (எடுத்துக்காட்டு: “rumah”-ரூமி எழுத்துக்கள்; ஜாவியில் ரா வவ் = ரூ + மிம் அலிப் = மா; ஜாவியில் ரூ + மா = ரூமா) தேசிய மொழியில் எந்த ஏற்றமும் ஏற்படுவதில்லை. சொல் ஒன்றுதான். எழுத்துக்கள்தான் வேறானவை. இந்நிலையில் மலாய் மொழியை தேசிய மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுவது அர்த்தமற்ற, மூடிமறைக்கும் நோக்கம் கொண்ட விளக்கமாகும்.

ஜாவி எழுத்தை தங்களுடைய சுயநலன்களுக்காக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்ற கணிப்பு அரசியல் தலைவர்களிடம் தொடக்ககாலம் முதல் இன்று வரையில் இருந்து வருகிறது. மலாய்க்காரர்-அல்லாதவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் ரூமி எழுத்தை பயன்படுத்த அம்னோ ஒப்புக்கொண்டதாக மகாதிர் கூறியுள்ளார். அவ்வாறே, மலாய் மொழியை ரூமி எழுத்தில் படித்து மலாய் மொழித் திறணில் மலாய்க்காரர்களுக்கு சமமாகவோ, மேலாகவோ சென்றுவிட்டால் தங்களைப் பின்தள்ளுவதற்கு ஜாவி எழுத்தை அறிமுகம் செய்வார்கள் என்ற அச்சம் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இருந்தது.

அந்த அச்சம் குறித்த பேசப்பட்ட ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. 1970 களில் தொழிலாளர் அமைச்சில் தொழிலாளர் அமைச்சர் வி. மாணிக்கவாசகத்துடன் தொழிலாளர் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில் நான் எனது பையிலிருந்து எடுத்த கோப்பில் உத்துசான் மெலாயு என்ற நாளிதழ் இருந்ததைக் கண்ட அமைச்சின் மூத்த இயக்குனர் ஆச்சரியத்தோடு ஏன் ஜாவி நாளிதழ் என்று கேட்டதோடு தமக்கு ஜாவி எழுத்து தெரியாது என்றார். மேலும், நமக்கு ஜாவி தேவையில்லை. நாம் ரூமி எழுத்திலான மலாய் மொழியை நன்கு கற்றால் போதும் என்று அவர் கூறினார்.

இன்னொருவர், இந்த எழுத்தும் கற்றிருப்பது நல்லதுதானே என்றார். மேலும் ஒருவர், ஏன் ஜாவி படிக்கிறீர் என்பதைக் கூறுங்கள் என்றார். இக்கேள்விக்கு பதிலாக இந்தியர்களும் சீனர்களும் ஏமாற்றப்படக்கூடிய சாத்தியம் பற்றி கூறியதோடு ஏமாற்ற நினைக்கிறவர்களை ஏமாற வைப்பதற்கான திட்டம்தான் ஜாவி படிப்பது என்றேன்.

இதுவரையில் நடந்த உரையாடலை சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் மாணிக்கவாசகம் என்னைப் பார்த்து, “You have now wasted 20 minutes of our time. You are making up stories to frighten people. Our government won’t do such things. Our leaders are men of principle, so let us get back to our work”, என்றார். “Ok, let us wait and see what happens”, என்று பதில் அளித்தேன்.

ஜாவியை திணித்து நமக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார ஈடுபாடுகளில் தீங்கு செய்வார்கள் என்று அக்காலத்தில் பலர் அஞ்சினர். ஆனால், ஜாவி சமய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்து அதிகமாகப் பேசப்பட்டதில்லை.

அன்று பலரிடம் இருந்த அச்சம் தவறான கணிப்பின் விளைவு அல்ல. அதனை இப்போது நாம் நேரடியாகக் காண்கின்றோம். அதில் ஒன்றுதான் இந்த மலாக்கா சம்பவம்.

பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகப்படுத்துவது குறித்து பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். ஜாவி எழுத்தையோ, இதர மொழிகளையோ கற்றுக்கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. அவை மிகச் சிறந்த முதலீடுகள். எவறாலும் கொள்ளையடிக்க முடியாத சொத்துக்கள், ஆனால், அவை திணிக்கப்படும் போது அதன் நோக்கம் மீது தீவிர கவனம் செலுத்தி நமது உரிமையை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.