கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம்.
அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் வாய்ப்பும் உரிமைகளாக உள்ளன.
அதன் வழி புரிந்துணர்வும் சகோதரத்துவமும் உருவாக்கம் கண்டு, நாம் இனவாதத்திற்கு அப்பால் இன்பமாகவும் செழிப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் அதன் உருவாக்கம் ஆளும் அரசியலுக்கு தடையாக மாறும் என்ற பீதி கொண்ட மதவாதிகள் சாணக்கியத் தனமாக ஆளும் ஆட்சியிலும் ஊடுருவி இன-மத வாதத்தை அரசியலாக விற்பனை செய்கின்றனர். அவர்களை களையெடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், நமது நாட்டை சூதுதான் கவ்வும்.
இறைவன் எவ்வகையில் இருப்பினும் அவன் நம்மில் கலந்து மனித நேயமாக காட்சியளிக்கும் போது பிறப்பின் பயனை மனிதன் அடைகிறான்.
அமைதியையும் நிம்மதியையும் விரும்பும் மக்கள் இன்று உலகத்தின் வெறித்தனமான மதவாத பிரிவினைக்கு எதிராக புறப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து போர் புரிகின்றனர். மலேசியாவை பொறுத்த மட்டில், பைபில் பிரச்சனை, மத மாற்றம், ஹுடுட் சட்டம், மதக்கோட்பாடுகள் கொண்ட மாநில அரசு சட்டங்கள், முரண்பாடுகள் கொண்ட அரமைப்பு பிரிவு 121(1A) போன்றவை ஒற்றுமைக்கு சவாலாகவே உள்ளன. இவ்வளவு காலம் கட்டிக்காத்த ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் பெர்காசா, இஸ்மா போன்ற வலது சாரி மதவாத அமைப்புகள் மதவாத உரிமையை கோரி போர்க் கொடி தூக்குகின்றனர்.
இதுநாள் வரை அமைதி காத்து வந்த மலாய் இனத்தின் 25 அறிவுஜீவிகள் இப்போது மலேசியாவுக்கான ஒரு புதிய பரிந்துரையை முன்வைத்து இனவாதிகளை கடுமையாக சாடியுள்ளது வரவேற்கத்தக்கது. நாம் ஒரு பாக்கிஸ்தான் போலவோ அல்லது ஆப்கானிஸ்தான் போலவோ உருவாகி விடக்கூடாது என்றும், மிதவாத போக்கில் பல்லின மக்களுடன் மதவாத ஆலோசனையை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதற்கு நமது பிரதமரின் கருத்து சாதமாகவே உள்ளதாவே தோன்றுகிறது.
வரவிருக்கும் புத்தாண்டு மக்களுக்கு ஒரு சவால் மிகுந்த ஆண்டாகவே இருக்கும். அரசியல் பிரச்சனைகளோடு, வரி சுமையால் வந்த விலையேற்றத்தால் உண்டாகும் பொருளாதார பிரச்சனைகளும் தலை தூக்கும்.
ஒருவரின் மனதில் உள்ள நல்ல ஓநாயும் தீய ஓநாயும் சண்டையிட்டுக் கொண்டால் எது வெற்றி பெரும் என்று நாம் குழந்தைகளை கேட்போம். சில குழந்தைகள் நல்ல ஓநாய் என்பார்கள். நல்ல குழந்தைகளாக இருந்து பாதிப்படைந்த குழந்தைகள் தீய ஓநாய் என்பார்கள். எந்த ஓநாயுக்கு அதிகமாக தீனி போட்டு வளர்கிறோமோ அதுதான் வெற்றி பெரும் என்பதுதான் இதன் உவமை.
நமது நாடு எதை வளர்க்க வேண்டும் என்பது உலக சுவற்றில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதை நம் தலைவர்கள் ஏற்க வேண்டும். ஏற்க மறுப்பவர்களை மக்கள் இறக்க வேண்டும்.
நேரத்திக்கு ஏற்ற அருமையான கருத்துக்கள். நமது இனிய மக்கள் சிந்திக்க வேண்டிய & மிக முக்கியமாக செயல்பட வேண்டிய தருணம்
வந்து விட்டது. நாளைய தலைமுறையை கருதி இவர்களை உடனே
களை எடுக்க வேண்டும்.
\
பாகிஸ்தான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். வினையை விதைக்காதே, திணையை விதை என்பது. அதன் வரலாற்றை அறிந்து IS – யையும் பார்த்து உலகெங்குங் உள்ள மன்னர் ஆட்சியே கதி கலங்கிப் போயிருக்கும் இந்நேரத்தில், மாநில சட்டங்களைக் கொண்டு மத உணர்வை ஊட்டுவதை தடுக்க வேண்டியவர்கள் அதற்கு தலைமை வகிக்கும் சமஸ்தானாதிபதிகளே. செய்வார்களா அல்ல செய்வினையை ஏற்றுக் கொள்வார்களா?. அந்த பரமனுக்கே வெளிச்சம்.
ஐயா ஆறுமுகம் அவர்கள் கிறிஸ்மஸ் வாழ்த்தோடு அறிவார்ந்த புதிய சிந்தனையும் தூவி உள்ளார். வாழ்த்துகள் மகிழ்ச்சி..! வரும் 2015 – சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. இருப்பினும் மத – இன ஒற்றுமைக்கு ஆபத்து நேருகின்ற போது நமக்குள் இருக்கும் வேட்ருமைகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுப் பட்டு ஒரே குரலாக ஒலிக்க முன் வர வேண்டும். கிறிஸ்மஸ் கொண்ட்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..!
அனைவரும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிந்தனை. வாழ்த்துக்கள்.
மலேசியாவின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் மத நல்லிணக்கம் மிக மிக அவசியம்.தனிமனிதனின் மத சுதந்திரத்தில் அரசு எந்த விதத்திலும் தலை இடக்கூடாது.இருவேறு மதத்தை சேர்ந்தவர்கள் உணர்வால் ஒன்றுபட்டு திருமணம் செய்து கொள்ளும்போது அவர்களின் எதிர்காலம் ,மதம், யாவும் அவர்களே முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.
நமது பிரதமரின் கருத்து சாதகமாகவே உள்ளது என்று நாம் மகிழ்ச்சி அடைந்தாலும் அவர் “இரண்டும் கெட்டான்” நிலையைக் கடைப்பிடிக்கிறார் என்று தான் அவரின் முன்னைய செயல்பாடுகளை வைத்து நாம் நினைக்க வேண்டி உள்ளது. ஒரு பக்கம் ஆமாம் என்பதும் இன்னொரு பக்கம் கண்ணை மூடிக் கொள்ளுவதும் அவர் பாணி அரசியல்!
முஸ்லிம் நாடுகளில் தனி மனித உரிமைக்கு இடமில்லை.அதையே இங்கும் கொண்டுவர எல்லா தில்லு முள்ளும் நடக்கின்றது. அதிலும் PAS சை நம்பவேமுடியாது. 1957ல் இருந்து எல்லாமே தலை கீழ் – இதை எல்லாம் முன்னறியாமல் துங்குவை நம்பி மோசம் போனோம் .சம்பந்தன் முன் வினை அறியாத -அறிய முடியாத தலைவன்– அதிலும் நம்மவர்களை எப்படி முன்னுக்கு கொண்டுவரவேண்டும் என்று புரியாத திறமை இல்லா தலைவன் என்று கூறலாம். இப்போது நாம் அனுபவிக்கின்றோம். துன் தான் சிஊ சின் மலாயக்காரர்களினால் ஒன்றம் செய்ய முடியாது என்று நினனத்தது சரி ஆனாலும் அவர்கள் இனத்தையும் மதத்தையும் தங்களுக்கு சாதகமாக்கி மற்றவர்களை ஓரங்கட்டிவிடுவார் என்று புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பவாதி. இந்தோனேசியாவில் என்ன நடக்கின்றது என்று தெரிந்தாலும் அது எவ்வளவு இங்கும் பாதிக்கும் என்று புரியாத தற்குறி.
தீவிர மதவாதிகள் எல்லா சமயத்திலும் இருந்தனர். 1969 மே 13 க்கு முன்பு என்னுடைய அனுபவம். அந்த சமயத்தில் எங்கள் ஊரில் ஒரு இயக்கத்திற்கு நிதி உதவிக்காக நிதி சேகரிக்க ஒரு செயலில் ஈடுப்பாட்டோம். அந்த சமயத்தில் ஒரு மலாய் முஸ்லிம் நண்பரிடமும் உதவி நிதி கேட்டோம். அந்த நபர் எங்களின் பெட்டியின் மேல் எங்கள் இயக்கத்தின் பெயர் சமய பெயரோடு இருந்ததை சுட்டி காண்பித்து நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் ஒருவர் தான் அப்படி செய்தார். மற்ற மலாய் முஸ்லிம்கள் எவரும் அம்மாதிரி செய்யவில்லை. அவரும் தனது எண்ணத்தை அவர்களிடம் கூறி திசை திருப்பவும் செய்யவில்லை. ஆக இப்படிப்பட்ட எண்ணமுடையோர் எப்பொழுதும் இருப்பார். ஆனால் அப்பொழுது அவர்கள் கட்டுப்படுட்தப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் எவ்வித தடையுமின்றி தைரியமாக தத்தம் விஷ எண்ணத்தை பகிரெங்கமாக வெளிப்படுத்துகின்றனர். அப்படிப்பட்டோர் இன்றுகூட வெகு சிலரே என்று கூறலாம் ஆனால் அந்த சிறு குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விடுக்கும் விஷ எண்ணங்களுக்கு விளம்பரம் கொடுப்பதும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதற்கு காரணமாகலாம். அதே சமயத்தில் அதுபோன்ற கருத்துக்களை விடுப்போரை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளவும் வேண்டும். இன்று அது நமக்கு சாதகமாக இருப்பதால் அதனை விட்டுவிட்டால், பின்பு விருட்சமாகிவிட்டால் விளைவு எல்லோருக்கும் மிகவும் பாதகமாகிவிடும், அப்பொழுது இன்று தூண்டி விட்டவர்களின் சந்ததியினரும் சேர்ந்தே அதன் விளைவுகளை அனுபவிப்பர் என்பதும் திண்ணம். ஆக இன்று பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் சந்ததியினரையாவது நினைத்து ஆக்ககரமான செயல்பாட்டினை எடுக்க இறைவன் நாம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
சம்பந்தன் முன் வினை அறியாத -அறிய முடியாத தலைவன்– அதிலும் நம்மவர்களை எப்படி முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று புரியாத திறமை இல்லா தலைவன் – லேட்டாக சொன்னாலும் உண்மையை உறைக்கும்படி உரைத்தீர்கள்..! இது பலரின் கோபத்தைக் கிளறலாம்.
சம்பந்தர் தான் விரும்பிப் போய் ம.இ.க. தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக அன்றைய சூழலில் பிறர் தலைமைப் பதவியை ஏற்பதற்கு தயங்கியதால் இவரை கொண்டு போய் முன் நிறுத்தினர். அவர் தன் தகப்பனார் சேர்த்து வைத்த சொத்துக்களை அழித்தே ம.இ.க- வை வளர்க்கப் பாடுபட்டார் மாணிக்கவாசகம் ம.இ.க. தலைமையகத்திற்குள் நுழையும் வரை. இன்று அவர் இல்லாத காலத்தில் அவரைப் பற்றி குறை கூறுவோர் உண்மை அறிந்து சற்று மனச்சாட்சியுடன் செயல்படுவது நல்லது.
இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லும் போது துன் அவர்கள் ஆரம்பித்து வைத்த தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் மட்டும் தான் கண்முன் நிற்கிறது.அதுவும் இல்லையென்றால் நமது பொருளாதாரம் என்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நமது பணத்தை ஏப்பம் விட்டவர்களை “எப்படி முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்” தலைவராக நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி!
செம்பருத்தி காம் ஆசிரியர் அய்யா கா,ஆறுமுகம் அவர்களுக்கு முதலில்,என் அன்பான நல் வாழ்த்துக்கள், தேனிக்கள் தேன் கூடு கட்டி மலரிலிருந்து மகரந்தம் உரிஞ்சி தேனாக தருவது போல் அருமையான சிந்தனை படைப்பு,தலைவர்கள் ஏற்க வேண்டும்,ஏற்க மறுப்பவர்களை மக்கள் இறக்க வேண்டும்!
வாழ்வது சில காலம் எனவே அனைவரும் சுயநலத்தை போக்கி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி மதம், மொழி, ஜாதி ,அரசியல் சித்தாந்தம் போன்றவற்றை ஒதுக்கி 2015 ஆண்டில் ஒன்று இணைந்து செயல்பட இறைவன் அருள் பாலிக்க வேண்டும். சிந்தனை புரட்சி வெடித்து செயல் வடிவம் காண்போம்.வாழ்வோம் வெல்வோம்.
நன்றி