சிறை தண்டனை போராட்ட தீயை அணைத்ததே இல்லை!

-ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2015.

anwar 1மலேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு வயது 67. சிறைவாசத்தை முடித்துக் கொண்டு விடுதலையாகும் போது அவர் 72 வயதை எட்டியிருப்பார். அதன் பின்னர் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட முடியாது. அத்துடன் அன்வாரின் அரசியல் வாழ்க்கை, பயணம், போராட்டம் எல்லாம் முடிவிற்கு வந்து விடும் என்பது ஒரு கணிப்பு.  ஆட்சியிலிருப்பவர்கள் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மேற்கொண்ட கொடூர நடவடிக்கைகள் எதுவும் ஆள்பவர்களின் இலட்சியத்தை அடைய உதவியதே இல்லை என்பது உலக வரலாறாகும்.

 

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை

 

எழுபது, எண்பது வயதெல்லாம் சரணடைகின்ற வயதா? வெண்புரவி ஏறி வீர அரசியல் புரட்சி ஏற்படுத்துவதற்கான அனுபவம் பெற்ற வயது அது. காந்தி 125 வயது வரையில் வாழ விரும்பினார். ஏன், சந்நியாசி ஆவதற்கா? தமது பாணியிலான இராம ராஜ்ய தத்துவத்தை கிராமங்களில் நிலைநிறுத்துவதற்கு அவர் அவ்வளவு காலத்திற்கு வாழ விரும்பினார்.

 

கட்சி அரசியலில் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் சக்தி மிக்க தலைவராக விளங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க nelsonm1வேண்டியது அவசியம்தானா? அன்வார் இப்ராகிம் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது, அந்நிலையில் அவர் நாட்டின் பெரும் தலைவராக உருவெடுக்க முடியாது என்று கூறுவது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதற்கான ஒரு கற்பணை. பிரிட்டீஷ் பேரரசை வீழ்த்துவதற்கான போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த காந்தி எந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்? தென்னாப்பிரிக்கா வெள்ளையர் இனவெறி ஆட்சிக்கு சமாதி கட்டிய நெல்சன் மண்டேலா அதனை சிறையிலிருந்தே சாதித்தாரே தவிர அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தல்ல.

ஆட்சியாளர்கள் விதித்த சிறை தண்டனை, தூக்குத் தண்டனை உண்மையான போராட்டவாதிகளையும் அவர்களது இலட்சியங்களையும் தடுத்து நிறுத்தியதே இல்லை.

ஏசுநாதரை சிலுவையில் அறைந்தனர். பகாத் சிங்கை தூக்கிலிட்டனர். காந்தி மற்றும் நேரு ஆகியோருக்கு தலா 13 மற்றும் 14 ஆண்டு சிறை தண்டணை விதித்தனர். அவற்றுக்கெல்லாம் மேலாக நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவ்வாறு உலகமுழுவதும் பல்லாயிரக்கணக்கான போராட்டவாதிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். இறுதியில் வென்றது யார்?

 

அன்வார் மூளை சலவை செய்துகொள்ள வேண்டும்

 

இந்நாட்டு மக்களும் இந்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இன மற்றும் சமய வேறுபாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இயல்பான முறையில் வளர்வதற்கான வாய்ப்புகள் திட்டமிடப்பட்டு மறுக்கப்படுகின்றன. இவற்றை தடுத்தி நிறுத்தி அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதற்கும் உரிமைகளை ஏற்றத்தாழ்வின்றி அனுபவிப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் தேவைப்படும் அரசியல் தலைமைத்துவம் ஆளும் கூட்டணியிடம் கிடையாது என்பது யாவரும் அறிந்ததே.

 

மக்களின் இந்த அவலநிலையை மாற்றி புதியதோர் மலேசியாவை உருவாக்கும் நோக்கத்தோடு தோன்றிய எதிரணியின் உறுப்புக் கட்சிகளுக்கிடையே ஒரு பாலமாக அன்வார் விளங்கினார். அவரது தலைமைத்துவம் அவசியம் என்று கருதி மக்கள் அவரது தலைமையில் இயங்கிய எதிரணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அளித்தனர். சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும், நாடாளுமன்றத்தில் போதுமான இருக்கைகளைப் பெறத் தவறியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இத்தோல்வியிலும் நன்மை இருக்கிறது என்று கூறலாம். இக்கூட்டணியிலும் அதே இன மற்றும் சமய பிரச்சனைகள் தலைதூக்கியதை மக்கள் கண்கூடாகக் காண முடிந்தது. 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் அன்வார் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லாததால் கர்பால் சிங், அன்வாரிடம் “Resign and get out” என்ற கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

இது போன்ற குழப்பங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை எதிர்கொண்டு அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அன்வாருக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு சிறை தண்டனையை பெப்ரவரி 10 இல் பெடரல் உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தியது.

 

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையானது என்றால், அக்குற்றச்சாட்டு சட்டவிதி முறைகளுக்கு ஏற்ப எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றால், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றம்தான். அன்வார் தண்டனையனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

 

ஆனால், இந்த வழக்கில், அல்தான்துயா கொலை வழக்கைப் போல், ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன என்று உள்ளூர் மற்றும் வெளியூர் nelsonm2சட்ட வல்லுனர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இவ்வாறான சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் அன்வார் தண்டிக்கப்படுவது நியாயமல்ல. அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கு ஆதரவாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் நியாயமானவை என்று கூறலாம்.

இப்போராட்டம் வெற்றி பெறுமா? அன்வார் விடுவிக்கப்படுவாரா? இதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறலாம். 1789 ஆம் ஆண்டில் நடந்த பிரஞ்ச் புரட்சி போன்ற ஒன்றுக்கு மலேசிய மக்கள் தயாரானாலன்றி அது சாத்தியமில்லை. மலேசியர்களும் அது போன்ற ஒன்றுக்கு தயாராக இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறலாம்.

 

குடும்ப வாரிசு முறை வேண்டாம்

 

ஆக, அடுத்த ஐந்தாண்டுகாலத்தில் அன்வார் சிறையிலிருந்தவாறே தம்மை ஒரு நெல்சன் மண்டேலாவாக மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தமது மூளையை முற்றிலும் சலவை செய்துகொள்ள வேண்டும். அதில் “மலேசியா, மலேசிய மக்கள் அனைவரும் சமம், இனம்,சமயம் மற்றும் பொருளாதார வேறுபாடுகளுக்கு இடமே இல்லை என்பதைத் தவிர வேறு எதற்குமே இடமிருக்கக் கூடாது. இதன் அடிப்படையில், அன்வார் சிறையிலிருந்தவாறே அவரது போராட்டத்தை தொடர வேண்டும். அதன் வழி அவர் மலேசிய மக்களின், உலக மக்களின் கவனத்தை நிச்சயமாக ஈர்க்க முடியும். அன்பால் இணைந்த மக்களைக் கொண்ட ஒரே மலேசியாவை உருவாக்க வழிவகுக்க முடியும்.

 

nurulமேலும், அன்வார் பந்தம், பாசம் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். குடும்ப பந்தம் வேறு. அதனை அரசியலில் நுழைத்து குடும்ப அரசியல், குடும்ப வாரிசு முறையை உருவாக்குவது ஒருவித வெறுக்கத்தக்க ஊழலாகும். நமது நாட்டு அரசியல் கட்சிகளில் அது வேரூன்றி விட்டது. அது களையப்பட வேண்டும். இக்களையெடுப்பின் முதல் கட்டமாக அன்வாரின் மகள் பெர்மாதாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அன்வாருக்கு சுங்கை பூலோ சிறைச்சாலை புத்ராஜெயாவாகட்டும்!