உழவன் மடிந்தாலும், பொங்கல் தேவைதான்…

10981355_911655535531374_5296790982648350374_nகடந்த 28.2.2015-இல் கிள்ளான், காயத்திரி வணிக வளாகத்திற்கு அருகில் ஒரு சிறப்பு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இதுபோன்ற பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்து வந்த நான் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த பட்டிமன்றத்திற்குச் சென்றிருந்தேன். காரணம் அதன் தலைப்பு. தலைப்பு இதுதான். உழவன் மடிகிறான்! பொங்கல் தேவையா? பலமுறை இந்த தலைப்பைச் சொல்லிப் பார்த்தேன்.

மாறுபட்ட தலைப்பு. நிறைய பேசலாம். விவாதிக்கலாம். கண்டிப்பாக போக வேண்டும் என்று முடிவெடுத்து நிகழ்ச்சிக்கும் வந்து விட்டேன். ஓர் ஓரமாக அமர்ந்து பார்வையாளனாக நிகழ்ச்சியை பார்வையிட்டேன். மலேசிய சோசலிச கட்சி மற்றும் ஜெரிட் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த சிறப்புப் பட்டிமன்றம். பொதுமக்களைக் குறிக்கோளாக கொண்டு திறந்த வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிசமான அளவு மக்கள் கூட்டமும் இருந்தது. பட்டிமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே ஆங்காங்கே சிறு சிறு சலசலப்புகள் தலைப்பு குறித்து எழுந்தபடியே இருந்தது.

சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராக கா. ஆறுமுகம் இருந்தார். நாளிதழ்களிலும் செம்பருத்தியிலும் அவர் குறித்து படித்திருக்கிறேன். அவர் சரியான தேர்வு என்றே பட்டது.

தொடக்கமாக தலைப்பு குறித்து விளக்கினார். மிகத் தெளிவாகவே இந்தத் தலைப்பு பொங்கலுக்கு எதிரானது இல்லை என்றும் பொங்கல் கொண்டாடப்படுவது விவாதிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்தும் விளக்கினார். இரு பக்கமும் முக்கிய கருத்து விவாதம் நடைப்பெற வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

10502092_911655368864724_5212392595930121663_nஉழவனின் இன்றைய நிலை குறித்து பேசியவர்கள் மிகத் தெளிவாக பேசினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் விளங்கிக் கொண்ட வரையில் இங்கு உழவன் என்பது ஓர் குறியீடு. அனைத்து உழைக்கும் வர்க்கத்தையும் பிரதிநிதிக்கும் அவன்தான் பொங்கலின் உரிமையாளன். இன்று அவன் எப்படி இருக்கிறான்? அவனது உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டிருக்கிறது? எவ்வாறு சுரண்டப்பட்டிருக்கிறான்? அது குறித்து நமது நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதித்தார்கள்.

மிக முக்கியமாக இவர்கள் ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் முன்வைத்தார்கள். இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாடப்படும் விதம். இது குறித்து யாரும் பொதுவில் பேசமாட்டார்களா என்று பல முறை நான் எதிர்பார்த்திருக்கிறேன். நான் பேச முயற்சித்திருக்கிறேன். ஆனால், சரியான மேடை அமைந்ததில்லை. நேற்றைய மேடையில் அதற்குச் சரியான களம் அமைத்துக் கொடுத்தது.

பின்னியெடுத்து விட்டார்கள். சூரியனுக்கும் இயற்கை நன்றியறிவித்தலாக நடக்க வேண்டிய பொங்கலை அரசியல்வாதிக்கு உகந்த நேரத்தில் நடத்துவது, தை முதல் நாள் அல்லது தை மாதத்திலாவது நடக்க வேண்டிய பொங்கலை அவரவர் வசதிக்கேற்ப ஆண்டு முழுக்க நடத்துவது என எல்லாவற்றையும் விவாதித்தார்கள்.

மேலும், பொங்கல் இயற்கையை, அது நமக்கு கொடையாய் தந்த உணவுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நாளாகவும் விளங்குகிறது. பொதுவில் பொங்கல் வைக்கிறோம் என்ற பெயரில் பானைக் கணக்கில் பொங்கல் வைத்து கிலோ கணக்கில் அரிசி, கரும்பிலிருந்து பெறப்படும் சக்கரை, லிட்டர் கணக்கில் பால் என எல்லாவற்றையும் வீணடிக்கின்றோம். சிரத்தை எடுத்து பானை செய்த குயவனையும் மதிப்பதில்லை. அப்படியே விட்டுச் செல்லப்படும் பொங்கல் பானைகள் குப்பைகளாகவே கணக்கிலெடுக்கப்படுகிறது. இதுவரை இது குறித்து கேள்வி கேட்கக் கூட வக்கற்று இருந்த நமக்கு இந்த மேடை ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், எல்லாருக்கும் பேசுவதற்கான உரிமை இருக்கிறது. எல்லா கருத்துகளையும் கேட்க வேண்டும் – கருத்துகளோடு மோத வேண்டும் என்ற புரிதலையும் இந்த மேடை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

ஒருவர் பொங்கல் ஒரு பண்பாட்டு விழா என்றார், அதற்கும் உழவனுக்கும் தொடர்பு தேவையில்லை என்றார். இவரைப் போல் ஒரு மூத்த  பத்திரிக்கையாளர் ‘பொங்கல் தேவையா?’ என்ற கேள்வியே கூடாது என்றார்.  இவர்களைப்  போன்றோர், உழவன் மடிந்தாலும் பொங்கல் உண்ணலாம் என்ற கருத்தை கொண்டிருந்தது தமிழர் பண்புக்கு ஒவ்வாதிருந்தது. இது வருந்தத்தக்கது.

உழவன் இல்லையென்றால் உற்பத்தி இல்லை. தாய் இல்லையெனில் சிசு இல்லை என்பது போல். வள்ளுவர் உழவுக்கு ஓர் அதிகாரத்தை படைத்து உழவனுக்குக் கீழ்தான் மன்னன் என்றார். எனவே உழவன் என்பவன் மடிந்தால் உலகமே மடியும். அவனுக்கு நீதி வேண்டும். அதுதான் பட்டி மன்றத்தின் விவாதம். தின்பதற்காகவும், அரசியல் பண்ணவும் தான் பொங்கல் ஒரு பண்பாடாக உருவாகுமேயானால் அது ஒரு பண்பாடு என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

மேலும், சாட்டையடிபோல் ஒரு விளக்கம் என் காதுகளுக்குத் தெளிவாய் கேட்டது. அரசாங்கம் என்பது யார்? நாம் தானே. பிறகு நீதி கேட்க ஏன் அரசாங்கத்தைக் கேளுங்கள் என மூன்றாவது மனிதரைப் போல் கை நீட்டுகின்றோம். உழவன் மடிந்தால் என்ன தொழிலாளி சுரண்டப்பட்டால் என்ன, பொங்கல் பொங்கல்தான் என்பது ஒரு விழிப்புணர்வு அற்ற நிலையாகும்.

நிகழ்ச்சியில் எனக்கு ஒரு சிறு அதிருப்தி மட்டும் இருந்தது. எதிர் தரப்பில் பேசிய இளைய தம்பிகள் பொங்கல் செய்வதன் வேறு மேன்மைகள் குறித்து அதிகம் பேசியிருக்கலாம். உணர்வின் வசப்பட்டே அதிகம் பேசினார்கள். பட்டிமன்றத்திற்குக் கருத்து விவாதமே மிக முக்கியம்.

பொதுவாக இந்த சிறப்பு பட்டிமன்றத்தைக் காலத்திற்குத் தேவையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்.  மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். எல்லா கருத்துகளும் விவாதிக்கப்பட வேண்டும். அதன் வழி சில முடிவுகள் காணப்படலாம்.

தமிழ்மாறன், கிள்ளான் (மறுசீரமைக்கப்பட்டது)