-ஜீவி காத்தையா, மார்ச் 18, 2015.
தற்போதைய ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தும் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரலாற்று பாட நூலில் தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக முனைவர் ரஞ்ஜிட் சிங் மாலீ கூறுகிறார்.
த ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள அவரது கடிதத்தில் ( The Star, 13.3. 2015) அந்நூலில் காணும் குறைந்தது ஐந்து உண்மைக்கு மாறான தகவல் தரப்பட்டுள்ளதை ரஞ்ஜிட் சுட்டிக் காட்டுகிறார். அவை:
வரலாற்று சம்பவம் 5 ஆம் வகுப்பு பாட நூல் நம்பத்தகுந்த ஆதாரம்
1. வட போர்னியோ 1881 (பக்கம் 38) 1882
பிரிட்டீஷ் நிறுவனம்
தோற்று விக்கப்பட்ட நாள்
2. மலாயா ஜப்பானியர் 1941 – 1945 (பக்கம் 39) 1942 – 1945
ஆட்சியில் இருந்த காலம்
3. மலாயாவில் 1949 இல் மலேசியா சீன சங்கம் மலேயன்
அமைக்கப்பட்ட சீன (பக்கம் 66) சீன சங்கம்
அரசியல் கட்சியின் பெயர்
4. மலாயாவில் 1948 (பக்கம் 73) 1948 – 1960
அவசரகாலம் அமலில்
இருந்த காலம்
5. மலாயாவில் 1946 இல் மலேசியன் இந்தியன் மலேயன் இந்தியன்
அமைக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் (பக்கம் 73) காங்கிரஸ்
அரசியல் கட்சியின் பெயர்
கல்வி அமைச்சுக்கு வரலாற்று பாடநூல் எழுதும் ஆசிரியர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கையில் அந்நூலைப் படிக்கும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
இந்த இலட்சனத்தில் உலகிலேயே கல்விக்காக அதிகமாக நிதி ஒதுக்கீடும் செய்யும் நாடு மலேசியாதான் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் நாட்டின் கல்வி அமைச்சர் முகைதின் யாசின். 2015 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரிம56 பில்லியன் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த கணமே, அதே கல்வி அமைச்சர் மலேசிய மாணவர்களின் அடைவுநிலை அதிர்ச்சி அளிப்பதாக அலறுகிறார். இந்நாட்டு அரசுக்கு பணம் ஒரு பெரிய விசயம் அல்ல. வாரி இறைப்பதில் வள்ளல்கள். ஒரு கறிப்பாப்புக்கு ரிம3 கொடுக்கும் அரசுக்கு தரம் கெட்ட வரலாற்று நூல்களை எழுதும் ஆசிரியர்களுக்கு வாரிக்கொடுப்பதற்கும், இது போன்ற இதர செலவினங்களுக்கும் ரிம56 பில்லியன் ஒரு பெரிய தொகையல்ல. ஆனால், தரம் கெட்ட நூல்களால் தரம் குறைவான மாணவர்கள் உருவாக்கப்படுவதுதான் கேள்வி.
அது மட்டுமல்ல. 1990 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்று பாடநூல்களில் ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் சமயம் ஆகியவற்றை உயர்த்தியும் இதர இனங்கள் மற்றும் சமயங்களின் பங்களிப்பை தாழ்த்தியும் காட்டும் போக்கு தொடங்கிற்று என்று ரஞ்ஜிட் கூறுகிறார்.
1970 மற்றும் 1980களில் நமது பாடநூல்களில் இந்திய நாகரீகத்தின் தாக்கம் ( எடுத்துக்காட்டு: இந்து சமயமும் மலேசிய சமுதாயத்தின் மீதான அதன் தாக்கம், மற்றும் மலேசியாவில் புத்த சமயம் மற்றும் அதன் மரபு) பற்றி தனிப்பட்ட அத்தியாயங்கள் இருந்தன. ஆனால், தற்போதைய ஐந்தாம் வகுப்பு பாடநூலில் மேற்கூறப்பட்டவற்றை தொகுத்து ஒரே வாக்கியத்தில் எழுதப்பட்டிருக்கிறது (பக்கம் 14).
யாப் ஆ லோய் – “மிஸ்டர் கோலாலம்பூர்”
இந்த பாடநூலில் கோலாலம்பூரை மேம்படுத்திய யாப் ஆ லோயின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அறிவார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் பலர், ஜே. கென்னடி, மார்கிரேட் செனான், மற்றும் ஜே.எ ம். கல்லிக் போன்றவர்கள், சிலாங்கூர் உள்நாட்டுக்கலகத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் மீண்டும் கட்டப்படுவதற்கு மிக முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் யாப் ஆ லோய் என்று கூறுகின்றனர். 1879 ஆம் ஆண்டு வரையில் யாப் ஆ லோய் மிஸ்டர் கோலாலம்பூர் என்று கல்லிக் கூறியிருப்பதை ரஞ்ஜிட் சுட்டிக் காட்டுகிறார்.
ஈயச் சுரங்கத் தொழில் வளர்சியில் சீனர்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவிலானது. அவர்கள் கையாண்ட உற்பத்தி முறைகளால் ஈய உற்பத்தி அதிகரித்தது. பாடநூல் பக்கம் 42 இல் இதன் முக்கியத்துவம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கீ ஹின் மற்றும் ஹை சான் ஆகிய இரு இரகசிய கும்பல்களுக்கிடையிலான மோதல்கள் மற்றும் அவற்றால் ஸ்டிரேட்ஸ் செட்டல்மெண்ட் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மோதலில் ஈடுபட்டிருந்த இரு இரகசிய கும்பல்களுக்கும் மலாய் தலைவர்கள் ஆதரவு அளித்திருந்தது பாடநூலில் கவனத்தை கவரும் வகையில் தவிர்க்கப்பட்டுள்ளது என்று ரஞ்ஜிட் கூறுகிறார்.
வரலாற்று பாடநூல் நமது நாட்டின் தோற்றம் மற்றும் மேம்பாடு பற்றிய விவரங்களை சமநிலையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் கொண்டிருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் 1990 ஆண்டிலிருந்து ரஞ்ஜிட் கூறி வருகிறார். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்குகாக இருக்கிறது.
இன்று நமது நாடு பல்வேறு இனங்கள் புரிந்த பெரிய அளவிலான தியாகங்கள் மற்றும் பங்களிப்புகள் ஆகியவற்றால் உருவானதாகும், வெறும் ஓர் இனத்தினால் மட்டுமல்ல, என்ற அடிப்படையில் மலேசிய வரலாறு எழுதப்பட வேண்டும். பொறுத்தது போதும் என்கிறார் முனைவர் ரஞ்ஜிட்
மந்திரிகள் செய்யாததை மக்கள் செய்ய வேண்டும்
1990-2015 வரையில் போராடி போதும் போதும், இனிமேல் பொறுக்க முடியாது என்ற கட்டத்தை எட்டி விட்ட ரஞ்ஜிட் சிங் மாலீ அவரது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அது 2016 இல் தொடங்கும் நான்கு ஆண்டு செயல்திட்டம். இந்த நான்கு ஆண்டுகளில் நம்பத்தகுந்த ஆதரங்களுடலான, பாரபட்சமற்ற மற்றும் சமநிலையுடைய (“an authoritative, objective and balanced History of Malaysia and a Pictorial History of Malayasia”) மலேசிய வரலாறு மற்றும் படங்கள் வாயிலான மலேசிய வரலாறு ஆகியவை எழுதப்படும். இச்செயல்திட்டத்தில் இணைப் பேராசிரியர் முனைவர் சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா, நிறைநிலைப் பேராசிரியர் முனைவர் அஹமட் ஆடம் மற்றும் முனைவர் ரஞ்சிட் சிங் மாலீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இச்செயல்திட்டத்தின் ஆலோசனை ஆசிரியராக நிறைநிலைப் பேராசிரியர் முனைவர் கூ கே கிம் செயல்படுவார்.
மலேசியர்கள் இப்படிப்பட்ட ஒரு வரலாற்று நூலை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால், இந்தச் செயல்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க போதுமான நிதி தேவைப்படும். மலேசிய கல்வி அமைச்சு அதன் 2013-2025 பெரும் கல்வித் திட்டத்தை வரைய பிரிட்டீஷ் நிறுவனம் ஒன்றுக்கு ரிம20 மில்லியன் கொடுத்துள்ளது. ஆனால், இந்த நான்கு ஆண்டு திட்டத்திற்கு கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரிம56 பில்லியனிலிருந்தோ, எதிர்காலத்தில் ஒதுக்கப்படும் இன்னும் கூடுதலான பில்லியனிலிருந்தோ மந்திரி சல்லிக் காசு கூட கொடுக்க மாட்டார் என்று நிச்சயமாகக் கூறலாம். ஏனென்றால், மந்திரியின் திட்டமும் இந்த நான்கு ஆண்டு செயல்திட்டத்தின் நோக்கமும் எதிர்மாறானவை. ஆகவே, மந்திரி செய்யாததை மக்கள் செய்ய வேண்டும்.
மலேசிய மக்கள் இச்செயல் திட்டம் வெற்றி பெற நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்.
வரலாற்று பாட நூலில் தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல் வருவதற்கு காரணமான அதிகாரிகளும், புத்தக பதிப்பாசிரியர்களும் பொறுப்பேற்று இவர்களுக்கு தலைமை வகிக்கும் மந்திரியும் சேர்த்து பதவி விலகினால் இந்நாட்டு கல்வி பாடத்திட்டம் உருப்படும். பாஸ் கட்சிக்கு ஹுடுட் முக்கியம், அம்னோவுக்கும் ம.இ.க. -வுக்கும் வேர்த்து வடியுது. இதர அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களுக்கு கிடைக்கும் வரும்படி கிடைத்தால் போதும் என்ற மனதில் இருப்பதால் நம் பிள்ளைகளுக்கு நாமே வரலாற்றுப் பாடத்தை போதிக்க வேண்டிய கட்டாயத்திர்க்கு வந்து விட்டோம். நம் பிள்ளைகளின் பொது அறிவு வளர்ச்சிக்காக அரசாங்க பாட திட்டத்தை நம்பியிராமல் நாமே நமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பழைய வரலாற்று நூல்களை வாங்கிக் கொடுத்து படிக்க வைப்போம். அரசாங்க பாட திட்டத்தின் மீது மக்களுக்கு இனியும் நம்பிக்கை இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம். அவர்கள் முகத்தில் கரியை பூசுவோம். வரலாறு போதிக்கும் இன்றைய ஆரிசியர்களை எதிர் கேள்வி கேட்டு நம் பிள்ளைகள் அவர்கள் முகத்திலும் கரியை பூசினால்தான் அனைவருக்கும் புத்தி வரும்.
இவை அனைத்தும் அம்னோவின் வரலாற்று நூல் ஆசிரியர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சி பூர்வமான ஆய்வுகள்! வராலாற்றுப் பாட நூல் எழுத அம்னோவின் அரசியல்வாதியாக இருந்தால் போதும்! வரலாறு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
கல்வி அமைச்சனே சரியில்லை.முதல் கோணல் முற்றும் கோணல்.
இதுபோல்தான் மகாராஜா லேலா என்பவர் J.W.Birch எனும் ஆங்கிலேயே ரெசிடென் அதிகாரியை கொன்றதற்கு கொலை குற்றம் சாட்டப்பட்டு அரசர்களால் விசாரிக்கப் பட்டு தூக்குதண்டனை கொடுத்தனர் என்று நாங்கள் சரித்திர பாடத்தில் படித்தோம். இன்றோ அந்த மகாராஜா லேலா இந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் என்றல்லவா சித்தரிக்கப் படுகின்றார். இது உண்மையானால், அன்று அரசரின் “கொலைகாரன்” என்று தீர்ப்பு பொய்யா?. எது உண்மை என்று அந்த சிங்குதான் சொல்லணும்.
ஒரு கூட்டத்தை எட்பாடு செய்யுங்கள்.என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம்.
அரச குடும்ப வலைப்பதிவாளார் ராச்சா பெட்ரா THE TRUE MALAYSIAN HISTORY என்று அவருடைய வலைப்பதிவில் சில மிக்கிய வரலாற்றுக்குறிப்புகளை எழுதியுள்ளார்.அதில் மலேசியாவில் மலாய்க்காரர்கள் உட்பட எல்லோருமே PENDATANG என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐயா உலகத்தில் கல்விக்காக அதிக செலவிடும் நாடு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அதில் 90% மந்திரிகளின் வயிறுகளை ரொப்பி உள்ளது என்பதாகும்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய ஒரே இனம் மலாய் சமூகம்தான் என்று வரலாற்றை திருத்தி எழுதிக் கொண்டாலும் ஆச்சிரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை…?
முன்னாள் இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் சகாக்களின் தவறினால்தான் MALAYA உருவானது, இல்லையேல் தற்போதைய இந்தோனேசியா/மலேசியா/சிங்கப்பூர் ஆகிய நாடுகள்
ஒருங்கிணைத்து “NUSANTARA INDONESIA” ஒரே நாடாக சுகர்னோவால் பிரகடன படுத்த பட்டிருக்கும்.
அதனால்தான் முன்னாள் இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் இந்தோனேசிய வரைபடத்தில் “MALAYA” என்றொரு நாடே கிடையாது.