காலனித்துவ மலாயாவை, சுதந்திர மலேசியாவை கடந்த 150 ஆண்டுகளாக மேம்படுத்தி, வளப்படுத்தி பிரிட்டீஷ் பேரரசை இரண்டவாது உலகப் போரில் காப்பாற்றி, பலரை செல்வந்தர்களாகவும், பல நாடுகளை, மலேசியாவும் உட்பட, செல்வந்த நாடுகளாகவும் உயர உழைத்த இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தியர்களும் அவர்களின் ஏழு தலைமுறை சந்ததியினரும் கண்ட, அனுபவித்த பலன்கள் என்ன என்ற கேள்வியை “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” (“Tragic Orphans – Indians in Malaysia”) என்ற நூலின் ஆசிரியர் கார்ல் வடிவேலா பெல்லே எழுப்பினார்.
இந்நூலை எழுதுவதற்கான ஆய்வுகளை லண்டன் ஓரியண்டல் மற்றும் இந்தியா அலுவலகம் நூலகத்தில் மேற்கொண்ட போது 1957 ஆம் ஆண்டு மலாயா பெடரேசன் மக்கள் தொகை அறிக்கையில் 4 மில்லியன் இந்தியர்கள் மலாயாவில் வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 2.8 மில்லியன் பேர் பின்னர் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “எஞ்சிய 1.2 மில்லியன் நிகர குடியேறிகளில் பெரும்பாலானோர் வியாதி, பாம்புக்கடி, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து இன்மை ஆகியவற்றால் துடைத்தொழிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனென்றால் மலாயாவில் இந்திய மக்களின் எண்ணிக்கை 858,614 மட்டுமே. அதில் 62.1 விழுக்காட்டினர் உள்நாட்டில் பிறந்தவர்கள்” என்ற கருத்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை கார்ல் வடிவேலா அவரது உரையில் சுட்டிக் காட்டினார்.
(இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளிவிபரப்படி இந்நாட்டில் வேலை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 4 மில்லியன் இந்தியர்களில் 687,718 பேர் துடைத்தொழிக்கப்பட்டனர். இவ்வளவு இந்தியர்கள் பலியாகி இருக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தெலுக் இந்தானை சேர்ந்த டாக்டர் (டி.எஸ்?) மேனன் என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இறந்த போன இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக போட்டு கொளுத்தி இருந்தால் மலாயாவின் வானத்தில் பல மாதங்களுக்கு இருளே இருந்திருக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.)
“பொருளாதார மற்றும் கட்டமைப்பு அடித்தளங்களை அமைத்து வளர்ச்சி கண்டு வரும் நவீன மலேசிய பொருளாதாரம் தோன்றுவதற்கு வழிவகுத்த அந்த பெயரற்ற இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமான நினைவுச் சின்னம் ஏதும் இல்லை. ஆனால், தொழிலாளர் வர்க்க இந்தியர்கள் அவர்களின் மூதாதையர்கள் விட்டுச் சென்ற உழைப்பின் சின்னத்தை மலேசிய தண்டவாளக் குறுக்குக் கட்டைகளிலும், ரப்பர் மரங்களிலும் காணலாம் என்று உங்களுக்கு கூறுவர்; ஒவ்வொன்றும் ஓர் இந்தியரின் உயிர் தியாகத்தை பிரதிபலிக்கிறது”, என்று கார்ல் வடிவேலா மேலும் கூறினார்.
கார்ல் வடிவேலா பெலே எழுதிய “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” (“Tragic Orphans – Indians in Malaysia”) என்ற நூல் செம்பருத்தி.கோம் வெளியீடாகும். இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த மாதம் கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில் தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதியின் தலைமையில் நடைபெற்றது.
இந்தியனே, உனக்கு என்ன இருக்கிறது?
சுமார் 100 ஆர்வலர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியை சுவாராம் மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் வழி நடத்தினார்.
இந்நாட்டிற்கு கூலிகளாக கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் பற்றி இதற்கு முன்னர் சில சிறப்பான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை இந்திய தொழிலாளர்கள் எவ்வாறு சாதி, சமய அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டு அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது என்பதை விவரிக்கின்றன. கார்ல் வடிவேலாவின் நூல் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் உழைப்பால் எப்படி பல நாடுகள், மலேசியா உட்பட, பொருளாதார ஏற்றம் கண்டன என்பதை வெளிப்படுத்துகிறது என்று கா. ஆறுமுகம் கூறினார்.
“மலாயா/மலேசியாவை வளப்படுத்திய இந்திய தொழிலாளியே, உனக்கு நீ வளப்படுத்திய இந்நாட்டில் என்ன இருக்கிறது?”, என்று ஆசிரியர் கேட்பதை இந்நூலில் காணலாம் என்றார் ஆறுமுகம். மேலும், சுரண்டப்படும் கொள்கைகளை கொண்டு ஒரு சுரண்டும் பொருளாதாரத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதின் ஆதிக்கம் மலேசியா விடுதலையடைந்தும் ஒழிக்கப்பட வில்லை என்றார்.
தோட்டப்புற தொழிலாளர்கள் ஒரு முழுமையான வளர்ச்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு வர்க்கமாகும். அதில் பெரும்பான்மை இந்தியர்கள், இன அடிப்படை கொண்ட அரசியல் கொள்கையால், பல மலேசிய திட்டங்கள் இருந்தும் பிந்தள்ளப்பட்டனர் என்றார் ஆறுமுகம்.
சிறந்த வரலாற்று குறிப்பு
இந்தியர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள பல நூல்களில் கெர்நியல் சிங் சாந்து மற்றும் சின்னப்பா அரசரத்னம் ஆகியோரின் நூல்களுக்குப் பின்னர் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான நூல் “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்”. இதன் ஆசிரியர் கார்ல் வடிவேலா பெல்லே மலேசியாவிலுள்ள ஆஸ்திரேலிய ஹைகமிசனில் ஆஸ்திரேலிய அரசதந்திரியாக பணியாற்றியவர் என்று நூலாசிரியர் கார்ல் வடிவேலாவை திறந்தவெளி பல்கலைக்கழக விரிவுரையாளரான முனைவர் எஸ். நாகராஜன் அறிமுகம் செய்தார்.
இந்நூல் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றை புதியதோர் கோணத்தில் பதிவு செய்துள்ளது. 1941 ஆம் ஆண்டில், கிள்ளானில் இந்தியர்கள் நடத்திய போராட்டத்திற்குப் பின்னர் இண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சிப் போராட்டம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் நிகழ்ச்சியாகும். அதற்கு ஆசிரியர் வடிவேலா முக்கியத்துவம் அளித்துள்ளார் என்று நாகராஜன் கூறினார்.
இந்நூலில் இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி கூறப்பட்டுள்ளவை நமது கவனத்தை ஈர்க்கின்றன. நன்கு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்த வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சம்பவங்கள் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது என்று கூறிய முனைவர் நாகராஜன், அதனைச் செய்வதற்கு இன்னும் பலர் முன்வர வேண்டும் என்றார்.
இந்தியர்களை அழித்துவிட முடியாது
இந்நாட்டின் பொருளாதார வளப்பத்திற்கு ஈடுயிணையற்ற உழைப்பைத் தந்த இந்தியர்களின் அடையாளமாக இருப்பது தண்டவாளக் குறுக்குக் கட்டைகளும் ரப்பர் மரங்களும்தான் என்று நூலாசிரியர் வடிவேலா கூறுகிறார். நோய்நொடிகளாலும், பசிப்பட்டினியாலும். பாம்பு மற்றும் கொசு கடிகளாலும், அயரா உழைப்பினால் ஏற்பட்ட சோர்வினாலும் பல இலட்சம் இந்திய தொழிலாளர்கள் இந்நாட்டில் துடைத்தொழிக்கப்பட்டனர் என்று வேதணையோடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர். ஆனாலும், அவர்கள் முக்கியமானவர்கள் என்பது நூலாசிரியரின் கணிப்பு. ஏனென்றால், இத்தனை ஆராத்துயரங்களை அனுபவித்தும் இந்தியர்கள் இந்த நாட்டிலும், உலகமுழுவதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் லிம் டெக் கீ கூறினார்.
இந்நூல் பல ஆண்டுகால ஆய்வுக்குப் பின்னர் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல் என்று டெக் கீ பாராட்டினார்.
இது இந்தியர்கள் பற்றிய பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும் என்றாரவர்.
“என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை நமக்கு தெரிய வேண்டும், ஒளிவுமறைவில்லாத உண்மை தெரிய வேண்டும். அதனை நாடியறிபவர்களின் முன்னோடி கார்ல்”, என்றார் டெக் கீ.
அனைவரும் படிக்க வேண்டும்
இந்நூலை ஆனந்தகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கொடுக்க வேண்டும். இதற்கான விடையை அவர்களிடமிருந்து காண வேண்டும் என்பதை டெக் கீ வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியிடம் அஸ்லி (ASLI-CPPS) என்ற அமைப்பு இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளது மற்றும் அதற்கான தீர்வு ஆகியவை குறித்து வழங்கிய அறிக்கை பற்றி டெக் கீ குறிப்பிட்டார். அந்த அறிக்கை எதிரணியிடமும் கொடுக்கப்பட்டது என்று கூறிய அவர், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை என்றார் (இந்த அறிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் 2006 செம்பருத்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது).
இந்திய சமூகத்தில் டத்தோக்களும் டான் ஸ்ரீகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் இருக்கின்றன. மேல்மட்டத்தினரும் இருக்கின்றனர். ஆனால், கீழ்மட்ட இந்தியர்கள் சுரண்டப்படுகின்றனர் என்றாரவர்.
இவற்றை எல்லாம் கண்டு சோர்வடையக்கூடாது; தோல்வி மனப்பான்மைக்கு இடம் கொடுக்கக்கூடாது.
சுய முயற்சியும், சுய பலமும்தான் வெற்றிக்கான ஒரே வழி. அதை நிரூபித்தவர்கள் உலகமுழுவதும் வாழும் இந்தியர்கள் என்று டெக் கீ கூறினார்.
வரலாற்றின் ஒவ்வொரு அங்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்
“மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை” என்ற நூலை 17 ஆண்டுகால ஆய்வுக்குப் பின்னர் எழுதிய ஜானகிராமன் மாணிக்கம் அவரது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையை சுருக்கமாகக் கூறி இந்தியர்களின் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது வேட்கையை விளக்கினார்.
தொடக்கம் முதல் இறுதி வரையில் நமது அடையாளம் பதிவு செய்யப்பட வேண்டும். அது நமது உழைப்புக்குச் சான்றாக அமையும் என்பதை ஜானகிராமன் வலியுறுத்தினார்.
ஆய்வு அடிப்படையிலான நூல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியல் தீர்வுதான் வழி
இந்தியர்களில் 10 விழுக்காட்டினர் நல்ல நிலையில் இதர சமூகத்தினர்களான மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களைப் போல் வாழ்கின்றனர். ஆனால், கீழ்மட்டத்திலுள்ள இந்தியர்களில் 40 விழுக்காட்டினர் மிகக் குறைந்த வருமானம் பெருபவர்களாக இருக்கின்றனர். இந்த வட்டத்திலிருந்து வெளிப்படுவதுதான் நாம் காணும் விரும்பத்தகாத செயல்பாடுகள் என்று “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி கூறினார்.
இந்தக் கீழ்மட்ட நிலையிலிருந்த இந்திய தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தொழிற்சங்கம் உதவத் தவறி விட்டது. தோட்டங்கள் துண்டாடப்பட்டது இதற்கு சான்றாகும் என்றாரவர்.
அரசியல் தீர்வின் வழி மட்டுமே இந்த 40 விழுக்காட்டினர் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியமாகும்.
இது முதலாவதாக ஒரு தமிழர் பிரச்சனை; அடுத்து, இந்தியர் பிரச்சனை; இறுதியில், நாட்டுப் பிரச்சனை. இதற்கு தீர்வு காண மஇகா தவறி விட்டது என்றார் பசுபதி.
நமக்கு சக்தி வாய்ந்த ஒரு கண்காணிப்பு அமைப்பு தேவைப்படுகிறது. நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அது பயன்படுத்தப்படவில்லை என்று கூறிய பசுபதி, கண்காணிப்பு பணியை நாம் செய்ய வேண்டும்; கண்டறியப்படும் பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாரவர்.
இப்பணியை கார்ல் வடிவேலாவின் “துயரார்ந்த அனாதைகள் – மலேசியாவில் இந்தியர்கள்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தொடங்குவோம் என்று கூறி நூல் வெளியீட்டை தொடக்கி வைத்தார் பசுபதி.
அடிமையாக்கப்பட்ட இந்தியர்கள்
இந்தியர்கள் மலாயா தீபகற்பத்திற்கோ, ஒட்டுமொத்த மலாய் கடல் தீவுகளுக்கோ புதியவர்கள் அல்லர். கிறிஸ்துவ ஆண்டுகால தொடக்கத்திற்கு முன்பிருந்தே அவர்களின் பண்பாடுகள், ஆட்சிமுறைகள் இந்நாடுகளில் நிலைகொண்டிருந்தன என்று கூறிய கார்ல், மலாயாவில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் வழி கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர் என்றார்.
பொருளாதார வலுவற்ற நிலையில் உழன்ற இந்தியர்களை அதிகாரவர்கத்தினரும் மேல்மட்ட மக்களும் துச்சமாக மதித்து ஓரங்கட்டினர். “நவீன மலேசியாவில் இந்திய தொழிலாளர் வர்க்கத்தினர் சமூகத்தின் எச்சமாக ஒதுக்கித்தள்ளப்பட்டு அவர்களை தொழிலாளர்கள், குடிகாரர்கள், நம்பத்தகாதவர்கள், கறுப்பர்கள், துர்நாற்றம் படைத்தவர்கள், ஆதரவை எதிர்பார்த்து வாழ்பவர்கள், எப்போதுமே முறையீடு செய்பவர்கள்” என்று மற்றவர்களால் இந்தியர்கள் தூற்றப்பட்டனர் என்று இந்தியர்கள் அனுபவதித்த எல்லையற்ற துன்பங்கள் பற்றி இண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான பி. உதயகுமார் கூறியிருந்ததை கார்ல் அவரது உரையில் குறிப்பிட்டார்.
பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்ட இனவாத அரசியல் மலாயா/ மலேசிய அரசியல், சமுதாய, கலாச்சார மற்றும் சமய வாழ்க்கையை ஆட்கொண்டது. இப்போது அந்த “இனவாத” எல்லைகள் மீண்டும் ஆழப்படுத்தப்பட்டு அரசியல் வானில் இன அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. “இனம்” சார்ந்த பிரச்சனைகளை முதன்மையாக, ஏன், அடிப்படையாகக் கொண்டு அதிகாரப்பூர்வமான கருத்து பரிமாற்றங்களைத் தீட்டும் உலகிலுள்ள வெகு சில நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்தும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நடைமுறையில், எவ்வித பொருளாதார வளமுமற்ற சிறுபான்மை இனத்தவரான இந்தியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் என்று கார்ல் மேலும் கூறினார்.
உண்மையாகவே, கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்து விட்டதாக சில ஆய்வாளர்கள் கூறியிருப்பதை கார்ல் சுட்டிக் காட்டினார்.
மொத்தத்தில், 150 வருடங்களுக்கு மேற்பட்ட, ஏழு தலைமுறைகளைக் கொண்ட இந்திய தொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கிய, ஏழை இந்தியர்களின் வரலாறு தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட, துயரத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.
எதிர்ப்பு தோன்றியது
இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புகள் தோன்றின. கிள்ளான் 1941 ஆம் ஆண்டு வேலைநிறுத்தம், தொண்டர்படையின் போராட்டம், தொழிற்சங்கங்களின் போராட்டம் போன்றவை முறியடிக்கப்பட்டன.
புதிய மலாயா/மலேசிய அரசாங்க கட்டமைப்பில் இந்தியர்களின் குரலை பிரதிநிதிக்கும் நோக்கத்தில் அம்னோ-மசீச கூட்டணியில் இணைந்ததால் இந்தியர்களின் அரசியல் கட்சியான மலாயன் இந்தியன் காங்கிரஸ் இந்தியர்களின் மேம்பாட்டிற்கான அதன் கொள்கைகளைக் கைவிடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த இனவாதக் கொள்கைகளும், 1971 ஆம் ஆண்டில் அமலாக்கம் கண்ட புதிய பொருளாதாரக் கொள்கையும், அதனால் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமுதாய, வாழ்க்கைத் தொழில் சார்ந்த, பொருளாதார மற்றும் கல்வி போன்றவற்றுக்கான வாய்ப்புகள் சுருக்கம் கண்டதால், பல இந்தியர்கள் மேம்பாடடைவதற்கான கதவுகள் மூடப்பட்டன என்றார் கார்ல்.
ஹிண்ட்ராப் ஊட்டிய எழுச்சி
தாங்கள் அதிகாரப்பூர்வமாக உதாசீனப்படுத்தப்படுவதை இந்தியர்கள் உணர்ந்திருந்தனர். தோட்டங்கள் துண்டாடப்பட்டது, 1969 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடியுரிமை பிரச்சனை, தோட்டங்களிலிருந்து இந்தியர்கள் பெருமளவில் கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, 2003 ஆம் ஆண்டு நடந்த கம்போங் மேடான் இனக் கலவரம் மீது விசாரணை மேற்கொள்ளப்படாதது மற்றும் தமிழ்ப்பள்ளிகள் மீதான பொதுவான அலட்சியம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று அவர் விவரித்தார்.
இத்தனை அசாதாரணமான சம்பவங்களுடன் இந்து கோயில்கள் அழிப்பு நடவடிக்கை ஹிண்ட்ராப் இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. கோயில் ஒழிப்பு விவகாரத்தை முன்வைத்து இந்திய கீழ்மட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தினருக்கு சவால் விட்டனர். ஹிண்ட்ராப் இயக்கத்தின் தோற்றத்திற்கு இந்து கோயில்கள் விவகாரங்கள் அடிப்படையாக இருந்தாலும், அது விரைவில் இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி போன்ற பிரச்சனைகளை அதன் போராட்டத்தின் முக்கிய அங்கங்களாக முன்வைத்தது.
ஹிண்ட்ராப்பின் போராட்டம் இந்து சமயத்திற்கு அப்பாற்சென்று சமுதாய நீதிக்கான போராட்டத்தை நடத்தியது இதர சமயங்களைச் சார்ந்த இந்தியர்களை கவர்ந்தது. அதன் விளைவாக மார்ச் 8, 2008 பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கைவிடப்பட்டது. இது இந்தியர்களின் அதிருப்தி அளவைக் காட்டியது என்பதோடு “அன்பான உதாசீனம்” இனிமேலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், எதிர்காலத்தில் பாரிசானுக்காக இந்தியர்களின் ஆதரவுக்கு நிபந்தனை உண்டு என்பதையும் தெளிவுபடுத்தியது என்று கார்ல் கூறினார்.
நஜிப் பிரதமர் பதவி ஏற்ற பின்னர், இந்தியர்கள் விவகாரத்தில் சற்று கவனம் செலுத்த தொடங்கியது மட்டுமல்லாமல் சில உருப்படியான சீர்திருத்தங்களையும் முன்வைத்தார். இவை பல இந்தியர்களின் வரவேற்பை பெற்றது. அத்துடன் அவரது ஒரே மலேசியா கொள்கை அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் ஒரு மலேசியாவை உருவாக்குவதாகும் என்று கூறப்பட்டதுடன், இனவாதக் கோட்டை மிருதுவாக்கி உண்மையான நிலைக்கேற்ப இன மற்றும் சமய பன்மை வாதத்தை ஏற்றுக்கொள்வதாகும். நஜிப்பின் இந்நிலைக்கு அவர்களுக்குள்ளே ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் ஆழ்ந்து பிளவுபட்டுக்கிடக்கும் மஇகாவால் புதிய தலைமைத்துவத்தையும் புதிய கொள்கைகளையும் உருவாக்க இயலாமல் போனது அல்லது அதன் அடிப்படை உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தத் தவறியது போன்றவற்றால் நஜிப்பின் திட்டம் விட்டுக்கொடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று கார்ல் கருத்து தெரிவித்தார்.
மீண்டும் பழைய, புதிய பொருளாதார கொள்கைக்கு திரும்ப வேண்டும்
மலாய்க்காரர்களின் வறுமையை நிவர்த்தி செய்யத் தவறினால், அதனால் விளையும் சமுதாய மற்றும் அரசியல் ஆபத்துகளை முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அம்னோ தலைவர்கள், நஜிப்பின் தந்தை அப்துல் ரசாக் உட்பட, தெரிந்திருந்தனர். இந்தியர்களின் வறுமைக்கு அரசியல் எதிர்வினையைத் திட்டமிட பாரிசான் நேசனல் அதே அளவுகோலைப் பயன்படுத்தப்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதாகும்.
புதிய பொருளாதாரக் கொள்கை 1971 ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட போது இன வேறுபாடின்றி வறுமை நிவர்த்தி செய்யப்படுவதை அது நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கார்ல் வலியுறுத்திக் கூறினார்.
இறுதியாக, தொடக்க கால புதிய பொருளாதாரக் கொள்கையின் சிறந்த குறிக்கோளுக்கு மீண்டும் செல்வது இந்திய ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பேருதவியாக இருக்கும் என்று கார்ல் கூறினார்
இந்தியர்களின் நிலை குறித்தும், தற்போதைய சூழலை விளக்கும் பட்சம், நாடு முழுமையும் செம்பருத்தி இயக்கத்தினர் விஜயம் செய்து சிறிய அளவிலான கூட்டங்களை நடத்தி மக்களை தெளிவு பெற வைக்கலாமே! சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால முதல் கூட்டத்தில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பங்குபெற்றதாக படித்த ஞாபகம். அதன் பின்னர் சீனாவின் வளர்ச்சி உலகறிந்த விஷயம். வட்டிக்காரனிடம் கைக்கட்டி நிற்கும் கடன்காரனைப் போல் நம் நாட்டு இந்தியர்கள் ம. இ.கா. வின் பின்னால் வால் பிடித்து நின்றது போதும். எழுந்து வாருங்கள். அடங்கி, ஒடுங்கி, நடுங்கி, முடங்கியது போதும். கடினம் என்பதால் ஒரு காரியத்தை முயற்சிக்காமலேயே விட்டுவிடுவது சோம்பேறித்தனம். அச்சத்தினால் ஒரு காரியத்தை நெருங்காமல் இருப்பது கோழைத்தனம். வருவது வரட்டும், காரியத்தில் ஈடுபடுவோம் என்பதே வீரத்தனம். முயல்வோம்.
உண்மைதான் ! இந்த ஏழையின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள்.இதில் இன்னொரு உண்மை என்னவென்றால் பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் இதே சிரமத்தைதான் அனுபவிகிறார்கள் என்பது உண்மை . சமிபத்தில் எனது மூன்று பிள்ளைகளுக்கும் ஒரே வருடத்தில் உயர்கல்வி கற்றிட அழைப்பு வந்திருந்தது. என்னசெய்வது என்று அறியாது,அண்டா குண்டாகளைஎல்லாம் அடகு வைத்து ,போதாகுறைக்கு ஆலோங்கிடம் தோலோங் கேட்டு , மூவரையும் அனுப்பி வைத்தேன். பிடிபிடின் கடன் வசதி இருந்தும்,அது தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு போதாது ! வட்டியில்லாத கல்விகடனுதவி கிடைக்குமா ? என்ற ஆதங்கத்தில் டத்தோ சரவணனின் ” நாம் அறவாரியம் ” அலுவலகம் நோக்கி , மகனையும் அழைத்துக்கொண்டு போனேன் . அலுவலகம் நுழையும் போதே டத்தோ உள்ளே இருப்பதை பார்த்தோம் , ஆனால் அவரின் பெண் காரியதரிசி ஒருவர் டத்தோ இன்று வரமாட்டார் என்று சொல்லி எங்களை அவமானபடுத்தி விட்டார் . நாம் அரவாரியத்தில் மிளகாய் மட்டும் தான் நடுவார்கள் போலிருக்கிறது!!! மனம் சிறிது சோர்வடைந்தாலும் , ம.இ.கா தலைமையகம் சென்று விசாரித்தேன். பெரும் வட்டியோடு கூடிய கடனுதவி திட்டம் தான் உண்டு , நீங்கள் கேற்பது போல் வட்டியிலா கடனுதவி திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் !!! ” அப்பா …நீங்கள் மட்டுமல்ல …பெரும்பாலான மாணவர்கள் என்னை போலவே உயர்கல்விகூடங்களில் இம்மாதிரியான சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் ” என்று சொன்னான். காத்தையா போன்றவர்கள் வெறும் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்காமல் , கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் அறவாரியம் அமைத்து ,அரசாங்கத்திடம் பெரும் தொகையில் மானியங்கள் வாங்கி குசாலமாய் இருக்கையிலே ,நிங்களோ அல்லது நானோ, அல்லது கூட்டாகவோ சேர்ந்து வட்டியில்லாத கல்வி கடனுதவி திட்டத்தை தொடங்கினால் வருங்கால சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் ! இன்னொரு வேதனையான விஷயம் …சமீபத்தில் தோற்றம் கண்ட கிம்மா என்ற மலேசிய இந்திய இஸ்லாமிய கட்சி ,அவர்களின் ஏழை மாணவர்கள் பயன் பெரும் பொருட்டு வட்டியில்லாத கடனுதவி திட்டத்தை அறிமுகபடுதியுள்ளர்கள் , ஆனால் அம்னோவுக்கு முந்தி தோன்றிய கட்சி என்று பிதட்ரிகொள்ளும் மா.இ.கா வில் நம் ஏழை மாணவர்களுக்காக அப்படி புனிதமான திட்டம் எதுவும் இல்லை! பாவம் ! அவர்கள் தான் என்ன செய்வார்கள் ,அவர்களுக்குள்ளே அடித்துக்கொல்வதெற்கே நேரம் பத்தவில்லை ,இதற்கெல்லாம் ஏது நேரம் !!!
நமது பழைய வரலாற்றைப் பார்க்கும் போதும் படிக்கும் போதும் போதும் போதும் எனும் அளவுக்குப் பெருமையாகவே இருக்கிறது. ஆனால் இன்னும் எத்தனை நூற்றண்டுக்குதான் இதையே சொல்லி சொல்லி நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்க முடியும்? அப்படி பெருமைப் பட்டுக்கொள்ளும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது? சஞ்சியில் வந்தோம்; கஞ்சி குடித்தோம். இன்று நம் பிஞ்சுகளுக்கு எதுவுமே இல்லையே” என்று எத்தனை காலம்தான் இப்படியே புலம்புவது? நமது வருங்கால சந்ததிக்கு இந்த புலம்பலைத்தான் நாம் மிச்சம் வைத்து விட்டுப் போக வேண்டுமா? இப்போது இருக்கும் எந்த அரசியல் கட்சியையோ, அரசு சார்பற்ற அமைப்புக்களையோ, இந்திய சங்கங்களையோ, இந்து சங்கங்களையோ நம்பி ஏமாறுவதை விட, அரசாங்கத்தில் உள்ளது போல எதிர்க்கட்சியிலும் நம்மை (இந்தியர்களை) பிரதிநிதிக்கும் ஒரு கட்சி வேண்டும். அந்தக் கட்சி சுயநலம் இல்லாத, சுரண்டல் பேர்வழிகள் இல்லாத கட்சியாக, அடிவருடாத கட்சியாக இருக்கவேண்டும். நமது உரிமைக்காகப் பாடுபடும் கட்சியாக, உள்ளவற்றையும் இழக்காதிருக்கும் அதேவேளை இழந்ததை மீண்டும் மீட்கும் வகையில் அந்த கட்சி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக, நமது மக்கள் தொகையை உயர்த்த என்ன செய்ய முடியும்? நமது இளைஞர்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திப்போம். ஆனால் அதற்காக நமது பழைய வரலாற்றை மறந்து விடச் சொல்லவில்லை. மாறாக, இந்த மாதியான நூல்கள் தமிழ்ப்பள்ளி நூலகங்களில் இடம்பெறச் செய்வதோடு, ஆசிரியர்கள் இதை ஒரு புறப்பாடமாக மாணவர்களுக்குச் சொல்லித்தர முன்வர வேண்டும். மிகக் குறைந்த விலையில் எல்லா இந்தியர்களையும் இது சென்றடைய வேண்டும். இங்கே நான் சொன்னது எத்தனை பேருக்கு புரிந்தது? எத்த்னை பேர் இதை ஆதிரிக்கிறீர்கள், கையை உயர்த்துங்கள் பார்ப்போம்…
ஆமாம் ,,சீனர்கள் போல் ஒற்றுமை இல்லாதவர்கள் இவர்கள் ,பின்ன கொசு கடிக்காம ?
சாணக்கியன் சொல்வது சரியே ! பழைய பெருமைகளை சொல்லிக்கொண்டு மாய உலகில் இருப்பது ஒருவகையில் மூடத்தனமே ! நம்மில் இன்று மூன்று விதமான தரப்பினர் இருகின்றனர் . முதலாவது தரப்பினர் சமுதாயதிற்கு என்ன நேர்ந்தாலும் பார்த்துகொண்டு சும்மா இருந்துவிடுபவர்கள் . இரண்டாவது தரப்பினர் வெற்று அறிக்கைகளை விட்டுகொண்டு மலிவான விளம்பரம் தேடிகொல்பவர்கள் . மூன்றாவது தரப்பினர் நடப்பு நிலைமைகளை தனக்கு சாதகமாக்கி சுயநலமாக பணம் பண்ணும் அரசியல்வாதிகள். நெல்சன் மண்டேலா போல், அன் சான் சூகி (மியன்மார் ) போல் சொந்த இனத்துக்காக தியாகம் செய்யும் தலைவர்கள் இன்று நமக்கு தேவை . அடுக்கு மொழி பேசி அசத்தும் தலைவர்கள் நமக்கு தேவையில்லை , ஆயுதமேந்தி பவனி வரும் கட்டபஞ்சாயத்து தலைவரும் தேவையில்லை , எல்லாம் சரிதான் , இப்போது பூனைக்கு யார் மணி கட்டுவது?
¨பிரிடிசாரிடம் கேட்படஹை கேட்போம் . கல்வி கற்ற பிள்ளைகளை கடனாளி ஆகிவிட்டோம் அதுவும் எம்.ஐ இடம் பிள்ளைகளின் வட்டி பணத்தில் முடி நாடும் தலைவரிடம் .
சிங்கம் மற்றும் சாணக்கியரின் செயலாக்கம் பற்றிய தகல்வகள் வரவேற்கத் தக்கது. ஆளுங் கட்சியும் சரி எதிர் அணியும் சரி நமக்காக பெரிதாக ஒன்றும் செய்து விடப் போவதில்லை. ஆங்காங்கே ரொட்டித் துண்டைப் பிச்சு போடுவதுபோல்தான் போட்டுக் கொண்டிருக்கின்றார்களே ஒழிய நீண்டகால நிரந்திரத் தீர்வுக்கு வழியை காணோம். நமது அரசியல் கட்சிகளும் அவ்வாறே. மேலும் அரசாங்க மானியத்தில் குளிர் காயும் இந்திய இயக்கங்களில் பெரும்பாலானவை சுயநலக் கிருமிகளால் ஆதிக்கம் செய்யப் பட்டுள்ளன. இதன் காரணமாகவே, படித்தவர்கள் பண வசதி உடையோர் அரசியல் கட்சிகளையும், பல இந்திய இயங்களையும் நம்பி பணம் கொடுப்பதற்கு முன் வரவில்லை. இப்படி பாதிப்படைபவர்களில் தாப்பா பாலாஜி போன்றோர். திரு பாலாஜி அவர்களுக்கு, தங்களின் பிள்ளைகளின் உயர்நிலை படிப்பிற்கு அவசரத் தேவையாக இருப்பின் டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் அறவாரியம் மூலம் வட்டி இல்லா கடன் தொகை RM10,000/= வரை பெற முடியும். மேலும் பெற வேண்டுமானால் தங்களின் நிலையை அவ்வாரியத்தின் பொறுப்பு அதிகாரியாக இருப்பவரிடம் தெரிவியுங்கள். இவ்வுதவியை பெற இந்த டெலிபோன் எண்ணில் இருக்கும் நபரின் உதவியை நாடுங்கள். 0165331008. இவர் பேராக் மாநில அரசாங்கத்தின் வழி கொடுக்கப் படும் வட்டியில்லா கடன் மற்றும் உதவித்தொகை பெறவும் வழிவகையை தங்களுக்கு காட்ட முடியும். இதனை அடுத்து தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் MCF எனப்படும் அறக்கட்டளையின் வழி கடனில்லா உதவித் தொகை பெற முடியும் இதற்கான முகவரி 122, Jalan Berhala, Brickfields, KL Tel: 03-22734535. முயற்சி செய்யுங்கள். மேலும் விபரம் அறிந்தவரை நாடுங்கள். நாம் செம்பருத்தி இணையத்தையே நமது தொடர்பு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம். நம் பிள்ளைகளின் உயர் நிலை படிப்புக்காக பல இயக்கங்கள் உதவ முன் வரும்.
வேலப்பா என்னா தமிழப்பா…. அப்பப்பா…. போதுமப்பா….கண்ணும் காதும் குளிர்ந்து விட்டது உமது தமிழைக் கேட்டும் கண்டும்….
அந்நாளில் நமது முன்னோர்கள் பட்ட வேதனைகள் மனதை இரணமாக்குகின்றது…! நமது கக்ஷ்டகாலம் அந்தக் காலத்தோடு முடிந்துவிடவில்லை. அவை இன்றும் தொடரும் துயரங்களாகவே உள்ளது.
1.மகாதீர் எனும் சுயநலவாதி மலாய்க்காரர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டியும் தனது அரசியல் ஆதாயத்திற்காகவும் சீனரிடம் இருந்து வியாபார வாய்ப்புக்களை பறித்து மலாய்க்காரனுக்கு தாரை வார்க்க முயன்றான், தங்கள் சாமர்த்தியம், ஒற்றுமை, பிரளாத தலமைத்துவம் கொன்டு ஓரளவுக்கு அவனிடமிருந்து தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் தற்காத்துக் கொண்டனர் சீனர். அவனின் அடுத்த குறியாக அரசாங்க உத்தியோகத்திலிருந்த இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளை குள்ள நரித்தனமாக பறித்து மலாய்க்காரர்களுக்கு தாரை வார்த்தான். அவன் அதில் ஜெயித்தான், தனது சம்பந்தியின் துணையோடு…! இன்று அரசாங்கத்துறையில் நமது வாய்ப்புகள் என்ன ?
2. அவன் வழியில் இன்றும் நமக்கான கல்வி, பொருளாதார, அரசியல் வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன, தவிர்க்கப்படுகின்றன. காரணம், நம்மைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் சுயநலத்தால்…!
இப்போது ஆஸ்ட்ரோவில் “GST” யை நியாயப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று, “நிஜம்” என்ற பெயரில் நமது அரசியல்வாதிகள் அதில் எப்படி “GST” யை நியாயப்படுத்த “நடிக்கிறார்கள்” என்பதைப் பாருங்கள், இன்னும் பற்றிக்கொன்டு வரும் கோபம்…! நமமை மேலும் கக்ஷ்டப்படுத்த அடுத்தவன் தேவை இல்லை இவன்களே போதும்
ஐயா, எனக்கு ஒரு விஷயம் புரிய வில்லை. தயவுசெய்து விளக்குங்கள். 7% இருக்கும் மலேசியா தமிழர்கள்/அல்லது இந்தியர்கள், அடுத்த 20 ஆண்டுகளில் நம் நிலைமை என்ன ? மேலும் தற்போதுள்ள 14% வெளிநாட்டு காரர்கள் (இந்தோனேசிய, மியான்மார், நேப்பாள், பங்களாதேஷ், அவர் இவர் என்று வைத்து கொள்வோம்) இவர்களின் இனபெருக்கம் எப்படி இருக்கும் மலேசியாவில் ? அவர்கள் குழந்தைகள், மனைவிகளுக்கு என்ன என்ன சலுகை கிடைக்கும் ? அவர்களின் குழந்தைகள்ளுக்கு குடி யுரிமை கிடைக்குமா ? கிடைத்தால் நம் நிலைமை என்ன வாகும் ?
theni அவர்களுக்கு நன்றி . உங்கள் மனதில் ஈரம் இருப்பதை அறிந்தேன்,இப்போது அது பெரும்பாலோர் நெஞ்சில் இருப்பதில்லை !
ஐயா தேனி, தங்கள் விபர பறிமாறலுக்கு நன்றி. MCF குறித்த மேலதிக விபரங்கள் கிடைக்குமா? அதாவது அகப்பக்க முகவரி..?
நண்பர் theniஅவர்களின் தகவல்கள் மிகவும் பயனானவை, உயர்கல்விக்கு பிள்ளைகளை அனுப்ப விரும்பும் பெற்றோர்களுக்கு அவசியமான தகவல்கள். நாமும் உதவி தேவைப்படுபவர்களிடத்தில் இத்தகவலை பகிர்வோம். பகிர்வுக்கு நன்றி.
தேனீ அவர்கள் பல தொடர்பு எண்களையும், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளையும் தந்துள்ளார். இவர் புரியும் இப்பேற்பட்ட சிறு உதவிகளை கூட தற்போதைய பெரும்பாலான அரசியல்[வி]வாதிகள் செய்வதில்லை.
இதனால்தான் இந்த அர (சியால்) வாதிகள் அம்னோவுக்கு கூலிப் படையாய் கூஜா தூக்குகிறார்கள்!!!!
MCF – ன் வட்டி இல்லா கடன் தொகை கீழ்காணும் நிபந்தனைகளுடன் கொடுக்கப் படுகின்றது:
Medicine – only for final 2 years
Non-Medicine courses – 2nd year onwards provided that you must have applied for PTPTN loan but is rejected or to up the PTPTN Loan.
Only for local university.
MCF – க்கு இணைய வலைப்பகுதி இல்லை. இருப்பினும் மின் அஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்: [email protected]
அரசாங்கத்தின் உதவியுடன் தொழில் அதிபர் டான் ஸ்ரீ ஞானலிங்கம் அவர்களின் முயற்சியில் INDUS EDUCATION FOUNDATION RM10Million கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு உரிய அறவாரியம் என்பதால் முதலில் இந்த அறவாரியத்தில் கடன் உதவி அல்லது கல்வி நிதி உதவிக்கு முயற்சி செய்யுங்கள். இவர்கள் Foundation Course – க்கும் உதவி செய்கின்றார்கள். இந்த அறவாரியத்தின் இணைய தளத்தின் முகவரியை கீழே இணைத்துள்ளோம்:
http://indus.org.my/
தொ.எண்: 03-9054 9523
எத்தகைய உதவி தேவைப் படுகின்றது என்று குறிப்பாக கேட்டால் தகுந்த நபர்களை தொடர்பு கொண்டு வழிகாட்ட முடியும்.
உண்மை வெகுதூரத்தில் இல்லை.அது நிச்சயம் வெளிவரும்.அப்போது பலருக்கு வலி வரும் என்பதும் நிச்சயம்.வாழ்த்துகள் ஹிண்ட்ராப் போராளிகளே.உங்கள் முயற்சி திருவினையாக்கும்.
தேனீ அவர்களே..பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல..வாழ்த்துக்களும் கூட!
தேனீ ,உங்களின் பயனுள்ள கருத்துகளுக்கு நன்றி .
நாம் நிறையவே எழுதுகிறோம் ,பேசுகிறோம் .ஆனால் ,நம்மில் காலம் காலமாக உள்ள ஒரே நோய் அனைவரும் திடீர் தலைவர்களாக ஆசைப்படும் சமுதாயமாக …,மாறி எந்தத் தலைவனையும் உருப்படியாக காரியமாற்ற விடுவதில்லை
ஒருவனின் பார்வையில் அவர்களே ! எந்த தலைவனையும் உருப்படியாக காரியமாற்ற விடுவதில்லை என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த தலைவனும் உருப்படியான காரியமாற்றுவதில்லை என்பதே சரியென்று நினைகிறேன்.
தாப்பா பாலாஜி சொன்னது சரிதான்.
நண்பர் ஒருவனின் பார்வையில் அவர்களே,
“எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதே இன்றைய நமது பரிதாப நிலை. அதைப் பயன்படுத்தி பலர் கட்சி துவங்கி அரசியல் ஆதாயமடைந்து தாமும் தமக்கு வேண்டியவர்களுக்கும் சொத்து சேர்க்க அலையும் காலம் இது. இதை நாமும் கண்கூடாகக் காண்கிறோம். எல்லா அரசியல்வாதிகளும் அல்ல, ஆனால் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அவ்வாறே.
நாம் இங்கே எழுதுவதும் பேசுவதும் அரசியல்வாதிகளுக்காக அல்ல. இனி நம் சமுதாயம் விழிப்படைந்து, உண்மை நிலை உணர ஒரு சிறிய வாய்ப்பாக இவை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். ஏனைய நண்பர்கள் பலரின் எழுத்துக்களும் இதையே புலப்படுத்துவதை நாம் உணர முடிகிறது. ” நமது முடிவுகள் சரியாக அமையும் பட்சத்தில் நமக்கு நாமே தலைவன். நமது தலைவன் என்ற பெயரில் ” நம்மை பிரதிநிதிப்பதாக கூறுபவனும் உண்மையில் மக்கள் தொண்டனே “.
தமிழில் அன்றே எழுதினான் / நன்றே சொன்னான் ,
வாய்ச்சொல்லில் வீரரடி என்று ,!
நான் சொல்ல வந்தது பழையதும் உண்டு ,புதியதும் உண்டு !
பழையது சம்பந்தன் பட்ட /ஒத்துழையாமை , கூட இருந்ததே குழி பறித்து செய்த துரோகங்கள் ….,
புதியது ஹிண்ட்ராப் அமைவும் …,அதன் ஆரம்ப நிலை போராட்டவாதி ,நம்மக்களாலேயே
புறம் தள்ளப்பட்ட நிலை …மிகவும் கேவலமான ஈனச் செயல் ,அதிலும் காவற்காரனாக வைத்த
ஒருவன் எட்டப்பனாகிய கதை ….,அதையும் ஏற்றுக் கொண்டு கொண்டாடும் ஒரு கூட்டம்
இது தான் தமிழின சாபம் ….,இதை காலம் காலமாக நாம் கண்டு வருவது ஒழிந்த்ததாக
இன்று வரை மாற்றம் ……..,காணோம் !
வாய்ச் சொல்லில் வீரம் …, மாற்றம் ???
தடி எடுத்தவன் எல்லாம் தண்டலாகும் (தலைமை ) / தண்டலாக்கப் படும் மக்கள் மத்தியில்
காரியங்கள் சாதனைகளாகுமா???
மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது, நமது சமுதாயத்தின் தெளிவான சிந்தனை, ஒற்றுமை, சரியான முடிவெடுக்கும் மனப்பான்மை மட்டுமே நமது எல்லா வெற்றிகளுக்கும் வழிவகுக்கும்.
சிறுபான்மையினர் என சிறுமைப்படுத்தப்படும் நாம் வலிமையானவர்களே ( நமது ஓட்டு தேவையில்லை என்று சொன்ன அம்னோ அரசியல்வாதிகளும் பின்னர் இந்தியர்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டும் என வெட்கமின்றி நாம் சொல்ல வைத்திருக்கின்றோம் அல்லவா..! ) அந்த சரியான முடிவெடுக்கும் திறமை நம்மை ஜெயிக்கவைக்கும், தேவை கொஞ்சம் தெளிவும், நிறைய ஒற்றுமையும் நமது சமுதாயத்திற்கு…!
நான் இப்போது வெளி நாட்டில் இருக்கிறேன் .கணினி பிறருடையது .
என் நினைவு தெரிந்த நாள் தொட்டும் …,ஏறக்குறைய 10 ஆண்டுகள்
நம் சமுதாய அமைப்பில் தொண்டாற்றிய அனுபவம் கொண்டும் …,
ஒரு 60 ஆண்டுகள் நம் நிலையை கவனித்து வந்த அனுபவத்தைக்
கொண்டும் சொல்லுகிறேன் …,பக்கத்திலேயே வெற்றி கொண்ட சமுதாயமான சீனர்களை பார்த்தும் இங்கே பதிப்பிக்கிறேன் நம்
இனம் ஏதோ சபிக்கப் பட்ட இனம் போல் இங்கு மட்டும் அல்ல ,நம்
முன்னோர்களின் பூமியிலும் …எங்கும் தெரு நாய் போக்கு தான் .
இங்கும் ஒரு புதுக் கவிதை செம்பருத்தியில் கண்டேன் !
தனியொருவனாக நாம் நம்மை உயர்த்தினால் அன்றி …நாம் பிறர் ஊட்டி வளர்வது கனவாகவே போகும் .
இங்கே சிலர் தலைமைகள் பற்றி எழுதியது அவர் தெரிந்தது …?
ஆனால் , நான் சொல்லுகிறேன் நம் மக்களில் அநேகர் …நல்லவர்களை …தொடர்ந்து சேவை செய்ய விடவில்லை என்பதும்
வரலாறு சொல்லும் உண்மை என்பதை நன்கு தெளிவாக ஆய்வு செய்தால் ,தெரியும் !
இந்த உண்மை நாடு நிலையாளர்கள் மட்டுமே சொல்லமுடியும் !
காழ்ப்புணர்வு கொண்டோர் வாரி இறைக்கும் அறியாமை கொண்டு
அல்ல !
நம் நல்ல தலைவர் அமரர் சம்பந்தனார் மக்கள் நலனுக்காக எவ்வளவோ தியாகம் செய்தவர் …,அவர் தொடங்கிய கூட்டுறவு
மாபெரும் சாதனை !
தொடர்ந்து அதை அவர் முன்னேற்ற விட்டார்களா கூட இருந்த தளபதிகள் …,பங்காளிக் கட்சியினர் ?
நாங்களும் தோட்டம் வாங்குகிறோம் …, தொழில் தொடங்குகிறோம்
என மக்களை திசை திருப்பினார்கள் !
ஒன்று சேர வேண்டிய நிதி சிதறியது …,மற்றவர்கள் வசூலித்தும்
செய்த சாதனை என்ன ?
நஷன பட்டதும் /கஷ்ட்டப் பட்டதும் ஏமாளி சமுதாயமே !
பலரை நட்டாற்றில் விட்டு அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் !
இது போல் எண்ணற்ற சமுதாய துரோகிகள் நம் இனத்தினரை எழ
விடாமல் முடக்கிய கதைகள் சொல்லி ஓயாது !
இன்னும் நம் கால தலைவர் ஒருவரின் ஆரம்ப கால நல்ல செயல் திட்டங்களை தொடர்வதில் இருந்து …,கட்சியில் தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்கி …,ஓயாமல் கட்சிப் போராட்டமே பெரிதாக எல்லாம் பாழாய்ப் போன நிலைமைகள் நடு நிலையாளர்கள் ஆய்வு
செய்து தெரிவிக்கவேண்டிய உண்மைகள் பல உண்டு !
இப்படி பண்ணிய புண்ணியவான்கள் சிலரை என் காலத்திலேயே நான் கண்டுள்ளேன் …,சில காலத்திலேயே அழிந்து போன / சிதைந்து போன அவர்களை நல் நோக்கோடு காண்போர் கட்டாயம் உணர்வர் !
பல வரலாறுகள் படிப்பினை காட்டியும் இந்த இழி குணத்தோர் திருந்தியதாக காணோம் !
நுனிப் புல் மேயும் பழக்கம் நம் சமுதாயத்திற்கு நன்மை பயக்காது !
அறிவிலார் தூற்றல் யாவும் உண்மையாகி விடாது !
நம்மை அழிக்கத் துணிந்தவர் நம் உடன் பிறப்பே ! அது ஓய்ந்ததாக
வரலாறு இல்லை !
நன்றாக வந்த ஹிண்ட்ராப்பை கொன்றவர்களை நாம் மன்னிக்கக்
கூடாது !
ஒருவனின் பார்வையில் ! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? யாரோ ஹிண்ட்ராப்பின் காவல்காரன் என்கிறீர், அவன் எட்டப்பன் ஆகிவிட்டான் என்று சொல்கிறீர் . அந்நபரின் பெயரை சொல்ல பயமோ ? எட்டப்பன் ஆனாலும் சரி , அல்லது சுட்டப்பன் ஆனாலும் சரி பெயரை சொல்லுங்கையா !!!
தேனீ அவர்களுக்கு , மீண்டும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன், நீங்கள் சொன்னதுபோல் mcef அறவாரியம் சென்றேன். அது brick field , jalan berhala வில் ஒரு புத்த ஆலயம் எதிரில் அமைந்துள்ளது. அங்கே mercy என்ற பெயருள்ள அதிகாரியை சந்தித்தேன். அவர்கள் மிகபனிவன்புடன் பேசி, சகல விளக்கங்களையும் தந்து விண்ணப்ப பாரத்தையும் கொடுத்து உதவினார்கள்.
” அற்ராலும் பால் சுவை குன்றாது, கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”. இதில் ஒரு வரி ஞாபகம் இல்லை , தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
தாப்பா பாலாஜி …,நீங்கள் மலேசியாவிற்கு நேற்று தான் புதிதாக வந்தவரோ ?
ஹிண்ட்ராப் போராட்டம் என்பது நடந்த போது நிகழ்ந்தவை நாடே…,இல்லை…; உலகத் தமிழர்கள்
மட்டும் அல்ல …பிற மொழி ஊடகங்களும் படம் பிடித்து காட்டினவே !
தொடர்ந்து ,
வளர்ந்த பிற பிற நிகழ்வுகளும் ,இறுதியாக நடத்தப் பட்ட கீழறுப்புகளும் உள்ளங்கைப்
புண் …!என்ன …? உண்மை …ஊமையாகிப் போன கதை …,சில கேவலமான பிறவிகள்
கோடிகளுக்கு விலை போன துரோகம் …,சூடு சொரணை உள்ள தமிழன் மறக்க மாட்டான் !
இனி அவர்களின் பெயரை வேறு புதிதாக இங்கே பதிக்க வேண்டுமா ?
செம்பருத்தி நன்றாக இருப்பதை …,வம்பில் சிக்க விடணுமா ?
இப்போது தான் ஊடகத்தனர் அணுக்கமாக கவனிக்கப் படுகிறார்களே !
நம் எட்டப்பர்கள் காலங்கள்
தோறும் எவ்வளவு கொடூரமாக; தான் வாழ சமுதாயத்தை விலை பேசினார்கள் என்பது
வெள்ளிடை மலை !
ஆனால் ,எவரும் 100 ஆண்டுகள் வாழ்ந்து அள்ளிக் கொண்டு
போனதாக இல்லை !இனியாவது இந்த ஈனப் பிறவிகள் திருந்த வேண்டும் .
ஒருவனின் பார்வையில் .
ஐயா ஒருவனின் பார்வையில் அவர்களே ! ஆக மேலே என் கருத்தை பாருங்கள்,ஒரு டத்தொவின் பெயரை நான் குறிபிட்டுள்ளேன் . அது ஒருவகையில் எனக்கு ஆபத்தாக கூட முடியலாம். அதர்மத்தை அழிக்கவேண்டும் என்றால் மனதில் துணிச்சல் வேண்டும். ஒரு ஆளின் பெயரைக்கூட எழுத நெஞ்சிலே தில்லு இல்லையானால், நீ ங்களேல்லாம் எதற்கு ஐயா கோதாவில் குதிகிறிர்கள்? ஒரு ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள், அது போதும் உங்களுக்கு !!!
தாப்பா ( TAPAH )என்பது என் ஊரின் பெயர் , பாலாஜி என் சொந்தப்பெயர் ! உங்களைபோன்று ” ஒருவனின் பார்வையில் ” என்ற புனைபெயரில் நான் ஒளிந்து வாழவில்லை. இதிலே தெரியுதா , நம்ப தில்லு என்னான்னு !!!
‘குந்தா கிந்தே’ என்று ஒரு தொடர் நாடகம் பல வருடங்களுக்கு முன் இந்நாட்டு தொலைக்காட்சியில் 30 வருடத்திற்கு முன் ஒரு தொடர் நாடகம் ஒளிபரப்பியதை பலர் கண்டிருப்பீர். கருப்பு இனத்தவர் ஆடு மாடுகளைப் போல் அமெரிக்காவிற்கு கொண்டு வந்து ஆங்கிலேயர்களுக்கு அடிமைக் கூலிகளாக விற்கப் பட்டனர். அவ்வாறு வந்த பரம்பரையின் மகன்தான் இன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா. முஸ்லிம் தகப்பானாருக்கு பிறந்த கருப்பு இன மகன் வெள்ளையர்கள் நாட்டிற்கு தலைவனாக வந்தது 400 வருடங்கள் கழித்து. காலமாற்றம் என்பது அரசியலில் மாற்றம் கொண்டு வரும். இன்று இன அடிப்படியிலான அரசியல் ஆட்சி இந்நாட்டில் நடப்பது போல் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரும் அமெரிக்காவிலும் நடந்தது. மக்கள் அரசியல் தெளிவும், மனித உரிமைக்கு இன, மத பாகுபாடின்றி முன்னுரிமை கொடுத்தால் நாமும் இந்நாட்டில் தலைவராகும் காலம் வரும். அது வருவதற்கு முன் நாம் நமது பொருளாதார பலத்தை பெருக்குவதற்கு தனிநபர் மற்றும் கூட்டுக் குழுக்களாக இணைந்து செயல்படுவோம். இவ்வாறான காரியத்திற்கு சமூக தொண்டில் எவ்வாறு மார்தின் லூதர் கிங் கருப்பு இன மக்களின் உணர்ச்சியை ‘I have a dream’ என்று சொல்லி சுண்டி இழுத்தாரோ அவ்வாறே திரு. பசுபதி போன்றோரும், திரு. ஆறுமுகம் போன்றோரும், திரு. காத்தையா போன்றோரும், திரு. சிங்கம் போன்றோரும் நம் மக்களை சுண்டி இழுக்கும் உணர்ச்சியை ஊட்ட வேண்டும். இதுவே இந்நாட்டில் இந்தியர்கள் .எழுச்சி பெற வழி வகுக்கும். மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு தன் சுய இலாபத்திற்கு PWTC – ல் MIED பணத்தைக் கொண்டு கை தட்டல் வாங்கும் தலைவர்களால் இந்தியர்கள் முன்னேறப் போவதில்லை. இது நிச்சயம்.
athuyellam சேரி நம் முன்னோர்கள் ஜப்பான்-கரன் கிட்ட ரயில் தண்டவாளம் வேலை செய்து இறந்து போனார்கள் அதக்கு ஜப்பான் குடுத்த நாசத ஈடு எங்கே? ஏன் நம் இனதிற்கு வந்து சேரல?
நன்றி Theni! நல்ல விஷயத்தை சொன்னார். தற்போதைய மலேசிய இந்தியர்கள் பழையதை பேசி, காலம் கழிக்காமல், புதிய சிந்தனைகள் துளிர்வ்விட, தங்களால் ஆன கருத்துக்களை வெளியிட வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, தேனீ கூறுவதைப்போல, தனி நபர் வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்திநோமென்றால், எதிர்காலத்தில் எதனையும் சாதிக்கலாம். நம்மால் முடியும். துணிவோம். தோல்விகளை காலில் போட்டு மிதிப்போம். எதிர்ப்புகளை புன்னகையோடு வரவேற்று, தந்திரமாக செயல்படுங்கள். நமக்கு வேண்டியது, குறைந்த பேச்சு, நிறைந்த சிந்தனை. தனிமனித வெற்றி, சமுதாயத்தின் வெற்றி. ‘மகனே உன் சமத்து, மெல்ல மெல்ல நவுத்து.’
சிங்கம் அவர்களே ! உங்கள் கருத்து ஏற்புடையதே . ஆனாலும் இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே ! எதையும் எதிர்பார்க்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்ட நமது சமுதாயம், முன்பு ம.இ .கா வை நம்பினோம். அது மண் குதிரையானது . பின்பு ஹிண்ட்ராப்பை நம்பினோம், அது பொய்கால் குதிரை ஆனது ! இனி எதை நம்புவது ? யாரை நம்புவது ? எதிர்கட்சியை நம்பினால் அது மாயக்குதிரை என்பது நன்றாகவே தெரியும் ! நம்மை காபாற்ற ஒரு நெல்சன் மண்டேலாவோ , அல்லது ஒரு ஆன் சான் சூகியோ நம்மிடதில் தோன்றினால் அதுவே நமக்கு விடிவெள்ளியாகும்!!!
,//இந்த ஹிந்ட்ரப் நாளே இப்ப ஏன்னா ஆச்சி ?GST இலே வச்சானுங்க ஆப்பு .எல்லதுக்கேமே காரணம் ஹிந்ட்ரப் தான்//
ஆமாம் எல்லாவற்றுக்கும் காரணம் ஹிண்ட்ராப் தான், அரசியலில் மிகவும் லாவகமாக ஒதுக்கப்பட்டு, நம்க்கான உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, “third class citizen” என நிராகரிக்கப்பட்டு, நமது சமூகம் வறுமையில் அல்லாட, சில சுயநயசெம்மல்கள் மட்டும் அரசாங்கத்திடம் நம்மை பிரதிநிப்பதாக எலும்புத்துண்டுகள் பெற்று தங்களை வளப்படுத்திக்கொள்ள, நமது இளையோர்கள் (குண்டர்கும்பலாகவும், வழிப்பறியர்களாகவும் மாறி குண்டடிபட்டு சாக, வறுமையும் பெரும் காரணமாக அமைந்த நிலையில், ஹின்ட்ராப் எனும் அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலில் நாம் யார் , என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை நமக்கு தெளிவாக புலப்படுத்தியது
நமது சகோதரிகள் சீரியல்களை விட அரசியலும் முக்கியம் என விழிப்படைய, வாய்சவடால் அரசியல்வாதிகளிடமிருந்து நாமும் கொஞ்சம் விழிப்படைய என யாவற்றையும் செய்தது ஹிண்ட்ராப் எனும் இயக்கம்தான், இல்லையென்று மறுக்க இயலுமா உம்மால் ?
தன் கையே தனக்குதவி என்று நம்பி நடைபோடு. வெற்றி நிச்சயம். இது சத்தியம்.
அன்று இந்நாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று மக்களிடம் காசு வாங்கிக் கட்டிய பல்கலைகழகத்தை, இன்று ம.இ.க. ஓர் அரசியல் கட்சி. அதற்கும் MIED -க்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தானைத் தலைவர் கேள்வி கேட்ட உடனே, பேசியது என்னவென்று தெரியாமலேயே, விசிலடிச்சான் குஞ்சுகள் கை தட்டி ஆர்பரித்தனர். இந்த கூட்டமா (?), இந்தக் கூடமா(?) இந்நாட்டு இந்தியர்களை கடையேற்றப் போகுது (?). வேண்டாம் நமக்கு பங்கு இந்த கூட்டுக் களவாணித் திட்டத்தில்.
தனிமனித முன்னேற்றமே சமூக முன்னேற்றமாகும், தன்னையுணர்ந்து, தன் அறிவையும், ஆற்றலையும் சரியான முறையில் பொருளீட்ட வழிசெய்து கொன்டு பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும், சீக்கியர்களும் , சீனர்களூம் பொருளாதார வழியில் தங்களை மேன்மைபடுத்திக்கொன்டு உயர்ந்து நிற்பவர்கள், எல்லா வகையிலும் தம்மை உயர்த்திக்கொன்டவர்கள் தம் சமூகத்திற்கும் தன்னாலானதை செய்ய முன்வரவேண்டும், ” நீருயர நெல்லுயரும்” நமது பொருளாதாரம் உயர நாமும் உயர்வடைவோம்.
எங்கிருந்தோ வந்த பங்களாதேசிகள், மோட்டாரில் , ஐஸ்கிரீம், துணிமணிகள், அழகுப்பொருட்கள் என வியாபாரப் பொருட்களை சுமந்துகொன்டு வீடு வீடாக வியாபாரம் செய்கின்றனர், இன்னும் சில காலத்தில் அவர்கள் நம்மை மிஞ்சி விடுவார்கள், ஆனால் நமது இளையோர் கத்தியும் கப்படாவுமாக, வழிப்பறி, கூலிப்படை என திரிந்தால் எதிர்காலத்தில் நம் நிலை ? இதைக் களைய ஒவ்வொரு குடும்பமும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் குடும்பத்தில் வன்முறையாளன் வளர்வதை அனுமதிக்கக்கூடாது, சொந்தக் குடும்பம்தான் அவர்களை திருத்த வேண்டும், சிறைச்சாலை சென்றால், பிறகு மீள்வது கடினம். இதுவே நமக்கான சிறந்த வழியாகும்
திரு மணியம் அவர்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஒரு வீட்டில் பிள்ளைகள் கெடுவதற்கு ஒரு சில பெற்றோரின் பொறுப்பின்மையே காரணம். பிள்ளைகளின் நண்பர்களை கவனித்து நிதானித்து எங்கு எப்படி ‘கட்’ பண்ண வேண்டுமோ அப்படி பண்ணினாலே போதும். அவ்வாறு இல்லாமல் தன் பிள்ளைகளின் ஊதாரிதனத்திர்க்கும், கூட்டுக் களவாணி திட்டத்திற்கும் துணை போகும் பெற்றோர் அவரவர் பயனை அடைந்தே தீருவர். இத்தகையோரைப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டு உண்மையிலே முன்னேற வழி தேடும் இந்தியர்களுக்கு நம்மால் இயன்ற வழிகாட்டிகளையும், உதவிகளையும் செய்வோம். நிச்சயம் நாம் உயர்வோம்.
உண்மைதான் நண்பரே, இங்கே நமது கவனத்திற்கு முன்னுதாரனமாகத் திகழும் திரு.தாப்பா.பாலாஜி அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். அவர் தமது மகனின் வாழ்வில் காட்டும் அக்கரையும் எடுக்கும் முயற்சிகளும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. அவர் போல் ஒவ்வொரு தந்தையும் முயற்சி எடுத்து தமது பிள்ளைகள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தால், நமது எதிர்காலம் நிச்சயம் சிறப்பானதாக அமையும். பாசத்தோடு நல்ல பண்பினையும், தோழமையும் கொன்டு வளர்க்கப்படும் பிள்ளை என்றுமே நல்ல பிள்ளையாக வளரும், பெற்றோர்க்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும். அவர்தம் சொந்த வாழ்விலும் சிறப்புற்று திகழும். முயற்சி செய்வோம், முன்னேறுவோம்.