வெளியேற்றப்பட்டால் சிங்கப்பூர் சூன்யாமாகும் என்ற லீ குவான் இயூ சீங்கப்பூரின் விடிவெள்ளி! – கி. சீலதாஸ்.

lee4சுமார்  1954ஆம்  ஆண்டு  காலஞ்சென்ற,  சிங்கப்பூரின்  முன்னாள்  பிரதமர்  லீ  குவான்  இயூ  அவர்களை  நேரில்  சந்தித்துப் பேசும்  வாய்ப்பு  கிட்டியது.  சிங்கப்பூர்  துறைமுகத்  தொழிலாளர்  சங்கத்தில்  அமைக்கப்பட்டிருந்த  நூல்  நிலையத்துக்கு  நான்  அன்றாடம்  போவது  வழக்கம்.  என்னோடு அந்த  நூல்  நிலையத்தின்  பலனை  அனுபவித்தவர்களில்  கவிஞர் ஐ.உலகநாதன்,  நூல்  நிலையத்தின்  அருகாமையிலேயே  இருந்து  தொழிலாளர்கள்  வாழும்  அடுக்கு  மாடி  கட்டடத்தில்  வசித்து  வந்தார் செ.வே  சண்முகம்  என்ற  வள்ளிமணாளன்,  ஆகியோர்  அடங்குவர்.  என்னோடு  அந்த  நூல்  நிலையத்தின்  பயனை  அனுபவித்தவர்களில்  ஒருசிலர்  மட்டுமே  எஞ்சியுள்ளனர்.  ஐ.உலகநாதன்  பெங்களூரிலும்,  நாராயணசாமி  என்கின்ற  தமிழ்வாணன்  இப்போது  ஜாசினில்  உணவகம்  நடத்துகிறார்.

1954ஆம்  ஆண்டு  முற்பகுதியில்  சிங்கப்பூர்  சட்ட  மன்றத்திற்கானத்  தேர்தல்  நடக்குமென  அறிவிக்கப்பட்டது.   துறைமுகத்  தொழிலாளர்  சங்கத்தின்  தலைவர்  வி.மாரியப்பன்,  பொதுச்  செயலாளர் அ.துரைசாமி  இருவரும்  சிங்கப்பூர்  தொழிற்  கட்சியில்  இருந்தார்கள்.  தொழிற்கட்சிக்கு  ஈடுகொடுக்கும்  அளவில்  இயங்கிக்  கொண்டிருந்தது  வழக்கறிஞர்  சி.சி.டானின்  தலைமையிலான  முற்போக்குக்  கட்சி  இதன்  பிரமுகர்களில்    எஸ்.எம்.வாசகர், எஸ்.எல்.பெருமாள்  போன்றோர்  அடங்குவர்.

siladassதேர்தல்  வரப்போகிறது  என்ற  அறிவிப்பானது   துறைமுகத்  தொழிற்சங்க  அலுவலகத்தில்  பல  சுறுசுறுப்பான  நடவடிக்கைகளுக்கு  வித்திட்டது.  பிரபல  வழக்கறிஞர்  டேவிட்  மார்ஷல், லிம்  யூ  ஹாக்  ( இவர்கள்  பின்னாளில்  சிங்கப்பூரின்   முதலமைச்சர்களாகச்  சேவையாற்றியவர்கள் )  சங்க  அலுவலகத்திற்கு  அடிக்கடி  வருவார்கள்.  துரைசாமியுடன்  வரும்  தேர்தலைப்பற்றி  பேசுவார்கள்.  இதையெல்லாம்  செவிமடுக்கும்  வாய்ப்பு  என்னைப்போன்ற  இளைஞர்களுக்கு  உற்சாகமளித்தது.

பொதுச்  செயலாளர்  துரைசாமிக்கு  தனி  அலுவலக  அறை  ஏதும்  கிடையாது.  ஒரு  தற்காலச்  சுவர் – அதை  விரும்பும்  போதெல்லாம்  நகர்த்திக்  கொள்ளலாம்.  இதனால்  துரைசாமி,  மாரியப்பன்  ஆகியோருடன்  புகழ்மிக்க  டேவிட்  மார்ஷல், லிம்  யூ ஹாக்  ஆகியோரின்  உரையாடல்  எங்கள்  காதுகளுக்கு  விருந்தாக  அமைந்திருந்தது.  அப்போது  டேவிட்  மார்ஷல்  இச்சங்கத்தின்  சட்ட  ஆலோசகராக  இருந்தார்.

லீ குவான்  இயூ அறிமுகமானார்

இப்படிப்பட்டச்  சூழலில்தான்  ஒரு  புது  முகம்  அறிமுகமாகியது.  சுமார்  முப்பது  வயதை  நெருங்கிக்  கொண்டிருந்த  லீ குவான்  இயூ,   நாங்கள்  கூடாரம்  அடித்து  தங்கியிருந்த  தொழிற்சங்க அலுவலகத்திற்கு  வரத்  தொடங்கினார்.  அவருடைய  உரையாடலும்  பெரும்பாலும்  துரைசாமியுடன்தான்.

தேர்தல்  நெருங்கிக்  கொண்டிருந்த  போது  டேவிட்  மார்ஷல்,  லீ குவான் இயூ  இணைந்து  ஒரு  புது  வலுவுமிக்க  இடதுசாரி  அரசியல்  இயக்கத்தைக்  காண  ஆர்வத்துடன்  செயல்படுகின்றனர்  என்ற  நம்பிக்கை  என்னைப்போன்ற  இளைஞர்களுக்கு  இடதுசாரி  அரசியல்மீது  பற்று  வலுப்பெறச்  செய்தது.  துரைசாமி  இடதுசாரி  ஒற்றுமையைப்  பற்றியும்  சிங்கப்பூரின்  புதிய  அரசியல்  நோக்கத்தைப்  பற்றி  உற்சாகத்துடன்  விளக்கமளிப்பார்.

lee 3டேவிட்  மார்ஷல்  அரசியலுக்குப்  புதியவர்  ஆனால்  புகழ்பெற்ற  வழக்கறிஞர்.  லீ  குவான்  இயூவும்  சிங்கப்பூர்  அரசியலுக்குப்  புதியவரே.  இவர்  சிங்கப்பூர்  முற்போக்குக்  கட்சியின்  பொதுச்  செயலாளராக  இருந்திருக்கிறார்  என்பதைப்  பிறகுதான்  தெரிந்துகொள்ள  முடிந்தது.  லீ  குவான்  இயூ  முன்னேறி  வரும்  இளம்  வழக்கறிஞர்களில்  முன்னோடியாக  விளங்குவதாகவும்  குறிப்பிடப்பெற்றது.  அன்னார்  சிங்கப்பூர்  துறைமுகப்  பணியாளர்  சங்கத்தின் (Singapore  Harbour  Board  Staff Association)  சட்ட  ஆலோசகராக  இருந்தார்.

வருகின்ற  பொதுத்தேர்தலில்  இடதுசாரி  சக்திகள்  ஒன்றுகூடி  வலதுசாரி  அரசியல்  பிரதிநிதிக்கும் முற்போக்குக்  கட்சிக்கு  பலத்த  போட்டி  வழங்குமென்ற  நம்பிக்கை  பரவியிருந்தது.  டேவிட்  மார்ஷலும்  லீ  குவான்  இயூவும்  அடிக்கடி  சந்தித்து  இடதுசாரி  சக்திகள்  ஒன்றுகூடும்  பொருட்டு  பேச்சு  நடத்துவதாக  செய்திகள்  வலம்  வந்தன.

தேர்தல்  நெருங்கிவிட்டக்   காலம்.  புதிய  இடதுசாரி  இயக்கத்தின்  எதிர்பார்த்துக்  கொண்டிருந்தபோது   லீ  குவான்  இயூ  மக்கள்  செயல்  கட்சியின்  தோற்றத்தை  அறிவித்தார்.  டேவிட்  மார்ஷல்  சினம்  கொண்டு,  லீ  குவான்  இயூ  இடதுசாரிகளின்  ஒற்றுமையை  விரும்பவில்லை  என்று  கடிந்து  கொண்டார்.

ஆங்கிலம் மட்டுமே பேசினார்

மக்கள்  செயல்  கட்சி  புதிய  கட்சி.  ஆள்பலம்  இல்லை.  கட்சி  இயந்திரம்  துவங்கப்படாத  காலம்.  லீ குவான்  இயூ  தஞ்சோங்  பகார்  தொகுதியில்  போட்டியிட்டார்.  அப்போது  அவருக்கு  ஆங்கிலம்  மட்டும் தான்  தெரியும்.  சீன  மொழியில்   சரளமாகப்  பேச  முடியாது.  அவர்  பிரானாக்கான்  சமூகத்தைச்  சேர்ந்தவர்.  அதாவது  மலாக்காவில்  “பாபா”க்கள்  என்று  அழைக்கப்படுபவர்கள்  போன்ற  சமூகத்தைச்  சேர்ந்தவர்.

பொது  மேடைகளில்  பேசும்போது  அவருக்கு  சீன  மொழிபெயர்ப்பாளர்  இருப்பார்.  சில  சீனச்  சொற்களை  ஆங்கிலத்தில்  எழுதி  வாசிப்பார்.  அன்றைய  சிங்கப்பூரின்  மேயராக  இருந்த  ஓங்  எங்  குவானோடு  ஏற்பட்ட  கருத்து  வேறுபாடு  லீ  குவான்  இயூவை  சீன  மொழியைக்  கற்க  ஊக்குவித்தது.  காரணம்  சீன  மொழியில்  புலமை  கொண்டவர்  ஓங்  எங்  குவான்.  தமக்கு  சீன  மொழியில்  புலமையில்லாத  குறையை  தீர்த்துக்  கொண்டார்.

தேர்தல்  காலத்தின்போது  சங்க  அலுவலகத்துக்கு  அடிக்கடி  வருவார்  லீ  குவான்  இயூ.  தேர்தல்  நடவடிக்கையைப்  பற்றி  துரைசாமியுடன்  பேசுவார்.  அவருடையத்  தேர்தல்  பிரச்சாரத்தில்  நானும்  பங்குபெற்றேன்.  அமோக  வெற்றி  கண்டார்.

சிங்கப்பூர்  துறைமுகப்  பணியாளர்  சங்கத்தில்  ஜமிட்  சிங்  என்பவரைப்  பொதுச்  செயலாளராக  நியமிக்கக்  காரணமாகயிருந்தார்  லீ குவான்  இயூ,  அதே  வேளையில்  துறைமுகத்தில்  இனவாரியாக    பலத்  தொழிற்சங்கங்கள்  இருப்பதைத்   தவிர்த்து   ஒரே  தொழிற்சங்கத்தை  உருவாக்க  வேண்டுமென்ற  எதிர்பார்ப்பு  பலமடையவே  அதற்கான  ஆரம்பக்  கூட்டத்தை   கெண்டன்மண்ட்   ரோட்டிலிருந்த  சங்க  அலுவலகத்தில்  நடந்தது.  இது  தேவையான  மாற்றம்  என லீ  குவான்  இயூ  கூறினார்.

Lee 1மக்கள்  செயல்கட்சி  பலமான  எதிர்க்கட்சியாக  விளங்கியது  மட்டுமல்ல  அது  துரிதமாகவே  மக்களிடம்  பரவி  நன்மதிப்பைப்  பெறத்  தொடங்கியது.  இந்த  முன்னேற்றமானச்  சூழல்  வலுவடைந்து  கொண்டிருந்தபோது  தீவிர  இடதுசாரிகள்  எனறு  சொல்லப்படுபவர்கள்  மசெகட்சியின்  நிர்வாகத்தைக்  கைப்பற்றினார்கள்.  லீ  குவான்  இயூ  பொதுச்  செயலாளர்  பதவியை  இழந்தார்.  லிம்  சின்  இயோங்,  டி.டி.ராஜா  போன்றோர்  கட்சியின்  தலைமைத்துவத்தை  ஏற்றனர்.

இதற்கிடையில்  பிரிட்டனுடனான  சிங்கப்பூருக்கானச்  சுதந்திர  பேச்சு  முறிவு  பெறவே  டேவிட்  மார்ஷல்  முதலமைச்சர்  பதவியைத்  துறந்தார்.  லிம் யூ  ஹாக்  முதலமைச்சரானார்.

ஊரடங்குச் சட்டம்

சிங்கப்பூரில்  எங்கும்  ஆர்ப்பாட்டம்  பரவியபோது  லிம்  யூ  ஹாக்  ஊரடங்கு  சட்டத்தை  அமல்படுத்தி  இடதுசாரி  அரசியல்வாதிகளைக்  கைது  செய்து  சிறையில்  அடைத்தார்.  பிற்காலத்தில்  லிம்  யூ  ஹாக்  இதைப்  பற்றிச்  சொல்லும்போது  தாம்  இதுசாரிகளைக்  கைது  செய்ததால்  லீ  குவான்  இயூ  மக்கள்  செயல்கட்சியை  கைப்பற்ற  முடிந்தது  என்று  குறிப்பிட்டார்.

மீண்டும்  மசெகட்சியின்  பொதுச்  செயலாளர்  பொறுப்பை  ஏற்ற  லீ  குவான்  இயூ  பிற்காலத்தில்  கட்சியில்  பிரச்சினைகள்  எழாமல்  இருக்கவேண்டுமென்ற  எண்ணத்தோடு  கட்சி  தேர்தல்  முறையை  மாற்றி  அமைத்தார்.

தீவிர  இடதுசாரிகள்   எண்ணிக்கையில்  பெருகிவிட்ட  காலத்தில்   அவர்கள்  உண்மையில்  யார்?  சோஷலிஸ்டுகளா  அல்லது  கம்யூனிஸ்டுகளா  என்ற  கேள்வியும்  எழுந்தது.  தாம்  கம்யூனிஸ்டுமல்ல  அதன்  எதிரியுமல்ல  என்று  சாதுரியமாகப்   பதில்  அளித்தார்  லீ  குவான்  இயூ.  சிங்கப்பூர்  அரசியல்  குழம்பிய  குட்டைபோல்  இருந்தது.    யார்  எந்த  கொள்கையை  பேணுகிறார்  என்று  உறுதியாகச்  சொல்லமுடியவில்லை.  ஆனால்,  இடதுசாரி  அரசியலுக்குக்  கடும்   சோதனை  எழும்  என  நம்பியவர்களில்  பெரும்பாலோர். நான்  சிங்கப்பூரைவிட்டு  சிகாமட்டிற்கே  திரும்பிவிட்டேன்.  அங்கு  மலாயா  தொழிற்கட்சியில்  இணைந்து  செயல்படத்  தொடங்கினேன்.

அடுத்து (1959)  வந்தத்  தேர்தலில்  மக்கள்  செயல்கட்சி  ஆளும்  கட்சியாகப்  பலம்  பெற்றது.  ஆனால்,  சிறையில்  அடைக்கப்பட்டிருக்கும்  தமது  சகாக்கள் – தேவன்  நாயர்,  லிம்  சின்  சியோ,  ஜேம்ஸ்  புதுச்சேரி,  வுட்டால்  மற்றும்  ஏனையர்  விடுதலை  செய்யப்பட்டாலன்றி  மக்கள்  செயல்   கட்சி  ஆட்சி  பொறுப்பை  ஏற்காது  என்று  அறிவிக்கப்பட்டது.  தேர்தல்  காலகட்டத்தில்  இந்த  அரசியல்  கட்சிகளின்  விடுதலை  ஒரு  நிபந்தனையாகவே  பிரச்சாரம்  செய்தது  மக்கள்  செயல்  கட்சி.  அவர்கள்  விடுவிக்கப்பட்டதும்  சிங்கப்பூரின்  பிரதமரானார்  லீ  குவான்  இயூ.

தீவிர  இடதுசாரிகள்  என  நம்பப்பட்டவர்கள்  சிங்கப்பூர்  அரசின்  நிர்வாகத்தைப்  பாதிக்காத  அளவுக்கு  சேர்த்துக்கொள்ளப்பட்டனர்  பெரும்பான்மையினர்  அரசியல்  செயலாளராக  நியமிக்கப்பட்டனர்.

மலேசியா  இணைப்பின்றி  சிங்கப்பூரின்  எதிர்காலம்  சூன்யமாகும்   

lee outமலாயாவின்  அன்றையப்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மான்  27.5.1961இல்  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த  மலேசியா  இணைப்பு  அறிவிப்பை  வெளியிட்டபோது  அதற்கு  ஆதரவும்  எதிர்ப்பும்  இருந்தன.  மலாயா,  சிங்கப்பூர், புருணை, சாபா(வட போர்னியோ)  சரவாக்  ஆகிய    பிரதேசங்களை  இணைத்து  சுதந்திர  நாடாகத்  திகழவேண்டுமென்பதே  இந்த  அறிவிப்பின்  குறிக்கோளாக  இருந்தது.  காலப்போக்கில்  புருணை  இந்த  இணைப்பில்  பங்கு  பெறுவதைத்  தவிர்த்தது.  கொள்கை  அளவில்  ஆதரவு  நல்கிய  இடதுசாரிகள்  பிறகு  மலேசியா  இணைப்பில்  இருக்கும்  கோளாறுகளை  வெளிப்படுத்தி,  கடுமையாக  எதிர்த்தனர்.  புருணையில்  அஸஹாரி  ஆயுதப்  போராட்டத்தை  முடுக்கிவிட்டார்.  இதற்கிடையில்  இந்தோனேஷியா,  பிலிப்பின்ஸ்  ஆகிய  நாடுகள்  மலேசியாவுக்குப்  பதிலாக  இந்தோனேஷியா,  பிலிப்பின்ஸ்,  மலாயா,  புருணை  சாபா,  சரவாக்  ஆகிய  பிரதேசங்களைக்  கொண்ட  அகண்ட  நாட்டைக்  காண  விழைந்தன.  இந்தத்  திட்டம்  பிசுபிசுத்துவிடவே  மலேசியா  இணைப்புக்கு  எதிரான  இயக்கத்தைத்  தீவிரப்படுத்தியது  இந்தோனேஷியா.  அந்தக்  காலகட்டத்தில்  மலேசியாவுடனான  இணைப்பை  ஆதரித்த  லீ  குவான்  இயூ,  மலேசியா  இணைப்பின்றி  சிங்கப்பூரின்  எதிர்காலம்  சூன்யமாகிவிடும்  என  பகிரங்கப்படுத்தினார்.

மலேசிய  இணைப்பின்  பிரச்சாரத்தின்  போது  மக்கள்  செயல்  கட்சியில்  பிளவு  ஏற்பட்டது.  தீவிர  இடதுசாரிகள்  சோஷலிஸ  முன்னணி  இயக்கத்தைக்  கண்டனர்.  இவர்களை  கம்யூனிஸ்டுகள்  என  லீ  குவான்  இயூவும்,  துங்கு  அப்துல்  ரஹ்மானும்  பகிரங்கமாகவே  குற்றம்  சாட்டினர்.

16.9.1963இல்  மலேசியா  உதயமாயிற்று.  பலவிதமானச்  சந்தேகங்கள்;  அதிருப்தி  மேலோங்கிய  நிலை; இந்தோனேஷியாவின்  ஒத்துழையாமை  இயக்கம்;  கம்யூனிஸ்டுகள்  மீது  கடும்  நடவடிக்கை  யாவும்  இந்நாட்டு  அரசியலை  ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.  அப்போது  நிகழ்ந்தவைகளை  நினைத்துப்  பார்க்கும்போது  மலேசியாவின்  பிறப்பில்  நல்ல  சகுனம்  தென்படவில்லை  என்ற  கருத்தும்  பரவியிருந்தது.

lee shattredபுதிதாக  உருவான  மலேசியாவில்  அரசியல்  சித்தாந்தம்  என்ற  ஒன்று  இருந்ததாகத்  தெரியவில்லை.  வெள்ளைக்காரர்கள்  தங்களின்  நலனில்  கண்ணும்  கருத்துமாகச்  செயல்பட்டு  முதலாளித்துவத்தை  தக்க  வைத்துக்  கொண்டனர்.  அதற்கு  உதவியாக  விளங்கியது  துங்கு  அப்துல்  ரஹ்மான்  தலைமையில்  செயல்பட்ட  அம்னோ,  மசீச, மஇகா  உள்ளடக்கிய  கூட்டணி.  கூட்டணியின்  கொள்கை  இன  ஒற்றுமை,  இருக்கும்  சமுதாய,  பொருளாதாரச்  சூழ்நிலையில்  எந்த  மாற்றமும்  இருக்கக்கூடாது   என்பதாகும்.  மலேசியா  அமைந்த  பிறகும்  இதே  கொள்கையை  கூட்டணி  பின்பற்றியது.  ஆனால்  இதில் மாற்றத்தைக்  காண  விரும்பினார்  லீ  குவான்  இயூ.

 

சிங்கப்பூரின்  மலேசியாவுடனான  இணைப்பு  மக்கள்  செயல்  கட்சி  மலாயா  மாநிலங்களில்  கால்  பதிய  உதவியது.  மலேசிய  நாடாளுமன்றத்தில்  லீ  குவான்  இயூவின்  குரல்  ஒலித்தது.  1964ஆம்  ஆண்டு  நடந்த  பொதுத்  தேர்தலில்  மக்கள்  செயல்  கட்சி  போட்டியிட்டது.  தேவன்  நாயர்,  சோஷலிஸ்ட்  முன்னணியின்  புகழ்மிக்க  வேட்பாளர்  வி.டேவிட்டை  எதிர்த்துப்  போட்டியிட்டார்.  அந்தத்  தேர்தலில்  தேவன்  நாயர்  வெற்றிவாகை  சூடினார்.  அந்தப்  பொதுத்  தேர்தலுக்குப்  பிறகு  மலாயா தொழிற் கட்சி  ஒரு கம்யூனிஸ்டுக்கு  முன்னோடி  என்ற  முத்திரைக்  குத்தப்பட்டது.  அது  செல்வாக்கு  இழந்தது.  இறுதியில்  இருக்கும்  இடம்  தெரியாமல்  போய்விட்டது.

இருப்போர் – இல்லாதோருக்கு இடையிலான போராட்டம்

lee tar2இந்தக்  காலகட்டத்தில்  மலேசியாவுக்குத்  தேவையானது  என்ன?  சித்தாந்த  அரசியலில்  அல்லது  சித்தாந்தம்  சேராத  நடுநிலை  அரசியலா?  நடுநிலை  அரசியலுக்குக்  கொள்கை  தேவைப்படுமே?  அது  என்ன?  கூட்டணி  ஆட்சி  பிரிட்டிஷாரின்  கொள்கையைப்  பின்பற்றி  தனது  ஆயுள்  காலத்தை  நீட்டிக்  கொள்ளத்  தீர்மானித்திருக்கலாம்.  அதற்கானச்  சான்றுகள்  நிறையத்  தென்பட்டன.  இந்த  சூழலில்தான்  லீ  குவான்  இயூ  வசதியானவர் – வசதியற்றவர் (haves  and have nots)  என்ற  சுலோகத்தை  அறிமுகப்படுத்தினார்.  நடக்கவேண்டிய  போராட்டம் வசதி  உள்ளவர்களுக்கும்  வசதி  இல்லாதவர்களுக்கும்  ஏற்பட்டிருக்கும்  போராட்டம்  என்றார்.  இதுவே  சூடுபிடிக்கத்  தொடங்கியது.

கூட்டணியைச்  சேர்ந்த  சில  தலைவர்கள்  லீ  குவான்  இயூவை  கண்டபடி  வைதனர்,  வீண்பழி  சுமத்தினர்.  அவர்கள்  மீது  அவதூறு  வழக்கைத்  தொடுத்தார்  லீ  குவான்  இயூ.  வெற்றியும்  பெற்றார்.

lee and tarமக்கள்  செயல்  கட்சியின்  மலேசிய  பிரவேசம்  அம்னோ  தலைவர்களுக்குப்  பேரிடராகத்  தோன்றியது.  அப்போதெல்லாம்  சமயப்  பிரச்சினைக்கு  இடமிருக்கவில்லை.  சமயச்  சர்ச்சை  ஏதும்  இருக்கவில்லை.  மக்களின்  தேவை  என்ன?  பல  இனங்கள்,  மொழி,  பண்பாடு  வாழும்  நாட்டில்  நல்லிணக்கம்  காண்பது  எவ்வாறு?  இவை யாவும்  மலேசியர்களை  உறுத்திய  கேள்விகள்.   மனிதன்  கவுரத்துடன்  நடத்தப்படுவதற்கு  உதவுவது  சமயமல்ல,  பொருளாதார   செழுமையே.  அதைத்  தான்  லீ  குவான்  இயூ  கண்டார்.  உணர்த்தியுள்ளார்.  அது  மலேசியாவின்  இனவாத  அரசியலைச்  சப்புக்  கொட்டுவோர்  இருக்கும்  வரை  லீ  குவான்  இயூ  சமுதாயப்  புரட்சிக்கு  செவிமடுக்கும்  திராணி  இல்லாதவர்கள்  மலிந்து  கிடந்த  காலம்  அது. இன்று  வேறு  திசையில்  இனவாதம் பரவுவதைக்  காணமுடிகிறது. கவலையாக  இருக்கிறது.

சிங்கப்பூர்  மலேசியாவை  விட்டு வெளியேற்றப்பட்டது

கருத்து  வேற்றுமை  முற்றிவிடவே  9.8.1965இல்  சிங்கப்பூர்  மலேசியாவை  விட்டு  பிரிந்து  செல்ல  நேரிட்டது.  அதுவாக  பிரிந்து  சென்றதா  அல்லது  வெளியேற்றப்பட்டதா?  அதுவும்  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த  கேள்வியே!  நடந்தவைகளை  கூர்ந்து  கவனிக்கும்  பட்சத்தில்  வெளியேறியது  என்பதைக்  காட்டிலும்  வெளியேற்றப்பட்டது  என்பதற்கான  ஆவணங்கள்  தெளிவாக  உள்ளன  எனலாம்.

இயற்கை  வளம்  கிஞ்சித்தும்  இல்லாத  நாடு, சித்தாந்த  கோட்பாட்டில்  சிக்கல்கள்  மலிந்து  கிடந்த  அந்த  வேளையில்,  கம்யூனிஸ்டுகளின்  மருட்டல்  கடுமையாக  இருப்பதாக  எல்லோரும்  ஒருமித்துக்  குரல்  எழுப்பிக்  கொண்டிருந்தபோது  சுதந்திர  சிங்கப்பூர்  எப்படி  சமாளிக்கும்.  மலேசியாவின்  ஓர்  அங்கமாக  இருந்தாலன்றி  சிங்கப்பூருக்கு  எதிர்காலமே  இல்லை  என்று  உரக்க  வாதிட்டவர்  லீ  குவான்  இயூ.  மலேசியா  அமைக்கப்பட  வேண்டும்  என  துங்கு  அப்துல்  ரஹ்மான்  சொன்னது  உண்மை.  ஆனால்  அதற்கு  ஆசிய – ஆப்பிரிக்க  நடுகளில்  ஆதரவு  திரட்டும்  பணியை  மேற்கொண்டவர்  லீ  குவான்  இயூ.  யார்  கண்ட  கனவு?  துங்கு  அப்துல்  ரஹ்மானா  அல்லது  அந்தக்  கனவைக்  காணும்படி  உசுப்பிவிட்டது  காலனித்துவ  கோட்பாட்டைக்  கட்டிக்  காப்பதில்  சாணக்கியர்களான  பிரிட்டிஷ்  ராஜதந்திரமா?  அந்தக்  கேள்விக்கும்  இதுவரை  பதில்  கிடைக்கவில்லை.  ஆனால்,  மலேசியா  என்ற  கனவு  உருபெற  வேண்டுமென  உழைத்தவர்களில்  முக்கியமானவர்  லீ  குவான்  இயூ.

மலேசியாவுக்கு  எதிரான  கொள்கையைக்  கடைபிடித்த  மலாயா  தொழிற்கட்சி,  மக்கள்  கட்சி  இணைந்த  சோஷலிஸ்ட்  முன்னணியின்  பிரச்சாரத்தில்  நான்  தீவிரமாக  செயல்பட்டது  உண்மை.  மலேசிய  அமைந்த  பிறகு  அதை  ஆதரிக்கத்  தவறியதில்லை  நான்;  காரணம்  மலேசியாவை  அனைவரும்  ஏற்றுக்கொண்டுவிட்டனர்  என்பதை  1964ஆம்   ஆண்டு பொதுத்  தேர்தல்  உறுதிப்படுத்துவதாகக்  கருதினேன்.

விரிசல் விரிவடைந்தது

lee6சுதந்திர   சிங்கப்பூர்  குடியரசின்  கதி  என்ன?  அதன்  எதிர்காலம்  என்ன?  லீ  குவான்  இயூவின்  மலேசிய  அரசியல்   பிரவேசமும், விலகலும்  எப்படிப்பட்ட  அரசியல்  மாற்றத்தை  ஏற்படுத்தியது?  என்பன  போன்ற  கேள்விகள் வருத்தத்   தொடங்கின.

முதலில்  சிங்கப்பூரின்  கதியும்  அதன்  எதிர்காலமும்  எப்படி  இருக்குமென  திட்டவட்டமாகக்  கணிக்க  முடியவில்லை.  ஆனால்,  லீ  குவான்  இயூவும்  அவர்  சகாக்களும்   ஒரு  மாற்றத்தைக்  காண  துணிந்தனர்.  சிங்கப்பூர்  குடியரசு  கப்பல்  கரைசேராது  கவிழ்ந்துவிடும்  என  ஆருடம்  சொன்னவர்கள்  ஏராளம்.  எதிலெல்லாம்  சிங்கப்பூரும்  மலேசியாவும்  ஒன்றாகச்  செயல்பட்டனவோ  அவை  ஒன்றன்பின்  ஒன்றாக  கலைக்கப்பட்டன.  மலேசிய  சிங்கப்பூர்  நாணய  ஆணையம்,  மலேசிய  சிங்கப்பூர்  விமானச்  சேவை  போன்றவை  பிரிந்தன.  பயண  கட்டுப்பாடு  அறிமுகப்படுத்தப்பட்டது.  இரு  நாடுகளுக்கு  இடையிலான  விரிசல்  விரிவடைந்தது.

படிப்படி  முன்னேற்றம்  என்பது  போல்  சிங்கப்பூர்  இந்த  வட்டாரத்திலேயே  சிறந்த  தொழிற்சாலை  மயமாக  மாறியது.  பொருளகங்கள்  புது  திட்டங்களை  அறிமுகப்படுத்தின.  இதன்வழி  பொருளகங்கள்  அந்நிய  முதலீட்டை  கவர்ந்தன.

கடும்  உழைப்பு,  நேர்மையானத்  தொழிற்முறை,  ஊழலற்ற  அரசு,  குற்றவியலைக்  கட்டுப்படுத்தும்  அணுகுமுறை,  சமுதாயப்  பாதுகாப்பு,  சிங்கப்பூர்  என்ற  நாட்டில்  எல்லோருக்கும்  திறமயைப்  பொருத்து  முன்னேற்றம்  காணமுடியும்  என்ற  அரசியல்  தத்துவத்தை  நிலைநிறுத்தப்பட்டதைக்  காணமுடிந்தது.  திக்கற்ற  நிலைக்கு  உந்தப்பட்ட  சிங்கப்பூர்  குடியரசு,  நாளாவட்டத்தில்  உலகமே  போற்றும்  ஒரு  அற்புத  நாடாக  உருமாறியது.  இந்த  முன்னேற்றத்துக்குப்  பலியானது  பேச்சுரிமையும்  கருத்துரைக்கும்  உரிமையும்  என்பதை  மறக்க  இயலாது.

மலேசியாவில்  நிலவிய  அரசியல்  சூழ்நிலையின்  காரணமாகப்  பிரிந்துபோன  சிங்கப்பூர்  அதைக்  குறித்து  வருந்தியது  உண்டா?  ஏமாற்றத்தில்  முடிந்த  சிங்கப்பூர்  இணைப்பு  எப்படிப்பட்ட  விளைவுகளச்  சமாளிக்க  வேண்டியிருந்தது.  அந்த  விளைவுகள்  சிங்கப்பூருக்கு  நன்மையாகவே  மாறிவிட்டதை  நாம்  காணமுடிகிறது.  மலேசியா  மலேசியர்களுக்கு  என்ற  முழக்கத்தை  தொடக்கிவைத்தார்.  அது  இன்றும்  ஒலித்துக்கொண்டிருப்பதை  ஒதுக்கிவிடமுடியாது.

மலாயா – சிங்கப்பூர்  வழக்கறிஞர்கள்  மன்றங்களின் கூட்டு  முயற்சியில் 9.6.1996இல்  இழப்பீடு   சட்டத்தைப்  பற்றிய  கருத்தரங்கு  நடத்தின.  அதில்  கலந்துகொண்டு  உரையாற்றினேன்.  அக்கருத்தரங்கின்  முந்தின  நாள்  சிங்கப்பூர்  மலேசியாவுடன்  மீண்டும் இணையும்  என  எதிர்பார்ப்பதாகச்  சொன்னார்  லீ  குவான்  இயூ.  இந்தச்  செய்தி  பத்திரிக்கைகளில்  வந்தன.  இழப்பீடு  குறித்து  இருநாடுகளின்  சட்டங்களும்   வித்தியாசம்  கொண்டிருப்பதால்  அதில்  மாற்றம்  காண வேண்டியது  எங்ஙனம்   என  குறிப்பிட்டிருக்கிறேன்.

சிங்கையை சுய காலில் நிற்க வைத்தவர் லீ  

Lee2மலேசியாவில்  இருந்து  பிரிந்து  போகும்  நிலை  உருவாக்கியது  யார்/  இதனால்  யாருக்குப்  பலன்  கிடைத்தது  என்ற  ஆய்வு  மேற்கொள்ளப்படுமானால்  பிரிந்து  போனதால்  லீ  குவான்  இயூவின்  சிறந்த  தலைமைத்துவம்   அனைத்துலக  ரீதியில்  மற்ற  உலகத்  தலைவர்களோடு  உயர்வு  கண்டது.  அவர்களுக்கு  இணையாக  தலைதூக்கி  நிற்கும்  ஆற்றலை  லீ  குவான்  இயூ  அடைந்தார்  என்பது  வெள்ளிடைமலை.  மலேசியாவிலேயே  இருந்திருந்தால்  அவர்  புகழின்  உச்சிக்குச்  செல்வது  தடைபட்டிருக்கும் – அவரின்  முழு  திறமையை  வெளிப்படுத்த  முடியாமல்  போயிருக்கும்.  அதே  சமயத்தில்,  ஒரு  நல்ல,  திறமைவாய்ந்த  ஊழலற்ற  நிர்வாகத்துக்கு  உதவிடத்  தயாராக  இருந்த  லீ  குவான்  இயூவை  இழந்தப்  பழியை   மலேசியா  தாங்கிக்  கொள்ளவேண்டியுள்ளது.  லீ  குவான்  இயூ  ஒரு  தூரநோக்கு,  அதை  கணிக்க  மறுத்தவர்களை  வரலாறுதான்  அடையாளம்  காணவேண்டும்.  எனவே,  இழந்தது  யார்?  மலேசியாவா  சிங்கப்பூரா?  லீ குவான்  இயூவா  அல்லது  மலேசியாவா?  இதற்கான  விடை  தேடலை  மலேசியர்களிடமே  விட்டுவிடுகிறேன்.

வாழ்க்கை  ஒரு  பயணம்.  அது  நின்றுவிடும். ஆனால், சிங்கப்பூரர்களுக்கு  அவர்  உசுப்பிவிட்ட  உற்சாகம்,  தன்  காலிலேயே  நிற்க  முடியும்  என்ற  நம்பிக்கை,  எதிர்வரும்  சங்கடங்களை  சமாளிக்க  முடியுமென்ற  உத்வேகம்  அனைத்தையும்  நல்கினார்  லீ  குவான்  இயூ.  அதுவே  குழப்பம்  மலிந்த  இவ்வுலகில்  பயணிக்கும்  சிங்கப்பூரின்  அடிப்படை  நோக்கமாகத்  திகழும்.