தமிழர்களுக்கு நீதி, சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு போர் குற்றத்திற்கான தண்டனை

imagesதமிழர்களுகளுக்கு நீதி வழங்கவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்பேற்கவும் சிறீலங்கா அரசு அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். சிறீலங்கா தமிழர்களுக்கும் அந்நாட்டின் சிங்கள அரசுக்கும் இடையில் தமிழர்களின் உரிமைக்காக நடந்த உள்நாட்டு போர் ஆசியாவின் மிக நீண்ட காலப் போராகும். அஹிம்சை போராட்டமாக தொடங்கிய அப்போராட்டம் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான இரத்தக் கலவரமாக மாறி பின்னர் தமிழ் ஈழ புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டமாக வெடித்தது.

தமிழர்களின் உரிமைக்கான இந்த ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் தமிழ் ஈழ புலிகள் அந்நாட்டின் 5,594 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். ஆனால், சிறீலங்கா அரசு பல அந்நிய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளோடு தமிழ்  ஈழ புலிகளை வெறும் 85 சதுர கிலோ மீட்டருக்குள் அடக்கியது. இறுதியில், மே 18, 2009 ஆம் ஆண்டில் சிங்கள அரசு தமிழ் ஈழ புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

images (3)தமிழ் ஈழ புலிகளுக்கு எதிரான அதன் போரை சிறீலங்கா அரசு தமிழ் இன அழிப்பு போராக்கி சிறீலங்கா தமிழ் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு புரிந்த படுபயங்கர கொடுமைகளைக் கண்டு உலகம் அதிர்ச்சியடைந்தது. அதன் விளைவாக, சிறீலங்கா அரசு அந்நாட்டு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக அதற்குப் பொறுப்பான அந்நாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எதிரொளித்தது.

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானப்படி ஐநா பல ஆய்வுகளை மேற்கொண்டது. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. அவை அனைத்தும் பலவீனமான தீர்மானங்களாக்கப்பட்டன. அதனால் அவற்றை எல்லாம் சிறீலங்காவின் மகிந்தா ராஜபட்சேயின் அரசு இதர பல நாடுகளின் உதவியோடு  சமாளித்து விட்டது.

 

 ஒஐஎஸ்எல் (OISL) அறிக்கை 

 

ஐநா மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் ஒரு தீர்மானத்தை மார்ச் 2014 இல் நிறைவேற்றியது. அத்தீர்மானம் “சிறீலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புடமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு” தேவையான நடவடிக்களை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையரை கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில், ஜெனிவாவில் “மனித உரிமைகள் ஆணையத்தின் சிறீலங்கா மீதான விசாரணை அலுவலகம்” (OHCHR INVESTIGATION ON Sri Lanka (OISL)) என்ற குழுவை ஆணையர் அமைத்தார்.  அக்குழு பெப்ரவரி 21, 2002 லிருந்து 15, நவம்பர் 2011 வரையில் நடைபெற்ற அனைத்து விவகாரங்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது. மேலும், இது சம்பந்தமாக இக்காலக்கட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கவனத்தில் கொள்ளலாம் என்று விசாரணையின் எல்லையும் நிர்ணயித்தது.

1061இக்குழுவுக்கு நிபுணத்துவ உதவி அளிக்க ஆணையர் மூன்று சிறந்த நிபுணர்களை நியமித்தார். பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டி ஆட்டிஸாரி, நியூஸீலாந்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாக்கிஸ்தான் மனித உரிமைகள் கழகத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கிர் ஆகியோரே அம்மூவர். இக்குழு அதன் விசாரணையை மேற்கொள்ள, குறிப்பாக மக்கள் காணாமல் போதல், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்செயல்கள், சித்தரவை போன்றவை குறித்த தகவல்களை பெறுவதற்கு, பல்வேறு தரப்பின் உதவியையும் பெறலாம். இந்த விசாரணை சுயேட்சையாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்தையும் அளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கு இருக்கிறது என்பதையும் இத்தீர்மானம் அனைத்து அரசாங்கங்களுக்கும் நினைவூட்டியது. தயார் செய்யப்பட்டுள்ள ஒஐஎஸ்எல் அறிக்கை வெளியிடப்பட்டு கடந்த மார்ச் 28 இல் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் 28 ஆவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. தற்போதைய சிறீலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அவ்வறிக்கை குறித்த விவாதம் இப்போது செப்டெம்பர் 2015 க்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

புதிய சிறீலங்கா அரசு தொடர்ந்து ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள அதன் கடப்பாட்டை தவிர்க்க அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. மேலும், இந்த அரசு செப்டெம்பரில் வெளியிடப்படவிருக்கும் ஒஐஎஸ்எல் அறிக்கையின் பரிந்துரையின் அனைத்துலக விசாரணைக்கு மாற்றாக உள்ளூர் விசாரணை மற்றும் நீதித்துறை நுட்பமுறை பயன்படுத்தப்படும் என்று கூறுகிறது. சிறீலங்கா அரசின் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல. அதற்கு எதிராக  சிறீலங்கா தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்கவும், சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களுக்காக சிறீலங்காவை அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் உலக மக்களின் ஆதங்கத்தை  திரட்டி ஐநா மனித உரிமைகள் மன்றத்திடம் தாக்கல் செய்வதற்கு ஒரு மில்லியன் கையொப்பங்களைச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உங்கள் ஆதரவை உங்கள் கையொப்பத்தின் வழி தெரியப்படுத்த இங்கே சொடுக்கவும்.