வன்முறை குற்றங்கள்: அபாயநிலையில் இந்தியர்கள்!

K. Arumugam_suaramவன்முறை குற்றங்களில் இந்தியர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது ஓர் அபாய அறிவிப்பு என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

வன்முறை குற்றங்களுக்காக கைதாகும் மூவறில் ஒருவர் இந்தியர். மக்கள் தொகையில் சுமார் 7.2 விழுக்காடு சிறுபான்மையாக உள்ள இந்தியர்கள் வன்முறை குற்றங்களுக்காக கைதாகுபவர்களில் 33 விழுக்காடாக இருப்பதால் நமது சமூகம் ஒரு குற்றவாளிகளைக் கொண்டுள்ள சமூகம் என்று முத்திரை குத்தப்படுகிறது என்றாரவர்.

இது நாடும் நமது சமூகத் தலைவர்களும் நமக்கிழைத்த ஒரு மாபெரும் கொடூரமான தண்டனை என்று அரசாங்கத்தையும் இந்திய அரசியல் தலைவர்களையும் கடுமையாகச் சாடுகிறார் ஆறுமுகம். “இவர்கள் வெட்கப்பட வேண்டும்”, என்கிறார்.

crime1கொலை, கற்பழிப்பு, ஆயுதம் தாங்கி கொள்ளை, குண்டர் கும்பலுடன் கொள்ளை, கடுமையான காயம் விளைவிக்கும் வகையிலான தாக்குதல் போன்ற குற்றசெயல்களுக்காக கடந்த ஆண்டு கைதான 23,186 நபர்களில் 7,746 நபர்கள் இந்தியர்கள், 2,774 சீனர்கள் மற்றும் 12,666 மலாய்கார்கள். மக்கள் தொகையில் சீனர்கள் 23.7 விழுக்காடு, மலாய்காரர்கள் 55.1 விழுக்காடாகும்.

இந்தத் தகவல்கள் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக வழங்கப்பட்டதாகும்.

இதற்கு முன்பு உள்ள ஒரு பழைய தகவல், 2004-இல் சிம்பாங் ரெங்கத்தில் அவசர கால சட்டத்தின் (EO) கீழ் தடுப்புகாவலில் இருந்த 702 நபர்களில் 316 பேர் இந்தியர்கள், 111 சீனர்கள், மீதம் 111 பேர் மலாய்காரர்கள். இது 45 விழுக்காடாகும். அதே காலக்கட்டத்தில் குண்டர் கும்பல் சார்பான அரசாங்க அறிக்கை (Journal of the KL Royal Malaysia Police College, No 4, 2005) அடையாளம் காணப்பட்ட 123 குண்டர் கும்பல்களில் 92 இந்தியர்களுடையது என்கிறது.

இந்த வன்முறைகளால் அதிகமாக பாதிப்படைவதும் இந்தியர்கள்தான் என்கிறார் ஆறுமுகம். நெகிரி செம்பிலானில் 2014-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (Health and the Environment Journal 2014, Vol 5, No 2, pp 41-56 –USM)   வன்முறையால் பாதிக்கப்பட்ட 193 நபர்களில் 73 நபர்கள் இந்தியர்காள், அதாவது 38 விழுகாட்டினர் இந்தியர்கள்.

கோடாரியே காம்பை வெட்டும் இந்த வேதனையான நிலைக்கான காரணங்களைக் கண்டு பிடிப்பதற்கு  ஒரு ராக்கெட் அறிவியல் தேவையில்லை என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

பலவகையான ஆய்வுகளை பல்கலைக்கழகங்களும், சமூக இயக்கங்களும், மஇகா உட்பட,   அரசாங்க குற்றவியல் பிரிவுகளும் மேற்கொண்டு காரணங்களைத் தொகுத்துள்ளன.

“குற்றவாளிகளை உருவாக்கும் குற்றவாளிகள்”

1 hindrafதோட்டப்புறத்திலிருந்து நாட்டின் மேம்பாட்டுக்காக வெளியேற்றப்பட்ட மக்கள், வீடுகளையும் வேலைகளையும் மட்டும் இழக்கவில்லை, தங்களின் வாழ்வியலுக்கு நம்பிக்கை கொடுத்து வந்த ரப்பர் பால் மரங்கள், செம்பணை மரங்கள், கோயில், சுற்றார், உற்றார் உறவினர், பழக்க வழக்கமாகி விட்ட தோட்டப்புற பண்பாடு இவற்றை இழந்ததால் உருவான வாழ்க்கை மாற்றம் அவர்களை வெறுமையாக்கியது, ஒதுக்கியது. நகர்புற வாழ்க்கைக்குத் தகுந்த வருமானம் அற்ற சுழல் ஒருபுறம்; மறுபுறம் குறைந்த சம்பளத்திலான கீழ்மட்ட வேலைகள் அவர்களை மேலும் வறுமையில் தள்ளியது.

குழந்தைகளுக்கு முறையான கல்வி பெற வாய்ப்பில்லாத சூழல், கல்வி தேர்ச்சியில் மாணவர்களை பின்தங்க வைத்தது அல்லது அவர்கள் பள்ளிகளை விட்டு நின்று விட அல்லது நீக்கப்பட செய்தது.

மனோவியல் தாக்கமும் மதிக்கப்படாத சூழலும் தாழ்வு மனப்பான்மைக்கு வித்திட்டது. ஒரு நம்பிக்கையற்ற சூழல் இவர்களை கவ்வியது. முறையான வாழ்கை கிடைக்காது என்ற எண்ண உருவாக்கத்தால், நீதியாகவும் நேர்மையாகவும் வாழ வேண்டிய வாய்ப்புகள் கை நழுவின. இவை குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலைகளை அதிகப்படுத்தியது.

அதோடு அரசாங்கத்தின் குற்றவியல் பிரிவின் ஆய்வு (Journal of the KL Royal Malaysia Police College, No 4, 2005) 2003-இல் சிறையில் இருந்த 49,243 கைதிகளில் 90 விழுக்காட்டினரின் மாதாந்திர சம்பளம் ரிம 1,000 க்கு குறைவானது என்கிறது. இது வறுமை ஒரு முக்கியமான காரணம் என்பதை உறுதிப் படுத்துகிறது.

அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் அடிப்படையான காரணங்களை அறிந்தவர்கள். ஆனால், கொள்கை அளவில் அதிகமாக எதையும் செய்யவில்லை. புண்ணுக்கு மருந்துபோடும் போக்கோடு செயல்படும் இவர்கள், பள்ளிகளைவிட சிறைசாலைகளைத்தான் அதிகம் கட்டுவார்கள். இவர்கள்தான் குற்றவாளிகளை உருவாக்கும் குற்றவாளிகள் என்கிறார் ஆறுமுகம்.