1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்: பிஎசி விசாரணை, எதற்காக? – ஜீவி காத்தையா

-ஜீவி காத்தையா, ஜூன் 2, 2015.

1mdbமலேசியாவில் தற்போது அரசியல் வட்டாரங்களை கலக்கிக் கொண்டிருப்பது இரு விவகாரங்கள்: ஒன்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று படுதோல்வியைத் தழுவியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி); மற்றொன்று, மங்கோலிய நாட்டு பெண் அல்தான்துயாவின் படுகொலை. இவ்விரு விவகாரங்கள் மீது கேள்விக் கணைகளைச் சரமாறி பொழிந்து பிரதமர் நஜிப்பை கதிகலங்கச் செய்து கொண்டிருப்பவர் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்.

அல்தான்துயா மற்றும் 1எம்டிபி ஆகிய இரு விவகாரங்களில் இன்று முன்னிலையில் இருப்பதுaltan 1எம்டிபி ஆகும். இதுவரையில், 1எம்டிபி பற்றிய கேள்விகளுக்கு “பொறுத்திருங்கள், தேசிய கணக்காய்வாளர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவார்” என்று நஜிப் கூறி சமாளித்து வந்தார். ஆனால், இப்போது இது சம்பந்தப்பட்ட போராட்ட நிலைமையில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. தம்மை “பூகிஸ்காரர்” என்று அடையாளப்படுத்திக் கொண்ட நஜிப், தாம் இப்போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று “மலபாரி” மகாதிருக்கு பதிலடி கொடுத்தார்.

1mdbbugisship1பூகிஸ்காரர் நஜிப்பின் வாய்வீச்சு மலபாரி மகாதிரிடம் பலிக்காது என்ற சூழ்நிலையை மகாதிர் ஏற்படுத்தி விட்டதாகத் தெரிகிறது. மகாதிரின் அதிரடிகள் அம்னோ தலைவர்களிடையே நஜிப்புக்கு எதிரான போக்கை உருவாக்கியிருக்கிறது என்பது கடந்த வெள்ளிக்கிழமை (மே 29) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் வெளியான செய்தியிலிருந்து தெரிய வருகிறது.

1எம்டிபி விவகாரத்தில் தம்மை ஆதரிக்காத அமைச்சரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் நஜிப் விடுத்ததாக உத்துசான் மலேசியா (ஜூன் 1) செய்தி கூறுகிறது (“Utusan Malaysia today reported Najib giving the ultimatum at the cabinet meeting last Friday…”)

அமைச்சரவையின் முடிவுக்கு ஒத்துப் போகாத அமைச்சரவை உறுப்பினர் பதவி விலக வேண்டும் என்பது அமைச்சரவை அமைவுமுறையின் கூட்டான பொறுப்பு என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டதாகும். அதனைக் கோரும் உரிமை பிரதமர் நஜிப்புக்கு உண்டு. இப்படியான ஒரு நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார் என்றால் இந்த 1எம்டிபி விவகாரத்தில் அம்னோ அமைச்சர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது (இதில் மசீச மற்றும் மஇகா அமைச்சர்கள் பிரதமருக்கு எதிராகச் செயல்பட்டு கிடைத்ததை இழக்கமாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்!). ஆனால், இதுவரையில் பதவி துறக்க எந்த அமைச்சரும் முன்வரவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், பிரதமர் நஜிப் தம்மோடு ஒத்துப்போகாதவர்கள் பதவி விலக வேண்டும் என்ற இறுதி எச்சரிக்கை எதனையும் விடவில்லை என்று அமைச்சர் நஸ்ரி விளக்கமளித்துள்ளார். இந்த மூடிமறைக்கும் விளையாட்டெல்லாம் அவர்களுக்கு வழக்கமான ஒன்றே.

தீ  அணைப்பு படைக்கு தேவையில்லாத உபகரணங்கள் வாங்கியது மீதான  பிஎசி விசாரணை     

1எம்டிபி விவகாரத்தில் தம்மை ஆதரிக்காத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறும் அளவிற்கு இப்பிரச்னை முற்றிவிட்ட போதிலும், 1எம்டிபிக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து எதிர்மறையான கருத்துகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும் என்று அவர் மே மாத கடைசி வாரத்தில் கூறினார்.

தேசிய கணக்காய்வாளர் 1எம்டிபி பற்றிய அவரது அறிக்கையை மலேசிய நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவிடம் (பிஎசி) தாக்கல் செய்வார் என்றும் அதுவரையில் பொறுத்திருக்குமாறும் நஜிப் மக்களை கேட்டுக்கொண்டார். கணக்காய்வாளர் அறிக்கையும், பொதுக்கணக்கு குழு விசாரணையின் முடிவும் தமக்குச் சாதகமாக இருக்கலாம் என்று நஜிப் நம்பிக்கை கொண்டிருக்கலாம். மேலும், மலேசிய நாடாளுமன்ற பிஎசி பெரிதாக ஏதும் செய்துவிடப் போவதில்லை என்ற கணிப்பும் அவரிடம் இருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிஎசி ஒரு மலேசிய அமைச்சரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதற்குப் பதில் அளித்த அந்த அமைச்சர், முதலில் கேள்வி என்ன என்பதை தெரிவியுங்கள். அதைப் படித்து பார்த்த பின்னர் விசாரணைக்கு வருவதா இல்லையா என்று முடிவு செய்கிறேன் என்று கூறினார். அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. இது போன்ற பிஎசி நஜிப் போன்றவரை என்ன செய்ய முடியும்?

nur jazlanமலேசிய தீ அணைப்புப் படைக்கு தேவைப்படாத 116 சிசிசிஎஸ் கோப்ரா-கட்டிங் எக்ஸ்டிங்குஷ்சர் போன்ற உபகரணங்களை (“116 units of CCS Cobra-Cutting Extinguisher e-300) ஷரிகாட் கெஜுருதெராஆன் செண்ட். பெர்ஹாட்டிடமிருந்து வாங்கப்பட்டது குறித்து பிஎசி விசாரணை மேற்கொண்டது.

அந்த இலாகாவின் துணைத் தலைமை இயக்குனர் மஹாடி முகமட் அலி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் இந்த உபகரணங்களை வாங்கும்படி நிதி அமைச்சு தங்களுக்கு உத்தரவிட்டது என்று விசாரணையில் கூறியதாக பிஎசி தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் (அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்) தெரிவித்தார்.

அந்த உபகரணங்கள் இந்த நாட்டிற்கு தேவையற்றது. அவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை. அது ஓர் வீணான செலவு என்று மஹாடி கூறியதாக நூர் ஜஸ்லான் தெரிவித்ததோடு அன்றைய விசாரணையில் பங்கேற்ற வந்திருந்த நிதி அமைச்சின் அதிகாரிகள் இதற்கான விளக்கத்தை விரைவாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விசாரணை ஜனவரி 2014 இல் நடைபெற்றது. அன்றும் இன்றும் நிதி அமைச்சராக இருப்பவர் நஜிப். விசாரணையின் முடிவு என்ன? அது குறித்த அறிக்கை அல்லது அறிவிப்பு ஏதேனும் உண்டா என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டதற்கு, அப்படி ஒன்றும் இல்லையே என்றனர்.

நிதி அமைச்சால் ரிம50 மில்லியன் வீணடிக்கப்பட்டதற்கு இன்றும் விடை காணாத பிஎசியும் அதன் தலைவர் நூர் ஜஸ்லானும் அதே நிதி அமைச்சுக்கு சொந்தமான 1எம்டிபியின் ரிம42 பில்லியன் இழப்பை எப்படி விசாரித்து எப்போது முடிவு காண்பார்கள் என்ற கேள்வி நியாயமானதே.

அதனால்தான் பிஎசி 1எம்டிபி பற்றி விசாரணை மேற்கொள்வதை மகாதிர் ஆட்சேபிக்கிறார். “காத்திருங்கள். கணக்காய்வாளர் அறிக்கை வரும் jkவரையில் காத்திருங்கள். அது பல ஆண்டுகள் பிடிக்கும். கணக்குகளை ஆய்வது எதனையும் வெளிப்படுத்தாது என்று கூறிய அவர், கணக்காய்வாளர் அறிக்கை வரும் வரையில் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வது முட்டாள்தனமானது என்றார்.

பிஎசி கடந்த ஏப்ரலில் 1எம்டிபி விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவெடுத்தது. இந்த விசாரணையின் நோக்கம் “அரசியல் கட்சிகளை காப்பாற்றுவது பற்றியதல்ல. 1எம்டிபி பற்றிய உண்மையைக் கண்டறிவதாகும்” என்று நூர் ஜஸ்லான் அறிவித்தார்.

மே 19 இல், கஜனாவின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிஹார் அப்துல்லாவும் பொருளாதார திட்டமிடும் பிரிவின் தலைமை இயக்குனர் ரஹமாட் பிவி யூசுப்பும் பிஎசியின் முன் சாட்சியமளித்தனர்.

sack kanda

அதற்கு அடுத்த வாரத்தில், மே 26 இல், 1எம்டிபியின் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி ஷாருல் இப்ராகிம் ஹல்மி மற்றும் தற்போதைய தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.  அந்த அழைப்பை பிஎசி முறைப்படி நிதி அமைச்சுக்கு மே 6 இல் அனுப்பியிருந்தது. ஆனால், அவ்விருவரும் சாட்சியமளிக்க வரவில்லை. இதற்கு பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன.  தொடக்கமே இப்படி என்றால், முடிவு எப்படி இருக்கும்? முடிவு மகாதிர் கூறியது போல்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

 

பொதுக்கணக்கு குழுவுக்கு அதிகாரம் ஏதும் இல்லை

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு மிக முக்கியமானதும் சக்திமிக்கதுமாகும். பிரிட்டன் போன்ற நாட்டில் அதன் brparliamentநாடாளுமன்ற பிஎசியின் கட்டளையை அலட்சியப்படுத்தும் துணிவு எவருக்கும் இல்லை என்றால் மிகையாகாது. அக்குழுவுக்கு தலைவராக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் இருப்பது அங்கு பாரம்பரியமாகும். “வரிசெலுத்துவோரின் பணத்தை செலவிடும் அரசாங்கத்தை அதற்கான கணக்கைக் கூற வைக்கும் கடப்பாடு இக்குழுவுக்கு [பிஎசி] இருக்கிறது” என்று பிரிட்டீஷ் நாடாளுமன்ற பிஎசியின் தலைவராக இருந்த எட்வர்ட் ரேய் கூறியுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் பிஎசிக்கு அவ்வாறான கடப்பாடும், அதனை அமல்படுத்துவதற்கான அதிகாரமும் இல்லை என்ற கருத்து வெளியாகியுள்ளது.

கடனில் சிக்கியிருக்கும் 1எம்டிபியின் கணக்கை சுயேட்சையாகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் விசாரிப்பதற்கான அதிகாரம் பிஎசிக்கு இல்லை என்பது தமது அனுபவம் என்று மே 23 இல் பிஎசியின் முன்னாள் தலைவர் டாக்டர் அஃபிபூடின் ஒமார் கூறியிருக்கிறார்.

முன்னாள் துணை நிதி அமைச்சரான அஃபிபூடின், “நான் பிஎசியின் தலைவராக இருந்த போது, நாங்கள் வழக்கு தொடர்வதற்குரிய சட்டம் சார்ந்த அடிப்படையில் கணக்காய்வு (forensic audit) செய்வதில்லை. நாங்கள் கணக்காய்வாளரின் அறிக்கையை மட்டும் விவாதித்தோம். அவர்கள் அதை மறைக்க கணக்காய்வாளரிடம் கேட்டால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது”, என்று கூறினார்.

1mdbbugisship2“எசியின் குறியிலக்கு குறுகியது. மக்களுக்கு அழைப்பாணை விடுப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை, மற்றும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை” (“The PAC scope is limited. We don’t have the power to summon people and we don’t have the power to prosecute”), என்று தயக்கம் ஏதுமின்றி முன்னாள் துணை நிதி அமைச்சரும், பிஎசி தலைவருமான அஃபிபூடின் ஒமார் தெரிவித்துள்ள கருத்து பிஎசியின் தற்போதைய தலைவர் நூர் ஜஸ்லான் தீ அணைப்பு படை ரிம50 மில்லியனுக்கு வாங்கிய உபகரணங்களுக்கான விளக்கத்தை இன்னும் நிதி அமைச்சிடமிருந்து பெறாமல் இருப்பதற்கும், 1எம்டிபி மீதான பிஎசியின் விசாரணைக்கு அழைக்கப்பட்ட   முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி ஷாருல் இப்ராகிம் ஹல்மி மற்றும் தற்போதைய தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஆகியோர் சாட்சியமளிக்க வரத் தவறிதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கும் சான்றாக இருக்கின்றன.

இதே நிலை நீடித்தால், 1எம்டிபி மீதான விசாரணை என்ற நாடகம் பல ஆண்டுகள் வரையில் நடக்கலாம். இறுதில், குற்றவாளிகள் என்ற எவரும் இருக்கமாட்டார்கள்.

இதற்கு மாற்றாக இந்த 1எம்டிபி விவகாரம் மீது வழக்கு தொடர்வதற்குரிய சட்டம் சார்ந்த அடிப்படையில் கணக்காய்வு (forensic audit) மேற்கொள்ள வேண்டும் என்று மகாதிர் முகமட் ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார் முன்னாள் துணை நிதி அமைச்சரும், பிஎசி தலைவருமான அஃபிபூடின் ஒமார்.

மேலும், பிஎசியின் விசாரணைக்கு மாற்றாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் மகாதிர் கூறியுள்ளார். இந்நாட்டில் எத்தனையோ ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் முடிவுகள் எந்த அளவிற்கு நிறைவேற்றம் கண்டன என்பதை மக்கள் அறிவர்.

இருப்பினும், படுமோசனமான இந்த 1எம்பிடி விவகாரத்திற்கு விடை காண “போரன்சிக்” கணக்காய்வு அல்லது ஒரு ஆணையம் நூர் ஜஸ்லான் தலைமையிலான பிஎசி விசாரணையைவிட சிறப்பான வழியாக இருக்கும் என்றால், பொதுமக்களும், சிவில் சமுதாய அமைப்புகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்காக போராட வேண்டியது அவசியமாகும்.