(ஐயன்திருமேனி)
புக்கிட் ஜாலில் தோட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும். புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசும் அதிகாரிகளும் செவிசாய்க்க மறுத்து வருவது நியாயமான செயலாக இல்லை.
காலங்காலமாக தோட்டங்களில் வேலைப் பார்த்து வரும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு ஏற்க மறுப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. அவர்கள் என்ன 400 ஏக்கர் நிலமா கேட்கின்றனர்.
சராசரி மக்களைப்போல வாழ குடியிருக்க ஒரு சிறு வீடு கட்டிக்கொள்ள நான்கே நான்கு ஏக்கர் நிலம் மட்டுமே கேட்கின்றனர். இதில் அரசுக்கும் மற்றவர்களுக்கும் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டுவிடும்.
ஒரு வீடு கட்டிக்கொள்ள நான்கு ஏக்கர் நிலம் மட்டுமே. எதற்கு மாளிகை கட்டவா? அல்லது முன்னால் சிலாங்கூர் மந்திரி புசார் கிர் தோயோ அவர்களைப்போல பெரிய அளவிலே உல்லாசதளமாக மாளிகைகளைப் போன்ற கோட்டைகள் கட்டிக் கொள்ளவா கேட்கின்றனர்.
படுத்து உறங்க தங்களின் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறு வீடு கட்டிக் கொள்ள 4 ஏக்கர் நிலமே அவர்களுக்குத் தேவை. மக்களின் அத்தியாவசியமான இந்த வீட்டுடமையைக்கூட செய்து கொடுக்க மறுக்கும் இந்த அரசாங்கம் எப்படி மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கப் போகிறது?
காலங்காலமாக இரண்டு மூன்று தலைமுறைகளாக தோட்டப்புறங்களிலேயே வாழ்ந்து நாட்டிற்காக உழைத்து உருகுலைந்து போனவர்களின் அத்தியாவசியமான இந்த வீட்டுப் பிரச்னைகளைத் தீர்க்க ஏன் இத்தனை இழுபறி?
அவர்கள் என்ன வேண்டாதவர்களா? அவர்களும் மலேசிய குடிமக்கள்தானே. அல்லது வேற்று இனமா? எது உங்களைத் தடுக்கிறது?
இந்த அரசாங்கமும் சில அதிகாரிகளும் நான்கு ஏக்கர் நிலத்தைக் கொடுக்க மறுப்பதும் அடாவடித்தனமாக அந்தத் தோட்டத்து மக்களை வெளியேற்ற நினைப்பதும் ஓன் மலேசியக் கொள்கையாகப் படவில்லை. நாட்டு மக்களின் குறைகளை அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
நான்கு ஏக்கர் நிலம் கொடுப்பதால் மலேசிய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பெரிய இழப்புகள் ஏற்பட போவதில்லை. மாறாக அந்த தோட்டத்து மக்களின் பேராதரவைப் பெறலாம்.
புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதே ஜனநாயக அரசின் தலையாய கடமை. எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் காத்திருக்கும் புக்கிட் ஜாலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் நல்லதோர் தீர்வு கிடைக்குமா?