நஜிப் இந்தியர்களை கூறு போடுகிறார்

ஜீவி காத்தையா, ஜூன் 14, 2015.

cabinetபிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல்  மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியைப் பெறும் போது அதன் குடிமக்களாகிய இந்தியர்களும் மேம்பாடு கண்டவர்களாக வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 11 ஆவது மலேசிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவா?

ஆச்சரியம், ஆனால் உண்மை. பிரதமர் நஜிப் 11 ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் அத்திட்டத்தை மறுஆய்வு செய்து அதில் இந்தியர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைக் கிண்டிப் பார்த்து, அவற்றை ஒருமுகப்படுத்தி, அவற்றுடன் இன்னும் என்ன தேவைப்படுகிறது என்பதையும் சேர்த்து ஓர் அறிக்கையை பிரதமர் நஜிப்பிடம் வழங்கும் நோக்கத்துடன் மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலுவின் தலைமையில் ஒரு கருத்தரங்கு கோலாலம்பூரில் மே 31 இல் நடத்தப்பட்டது. அதில் பல பெருமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

அக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் நிபுணத்துவ கருத்துகளை சுட்டிக் காட்டி பேசிய இன்னொரு முக்கிய பிரமுகர் இப்படி கூறினார், “இம்முறை (11ஆவது) மலேசிய திட்டத்தில் இந்திய சமூகத்திற்கென குறிப்பிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படாவிட்டாலும் அனைத்து இனங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. என்னுடைய கோரிக்கை என்னவென்றால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது அனைத்து இனங்களுக்கும் சரிசமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் அரசாங்க வேலைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. அரசாங்க நிறுவனங்களிலும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. இதே போன்று எல்லாத் துறைகளிலும் குறிப்பிட்ட இனத்தை மட்டும் சாராமல் எல்லா இனங்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார் (தமிழ் நேசன் ஜூன் 1).

இன்னும் பலர் ஏதேதோ பேசினர். ஆனால், 11 ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கு திட்டவட்டமாக எதுவும் இல்லை என்று அடித்துக் கூறிவர் மேலே குறிப்பிட்ட ஒருவர்தான்.

குதிரை இலாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னர் வாயிற்கதவை மூட எத்தனிப்பது போல, 11 ஆவது மலேசிய திட்டம் தாக்கல் செய்யப்பட்ட1datuk samy 1 பின்னர், அரசாங்கத்திடம் கேட்டு, கேட்டு எதுவும் கிடைக்காததால் விரக்தியடைந்து இனிமேல் அரசாங்கத்திடம் எதுவும் கேட்க மாட்டோம். கடையை மூடுவோம் என்று அப்துல்லா படாவி காலத்தில் கண்ணீர் விட்ட தலைவர் ச. சாமிவேலு, இந்தியர்களுக்கான உரிமையை பெறுவோம் என்று இக்கருத்தரங்கில் கூறினார்.

சாமிவேலு கூறுகிறார், “இந்நாட்டில் வாழும் இந்தியர்கள் மற்ற இனத்தவர்களை போன்று சமமான நிலையில் வாழ்வதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய திட்டங்கள் அனைத்தும் இக்கருத்தரங்கில் ஆலோசிக்கப்படும். இந்திய சமுதாயத்திற்கு என்ன உரிமைகள் வழங்கப்பட வேண்டுமோ அதனை அரசாங்கத்திடமிருந்து நிச்சயம் பெற்றுத் தரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்திய சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டியவை முறையான வழியில் சென்று சேர இந்த 11 ஆவது மலேசிய திட்டம் வழிவகுக்கும்.”

 

தமிழர், மலையாளி, சீக்கியர், தெலுங்கர் பங்கிட்டுக் கொள்ள ரிம10 கோடி

 

இந்தியர்கள் மேம்பாடு அடைவதற்கான திட்டம் ஏதும் 11 ஆவது மலேசிய திட்டத்தில் இல்லை. ஆனால், இந்தியர்களின் மேம்பாட்டிற்கு நிதி என்ற போர்வையில் இந்தியர்களை கூறு போடும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கு பிரதமர் நஜிப்பின் ஒப்புதலும் கிடைத்து விட்டது என்று அரசு ஊழியர் டாக்டர் என். எஸ். இராஜேந்திரன் ஜூன் 6 இல் அறிவித்து விட்டார்.

1946 ஆம் ஆண்டிலிருந்து மஇகா இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது என்று கூறுகின்றனர். ஆனால், வெறும் 30 நாள்களுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட பிரதமர்துறையின் இந்திய சமுதாயத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு பிரிவின் (செடிக்) தலைவர் டாக்டர் இராஜேந்திரன் இந்த ரிம10 கோடி நிதி ஒதுக்கீடு 40 விழுக்காடு இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட உன்னத முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

N.S.Rajendranஇந்தியர்கள் மேம்பாடு அடைவதற்கான திட்டங்கள் வரையப்பட்டு இன்னும் இரண்டு வாரத்தில் பிரதமரிடம் கொடுக்கப்படும் என்று கருத்தரங்கில் ச. சாமிவேலு கூறினார். ஆனால், 40 விழுக்காடு இந்தியர்களின் மேம்பாட்டிற்காக செடிக் தயாரித்திருந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு அத்திட்டத்தை அடுத்த சில மாதங்களில் அது அமல்படுத்துவதற்காக பிரதமர் நஜிப் ரிம10 கோடி (ரிம100 மில்லியன்) நிதிக்கு அங்கீகாரம் அளித்து விட்டார் என்று டாக்டர் இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த ரிம100 மில்லியன் இந்தியர்களை மேம்பாடு அடையச் செய்வதற்காக இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும், திறன் பயிற்சி கழகங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறிய இராஜேந்திரன், இந்த நிதி இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, தமிழர், மலையாளி, சீக்கியர் மற்றும் தெலுங்கர் உட்பட, குறைந்த வருமானம் பெருவோர் பங்கிட்டுக்கொள்வர் என்றும் தெரிவித்தார்.

 

ரிம100 மில்லியன் மேம்பாட்டிற்கான நிதியா அல்லது இந்தியர்களை கூறுபோடுவதற்கான திட்டமா?

 

செடிக் ஏன் இந்தியர்களை தமிழர், மலையாளி, சீக்கியர், தெலுங்கர், குஜராத்தி, மராத்தி, மண்ணாங்கட்டி என்றெல்லாம் பிரித்து அவர்களை சின்னாபின்னமாக்கும் ஒரு வியூகத்திற்கு துணை போக வேண்டும்? நஜிப் இதனைச் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இது நிச்சயமாக இராஜேந்திரனுக்கு தெரியாமல் இருக்க முடியாது. ஒருவேளை, அவர் ஓர் அரசு ஊழியர் என்பதால், பிரதமரின் ஆவலை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கலாம். அதற்காக, இந்தியர்களின் எதிர்காலத்தை அடமானம் வைக்கலாமா?

நஜிப் வழங்க முன்வந்திருக்கும் இந்த ரிம100 மில்லியனை பங்கு போட்டுக் கொள்ள தற்போது இயங்கும் என்ஜிஓ-களுக்கு  போட்டியாக இன்னும் பல என்ஜிஓ-கள் தோற்றுவிக்கப்படும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை விட அதிகமான இந்திய என்ஜிஒ-கள் அங்கு இருக்கின்றன என்று அம்மாநில மந்திரி புசார் கடந்த ஆண்டு கூறியிருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெற இன்னேரம் பல என்ஜிஒ-கள் பின்வாசல் வழியாக செடிக்குடன் தொடர்பு கொண்டிருக்கும் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போதெல்லாம் அதுதான் எல்லாருக்கும் தெரிந்த வழி!

மேலும், இந்த ரிம10 கோடி (100 மில்லியன்) அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தை மேம்படுத்த இன்றைய பொருளாதார சூழ்நிலையில் போதுமானதா?

தமிழர், மலையாளி, சீக்கியர், தெலுங்கர் ஆகியோரின் மேம்பாட்டிற்காக நஜிப் வழங்க முன்வந்திருக்கும் இந்த ரிம100 மில்லியன், எதிர்வரும் ஹரிராயா கொண்டாட்டத்தின் போது 100 திறந்த இல்ல ஹரிராயா உபசரிப்பை நடத்துவதற்கு போதாது என்பதை இந்தியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈராண்டிற்கு முன்னர், மலேசிய நாடாளுமன்றத்தில் 10 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த ஆண்டில் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதற்கு அரசாங்கம் அளித்த மானியம் எவ்வளவு என்ற கேள்வி எழுந்தது. பதில்: ஒவ்வொருவருக்கும் ரிம1 மில்லியன்! இன்றைய நிலையில், ஒரு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்த ரிம1 மில்லியன் போதாது.

ஆகவே, ரிம10 கோடி என்பது நஜிப் அரசின் உன்னத முயற்சி அல்ல; அது ஓர் உன்னத சூழ்ச்சி!