பெருமாள்கள் வழி உலக வழி

 

Kattu Perumal3மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரும், நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்காக தொழிற்சங்க இயக்கத்துடனும் கம்யூனிச அமைப்புடனும் இணைந்து செயல்பட்டு போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருமான சுங்கை சிப்புட் பெருமாள் அன்றைய பிரிட்டீஷ் மலாயா அரசாங்கத்திற்கு ஒரு பெரும் மிரட்டலாக விளங்கினார். அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அரசு அவரை உயிரோடு பிடித்துக் கொடுப்பவருக்கு $12,000 வெகுமதியாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் மலாயாவுக்கு சுதந்திரம் பெற போராடப் போவதாக களமிறங்கிய சர் (பிரிட்டீஷார் வழங்கிய பட்டம்) ஓன் பின் ஜாபார் மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் போன்றவர்களின் தலைகளுக்கு பிரிட்டீஷ் பேரரசு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்க முன்வரவில்லை!

 

சின் பெங்கிற்கு ராஜமரியாதை

 

மலாயா முழுவதையும் எடுத்துக் கொண்டால் கம்யூனிச அரசியல் நடவடிக்கைகளில் மிக அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்ட வட்டாரம் சுங்கை சிப்புட்தான் என்று மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங் கூறியுள்ளார். பேராக் மாநிலத்தில்Chin-Peng-2 தோட்டங்களுக்கு அடுத்து ஈயச் சுரங்கங்கத் தொழிலும் பெரிய அளவில் இருந்தது.

பேராக் மாநிலத்திலேயே பிறந்து, வளர்ந்து, இரண்டாவது உலகப் போரில் மலாயாவை பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றிய ஜப்பானியரை தோற்கடிக்க பிரிட்டீஸ் படையினருக்கு பேருதவி செய்த சிங் பெங்கிற்கு தங்கப் பதக்கம் அளித்து லண்டன் வெற்றிப் பேரணியில் பங்கற்க வைத்து ராஜமரியாதை செய்த பிரிட்டீஷ் பேரரசு அவரை பின்னர் பயங்கரவாதி என்று அறிவித்து அவரை உயிருடன் பிடித்துக் கொடுப்பவருக்கு $250,000 வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தது!

பெருமாளும் சின் பெங்கும் பிரிட்டீஷ் பேரரசுக்கு எதிராகப் புரிந்து குற்றம் மகாத்மா காந்தி அப்பேரரசுக்கு எதிராகப் புரிந்த குற்றத்தைப் போன்றதுதான். அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் கோரினார். இவர்கள் மலாயாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்றனர்.

பிரிட்டீஷ் பேரரசுக்கு மகாத்மா காந்தி உதவி புரிந்ததற்காக அவருக்கு கைசர்-ஐ-ஹிந்த் என்ற தங்கப் பதக்கம் அளித்து அவரை கௌரவித்தது. பிரிட்டீஷாரை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் வேலையில் காந்தி இறங்கியதும் அவரையும் பேரரசு ஒரு பயங்கரவாதி என்று பிரகடனம் செய்தது.13 ஆண்டுகளை அவர் பிரிட்டீஷ் இந்திய சிறையில் கழித்தார்.

பிரிட்டீஷ் பேரரசுக்கு எதிராக காந்தியும், பெருமாளும், சிங் பெங்கும் புரிந்த மாபெரும் குற்றம் அப்பேரரசை இவர்களின் நாடுகளிலிருந்து வெளியேற்றி அவற்றின் வளம் சூரையாடப்படுவதை தடுப்பதாகும். மலாயாவில் தோட்டத் தொழில் வளர்ச்சி கண்ட பிறகு மலாயாவிலிருந்து பிரிட்டன் அடைந்த வருமானம் இந்தியாவிலிருந்து கிடைத்ததைவிட அதிகமானதாகும்.

 

பெருமாள் இரக்கமற்ற கொடியவன்

 

இந்தியாவில் பிரிட்டீஷ் பேரரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த வேளையில் மலாயாவில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் பிரிட்டீஷ் பேரரசின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்தது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி மலாயாவை பிடிங்கிக் கொள்ள அமெரிக்கா முயன்றது. ஆனால், வின்ஸ்டன் சர்ச்சில் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

1948 ஆம் ஆண்டில், மலாயாவின் தொழிலாளர்களில் 66.6 விழுக்காட்டினர் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். (இன்று வெறும் 7 விழுக்காட்டினரே  தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கின்றனர்!) பெரும்பாலான தொழிற்சங்கங்கள் எஸ். எ. கணபதியின் தலைமையில் இயங்கிய அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் (PMFTU) உறுப்பியம் பெற்றிருந்த சங்கங்களின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நிலைவிய தேசிய விடுதலைப் போராட்டங்களால் மலாயாவின் தொழிலாளர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர் சந்திர போஸ் இந்நாட்டு தொழிலாளர்களின் சுதந்திர உணர்வுகளுக்கும் உரிமைப்  Ganapathy-saபோராட்டங்களுக்கும் வலுவூட்டினார். தோட்டம் மற்றும் சுரங்கத் தொழில்களில்  ஈடுபட்டிருந்த இந்திய மற்றும் சீன தொழிலாளர்களின் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் பிரிட்டீஷ் பேரரசை நிலைகுலையச் செய்தன. மலாயாவை இழக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டதை உணர்ந்த அப்பேரசு அகில மலாயா தொழிலாளர் சம்மேளத்தை தடை செய்தது. அவசரக் காலச்சட்டத்தை அமலாக்கியது. எஸ். எ. கணபதியை தூக்கிலிட்டது. இன்னும் ஏகப்பட்ட வீரசேனன் போன்ற தொழிற்சங்க தலைவர்களை சுட்டுக் கொன்றது. இன்னும் பலர் உயிர் பிழைக்க காட்டிற்குள் சென்று தலைமறைவாகி விட்டனர். சுங்கை சிப்புட் காட்டுப் பெருமாள் வேட்டையாடப்பட்ட தொழிற்சங்கவாதிகளில் முக்கியமானவர். அவருக்கு எதிராக பேராக் மாநில மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய பேராக் மாநில தலைமை போலீஸ் அதிகாரி யுஎன் யுஎட் லெங், காட்டுப் பெருமாள் ஓர் இரக்கமற்ற கொடியவன் என்றும் அதற்குப் பயந்து இந்தியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார். மகாத்மா காந்தியையே பயங்கரவாதி என்று அறிவித்த பிரிட்டீஷ் பேரரசுக்கு காட்டுப் பெருமாள் ஓர் இரக்கமற்ற கொடியவன் என்று பறைசாற்றுவது ஒன்றும் பெரிதல்ல.

மலாயாவில் பிரிட்டீஷ் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியது கம்யூனிஸ்ட்களின் ஆயுதப் போராட்டத்தை விட இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்தான். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது எந்த விதமான பழியையும் சுமத்த பிரிட்டீஷ் பேரரசு தயங்கியதே இல்லை. மலாயாவில் தொழிலாளர்களுக்காக உண்மையாக போராடுபவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்படுகிறது என்று எஸ். எ.கணபதியின் தலைமையில் இயங்கிய தொழிற்சங்க இயக்கத்தை அழித்து மாற்று இயக்கத்தை உருவாக்க பிரிட்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜோன் பிரேசியர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிரிட்டீஷ் பேரரசைப் பொறுத்தவரையில், பிரிட்டீஷ் ஆட்சிக்குட்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் மக்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அப்பேரரசுக்கு எதிரான குற்றங்களாகும். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டனர். அப்பேரரசு அடிமைப்படுத்திய நாட்டு மக்களுக்கு எதிராக எவ்விதக் குற்றமும் புரிந்ததே இல்லை என்பது அதன் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. ஏதாவது ஒன்றைச் சொல்லி உண்மையை மறைத்து அதன் பொறுப்பை தட்டிக்கழிப்பது அதன் கொள்கையாக இருந்து வந்துள்ளது.

 

ஜாலியன்வாலா பா படுகொலை

 

jallianwala bagh1இந்தியாவில், 13. 4. 1919 ஆம் ஆண்டில் பஞ்சாப் ஜாலியன்வாலா பா என்ற இடத்தில் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே வழியை மட்டும் கொண்ட கட்டடத்தில் 20,000 மக்கள் கலந்து கொண்ட ஒரு சமய மற்றும் அரசியல் கூட்டம் நடந்தது. பஞ்சாப் கவர்னர் மைக்கல் ஒ’டையரின் உத்தரவுப்படி பிரிகேடியர் எட்வர்ட் ஹேரி டையரின் தலைமையில் 50 இந்திய படையினர் அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்த ஒரே ஒரு வழியையும் மூடிவிட்டு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு குழுமியிருந்த மக்கள் மீது சுமார் 10 லிருந்து 15 நிமிடங்கள் வரையில் 1,650 முறை குண்டுகளைப் பொழிந்தனர்.

அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். சில முஸ்லிம்களும் இந்துக்களும் இருந்தனர். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அப்படுகொலைத் தாக்குதலில் 379 பேர் கொல்லப்பட்டனர்; 1,500 பேர் படுகாயமடைந்தனர்; இன்னும் பல்லாயிரம் பேர் சொற்ப காயங்களுக்கு ஆளாயினர்.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அச்சம்பவம் குறித்து விசாரணை என்ற நாடகம் நடந்தது. இப்படியும் அப்படியுமாக சில பரிந்துரைகள் செய்யப்பட்டன. அத்துடன் அச்சம்பவம் முடிவுற்றது.

ஆனால், அச்சம்பவத்தை கண்ணால் கண்ட ஓர் அனாதையான 20 வயது இளைஞன் உதாம் சிங், பழிக்குப் பழி என்று சூளுரைத்தான். பல நாடுகளைக் கடந்து சென்று லண்டனை அடைந்த உதாம் சிங் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரு டையர்களையும், சில இங்லீஸ் உயர்குடியைச் சேர்ந்தவர்களையும் லண்டன் வெஸ்மினிஸ்டர் கேக்ஸ்டன் ஹாலில் 13.3. 1940 இல் நேருக்கு நேர் சந்தித்தான். எடுத்தான் துப்பாக்கியை, udham singhசுட்டுத்தள்ளினான். மைக்கல் ஒ’டையர் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் ஓரிருவர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமுற்றனர். வாத நோயால் முடக்கப்பட்ட அங்கு கிடந்த ஹேரி டையரின் பரிதாப நிலையைப் பார்த்த உதாம் சிங் அவனைக் கொல்லவில்லை!

தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழி வாங்க 21 ஆண்டுகள் அலைந்து திரிந்த உதாம் சிங் வந்த காரியம் முடிந்தவுடன் தப்பியோட முயற்சிக்கவில்லை.

“நான் இறக்கத் தயார்” என்று கூறியவாறு நின்று கொண்டிருந்த உதாம் சிங் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ஏற்றுக்கொண்ட உதாம் சிங், தம் நாட்டு மக்களுக்கு தாம் ஆற்றிய கடமைக்காக மரண தண்டனை அளித்த நீதிபதிக்கு நன்றி கூறினான். பின்னர், நீ ஏதாவது கூற விரும்புகிறாயா என்று நீதிபதி கேட்ட போது, உதாம் சிங் பிரிட்டீஷ் அரசையும், அதன் நீதிமுறையையும், அதிகாரத்தினரையும் கடுமையாகச் சாடினான். உதாம் சிங் கூறியவற்றை வெளியிடக்கூடாது என்று ஊடகங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

உதாம் சிங் பென்டன்வில் சிறையில் 31.7. 1940 லில் தூக்கிலிடப்பட்டான்.

மலாயாவில் பத்தாங்காலி படுகொலை பற்றியும் நாம் அறிவோம். அதற்கும் இன்றுவரையில் பிரிட்டீஷ் அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை.

இந்நாட்டில், தொழிற்சங்க இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஏராளமான இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், சிறையிலடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர் மற்றும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். சீனர்கள் சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

cheddi jaganபிரிட்டீஷார் ஆட்சி செய்த ஒவ்வொரு நாட்டிலும் இந்தியர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அது ஆப்ரிக்காவின் கென்யாவாக இருந்தாலும் சரி, தென்அமெரிக்காவின் கயனாவாக இருந்தாலும் சரி, இந்தியர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

கயனாவின் சுந்திரப் போராட்டவாதியும், தொழிற்சங்கவாதியுமான டாக்டர் செடி ஜெகன் கரும்புத் தோட்ட தொழிலாளியின் மகன். அவர் அந்நாட்டின் பிரதமரான பின்னரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றம்? கம்யூனிச அனுதாபி! ஆனால், செடி ஜெகன் விட்டுக்கொடுக்கவில்லை.  கயனாவை சுதந்திர நாடாக்கினார்.

 

இந்தியா எவ்வழியோ அவ்வழியே உலகம்

 

இந்தியாவின் செல்வக்கொழிப்பை கேள்வியுற்ற ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கான கடல் வழி பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

அவற்றை பின்பற்றி, பிரிட்டன் ஈஸ்ட் இண்டியா கம்பெனியை நிறுவி இந்தியாவில் காலடி வைத்து இறுதியில் அந்நாட்டை அதன் ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்தியாவை அதன் தளமாக வைத்து இதர ஆப்ரிக்க, ஆசிய நாடுகளை கைப்பற்றி அந்நாடுகளை அதன் ஆட்சிக்குட்படுத்தி பிரிட்டன் ஒரு வலிமை மிக்க பேரரசாகியது.

பிரிட்டன் தொடர்ந்து ஒரு பேரரசாக இருக்க வேண்டுமானால் பிரிட்டன் வரலாற்று அடிப்படையிலான ஒரு முக்கியமான கொள்கையை icurzoo001p1பின்பற்ற வேண்டும் என்று பிரிட்டீஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய் பிரிட்டீஷ் அரசுக்கு அறிவுறுத்தினார்.

எக்காரணத்திற்காகவும் பிரிட்டன் இந்தியாவை இழந்து விடக் கூடாது. ஏனென்றால் இந்தியா எவ்வழியில் செல்கிறதோ அவ்வழியில் உலகம் செல்கிறது என்று வைஸ்ராய் கர்ஸ்சன் கூறினார். இது ஒரு தீர்க்கதரிசனமான அறிவுரையாகத் தெரிகிறது.

இந்தியா ஒரு கம்யூனிச நாடாக மாறி விடக்கூடாது என்பதில் அமெரிக்க அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்நாட்டு தலைவர்களின் கணிப்பின்படி இந்தியா கம்யூனிச நாடானால் இதர நாடுகளும் கம்யூனிச நாடுகளாகிய விடும்.

இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பின்னர், பிரிட்டன் பல ஆசிய-ஆப்ரிக்க நாடுகளை தன்வசப்படுத்திக் கொண்டது, மலாயா உட்பட. அவ்வாறே இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் பிரிட்டீஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றன. அந்நாடுகள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கு அந்நாடுகளின் மக்கள் நடத்திய போராட்டங்களில் அந்நாடுகளில் வசித்த இந்தியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது. மலாயாவில் பிரிட்டீஷ் ஆட்சியை ஆட்டங்காண வைத்து அதன் பொருளாதார முதலீடுகளை காப்பாற்றிக் கொள்ள வேறு வழிகளை தேட வைத்தது இந்நாட்டு தோட்டத் தொழிலாளர்களான இந்தியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள்தான் என்றால் மிகையாகாது. பிரிட்டீஷ் ஆட்சி மலாயாவில் கண்ட மாற்று வழிதான் ஓன் பின் ஜாபாரும் துங்கு அப்துல் ரஹ்மானும். இவர்களையும் மாற்றி அமைக்க இன்னும் பல சுங்கை சிப்புட் பெருமாள், கணபதி, வீரசேனன் போன்ற பல பெருமாள்கள் (இந்தியர்கள்) தோன்ற வேண்டும். அப்போது மீண்டும் பெருமாள்கள் வழி உலக வழியாகும்.

நமது முன்னாள் பெருமாள்களான சுங்கை சிப்புட் பெருமாள், எஸ்.எ.கணபதி, வீரசேனன் மற்றும் அவர்களைப் போன்ற கடந்தகால போராட்டவாதிகளின் வரலாற்றை பதிவு செய்துஅவற்றை மக்களின், குறிப்பாக மாணவர்களின், கவனத்திற்கு கொண்டு செல்வது, அவர்களின் பெயர்களை நமது அமைப்புகள், கட்டடங்கள், நூல்நிலையங்கள், விளையாட்டு மையங்கள் போன்றவற்றுக்கு சூட்டுவது, கருத்தரங்குகள் வழி அவர்களைப் பற்றி கருத்துப் பறிமாற்றங்கள் செய்வது போன்றவை நம்மை நாமே அறிந்து கொண்டு செயல்படவும், நமது எதிர்கால பெருமாள்களுக்கு வழிகாட்டவும் உதவும். இதற்கு “காட்டுப் பெருமாள” நூல் வெளியீடு முதல் கட்டமாக அமையும் என்று நம்புவோம்.