‘மஇகா கடவுள்கள்தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்’

-கி. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 8, 2015.

 

siladassஓர் இயக்கத்தின் தலைமைத்துவம் அல்லது கட்சியுனுள் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டு. அந்த இயக்கத்தில் விவரிக்கப்படுள்ள விதிகளுக்கேற்ப கட்சி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, அமைப்பு பதிவதிகாரிக்கு அதிகாரத்தைக் கொடுத்து அரசியல் இயக்கத்தினுள் தலையிடும் அதிகாரத்தை தரும் சட்டத்தை இயற்றியப் பெருமை தேசிய முன்னணியை நடத்திய அம்னோவுக்கும், அம்னோவில் நீண்டகாலமாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதையே சாரும்.

 

மகாதீர் முகம்மது விட்டுச் சென்ற சட்டச் சிக்கல்களில் அமைப்புகளின் சட்டத்தில் (Societies Act 1966) ஏற்படுத்தியத் திருத்தங்களும் அடங்கும்.

 

1960ஆம் ஆண்டு அன்றைய மஇகா தலைவர் வி.தி.சம்பந்தன் மீது தர்மலிங்கம் ஒரு வழக்கைத் தொடுத்தார். அதில், தம்மை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது செல்லாது என்று பிரகடனப்படுத்தும்படி நீதிமன்றத்திடம் வேண்டினார் தர்மலிங்கம். இடைநீக்கம் செய்யப்பட்ட தர்மலிங்கம் மஇகா விதிகளில் வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பேணாமல் நேரே நீதிமன்றத்திடம் வந்தது ஏற்கத்தக்கதல்ல என்று தீர்ப்பளித்தது அன்றைய மேல்முறையீட்டு நீதிமன்றம். தீர்ப்பின்போது தலைமை நீதிபதி தோம்ஸன், “மஇகா கடவுள்களின் தீர்ப்புக்குப் பிறகு” நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டுமெனக் கூறினார்.

 

அப்படி செய்யாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது நடைபெறுவதைப் பார்த்தால் மஇகா கடவுளுக்குப் பதிலாக பதிவதிகாரி கடவுளாகி விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.

 

இது குட்டி நெப்போலியன்கள் காலம்

 

மஇகாவில் முளைத்திருக்கும் பிரச்சினைக்கு மஇகா உறுப்பினர்களால் தீர்வு காண முடியவில்லை என்பதைக் காட்டிலும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, பதிவதிகாரியின் துணை தேவைப்படுகிறது. பதிவதிகாரி நடு நிலையோடு நடந்து கொள்வாரா என்பதே கேள்வி. குட்டி நெப்போலியன்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் பதிவதிகாரிகள் எழுத்து மூலமாகத் தரும் கருத்து மட்டுமல்ல முடிவும்கூட சர்ச்சைக்கு உட்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இன்றைய சட்டத்தின் நிலைப்படி அமைப்பு பதிவதிகாரி நீதிபதி போல் பாராபட்சமின்றி தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாத பொறுப்பாகும். ஒரு சிலரின் குற்றச்சாட்டை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குவது சட்டப்படி பொறுத்தமற்றதாகவே கருதப்படும். அதோடு, பதிவதிகாரியின் கடிதத்தில் கூறப்படும் கருத்துகள் முடிவானவை என்று சொல்வதில் நியாமில்லை.  மேலும், ஓர் இயக்கத்தின் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் பதிவதிகாரிக்குக் கிடையாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்கும்போது அது இறுதியான முடிவுமல்ல. பதிவதிகாரியின் முடிவு மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. உயர்நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. எனவே, முதல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது என்று சொல்லிவிட முடியாது. அந்தத் தீர்ப்பிலிருந்து  மேல்முறையீடு  இல்லையெனில் முதல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது  எனலாம்.

அதே சமயத்தில் வழங்கப்பட்டத் தீர்ப்பை நிறுத்தி வைக்க முதல் நீதிமன்றம் மறுத்த போதிலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை நிறுத்திnajib_bn வைக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது, எனவே முதல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்ததை முடிவானது என்று கூறிவிட முடியாது.

அதே சமயத்தில் முதல் நீதிமன்றம் தமது தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்ததை அதன் விருப்புரிமை (discretion) என்பார்கள்.  அந்த விருப்புரிமை முறைப்படி பயன்படுத்தியதா என்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கும்.  இப்படிப்பட்டச் சூழ்நிலையில் பிரதமர் நஜீப் தாம் பதிவதிகாரியின் முடிவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருப்பது தவறான சமிக்ஞயைக் காட்டுகிறது எனின் தவறகாது. அது ஒருபுறம் இருக்க, இன்றுவரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணங்கள் வெளியிடாதபோது தீர்ப்பைப்பற்றி விமர்சிப்பது சாலச்சிறந்தது அல்ல.

 

குரங்கு நியாயம் எப்படி இருக்கும்?

 

1 micஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையைத் தீர்க்கத் தெரியாதவர்கள் நாட்டு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பார்கள் என்ற கேள்வி ஒலிக்கத் தொடங்கி பல காலமாகிவிட்ட நிலையில் பதவி மோகம் பிடித்தவர்களின் காதுகளில் அதுபோய் சேரவில்லை என்று நினைக்கும் மஇகா உறுப்பினர்களின் அவல நிலையை என்னவென்பது?

மஇகாவுக்குப் புத்துயிர் கொடுக்கப் போவதாகச் சொல்பவர்கள் அது உயிரிழக்கும் வகையில் ஏன் நடந்து கொண்டனர் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆக மொத்தத்தில் குழப்ப நிலையை அடைந்திருக்கும் மஇகாவை பதிவதிகாரியின் துணையோடு அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மட்டும் தீர்த்துவிட முடியாது.  அதன் உறுப்பினர்கள்தான் தீர்வுகாண முடியும். அதற்கு அவர்கள் தயாரா? நல்ல, நேர்மையான, நாணயமான தலைவர்களை அவர்களால் அடையாளம் காட்ட முடிந்தால் நன்று. மஇகாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டால்: இரண்டு பூனைகள் ரொட்டிக்காகச் சண்டையிட்டுக் கொண்டபோது குரங்கு நியாயம் சொல்ல வந்த கதைபோல் இருக்கிறது.