தற்கொலை: இந்திய சமூகம் முன்னிலையில்

கீ. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 16, 2015

siladassதற்கொலை  என்ற  சொல்   அல்லது  செயல்  பலவிதமான  குற்றங்களைக்  குறிக்கிறது  என்பது  பொதுவான  கருத்து.  ஒன்று, இறைவனால்  வகுக்கப்பெற்ற  நெறிமுறைகளுக்குப்  புறம்பானது  தற்கொலை  என்பார்கள்.  இதை  இயற்கை  நியதிக்குப்  புறம்பானது  என்று  விளக்கப்படுவதும்  உண்டு.  அடுத்தது, நாட்டின் சட்டத்தால் குற்றமெனக்  கருதப்படும்  குற்றச்செயல் தற்கொலை.

இறைவனின்  நெறிமுறைகளுக்குப்  புறம்பாகத்  தற்கொலை செய்து  கொண்டால்,  அச்செயல்  எப்படிப்பட்ட  தண்டனையை  ஈர்க்கும்  என்று  திட்டவட்டமாகச்  சொல்ல முடியாது.  அவ்வாறு  தண்டனையை  அனுபவித்தவர்கள்  சான்று  ஏதும்  இல்லை.

சட்டப்படி  பார்க்கும்போது,  தற்கொலை  செய்து  கொண்டவரைச்  சட்டத்தினால்  ஒன்றும்  செய்ய  முடியாது.  காரணம்,  இறந்தவரை  சட்டத்தால்  தண்டிக்க  முடியாது.   இப்படிப்பட்ட  சூழ்நிலையில்  ஆன்மீக  முறையில்  தண்டிக்கப்படலாம்  என்று  ஆன்மீகவாதிகள்  நம்புவதும் பரவலாக  இருக்கிறது.  தற்கொலை முயற்சியை மேற்கொண்டவர்களைத்  தண்டிக்க  சட்டத்தில்  இடமுண்டு.

 

இந்திய சமூகம் முன்னிலையில்

 

சமீபத்தில்  மலேசிய  மருத்துவர்  மன்றம்  தற்கொலை  முயற்சிக்கு  தண்டனைச்  சட்டத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள  தண்டனையைப்  பற்றி  குறிப்பிடுகையில்  அது  தற்கொலையைத்  தவிர்க்க  உதவவில்லை,  மாறாக  தற்கொலை  முயற்சி  வெற்றி பெறுவதற்கான  வழிமுறைகளில்  கவனம்  மிகுந்துவிட்டதாக  விளக்கப்பட்டுள்ளது,  காரணம்,  தற்கொலை  முயற்சி  வெற்றி  பெறாவிட்டால்  சட்டத்தால்  நிர்ணயிக்கப்பட்ட  தண்டனைக்கு  ஆளாகவேண்டும்  என்ற  அச்சம்.  எனவே,  தற்கொலை  முயற்சி  வீணாகாமல்  இருக்கும்  வழியில்  கவனம்  மிகுந்துள்ளதாகக்  விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

தற்கொலைப்  பற்றிய  ஆய்வு  ஓய்ந்தபாடில்லை.  இந்நாட்டில்  நடத்தப்  பெற்ற  ஆய்வில்,  இந்திய  சமூகம்தான்  தற்கொலையில்  மற்ற  இனங்களைவிட  முன்னணியில்  இருப்பதாக  ஆதாரப்பூர்வமாக  நிரூபணமாகியுள்ளது.  அப்படி  மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில்  தமிழ்ச்  சினிமாவின்  பங்கைப்  பற்றியும்  குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

 

தமிழ்ச்  சினிமாவில்  அடிக்கடி  தற்கொலைக்  காட்சிகள்  வருவது  உண்மையே.  தமிழ்ச்  சினிமாவை மட்டும்  குறை கூறுவது தீர்க்கமான,  அல்லது  முழுமையான,  ஆய்வு  என்று  சொல்ல முடியாது.

 

எனவே,  சில  காரணங்களைமட்டும்  எடுத்துக்கொண்டு  ஒரு  குறுகிய  வட்டத்தினுள்  ஆய்வு  நடத்துவதால்  எந்தப்  பலனும்  கிடைக்காது;  மாறாக,  தற்கொலைக்கான   அடிப்படை  காரணங்களைக்  கண்டறிந்தால்,  அப்படிப்பட்ட  செயல்களைத்  தவிர்க்க   ஏதுவாக  இருக்கும்  என்று  எதிர்பார்க்கலாமே  ஒழிய  தற்கொலைச்  செயலை  அடியோடு  தவிர்த்துவிட  முடியும்  என்ற  நினைப்பு  கைகூடும்  என்று  சொல்வதற்கில்லை.

 

இதற்குக்  காரணம்  என்னவெனில்,  தற்கொலை  என்பது  சமீப  காலத்தில்  வளர்ச்சி  பெற்ற  பழக்கம்  என்று  சொல்ல  முடியாது.  இது பழமையான, ஊறிப்போன  பழக்கமாகும்.  பழங்காலத்து  இதிகாச  இலக்கியங்களில்  உற்றவர்கள் மீது  கொண்டுள்ள  பாசத்தால் உயிர் துறக்கத்  தயங்காதது  ஒன்றும்  விசித்திரமல்ல.

 

raja ram mohan rai1ஒரு  காலகட்டத்தில்,  இந்து  மத  சம்பிரதாயப்படி,  கணவன்  இறந்ததும்  மனைவி  உடன்கட்டை  ஏறவேண்டும்.  அவ்வாறு உடன்கட்டை  ஏறுவது  தவிர்க்க  முடியாத  ஒரு  சம்பிரதாயமாகக்  கருதப்பட்டது.  உடன்கட்டை  ஏற  மறுக்கும்  விதவையை,  பலவந்தமாக  எரியும்  சுடலையில்  ஏறச்  செய்த  கொடுமையையும்  நாம்  படித்திருக்கிறோம். கணவன்  இறந்ததும்  விதவை  விரும்பி  உடன்கட்டை  ஏறினால்,  அதுவும் தற்கொலையேயன்றி  வேறொன்றுமில்லை.  அப்படி  மறுக்கும்  விதவையை  எரியும்  நெருப்பில்  ஏறச்  செய்தவர்கள்  கொலை  குற்றம்  செய்தவர்கள்  அல்லது  தற்கொலைக்கு  உடந்தையாக  இருந்தார்கள்,  அல்லது  தற்கொலை  செய்து  கொள்ள ஊக்குவித்ததற்காகக்  குற்றம்  சாட்டப்படலாம். 1829ஆம்  ஆண்டு  ராஜா ராம் மோகன்  ராய்  எடுத்துக்கொண்ட  முயற்சியின்  பலனாக,  இந்தியாவில்  உடன்கட்டை  ஏறுவதைச்  சட்டப்படி  குற்றமாக்கப்பட்டது.

 

உடன்கட்டை  ஏறுவது  தடுக்கப்பட்ட  போதிலும்  அதற்குத்  துணையாக  செயல்படுவோரைத்  தண்டிக்கப்படுவர்  எனச் சட்டம்  உரைத்தபோதிலும்  சமய  சம்பிரதாயத்திலே  ஊறிப்போனவர்கள்  அதைக்  கைவிட்டதாகத்  தெரியவில்லை. சமயப்பித்தர்களின் கொடுமையான செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு சட்டம் செயல்படுவது போற்றுதலுக்கு உரியதே. ஆனால், சட்டம் மட்டும் தம் கடமையைச் செய்யும் என்றிருந்து விட்டால் போதுமா? போதாது! மக்கள், பிறப்பின்  முக்கியத்துவத்தையும் உயிரின்  சிறப்பையும்  உணர  வேண்டும்.  அப்படிப்பட்டதொரு மனநிலையை, மனப்பக்குவத்தை மக்கள்  அடைந்தால்  வரவேற்கத்தக்கதாகும்.

 

தற்கொலைச்  சம்பவங்கள்  ஒரு  சில  குறிப்பிட்ட  காரணங்களால்தான்  நிகழ்கின்றன  என்ற  கருத்து  ஏற்புடையதல்ல.  மாறாக,  பலவிதமான  காரணங்களால்  அவை  நிகழ்கின்றன  என்று  வல்லுநர்களின்ஆய்வு  மூலம்  வெளிப்படுத்தியுள்ளனர்.  அது ஒருவகை மனநோய் என்ற  கருத்தும்  பரவலாகி  வருகிறது. எனவே, மனநோயைக் குணப்படுத்துவதா அல்லது அதன் காரணமாக எழுகின்ற குற்றத்தைத் தண்டிப்பதா?  மனநோயாளி கொலை செய்தால் அவன் மனநிலையைக் காட்டி விடுவிக்கப்படுகிறான். ஆனால், காலங்காலமாக மனநோயால் அவதியுறும் மனநோயாளியின்  தற்கொலை  முயற்சிக்கு  தண்டனை  காத்திருக்கிறது.  இது  நியாயமானச்  சட்டமாகக்  கருதமுடியாது  என்பதைப்  பல  நாடுகள்  ஒப்புக்கொண்டு தற்கொலை முயற்சியைக் குற்றமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

 

உடன்கட்டை  ஏறுவது  ஒரு  புறமிருக்க,  வாழ்க்கையில்  தோல்வி  கண்டவர்கள்  தங்கள்  அற்புதமான  உயிரை  மாய்த்துக்கொண்டது  சரித்திரம்  வழங்கும்  சான்றாகும்.

 

கிளியோபாட்ரா தற்கொலை

 

எடுத்த  காரியத்தில்  தோல்வி  அடைதல்,  அல்லது  கொடுக்கப்பெற்ற  பொறுப்பில்  தோல்வி  அடைதல்  போன்ற  நிகழ்வுகளை  இழிவாகக்  கருதி  தற்கொலை  செய்து  கொண்டது  “சமுராய்’  என்ற  ஜப்பானிய  குழுமம்.  ஈராக்  ஏகப்பட்ட  அழிவு  விளைவிக்கும்  ஆயுதங்களைraja ram mohan rai3  வைத்திருக்கிறது  என்ற  காரணத்தைக்  காட்டி  அந்நாட்டின் மீது அமெரிக்கா  போர் தொடுத்தது.  அமெரிக்காவின்  அப்படிப்பட்ட  நடவடிக்கையை   நியாயமற்றது  என  கண்டித்தவர்கள்  ஏராளம்.  ஏகப்பட்ட  அழிவை  ஏற்படுத்தும்   ஆயுதங்கள்  அந்நாட்டில்  கண்டு  பிடிக்கப்படவில்லை  என்ற  உண்மை உறுதியானதும்    இந்நாட்டின்  முன்னாள்  பிரதமர்   மகாதீர்  முகம்மது,  அதிபர்  புஷ்  ஜப்பானியர்கள்   போல  ஹராகிரி  செய்து  கொள்ள  வேண்டுமென்று  சொன்னார்.  ஜப்பானியர்களின்  தற்கொலை  கலாச்சாரத்தில்  மகாதீரின்  நற்மதிப்பை  என்னவென்பது? அதுமட்டுமல்ல,  அவர்  சொல்வது  சரியானது  என்றால்  நாட்டுத்  தலைவர்கள்  பலர்  தாங்கள்  மேற்கொண்ட  நடவடிக்கைகளில்  தோல்வி  கண்டிருக்கக்கூடும்.  அவர்கள்  யாவரும்  ஹராகிரிக்குத்  தகுந்த  வேட்பாளர்களென  மகாதீர்  கருதுகிறாரா  என்ற  கேள்வியும்  எழுகிறது.

 

போர்க்காலங்களில்  எதிரிகளின்  தற்காப்புக்களைத்  தகர்க்கும்  முயற்சியில்  இறங்கிய  படையினர்  பிடிபட்டால்,  தற்கொலை  செய்து  கொள்வது   வீரச்  செயலாகக்  கருதப்பட்டது.  ஒற்றர்களும்  இந்தத்  தரத்தில்  சேர்த்துக்  கொள்ளப்பட்டனர்.

 

raja ram mohan rai2எகிப்திய  நாட்டில்  கி.மு 69ஆம்  ஆண்டில்  வாழ்ந்த  எழில்மிகு அரசி  கிளியோபாட்ரா அக்டோவியனால் ((Cleopatra Octavion)  அழகி மட்டுமல்ல  நல்ல  ராஜதந்திரியும்  கூட.  உரோமாபுரி மன்னன் சீஸரை  தம்  வலைக்குள்  சிக்கவைத்தவள்.  சீஸரின்  மரணத்துக்குப்  பிறகு  மார்க்  அந்தோணியை தம் வசீகரத்தால் கவர்ந்தவள். உரோம் நாட்டு வரலாற்றை  எழுதிய புலுட்டார்ச் (Plutarch)  முகத்துதியைப்  பற்றி  குறிப்பிடுகையில்  பிளேட்டோ  நான்கு  விதமான  முகத்துதியைப்  பற்றி  சொன்னார். ஆனால், கிளியோபாட்ராவிடம் ஆயிரம்  முகத்துதிகள்   இருந்தன  என்கிறார். (ஆதாரம்:புலுட்டார்ச் – Plutarch).

 

போர்  முனையில்  தமக்கு  சாதகமான  செய்திகள்  வந்தெட்டாதபோது  கிளியோபாட்ரா பலவிதமான  விஷ  போதைப்  பொருள்களை  பரிசோதிப்பதில்  மிகுந்த  ஆர்வத்தையும்  நாட்டத்தையும்  காட்டினாள்.  இவற்றில்  எது  குறைந்தபட்ச  வேதனையைக்  கொடுக்கும்  என்பதை  கண்டறிய  மரண  தண்டனைக்  கைதிகள்  மீது  இவற்றை  பரிச்சித்துப்  பார்த்தாள்.  பிறகு  விஷம்  கக்கும்  விலங்குகளைப்  பயன்படுத்தி  அவற்றின்  விளைவு  எத்தகையது  என்பதை  நேரில்  கண்டாள்.  இந்த விஷப்  பரிட்சை  அன்றாடம்  நடந்தது.  இறுதியில்  வரியம்  பாம்பு  சீண்டினால்  நேரும்  மரணம்  கொடூரமானதாக  இருக்காது  என்பதை  அறிந்தாள்.  வலிப்பும்,  புலம்பலும்  இருக்காது  மாறாக  அதிகபட்ச  சோர்வும்  மயக்கமும்  கொடுக்கும்.  முகத்தில்  வியர்வை  பெருகி  உணர்வுகள்  படிப்படியாக  மழுங்கி  பாதிக்கப்பட்டவர்  வேதனையை  உணராது  தூங்கும்  நிலையில்  இருப்பது  போல்  தோற்றமளிப்பார்.

 

கிளியோபாட்ரா  இறுதியில்  வரியன்  பாம்பை  இரகசியமாகக்  கொண்டுவரச்  செய்து  அதைக்  கொண்டு  சீண்டப்  பெற்று  மாண்டாள்.  இதுவும்  தற்கொலையே.

 

தம்  உயிரை  மாய்த்துக்கொள்வதென  தீர்மானித்த  கிளியோபாட்ரா  அவள்  கையாண்ட  முறை  அதிசயமானது  எனலாம்.  அழகி,  அரசி,  ஜூலியஸ்  சீஸரையே  தம்  பக்கம்  கவர்ந்தவள்.  போரில்  தோற்றவள்  மரணத்தை  விரும்பி  தேர்ந்தெடுத்துக்  கொண்ட  போதிலும்  அது  கொடூரமாக  இருக்கக்  கூடாது  என்று  நினைத்தாள்.  கிளியோபாட்ரா  கையாண்ட  தற்கொலை  முறையானது  மரணத்தில்  தரம்  வேண்டுமென்ற  எண்ணத்தை  வெளிப்படுத்துகிறது.

 

ஜெர்மன்  நாட்டு  சர்வதிகாரி  அடோல்ஃப்  ஹிட்லர் (Adolf  Hitler)  போரில்  தோல்வி  நிச்சயம்  என்பதை  அறிந்ததும் தமது  பன்னிரண்டு  ஆண்டு காதலியோடு  நேரத்தைச்  செலவழித்தான்.  30.4.1945இல்  ஹிட்லர்  தமது  பணியாட்களோடு  கைக்குலுக்கி  விடைபெற்றான்.  இறுதி  உணவருந்திய  பின்  தம்முடைய  நெருங்கிய  ஆதரவாளர்களிடம்  விடைபெற்றான்.  அவனோடு காதலி பிரௌனும் இருந்தாள். இது முடிந்ததும்  தம்முடைய  அறைக்குள்  நுழைந்தான்  ஹிட்லர். சிறிது நேரத்தில் ஒரு துப்பாக்கி வெடி ஒலித்தது. அறையினுள் நுழைந்து  பார்த்தபோது  ஹிட்லர்  வாயில்  துப்பாக்கியை  வைத்து  சுட்டுக்கொண்டு  இறந்துவிட்ட  காட்சியைக்  கண்டனர்  அவன்  ஆதரவாளர்கள்.  அவனுடைய  காதலி  விஷத்தை  உட்கொண்டு  இறந்துகிடந்தாள்.  இருவரின்  சடலங்களையும்  வெளியே   எடுத்துச்  சென்று  தீraja ram mohan rai4  மூட்டப்பட்டன.

 

ஹிட்லரின்  மரணம்  தற்கொலை  என்பதில்  ஐயமில்லை.  எவா  பிரெளனின்  தற்கொலை  இந்து  மதத்தின்  பழங்காலத்து  சம்பிரதாயப்படி  உடன்கட்டை  ஏறுதலை  நினைவுப்படுத்தலாம்.

 

போரில்  தோல்வி  கண்ட  ஹிட்லர்  எதிரிகளின்  கையில்  சிக்கி  அவமானப்படுத்தப்படுவதை  விட மரணமே  மேல்  என்று  எண்ணி  இருக்கலாம்.  அவன்  ஆட்சி  செய்தபோது  ஜெர்மன்  நாடு  உலகையே  ஆளும்  தன்மை  கொண்டது  என்று  எண்ணினான்.  அதோடு  அவன்  நின்றுவிடவில்லை.  தூய  ஜெர்மன்  குருதி  கொண்டவர்கள்  ஆரியவம்சத்தைச்  சார்ந்தவர்கள்,  எனவே  தூய  ஆரியவம்சத்தை  உருவாக்கவும்  அவன்  திட்டமிட்டு  செயல்பட்டான்.

 

இந்த  எண்ணங்கள்  யாவும்  தவிடுபொடியானப்  பிறகு   வாழ்ந்து  பயனில்லை  என்று  தீர்மானித்து  இருக்கலாம்.  இவ்வாறு  பலவிதமான  கருத்துக்கள்,  அபிப்பிராயங்கள்,  அனுமானங்கள்  ஆய்வாளர்களின்  சிந்தையில்  உதித்து  இருக்கலாம்.  அதுவும்  நியாயமானதே.  ஆனால், ஹிட்லர் சிறுவயதிலிருந்தே எப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியங்கள் எப்படிப்பட்டதாக  இருந்தன  என்று  ஆய்ந்து  பார்த்தால்  அவனிடம்  வன்முறை  இருந்ததையும்  அதில்  மிகுந்த  நம்பிக்கை  கொண்டவனாக  இருந்தான் என்பது  தெளிவுபடும்.  எனவே இறுதியில் தோல்வி தம்மை முறைத்து பார்த்தபோது ஏமாற்றத்தால் தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டான்.  எதிரிகளின்  கையில்  சிக்கி தம்மை  தற்காத்துக்  கொள்ள  முடியுமா  என்ற  கேள்வியை  அவன்  தமக்குள்  கேட்டுக்  கொண்டானா  என்பது  தெரியாது.  அப்படி  ஒரு  கேள்வி  அவன்  மனதினுள்  எழுந்திருக்குமானால்  தாம்   எடுத்த  எல்லா  செயல்களுக்கு  ஏற்புடைய,  நியாயமான  விளக்கங்களை  அவனால்  தரமுடியாது.   எனவே  நிரந்தரமாக  மௌனமாகிவிட்டால்  யாருக்கும்  பதில்  சொல்ல  வேண்டியதில்லை  என்று  அவன்  எண்ணி  இருக்கலாம்.

 

மேலும்  இதை  ஆராய்ந்து  பார்த்தால்  சர்வதிகாரியாக  ஆண்டு  வாழ்ந்தவன்,  தாம்  செய்ததே  சரி  என்ற  மூர்க்கத்தனமான  மனப்பான்மையோடு  வாழ்ந்தவன்  தாம்   யாருக்கும்  பதில்  சொல்ல  வேண்டியதில்லை என்ற எண்ணமும் அவனிடம்  குடிகொண்டிருந்திருக்கலாம்.  இவை யாவும் அனுமானமே.

 

எல்லா  மதங்களும்  தற்கொலையை  ஏற்றுக்  கொள்ளவில்லை  என்பதும்  உண்மையே.  ஆனால்,  தங்களுக்கு  தோல்வி  ஏற்படும்போது  தற்கொலையை  ஓர்  ஆயுதமாகப்  பயன்படுத்துவதையும்  நாம்  அறியாதது  அல்ல.  ஸ்ரீலங்காவில்  புத்தப்பிக்குகள்  தற்கொலை  செய்து  கொண்டனர். திபெத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இஸ்லாமிய தீவிரவாதிகள் கூட  தற்கொலையில்  மும்முரமாகச்  செயல்படுவதை  கவனத்தில்  கொள்ளவேண்டியது  அவசியமாகிறது.  இரண்டாம்  உலகப்  போரின்போது  ஜப்பானிய  போர்விமானிகள்  தங்களின்  விமானத்தோடு  எதிரியின்  இலக்குகளைத்  தாக்கியதும்  தற்கொலையே.   கமிகாஸே என்பார்கள்.  இது  ஜப்பானிய  அரசினால்  அங்கீகரிக்கப்பட்ட  தற்கொலையாகும்.

 

எழுந்துவிட்ட  பிரச்சினைக்குப்  பரிகாரம்  கிடைக்கவில்லை  என்றால்  “தற்கொலையை”  ஓர்  அரசியல்  ஆயுதமாகப்  பயன்படுத்துவதைச்  சமீபகாலமாக  பிரசித்தி  பெற்று  வரும்  நிகழ்வாகும்.  இதுவும் பத்திரிக்கைகளில்  நாம்  பார்க்கிறோம்.

 

இங்கே  தற்கொலையை  ஓர்  அரசியல்  ஆயுதம்  எனும்போது  அரசியல்  எதிரியோடு  ஏற்பட்டிருக்கும்  பிணக்கு  உலக  மக்களுக்குத்  தெரிய  வேண்டும்  என்ற  நோக்கத்தோடு  மேற்கொள்ளப்படுவதாகும்.  சாதாரண  மனிதர்கள்  இதைப்  படிக்கும்போது,  அவர்களுக்கு  நேர்ந்துள்ள  பிரச்சினைக்குத்  தீர்வு  காணமுடியாது  என்பது  ஒரு  புறமிருக்க,  அவர்களின்  குறையைக்  கவனிக்க  ஆள்  இல்லையே  என்ற  ஏக்கம்,  ஏமாற்றம்  எழுந்துவிடுகிறது.  அப்போது,  தங்களையே  வருத்திக்  கொள்வதால்  தம்  பிரச்சினை  பிறருக்குத்  தெரியும்  அல்லது  உயிரை  மாய்த்துக்  கொண்டால்  பிரச்சினை  வெளிப்பட்டுவிடும்  என்பது  போல  நம்பிக்கை  எழலாம்.  தனிப்பட்டவரின்   பிரச்சினையாக  இருப்பினும்,  பிரச்சினைக்குத்  தீர்வு  காண  முடியாதவர்களின்  மனநிலையைத்தான்  காட்டுகிறது.

 

மனத்தளர்வு மட்டுமல்ல, மன உறுதியும் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது

 

மனநிலை எனும்போது  எதையும்  பகிர்ந்து  பார்க்கும்  பக்குவம்  வேண்டும்.  அதற்குக்  கல்வி  அறிவு  தேவை,  சிந்திக்கும்  ஆற்றல்  தேவை. சுயேச்சையாக இயங்குவதற்கான தைரியம் தேவை. தட்டுத்தடையின்றி  சிந்திக்கவும்,   சுயேட்சையாக  இயங்குவதற்கும்  இன்றைய  கல்வி,  சமயங்களின்  போதனைகள்  உதவவில்லை  என்பதும்  ஒரு  குறையே.

 

இவற்றையெல்லாம்  சிந்தித்துப்  பார்த்தால்,  தாம்  கொண்டிருக்கும் கொள்கைக்காக  உயிரை மாய்த்துக்  கொள்பவனுக்கும்,  குடும்பப்  பிரச்சினைக்குத்  தீர்வு  காண  முடியாமல்  தற்கொலை  செய்து  கொள்பவனுக்கும்  உள்ள  வித்தியாசம்தான்  என்ன?  நம்முடைய ஆர்வத்தைத் தீர்ப்பதற்காக ஒரு விளக்கத்தைச் சொல்லலாம்.  கொள்கைக்காகத்  தற்கொலை  செய்து  கொள்பவன்  வீரன்.  அவனோடு, குடும்பப் பிரச்சினைக்காகத் தற்கொலை செய்து கொள்பவனை ஒப்பிடுவது பொருத்தமற்றது  எனலாம்.  தற்கொலைக்கான காரணம்  வேறுபட்டாலும்  முடிவு  ஒன்றே.  இருதரப்பினரும்  தற்கொலையைத்  தவிர்த்திருக்க  முடியுமா  என்பதே  கேள்வி.  அவரவர்  மேற்கொண்ட  முறையைப்  பற்றி  சிந்திப்பதைவிடுத்து   தற்கொலைக்கான  காரணத்தைக்  கண்டறிய  வேண்டும் –  அதுதான்  முக்கியம்.

 

பொதுவாகவே,  ஒவ்வொருவரின்  மனநிலையைப்  பொறுத்தே  தற்கொலைச்  சம்பவம்  நிகழ்கிறது  என்பது  ஒருமித்த  கருத்தாகும்.  அதே  சமயத்தில்,  தனி  மனிதர்கள்,  சமுதாயம்,  சமயம்,  அரசியல்,  நாடு  என்பனபோன்ற  காரணங்களாலும்  தற்கொலை  செய்து  கொள்வதை   நாம்  காண்கிறோம்.

 

காலச்சூழல்களுக்கு  ஏற்றவாறு  மக்களின்  மனநிலை  மாறுவது  உண்டு.  இந்த  மாற்றங்கள்  சமுதாயத்தைப்   பாதிக்கலாம்,  சமயத்தைப்  பாதிக்கலாம்,  ஒருவர்  மேற்கொண்டிருக்கும்  அரசியல்  கோட்பாட்டைப்  பாதிக்கலாம்,  நாட்டைக்கூட  பாதிக்கலாம்.  தற்கொலை  பலவிதமான  காரணங்களால்  ஏற்படலாம்,  ஏற்படுவதற்கான  வாய்ப்புகள்  இருக்கலாம்;  அல்லது  தற்கொலைக்கான  வாய்புகள்  செய்துத்  தரப்படலாம்.  இதுவே  இன்றைய  உண்மையான  நிலவரம்.  ஆகமொத்தத்தில்,  தற்கொலைக்கு  ஒரு  குறிப்பிட்ட  சூழ்நிலைதான்  காரணம்  என்று  நிச்சயமாகச்  சொல்லமுடியாது.  தற்கொலையை  எந்தச்  சமுதாயமும்,  அமைப்பும்,  சமயமும்,  நாடும்  ஏற்றுக்கொள்ளவில்லை.  இதில்  உண்மை  இருக்கிறதா  என்று  அலசிப்பார்க்கும்போது  விந்தையான  முடிவுகளைக்  காணமுடிகிறது.

 

நாம்  அடிக்கடி  நாளிதழ்களில்  படிக்கும்  தற்கொலை  நிகழ்வுகள்  தனிப்பட்டவர்களைச்  சம்பந்தப்பட்டதாக  இருப்பினும்,  அவை  மட்டும்தான்  தற்கொலை  என்று  முடிவு  கட்டுவது  ஆய்வில்  குறை  இருப்பதையே  சுட்டுகிறது.

 

தற்கொலைக்குத்  தயாராகிவிடுபவர்களின்  மனநிலையைப்  பொறுத்தது  என்பது  ஒரு  புறமிருக்க,  தற்கொலை  மனப்பான்மையை  வளர்க்கும்  சக்திகள்  இருப்பதையும்  புறக்கணிக்கக்கூடாது.  உதாரணத்திற்கு,  ஒரு  பிரபல  தமிழ்ச்  சினிமா  நடிகர் அரசியலில்  புகுந்து  தம்மால்  ஏற்க  முடியாத  ஓர்  அரசியல்  சூழ்நிலை  எழுமானால்  “தூக்கில் தொங்கலாம்”  என்று  பிரகடனப்படுத்தியது  பைத்தியக்கார அணுகுமுறை  என்பதோடு,  பலவீனமான  அறிவுடைய  ஆதரவாளர்கள்  இந்தப்  போக்கு  நியாயமானதே  என்று  கருதி  தூக்கில்  தொங்கினால்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.

 

அரசியல் இலாபத்திற்காக  உணர்சி வயப்பட்டு  இப்படிப்பட்ட  பித்துக்குளி  பேச்சுக்கள்  பாமர  மக்களின்  அனுதாபத்தை  ஈர்த்து,  அவர்கள்  உணர்ச்சி  வயப்படச்  செய்து  உயிரை  மாய்த்துக்  கொள்ளத்  தூண்டவல்லதாகும்.  இதுபோலவே  உணர்ச்சியைச்  சீண்டிவிடும்  தோரணையில்  பேசும்போது,  உணர்ச்சி  பிழம்புகளாகத்  திகழும்  பாமர  மக்கள்  எளிதில்  தங்களை  அர்பணித்துக்  கொள்ளத்  தயாராகிவிட்டால்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.

 

ஒரு  கோட்பாட்டிற்காக,  கொள்கைக்காக  உணர்ச்சி வயப்படுவதில்  இந்தியர்களும்  சரி  பொதுவாக  ஆசிய  மக்களும்  சரி  தங்கள்  உணர்ச்சிகளைக்   கட்டுப்படுத்தி  அறிவாற்றலோடு  சிந்திக்கத்  தயங்குகின்றனர்  என்றால்  பொருந்தும்.  இதன்  விளைவு,  உணர்ச்சிக்கு  அடிமைப்பட்டு  தங்களைத்தானே   அழித்துக்கொள்கிறார்கள்.  இந்த நிலைமையும்  ஆய்வுக்கு  உரியதே.

 

மருத்துவ வல்லுநர்கள், தற்கொலைச் செய்து கொள்பவர்கள்  மனநோயால்  அவதிப்படுகின்றனர்  என்று  கூறுகின்றனர். அது எப்படிப்பட்ட  மனநோய்?  எதனால்  ஏற்படுகிறது?  அதைக்  குணப்படுத்த  முடியுமா?  என்பன போன்ற  கேள்விகளை  ஆய்ந்து  பார்த்தால்  பலன்  கிட்டலாம்.

 

இந்த மனநோய் ஏற்படுத்தப்பட்டதா அல்லது இயற்கையாகவே இருந்ததா?  சில  நோய்களைத்  தொழு  நோய்  என்கிறோம் – அது  பரவும்  தன்மை  கொண்டது.  அது  ஒருவரின்  உடலில்  உள்ள  கிருமிகள்  வெளிப்பட்டு,  பிறரோடு தொற்றி, நோயை ஏற்படுத்தும் வலிமையைக் கொண்டிருக்கின்றன.  உதாரணத்திற்கு சளிக்காய்ச்சல், ஏய்ட்ஸ் (AIDS), மேக நோய் போன்றவை இதில்  சாரும்.  ஆனால்  மனநோய்  தற்கொலைக்குக்  காரணமாக இருக்கிறது  என்றால்    அப்படிப்பட்ட  மனநோய்   எவ்வாறு  ஏற்பட்டது  என்பதைச்  சிந்திக்க  வேண்டும்.

 

உதாரணத்திற்கு,  ஓர்  அரசியல்  கொள்கையில்  பற்று  கொண்டவர்  அதையே  முழுமூச்சாக  நம்பி  வாழ்கிறார்.  அதில்  தோல்வி  கண்டதும்  தற்கொலை  செய்து  கொள்கிறார்.  இங்கே  கவனத்தில்  கொள்ள  வேண்டியது  யாது  எனில்,  அரசியல்  கொள்கையில்  அவருக்கு  இருந்த  பிடிமானம்தான்  தற்கொலையைத்  தூண்டும்  சக்தியைக்  கொண்டிருந்தது  என்று  சொல்ல  முடியுமா?   அல்லது  அந்த  கொள்கையில்  வெறி உணர்ச்சி  ஏற்படுத்தியவர்கள்  தற்கொலைக்குக்  காரணிகளாக  இருந்தார்களா?  பாச  உணர்ச்சியைக்  கட்டுப்படுத்தத்  தெரியாத  அப்பாவி   மக்கள்  தாங்கள்  நம்பியிருந்த  தலைவர்கள்  இறந்ததும்  தற்கொலை  செய்து  கொண்டதையும்  நாம்  கவனத்திற்  கொள்ளவேண்டும்.

 

அதுபோலவே,  மதவெறியர்களும்  மதத்தின்  பேரில்  தற்கொலை  செய்து  கொள்ளத்  தயங்குவதில்லையே.  இங்கே போதனை  காரணமா?  அல்லது  மதபோதனையைத்   திரித்துக்  காட்டியவர்கள்  காரணமா?  இதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இந்தக்  குறுகிய  கட்டுரையில்  பல தரப்பட்டவர்கள் தற்கொலையில் ஈடுபட முயலுகிறார்கள்,  முயலுவார்கள்  என்பதை  எடுத்துக்  காட்டுவதே  நோக்கம்.

 

எனவே,  தற்கொலைச்  செய்துகொள்வதற்கான  சாத்தியக்  கூறுகளை  ஆராயும்போது:

 

 

  1. பழங்காலத்தில்  தற்கொலை  எப்படி  அணுகப்பெற்றது;
  2. சில நாடுகளில் அதன் மகத்துவம் மறைமுகமாக  வலியுறுத்தப்படுவது;
  3. சில  சமுதாயங்கள்  அதைப்  பாராட்டுவது;
  4. சில  சமுதாயங்கள்  அதைத்  தியாகச்  செயலாகக்  கருதுவது;
  5. சில  நாடுகள்  அதைப்  பேணிகாப்பது;
  6. சில  அமைப்புகள்  அதற்கு  ஆதரவாகத்  திகழ்வது;
  7. சில அரசியல், சமயக் கோட்படுகளின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்திக் கொள்வது; மற்றும்
  8. சில  அரசியல்,  கோட்பாடுகளை  உலகத்தின்  கவனத்தை  ஈர்க்க  அதைப்  பயன்படுத்துவது

என்பன  போன்றவற்றை  நாம்  ஆராய்ந்து  பார்த்தால்  உண்மை  புலப்படும்.

 

குறிப்பிட்ட  ஒரு  காரணம்தான்  தற்கொலையைத்  தூண்டுகிறது  என்று  உலகெங்கும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  ஆனால்,  மனத்தளர்வே  தற்கொலைச்  செய்து  கொள்பவர்களிடம்  காணப்படுகிறது.  இது  ஏற்புடையது  எனினும்,  ஒரு  சில  தற்கொலைகளில்  மனத்  தளர்வுக்குப்   பதிலாக  மன  உறுதியையும்  காணமுடிகிறது.  இதையும் நாம்  கவனத்தில்  கொள்வது  நல்லது.