1எம்டிபி என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

-கி.சீலதாஸ், வழக்குரைஞர், ஆக்ஸ்ட் 4, 2015.

 

mcmcஎதற்காக 1MDB உருவாக்கப்பட்டது?  அரசு தரப்பில் அதில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது? இப்போது அந்த நிறுவனம் எவ்வாறு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து நாட்டில் பெரும் குழப்பத்திற்கே காரணியாகி விட்டதற்கான காரணம் என்ன? 1MDB பிரச்சனை சாதாரணமானது எனக் கருத முடியாது. அதனால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் எளிதில் தீர்ந்து விடக்கூடியதாகக் தெரியவில்லை; மாறாக அதிரடி நடவடிக்கைகளுக்கு அது வித்திடுகிறது என்பது ஒரு புறம், நாட்டையே இரண்டாகப் பிரிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 

1MDB தொடர்பான எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டுமென  ஒரு சாரார் கோருகின்றனர்; அரசு சொல்வதை மட்டும் நம்ப வேண்டுமென்கின்ற வாதத்தை முன்வைக்கின்றனர் அரசு தலைவர்கள். இதில் விசித்திரம் என்னவெனில் உண்மையைக் கோருவோர் சில தடயங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் கேள்விகளை எழுப்புகின்றனர், அது அரசுக்குத் தர்மசங்கடத்தைத் தருகிறது. நிற்க, அரசுதரப்பிலிருந்து வரும் விளக்கங்களைத் தெளிவுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் பல சிக்கலான கேள்விகளை எழுப்புவதற்கு உந்துதலாக இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் நிறைந்த சூழலில் சேகரிக்கப் பெற்ற தடயங்கள் போலியானவை, அல்லது திருத்தப்பட்டவை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பொதுமக்களின் அபிப்பிராயம் எப்படி இருக்கிறது? அவர்களுக்கு உண்மை புலப்படுகிறதா? இதைக் கண்டறியவே இந்தச் சிறு கண்ணோட்டம்

 

siladass1MDB அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். அது சுயேச்சையாக இயங்குகிறது. அரசின் துணையோடும் தனியாரின் நிபுணத்துவம், முதலீடு

pasirகொண்டு புது பொருளாதார இலக்கை அடைய வேண்டுமென்பதே அதன் நோக்கம். இதன் தலைவர் சாட்சாத் பிரதமர் நஜீப் ரசாக். அதன் நோக்கத்தை நிறைவேற்ற உள்நாட்டில் விலை மதிப்புள்ள நிலங்களை வாங்கியிருக்கிறது. வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் பணம் எங்கே இருந்து வந்தது? இதுவரை மலேசிய அரசின் முதலீடு பத்து இலட்சம்தான் (ஒருமில்லியன்). உள்நாட்டு,  வெளிநாட்டு முதலீடு கணிசமானதாகும். 1MDBயின் அடிப்படை நோக்கம் நீண்டகால பொருளாதார மேம்பாடும்,  நாட்டின் முன்னேற்றமுமாகும்.

 

4.75 லட்சக்கோடி (4.75 பில்லியன்) அமெரிக்க டாலர் வெளிநாடுகளில் அரசின் உத்திரவாதத்தோடு கடனாகத் திரட்டப்பெற்றது.  இதை பெறுவதற்கு பல லட்சம் ரிங்கிட் சேவைக் கட்டணம் கொடுக்கப்பட்டது. இதைக் குறித்து தி எட்ஜ் என்கின்ற வார இதழ் கேள்வி எழுப்பியிருக்கிறது (27 அக்டோபர் – நவம்பர் 27). தி எட்ஜின் விமர்சனம் யாதெனில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகச் சேவைத் தொகை கொடுப்பானேன்? இந்தச் செலவுத் தொகையைப் பெற்றவர்கள் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா (Tony Pua) கேள்வி எழுப்பியதும் நினைவிருக்கும்.

 

2012, 2013ஆம் ஆண்டுகளுக்கான சட்டப்படி பரிசோதிக்கப் பெற்ற 1MDBயின் கணக்குகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் ஒரு குறையே. காரணம், 1MDB ஒரு பொது நிறுவனம். மக்கள் அதன் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளும் உரிமையுண்டு. இது ஒரு புறமிருக்க 1MDBயின் கடன் 42 ஆயிர லட்சக்கோடி ரிங்கிட்டாகும்.  (அதாவது 42 பில்லியன் – billion.) ஆண்டுதோறும் 2.31 பில்லியன் ரிங்கிட் சேவைத் தொகையைச் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு ஃபெப்ரவரி 13ஆம் தேதிக்குள் 1MDB ஈராயிர லட்சம் ரிங்கிட்டை மே வங்கி, RHB வங்கிகள் ஆகியவற்றிற்கு செலுத்தியது என 1MDBயின் பிரதான இயக்குனர் அறிவித்தார். அப்போது இந்த ஈராயிரம் கோடி (பில்லியன்) எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார் என்பது விளக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்களில், வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு செய்தி, நாட்டின் பிரபல கோடீஸ்வரர் ஏ.கே. ஆனந்தன் ஓராயிரம் கோடி (பில்லியன்) கடன் தந்தார் என்ற செய்தியை 1MDB தலைமை இயக்குநர் அருள் கந்தசாமி மறுத்தார். ஆனால், அது எப்படி வந்தது, எப்படி சேர்க்கப்பெற்றது என்பதைத் தெளிவுப்படுத்தவில்லை.  ஆனந்தகிருஷ்ணனும் அதைப்பற்றி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி தி எட்ஜ் கேட்ட கேள்விக்குத் தக்க தருணத்தில் விளக்கமளிக்கப்படும் என்றார் அருள் கந்தசாமி.

 

clareபல தரப்புகளில் இருந்து 1MDB குறித்து கவலை கொள்ளும் செய்திகள் வந்து கொண்டிருந்தபோது நிதி அமைச்சு வேறுவிதமான வாத்தியத்தை வாசித்தது. 1MDB பொருளாதார நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை என்றது. உண்மையில் நிதி அமைச்சுக்கு 1MDBயின் பொருளாதார நெருக்கடி தெரிந்த விஷயமாகும். நிதி அமைச்சு மூவாயிரம் கோடி ரிங்கிட் 1MDBயில் திணித்தாக வேண்டும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவை. அமைச்சரவையில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. இதெல்லாம் ஒருபுறமிருக்க 1MDB நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக சரவாக் ரிப்போர்ட் 1MDB குறித்து சில தகவல்களை வெளியிட்டது. அதுவும் பல சர்ச்சைகளைக் கிளப்பியது.  பலர் பலவிதமான வியாக்கியானங்களைத் தருவதற்குத் தயங்கவில்லை. முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகம்மது கூட பிரதமர் நஜீபுக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டார். குற்றச்சாட்டுகள் பெருகிவரும்போது 1MDB விவகாரம் குறித்து முழுவிசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வந்தது. இந்தச் சமயத்தில் மற்றுமொரு திடுக்கிடும் செய்தி வெளியாயிற்று.

 

பிரதமர் நஜீபின் வங்கிக்கணக்கில் எழுநூறு ஆயிரத்து லட்ச அமெரிக்க டாலர் (US700 மில்லியன்) போடப்பட்டது. இந்தத் தொகை மலேசிய நாணயப்படி ஈராயிரத்துப் பத்து லட்ச ரிங்கிட்டுக்கு (2.10 பில்லியன்) மேலான தொகையைத் தரும். இதைப்பற்றி குறிப்பிடுகையில் நஜீப் தந்த விளக்கம் என்ன? என் சொந்தக் காரணத்துக்காக அந்தப் பணத்தைச் செலவிடவில்லை என்றார். மேலும் சில விளக்கங்கள் தரப்பட்டன. அந்தப் பெரும்தொகை 13ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னர் நஜீபின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தியானவை என்று சொல்ல முடியாது; காரணம், 700 ஆயிரத்து லட்ச அமெரிக்க டாலர் நஜீபின் கணக்கில் zetiபோடப்படவில்லை என்று மறுக்கப்படவில்லை! யார் அந்தப் பெருந்தொகையை போட்டார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அது 1MDB பணமல்ல என்ற பதில் வெகுவிரைவாக வந்தது உண்மை. அது உண்மையாக இருக்கலாம். அப்படியானால் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அடுத்து, மலேசியாவில் இருந்து அந்தப் பணம் வந்திருந்தால் அது ரிங்கிட்டாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் நியாயம்தான். ஆனால் அது ஏன் அமெரிக்க டாலராக வந்தது. இவ்வளவு பெரிய வெளிநாட்டு நாணயம் தனிப்பட்ட ஒருவரின் கணக்கில் போடப்படுகிறது என்றால் பேங் நெகரா கேள்வி எழுப்பியிருக்குமே! பேங் நெகராவின் நிலைப்பாடு என்ன? சாதாரணமானவர் வங்கிக் கணக்கில் திடீரெனப் பெரும்தொகை போடப்பட்டால் வங்கி எச்சரிக்கையுடன் அதைக் கவனிக்க வேண்டும். அந்தப் பெரும் தொகையைப் பெறுபவர் தம் வங்கியிடம் விளக்கமளிக்க வேண்டும். குறிப்பாக அந்தப் பணம் ஏன் வந்தது, எதற்காக வந்தது என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். நிற்க, பேங் நெகரா இவ்வளவு பெரிய தொகை வந்ததை ஏன் விசாரிக்கவில்லை. அப்படியே விசாரித்து இருந்தால் அதன் விளக்கம் என்ன?

 

சொந்த நலனுக்கு அந்த 700 ஆயிரத்து லட்ச அமெரிக்க டாலரைப் பயன்படுத்தவில்லை என்று கூறும்போது எதற்காக அந்தப் பணம் செலவிடப்பட்டது என்ற விவரத்தை வெளியிடலாமே. வெளியிடத் தயங்குவது போன்றத் தோற்றம் மேலும் பல கேள்விகளை காலைநேர காளான்களைப்போல முளைக்க வழியுண்டு என்றால் மிகையாகாது. ஓர் அரசியல்வாதி அந்தப் பணம் 13ஆம் பொதுத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படிருக்கக்கூடும் என்ற அனுமானத்தை வெளியிட்டிருப்பதை ஒதுக்கித் தள்ள முடியவில்லையே! அந்த அரசியல்வாதி சொல்வது உண்மையானால் சட்டத்துக்குப் புறம்பானத் தேர்தல் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழ வழி உண்டல்லவா? சரியான பதிலைத் தராவிட்டால் தேர்தல் ஆணையம் தேசிய முன்னணி செய்த செலவைக் குறித்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். அதுதானே நியாயம்! அதுதானே சட்டம்.

 

1MDB விவகாரம் பலவிதமான சந்தேகங்களை எழுப்பியிருப்பதை மறுக்க முடியாது. அதற்கான விடையை நல்கும் பொறுப்பை தேசிய முன்னணி அரசு தவிர்க்க முடியாது – அதிலும் பிரத்தியேகமாக பிரதமர் நஜீப் அவரை ஆதரிப்பவர்களும் மலேசியர்களுக்குத் திருப்தி அளிக்கும் விளக்கங்களை நல்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர். அதைவிடுத்து 1MDB குறித்த சந்தேகங்களை எழுப்பி சீழ்க்கை ஊதியவர்களை (whistle blower) அச்சுறுத்துவது, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுவது நாட்டிற்கு நல்லது அல்ல.

 

minisபிரதமரும் அவரைச் சார்ந்தவர்களும், அவரை ஆதரிப்பவர்களும் இன்றும் மலேசியர்களை விவரமற்றவர்கள் என்று நினைத்துச் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு உண்மையைச் சொல்ல முன்வர வேண்டும். இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் தருவாயில் (28.7.2015) பிரதமர் புது அமைச்சரவையை அறிவித்துள்ளார். அதில் முக்கியமாக துணைப் பிரதமர்  முகைத்தீன் யாசின் இல்லை – அதாவது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.  இது மலேசியாவில் சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தாது.  மலேசியா பிளவுபடுவதற்கு இது உந்துதலாக இருக்கும் என்றால் மிகையாகாது.

 

அடுத்து, புத்ரா ஜெயா தகவல் பரப்புத்துறை ஆலோசகர் துன் ஃபைஸால் இஸ்மாயில் அசிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒருவரின் வங்கிக் கணக்கு விவரத்தை பிறத்தியார் தெரிந்து கொள்ள அதிகாரம் இல்லையாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கு பெறுவது நாட்டுக்கு நல்ல பெயரைத் தேடித்தராது.