-கி.சீலதாஸ். வழக்குரைஞர், ஆகஸ்ட் 11, 2015.
ஊழல் என்றாலே அது சமுதாய விரோதச்செயல்; நாகரிகமான வாழ்க்கைக்குப் பொருந்தாதச் செயல்; அது ஒழிக்கப்பட வேண்டிய அக்கிரமம். அது நல்ல சமுதாயத்துக்கு வழிகோலாத தீயசக்தி என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
உலகெங்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற்றனவா என்றால், இல்லை என்ற சங்கடமான பதில்தான் கிடைக்கும். ஊழலை கட்டுப்படுத்த முடிந்ததா? அதற்கான விடைகளைத் தேடும் பணி ஓய்ந்ததாகத் தெரியவில்லை.
ஊழலை அழிக்க முடியுமா? முடியும், ஆனால் அதை ஒழிப்பதற்கான மனஉறுதி தேவை. ஊழலை அழிக்கப் புறப்படும் முன் ஊழலற்ற சமுதாயம் எதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த அசிங்கமான சொல்லுக்கு உயிர் நல்குவது யார்? அரசுப் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மட்டும்தான் ஊழல் வாழ்க்கையில் நாட்டம் கொண்டவர்களா? இல்லை. ஊழல் சமுதாய வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தின் மயிர்க் கண்ணிலும் துளைத்து செழித்து நிற்கிறது எனின் மிகையாகாது. அரசு இயந்திரத்தில் மட்டும்தான் ஊழல் மலிந்திருக்கிறது என்பது ஏற்புடையதல்ல. இது (இலஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது ஆகிய இரண்டையும் குறிக்கிறது) ஒரு தொழுநோய். அது பரவிடும் பட்சத்தில் சமுதாயத்தில் பல கேடுகளை விளைவிக்கும், பல கொடுமையான காரியங்களுக்கு அது வித்திடும் தன்மையைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
குதிரைவண்டி சக்கரத்தின் அளவில் நாணயம்
அரசு ஊழியர்கள் மத்தியில்தான் ஊழல் பரவலாக இருக்கிறது என்பது வெள்ளிடைமலை. நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில் அரசு ஊழியர்களின் கொடுமையான ஊழல் சுபாவம் நாட்டின் பொருளாதாரத்தையே குட்டிச்சுவராக்கிவிடும் தரத்தைக் கொண்டிருக்கிறது. ஊழல் புற்றுநோய் போல் வேகமாகப் படர்ந்து பரவி சமுதாயம் என்கின்ற உடலை அழித்துவிடும். இந்த உண்மையை உணர்ந்ததால்தான் என்னவோ கிரேக்க நாட்டை உருவாக்கிய மன்னன் தமது அதிகாரிகள் ஈராண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் தமது அதிகாரத்தை செலுத்தாத வகையில் சட்டத்தை இயற்றினான். அதோடு, பணத்தின்மீது ஆசையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்த குதிரைவண்டி சக்கரத்தின் அளவில் நாணயத்தை உருவாக்கினான். ஒருவன் எத்தனைச் சக்கரங்களை தூக்கிக் கொண்டு போக முடியும்?
அரசு ஊழியர்கள் மத்தியில்தான் இந்த ஊழல் என்கின்ற தொழுநோய் இருப்பதாகக் கருதுவது தவறான முடிவாகும். ஊழல், அரசுதுறையில் மட்டுமல்ல வணிகத்துறைகளிலும் பரவி வருவதைக் காண முடியும். வணிகத்துறையில் எப்படி ஊழல் பரவும் என்று கேட்கக்கூடும். வங்கியில் கடனுக்கான மனு செய்தால் அங்கேயும் ஊழல் தாண்டவமாடுகிறது. அரசு வழங்குகின்ற கடனைப் பெறுவதற்கு முயற்சிக்கும்போது உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே, அந்த ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் ஒரு விலை உண்டு. அதைக் கொடுக்க ஒப்புக் கொண்டால் கடன் பெறலாம். இது எப்படி இருக்கிறது? கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தரமாட்டான் என்கின்ற வாய்மொழி மெய்பிக்கப்படுவதைக் காணலாம்.
மானம் பெரிது!
ஆளுங்கட்சியின் செல்வாக்கு எங்கும் பரவியிருப்பதால் அதன் தலைவர்கள் தங்களின் அந்தஸ்தைப் பயன்படுத்தி அரசு சம்பந்தப்பட்டக் காரியங்களைச் செய்ய முடியும். அதற்கும் ஒரு பரிகாரம் வேண்டாமோ? அந்தப் பரிகாரத்தை இலஞ்சம் என்று சொல்லாமல் வேறு என்னவென்பது? பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் லஞ்சத்தைப் பற்றி சொல்லும்போது, “கேட்கக்கூடாது! கொடுத்தால் பெற்றுக் கொள்வதில் தவறில்லை” என்றார். இது எப்படிப்பட்ட அரசியல் நாகரிகம்? அரசியல்வாதிகள் என்கின்றபோது, அதிலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாவட்ட, மாநிலத் தலைவர் என்றால் கட்சித் தேர்தலின்போது தமது பதவியைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பண அரசியலில் ஈடுபடுகிறார் – அதாவது பணத்தைக் கொடுத்து தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுகிறார். ஒரு சாதாரண மனிதருக்கு தன் பதவியைத் தற்காத்துக் கொள்ள கொடுக்கும் இலஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது, எங்கிருந்து வருகிறது என்பன போன்ற கேள்விகளை கட்சி உறுப்பினர்களே கேட்கிறார்கள்! பதில் பெரும் சிதம்பர இரகசியமாக இருக்கிறது. ஆனால், கட்சி உறுப்பினர்கள் தங்களின் சுயமரியாதையையும், தங்களது மானத்தையையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அதாவது, ஊழலுக்கு இடந்தரக்கூடாது, தங்களின் வாக்குகளுக்கு விலை பேசக்கூடாது, உரிமையை மட்டும் வலியுறுத்தி பாதுகாக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளில் நிலவும் பண அரசியலை விசாரிக்கும் அதிகாரம் இலஞ்ச ஒழிப்புதுறைக்குக் கிடையாது என்று கூறப்படுகிறது. பண அரசியல் பொதுநலனைப் பாதிக்கவில்லையாம். அப்படிப்பட்ட பண அரசியல் செயல் பொதுநலனுக்குப் புறம்பானதாகக் கருத முடியாது என்ற கருத்தும் பரவி வருகிறது. இது ஆரோக்கியமான அரசியல் என்று சொல்ல முடியாது. இது ஊழலை ஒழிக்க மனமில்லாத திராணியற்றவர்களின் சாக்குப்போக்கு என்றால் பொருந்தும். இதில் வேடிக்கை என்னவென்றால் கட்சிக்குள் பண அரசியல் கூடாது, பணத்தைக் கொடுத்து வாக்கு பெற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் சட்டத்திட்டங்கள் சொல்லும்போது பண அரசியலை குற்றவியலாக ஏன் சட்டம் இயற்றக்கூடாது?
பண அரசியலை ஒழிக்க சட்டம் வேண்டும்
1997ஆம் ஆண்டு லஞ்ச எதிர்ப்புச் சட்டம் அரசியல் கட்சிகளில் நிலவும் பண அரசியல் அல்லது பணத்தைக் கொடுத்து வாக்கைச் சேகரிப்பது அல்லது கட்சிகளில் பதவியைப் பெறுவதைப் பற்றி சொல்லாவிட்டாலும், பண அரசியல் என்பது ஒழுக்கக்கேடான செயல் என்பதை மறுப்பதற்கு இல்லை. நாட்டில் நடக்கும் பொதுத்தேர்தலின் போது பணம் கொடுத்து வாக்கு வேட்டை நடத்துவது குற்றமாக கருதப்படும்போது பண அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு விதிவிலக்கா என்ற கேள்வி எழும்புகிறது. பண அரசியல் மூலம் கட்சி பதவியில் அமருபவர்கள் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? கட்சியில் ஊழல் அரசியலை நடத்தியவர்கள் நாட்டு அரசியலிலும் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா?
பண அரசியலை நாகரிகமான போக்கு என்று யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அரசியல் கட்சிகள் அந்தக் கலாச்சாரத்தை துடைத்தொழிக்க முற்படாவிட்டால் சமுதாயத்தின் எல்லா துறைகளிலும் ஊழல் மண்டி விடுவதைத் தடுக்க முடியாது.
நாட்டில் வளம் பெற்று வரும் ஊழல் கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமென்பதே அரசின் அடிப்படை நோக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டப் பின்னும் அரசியல் கட்சிகளில் அதை ஒழிக்கச் சட்டம் இல்லை என்பது வெட்கக்கேடானதாகும்.
1997ஆம் ஆண்டு அமைப்புகள் சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து அரசியல் கட்சிகளில் பண அரசியல் நடத்தப்படுவதை குற்றமாக்கலாம். அப்படி குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை மட்டுமல்ல கட்சியில் எந்தப் பொறுப்பையும் வகிக்க முடியாதபடி செய்யலாம். குற்றத்தைத் தவிர்க்கச் சட்டம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. குற்றத்தை தடுக்கும் சட்டத்தை இயற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு.
திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல உழல் பேர்வழிகள் அவர்களாகவே திருந்த வேண்டும் இல்லையேல் அது புற்று நோய்ப் போல் புரையோடிக் கொண்டுதான் இருக்கும் ஐயா…!
அப்புறம் எதற்கு ஆயிரம் ஆயிரம் முறை விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறோம்? கடவுளுக்கே மரியாதை இல்லையா?
நானும் கூட ராஜா தானே நாட்டு மக்களிலே ! இதில் நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே !!… நான் என்னை சொன்னேன் !!!