பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகாமல் இருப்பதுதான் மலாய் இனத்தவரின் உண்மையான அரசியல் விழிப்புணர்சிக்கு வித்தாக அமையும் என்றும், ஆனால், அதுவே மலேசியாவுக்கு உகந்த ஒரு பல்லின அரசியலுக்கு வழி வகுக்கும் என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.
நடந்து முடிந்த இரண்டு நாள் பெர்சே 4 பேரணியில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அதில் மலாய் இனத்தவரின் எண்ணிக்கை சுமார் முப்பது விழுக்காடுதான் என்று கணிக்கப்படுள்ளது. மக்கள் தொகையில் சுமார் 55 விழுக்காடு உள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவில்தான் பங்கெடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு 2007, 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெர்சே பேரணிகளில் மலாய்க்கார்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டனர்.
இனவாத பயத்தை உருவாக்கும் அம்னோ
ஏன் இந்த மாற்றம்? அதுவும் 1எம்டிபி ஊழல் சார்பான பண பட்டுவாடாவில் பிரதமரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் ரிம 260 கோடி பணம் நுழைந்துள்ள தகவல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு ஜிஎஸ்டி வரி மக்களின் சுமையை அதிகரிதுள்ளது. மேலும், தற்போது ரிங்கிட்டின் மதிப்பும் குறைந்துள்ளது. இருந்தும், மலாய்காரக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த ஏன் முன்வரவில்லை?
இதற்கான காரணங்களின் அடித்தளம், மலாய் இனத்தவர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் இனவாத பயம் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம். நாட்டின் அரசியலை அம்னோ மட்டுமே நடத்த இயலும் என்ற நம்பிக்கையை கடந்த 58 வருடங்களாக ஊட்டி வரும் அம்னோ, அதை விட்டால் மலாய் இனத்திற்கு வேறு மாற்று இனவாத அரசியல் தளம் கிடையாதுவே கிடையாது என்ற மனப்பாங்கை அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் பாஸ் கட்சியால் அரசாங்கத்தை அமைக்க இயலாது. எனவே, மலாய் இனத்தவருக்கு அம்னோவை விட்டால் வேறு வழியில்லை என்ற இக்கட்டான சூழ்நிலையை அக்கட்சி வெற்றிகரமாக உருவக்கி விட்டது.
இனவாதமும் மதவாதமும் சித்து விளையாட்டு
தேசிய முன்னணி வழி சீனர்களையும் இந்தியர்களையும் தன்னுடன் இணைத்து அரசாங்க இயந்திரத்தை தனது கைக்குள் வைத்திருக்கும் அம்னோ, மலேசிய மக்களை ஒருங்கிணைக்க தவறிவிட்டது என்பதை விட ஒருங்கிணைய விடவில்லை எனலாம் என்கிறார் ஆறுமுகம். இனவாதமும் மதவாதமும் அம்னோவின் சித்து விளையாட்டு என்று வர்ணிக்கும் அவரது கட்டுரை வருமாறு:
மலாய் இனத்தவரை ஒருங்கிணைக்க அவர்களின் எதிரிகளாக சீனர்களும் இந்தியர்களும் சித்தரிக்கப்பட்டனர். அதன் தாக்கம் என்னவென்றால் மலாய் இனத்தவர் தங்களை அந்நியப்படுத்திக் கொண்டு அம்னோவின் குறுகிய அரசியல் சிந்தனையில் சிக்கிக் கொண்டனர். இவர்களோடு சீன – இந்திய சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் வலிமையற்ற அரசியல்வாதிகள் அம்னோவின் கைப்பாவையாக அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
அரசாங்கத்தை அது விரும்பியவாறு வழிநடத்தவும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் அம்னோ அதன் முழுமையான அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியது. அதன்வழி பல்வேறு கடுமையான சட்டங்களை இயற்றி மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் சனநாயக வழிமுறை போரட்டங்கள் முடக்கப்பட்டன. சனநாயகம் என்பது அம்னோவின் இனவாத சர்வதிகாரத் தன்மைக்கு சோரம் போய்விட்டது.
மக்களை இனவாத அடிப்படையில் வகுத்து, ஒரு கூறு போடப்பட்ட அரசியல் முறையை அம்னோ உருவாக்கியது. மலேசியா ஒரு சிறந்த சனநாயக நாடாக உருவாவதை தடுக்கும் சூழலை அம்னோ உருவாக்கியுள்ளது எனலாம்.
அரசாங்கத்தை மலாய் ஆதிக்கம் கைபற்றியது. பலவகையான பூமிபுத்திரா கொள்கைகளை உருவாக்கி அவற்றின் வழி மலாய் இனத்தவருக்கு ஒரு வலுவான பொருளாதார நிலையை உருவாக்க திட்டம் தீட்டியது. அதன் அடிப்படையில் 1970 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் உருவாக்கப்பட்ட அனைத்து மலேசிய ஐந்தாண்டு திட்டங்களும் இதர பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பூமிபுத்திராக்களின் மேன்மைக்காகவே வகுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன.
ஊன்றுகோல் வாழ்வாதாரம்
இது ஒரு முறையற்ற அரசியல் சூத்திரம் என்பதை அம்னோ உணர மறுத்தது. மலாய் இனத்தவர் அரசாங்கத்தின் அனைத்து வகையான வாய்ப்புகளையும் சலுகைகளையும் பயன்படுத்தி தங்களின் திறன்களையும் ஆற்றல்களையும் உயர்த்துவதற்கு மாறாக அவற்றை அவர்கள் ஒரு வாழ்வாதரா உரிமையாக உருவாக்கிக் கொண்டனர்.
அந்த உரிமையே அவர்களின் அரசியல் குரலாகவும் ஒலித்தது. உண்மையாக உழைக்கும் வாழ்வாதாரதிற்கும் ஊன்றுகோல் கொண்டு உயிர் வாழ்வதற்க்கும் உள்ள வேறுபாட்டை அம்னோ உணர மறுத்தது.
வளர்ச்சி அடைந்த உலக நாடுகளின் முக்கிய சொத்து அந்நாட்டவர்களின் மனிதவளமாகும். பயனுள்ள சிறந்த கல்வி, தொழிழ்நுட்ப அறிவு கொண்ட மக்கள், ஆய்வுத்திறன் கொண்ட கல்விமான்கள், அறிவியல் மேதைகள், விஞ்ஞானிகள் போன்றவைதான் அச்சொத்துகள்.
எடுத்துக்காட்டாக, 108 எரிமலைகளைக் கொண்ட ஜப்பான் இரு முறை தரைமட்டமாக்கப் பட்டது. 1923 இல் நடந்த நிலநடுக்கத்தால் தோக்கியோ நகரமும், இரண்டாம் உலகப் போரின் போது அணு ஆயுதத் தாக்குதலாலும் அது நிலைகுழைந்தது. ஆனால், இன்று அது தொடர்ந்து ஒரு பொருளாதார வல்லரசாக உள்ளது. அதற்குக் காரணம், அந்நாட்டு மக்களும் அவர்கள் நலன் கருதி அமைக்கப்படும் அரசியல் சமூக மேம்பாட்டு கொள்கைகளும் ஆகும்.
இரண்டாம்தர மனிதவள வளர்ச்சி
ஆனால், நமது நாட்டின் நிலை அப்படி இல்லை. இனவாதக் கொள்கை வழி மலாய் இனத்தை மட்டுமே மேம்படுத்த எண்ணம் கொண்டு, நாட்டின் பெருஞ்சொத்தாக உள்ள பல்லின மக்கள், இன அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர். திறனுக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கொடுக்காத மதிப்பற்ற கொள்கைகளும், அரசாங்க நிர்வாகத்தில் முழுமையான ஓர் இனத்தின் ஆதிக்கமும், நாட்டின் ஒட்டு மொத்த மனிதவள வளர்ச்சியை ஓர் இரண்டாம்தர நிலைக்கு தள்ளும் என்பதை அம்னோ ஏற்றுக்கொள்ள வில்லை.
இதன் விளைவாக நாளடையில் பலவீனமான அரசாங்க அமைப்புகள் உருவாகின.. இலஞ்ச ஊழல்களும் அரசியல் வழி அதிகாரப் பரிவர்த்தனைகள் செய்வதும் ஓர் அரசியல் பண்பாடாகவே உருவாகி வளர்ந்து நிற்கிறது. இனவாதம்தான் வழி என்று மக்களும் இந்த ஒழுங்கற்ற அரசியலுக்கு ஒத்துப்போவதை தவிர வேறு வழியில்லை என்று ஒரு அடிமை அரசியலுக்கு அடி பணிந்தனர்.
நாட்டின் வளங்களான பெட்ரோலியம், ரப்பர், செம்பணை, உற்பத்தி பொருட்கள் வழி கிடைக்கும் அந்நிய செலவானி அரசாங்கத்தின் நிதிநிலைமையைப் பாதுகாத்து வந்தது. ஆனால், இன்று உலக பொருளாதாரம் மாற்றம் கண்டு வருகிறது. அதைச் சாமளிக்கும் ஆற்றல் மலேசியாவிற்கு உள்ளதா என்பது நாட்டையே அச்சுருத்தும் ஒரு கேள்விக் குறியாகியுள்ளது.
குறைந்த சம்பள கொள்கை
இன்று மலேசியாவில் சுமார் 30 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். காரணம், முதலீட்டாளர்கள் குறைந்த சம்பள கொள்கை வழிதான் தங்களின் உற்பத்தியை பெருக்க இயலும். அதை விடுத்து, அதிக சம்பளம் கொடுத்தால் உலக சந்தையில் போட்டியிட முடியாது என்ற நிலையைக் கொண்டிருப்பதாகும். நாம் இன்றும் இந்த குறைந்த சம்பள கொள்கையில் சிக்கியிருப்பதால் பெரும்பாலான மலேசியர்கள் பல்வேறான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தின் பொருளாதர திட்டப் பிரிவு வெளியிட்ட தகவல்களின்படி (http://www.epu.gov.my/en/household-income-poverty), 55 விடுக்காட்டு மலேசியர்களின் மாதாந்திர குடும்ப வருமானம் ரிம 5,000 ஆகும். அதோடு கீழ்நிலையில் உள்ள 40 விழுக்காட்டு மக்களின் மாதாந்திர குடும்ப வருமானம் பூமிபுத்திராக்களுக்கு ரிம2,367 ஆகவும், இந்தியர்களுக்கு ரிம 2,672 ஆகவும் சீனர்களுக்கு ரிம 3,127 ஆகவும் உள்ளது.
இது ஒரு மோசமான ஏழை-பணக்கார வேறுபாடாகும். மலாய் இனத்தவர் இந்த ஒரு நிலையில் இருக்க யார் காரணம்? முழுமையான அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கொண்டு நாட்டை வழிநடத்தும் அம்னோவின் ஆட்சியில் அவர்கள் இனத்தின் 40 விழுக்காட்டினர் இந்தியர்களையும் சீனர்களையும் விட குறைவான வருமானத்தை பெறுகிறார்கள்!
அப்படியென்றால், 1970 முதல் போடப்பட்ட எண்ணிலடங்கா பூமிபுத்திரா திட்டங்களின் வழி பயனடைந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இச்சூழ்நிலை பூமிபுத்ரா திட்டங்கள் அனைத்து மலாய் இனத்தவருக்கும் பயனளிக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக தெளிவாக்குகிறது.
மலாய் இனத்தின் வறுமைதான் அம்னோவின் ஆயுதம்
அம்னோவின் பலம் என்பது அது எந்த அளவிற்கு மற்ற இனங்களை மலாய் இனத்தின் எதிரிகளாகக் காட்டுகிறது என்பதில்தான் உள்ளது. சில தருணங்களில் மலாய் இனத்தின் வறுமைதான் அம்னோவின் பலம் என்ற சூழலும் உருவாகிறது. எடுத்துக்காட்டாக, மலாய் இனத்தின் வறுமையை மேற்கோள்காட்டிதான் அரசாங்கம் தொடர்ந்து பல்வகைக் கல்வி, சமூக, பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கிறது. ஆனால், அதில் பயன் அடைபவர்கள் வறுமையில் உள்ளவர்களா என்ற வினா எழுகிறது.
நஜிப் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நுழைந்த ரிம 260 கோடி பணம் ஒரு நன்கொடை என்றும், அரசாங்கத்தின் நிதி நிலைமை சரியாகவே உள்ளது என்றும் கூறி சமாளித்து வருகிறார். அதற்கு அம்னோவின் அமைச்சரவை ஆதரவு நல்கி வருகிறது. ஆனால், இவற்றை நம்பும்படியான சூழலில் மக்கள் இல்லை.
மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் ஆட்சியைத் தொடர்ந்து நடந்த விரும்பும் அம்னோ, எப்படி ஒரு நல்லாட்சியை வழங்க இயலும்? அது இயலாது. நாடு இன்னமும் மோசமான நிலைமைக்குதான் தள்ளப்படும் என்பதே பலரின் கணிப்பு. நஜிப் தொடர்ந்து இருப்பது அம்னோவுக்கு ஆபத்தானது. ஆனால், அம்னோ அதை உணர்ந்தும் செயல் படாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது.
இந்த இக்கட்டான எல்லையில்தான் மலாய் இனத்தவரின் உண்மையான அரசியல் விழிப்புணர்சி உருவாகும், உருவாக்கப் பட வேண்டும். அது ஓர் ஒட்டுமொத்த பல்லின மலேசியர்களின் விழிப்புணர்ச்சியாகவே அமையும். அப்படி அது நிகழ வில்லையென்றால், பெரும் பாதிப்பை அடைபவர்கள் மலாய் இனத்தவர்கள்தான்.
unmai
அறிவுபூர்ணமான கட்டுரை ,வாழ்த்துக்கள் அய்யா.
மலாய்க்காரர்களின் ஏழ்மை தான் அம்னோவின் பலம். அம்னோ தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் மலாய்க்காரர்களை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. அவர்கள் பெரிய அளவில் முன்னேறி இருந்தாலும் ‘இல்லை, நீங்கள் ஏழைகள் தான்’ என்று தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மலாயக்காரர்களைவிட இந்தியர்களின் வருமானம் அதிகம் என்றால் இந்தத் தகவல்களைத் தொகுத்தவர் நிச்சயமாக அதிமேதாவியாக இருக்க வேண்டும்!
சிறந்த கருது உள்ள கட்டுறை வாழ்த்துக்கள் .
இதுவே உண்மை, அதுவரை பொருளாதார தாக்கத்தை எல்லோரும் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
சிந்திக்க வேண்டிய சில உண்மைகள்.அது மட்டும் அல்ல, பழைய VVIP கொள்ளையர்களை வேட்டையாட சரியான அலிபாபா தேவை.நமக்கு படை பலமும் இல்லை அரசியல் பலமும் இல்லை,ஒவ்வொரு அரசியல் வாதியும் கொள்ளை இட்ட சொத்துக்களை அண்டை நாடுகளிலும் தனியார் வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ளனர்.அதனை மீட்க துல்லியமான ஆதாரங்கள் தேவை,நம்பிக்கை நாயகன்தான் தற்போது இருக்கும் ஒரே ஆயுதம்.நாளுக்கு நாள் பொது மக்களின் விழிப்புணர்ச்சி பெருகிக்கொண்டே போகிறது இனியும் முடி மறைக்க முடியாது,காலம் கனிந்து வரும் பொது அரசியல் மாற்றம் அதன் இலக்கை நோக்கி செல்லும்….
சிந்திக்க வைக்கும் கருத்து….நன்றி
அருமையான ஆழம் மிக்க கட்டுரை. மலாய் மொழியிலும் பிரசுரிக்கப் பட வேண்டும். அதை மலாய்க்காரர்களும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் எதிர்கால சந்ததியினரின் நிலைப்பாடு ஒரு பெரிய கேள்விக் குறியாகி உள்ளது அவர்களுக்குப் புரியும். தொழிலியலில் திறன்மிக்க நிரந்தரமான உள்நாட்டு மனித வளத்தை வளர்க்க மலேசியா தவறி உள்ளது. இதனால் திறன்மிக்க ஊழியர் வெளியேற்றம் பெரிய அளவில் இடம் பெற்று வருகின்றது. இதில் சீனர் தமிழர் என்று இல்லாமல் மலாய்க்காரர்களும் வெளிநாட்டில் வேலை செய்ய கிளம்பி விட்டனர். இன்று நமது பொருளாதார வளர்ச்சிக் குன்றிய நிலையில் அல்லல்பட போவது மலாய்க்காரர்களே பெரும்பகுதியானவர்கள். இந்த அல்லல் என்பது தங்கக் கரண்டியில் ஊட்டி விட உணவு இல்லாத போது ஊட்டி விட்ட கையை கடிக்கும் நிலை வரும்போதுதான் அம்னோ உணரும். அந்நாளே மலாய்க்காரர்களுக்கு கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யும் நாளாகும் என்பதில் ஐயமில்லை. 20-ம் நூற்றாண்டில் மலாயா முன்னேறிய வேகத்திற்கு நிகராக 21-ம் நூற்றாண்டில் பின்னேற வழி விசாலமாக உள்ளது.
ஹலோ! அரசாங்கம் எங்களுடையது ,நாடு எங்களுடையது,உங்க உரிமையும் எங்களுடையது,எங்க உரிமையும் எங்களுடையது,உங்க சொத்தும் எங்களுடையது,எங்க சொத்தும் எங்களுடையது,உங்க வருமானமும் எங்களுடையது,எங்க வருமானமும் எங்களுடையது இப்படியே அடிக்கி கொண்டே போகலாம் ஆனால் இங்கே இடம் பத்ததாது …..ஆகா மொத்ததலே நாங்க பாட்டுன்னு கொள்ளை அடிச்சிகினே இருப்போம்……நீங்க பேசாமே போய்கின்னே இருக்கணும்….
மலாய்க்காரர்கள் ஏழை என்று யார் சொன்னது? இந் நாட்டின் பொருளாதாரம் இப்போது இவன்கள் கையில்– 1957 வுக்கும் 2015க்கும் ஒப்பிட்டு பாருங்கள் பிறகு புரியும். இந் நாட்டில் வேலை இல்லாமல் யார் பொருளாதரத்தில் இடமில்லாமல் தத்தளிக்கிறார்கள்? எல்லா வேலைகளிலும் யார் இருக்கின்றனர்? வங்கிகளிலும் மற்ற நிறுவனங்களிலும் யாருக்கு முதலிடம்? ராணுவத்திலும் விமானப்படையிலும் கடல் படையிலும் காவல் போன்ற மற்ற அரசு சம்பத்தப்பட நிறுவனங்களிலும் யார் உட்கார்ந்து இருக்கின்றனர்– இது புரியாமல் நம்மில் பலர் தலையை மண்ணில் புதைத்து வைத்து கொண்டிருக்கின்றனர். தமிழ் பள்ளிகள் என்ன நிலையில் இருக்கின்றது? மலாய் பள்ளிகள் முன்பு எப்படி இருந்தன?
ஐயா, உ ங்கள் தலைப்பும் முன்னுரையும் என்னைச் சிந்திக்க வைக்கிறது . எல்லா வளமும் உள்ள இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை. இலவசம் என்ற பெயரில் மக்களை ஊட்டி வளர்க்கிறது நமது அரசு . அரசியலில் மக்களுக்கு இன பேதமின்றி உழைக்க தலைவர்கள் தயார் நிலையில் இல்லை. கையூட்டும்,லஞ்சமும் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. நீதி உறங்குகிறது.சனநாயகம் என்ற பெயரில்சர்வதிகாரம்.இவை எல்லாம் நாட்டில் ஒல்லிந்தல்தான் நாடு உறுப்படும்.
மலாய்காரர்கள் பொங்கி எழும் வரை அண்ணாச்சி பதவியில் இருப்பார் ! bersih 5 மலாய்காரர்கள் தலைமையில் நடக்க வாழ்த்துக்கள் !
நல்ல அரசியல் சிந்தனை. இருப்பினும் பல முரண்பாடுகளைக் காண்கிறேன். சொல்ல வரும் தகவலைச் சொல்ல தயங்குவது ஏன்?
நாட்டின் நாணய மதிப்பு தொடர்ந்து படு வீழ்ச்சி அடையவா அவர் பதவியில் இருக்க வேண்டும்.