நமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா?, லிம் தெக் கீ

கடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அடையச் செய்துள்ளன.

அந்தக் கொள்கைகள் வருமாறு:

1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது;

2) பள்ளிக்கூடங்களில் “இண்டர்லாக்”‘ நாவலைக் கட்டாயப் பாடப்புத்தகமாகப் பயன்படுத்துவது; மற்றும்

3) வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயமாக்கி எஸ்பிஎம் என்ற சிஜில் பெலேஜாரான் மலேசியா சான்றிதழைப் பெறுவதற்கு அதில் தேர்ச்சியை பெற வேண்டும் என்பது.

சில ஆண்டுகளாகவே சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்த அந்த மூன்று விஷயங்களும் இப்போது முஹைடின் யாசின் கல்வி அமைச்சராக இருக்கும் காலத்தில் பூதாகரமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தேசியக் கல்வி முறையில் சிறிய அல்லது சாதாரண பிரச்னை மீது எழுந்த சர்ச்சைகள் அல்ல அவை.  அமைச்சருக்கு எதிராக போராட வேண்டும் அல்லது வேண்டுமென்றே அரசியல்வாதிகளினால் உருவாக்கப்பட்டவை அல்ல அவை. குறுகிய சமூகக் கண்ணோட்டத்தையும் அவை கொண்டிருக்கவில்லை. தங்கள் சொந்த நன்மைக்காக தீவிரவாத அமைப்புக்கள் அதனை முன்னெடுக்கவும் இல்லை.

சமூகத்தில் முக்கிய நீரோட்டத்தில் உள்ளவர்களும் அடிநிலையில் உள்ள அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெற்றோர்களும் கல்வியாளர்களும் அது குறித்து கவலை அடைந்துள்ளனர்.

அவை கற்பிக்கும் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டவை. குறுகிய அரசியல், நிர்வாக நலன்களுக்காக நமது இளம் தலைமுறையினர் பலிகடாவாக மாற்றப்படுகின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

நமது பள்ளிப் பிள்ளைகள் உலகின் மற்ற பகுதியுடன் போட்டியிடும் ஆற்றலைப் பெறவும் முதிய வயதில் அவர்களுடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கவும் விவேகமான கல்வி முறை அவசியமாகும்.

ஆங்கிலத்தில் கணித அறிவியல் பாடங்களைப் போதிப்பது

பேஜ் எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு நடத்தும் போராட்டத்தைப் பொறுத்த வரையில் அமைச்சர் அதன் தலைவர்களைச் சந்திக்க மறுத்துள்ளதுடன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பது “நமது கல்வி முறையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்” என்றும் கூறியுள்ளார்.

அந்தப் போராட்டக்காரர்களையும் அவர்களுக்கு இணையம் வழி ஆதரவு தெரிவித்துள்ள 100,000க்கும் மேற்பட்ட பேரையும் நிராகரிப்பதற்கு அது தவறான வழியாகும். கொள்கை மாற்றம் பாதகமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் எனச் சொல்வதும் தவறாகும்.

உண்மையில் மலாய் மட்டுமே என்னும் அமைச்சின் கொள்கையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மாணவர்களை குறிப்பாக மலாய் மாணவர்களைத் தண்டிக்கிறது. அதனால் ஆங்கில மொழி ஆதிக்கம் பெற்ற உலக முறையில் போட்டியிடுவதற்கான அவர்களுடைய ஆற்றல் குறைந்து அவர்களுடைய எதிர்காலத்தையும் மங்கச் செய்துள்ளது.

“இண்டர்லாக்” கொடூரமான அப்பட்டமான பிரச்சாரம்

“இண்டர்லாக்” விவகாரத்தைப் பொறுத்த வரையில் அதே போன்று போராட்டம் நடத்தும் நியாட் என்னும் தேசிய இண்டர்லாக் நடவடிக்கைக் குழுத் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் மறுத்துள்ளார்.

கட்டாயமான பள்ளிப் பாடப் புத்தங்களுக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டிகள், தரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கூட அந்த நாவலைப் பள்ளிக்கூடத்தில் பயன்படுத்தத் தகுதியற்றது என நியாட் வலியுறுத்துகிறது.

அந்தப் புத்தகம் இனவாத (பண்பாட்டு) அம்சங்களை அப்பட்டமாக காட்டுவதோடு பாகுபாடுகளையும் முரண்பாடுகளையும் சித்திரிப்பதால் அது பெரிய ஆபத்தைக் கொண்டுள்ளது. எஸ்பிஎம் தேர்வுக்கான பாஹாசா மிலாயு வினாத் தாளுக்கு அதனைக் கட்டாய இலக்கியப் புத்தகமாக்குவது என்ற முடிவு நமது இளம் தலைமுறையினரிடையே காணப்படுகின்ற ஒற்றுமையான இனப் புரிந்துணர்வுக்கும் மருட்டலை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புத்தகம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளது. அதனால் பள்ளிக்கூடங்களில் “பறையா”, “சீனா பாபி” போன்ற சொற்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. அதனால் எழுந்த பல சம்பவங்கள் ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில உள்ளூர் போலீஸ் நிலையம் வரைக்கும் போயுள்ளன.

அமைச்சு தனது நிலையில் மிகவும் பிடிவாதமாகவும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாலும் நியாட் மலாய் ஆட்சியாளர்களுக்கு நேரடியாக முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இப்போது நியாட் அமைப்பில் மேலும் 60 பல இன சமூக இயக்கங்களும் இணைந்து கொண்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் முயற்சியை தேசிய அளவில் விரிவு செய்யவும் நியாட் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரலாறு மூளைச் சலவைக்கு ஒரு கருவி

வரலாற்றுப் பாடத் திட்டம் இப்போது மறு ஆய்வு செய்யப்படுகிறது. வரலாற்றுப் போதனைகளில் இஸ்லாமிய சிந்தனைகளையும் மலாய் மேலாண்மையையும் நிலை நிறுத்துவதற்கான இன்னொரு கண்துடைப்பு, பொது உறவு நடவடிக்கையா அல்லது பாடத் திட்டத்திலிருந்தும் பாடப் புத்தகங்களிடமிருந்தும் முற்றாக நீக்கப்படா விட்டாலும் இனவாத சமய பாகுபாடுகள் குறைந்த அளவுக்கு இருக்கும் பொருட்டு சமநிலையான வரலாற்றை ( மலேசிய உலக வரலாறுகள்) வழங்கும் முயற்சியா என்பதும்  இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே அக்கறை கொண்ட பெற்றோர்களும் கல்வியாளர்களும் சமூக அமைப்புக்களும் தங்கள் முயற்சிகளை தொடருகின்றனர். தாரளமான, முன்னேற்றகரமான, பண்பாட்டு ரீதியில் சமநிலையான வரலாற்றுக் கல்வி இயல்பாக மீண்டும் உருவாக்கப்பட்டு விடும் என அவர்கள் நம்புகின்றனர்.

வரலாற்றுக் கல்வியை சீர்திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மனுவில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். உண்மையான மலேசிய வரலாற்றுக்கான இயக்கம் என அழைக்கப்படும் ஒர் அமைப்பு அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் வழங்குவதற்காக பல அறிஞர்களுடைய கட்டுரைகளையும் தகவல்களையும் தொகுத்து வருகிறது.

குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதியா அல்லது கொள்கைப் பிடிப்பு உள்ள தலைவரா?

இந்த சூழ்நிலைகளுக்கு இடையில் கல்வி அமைச்சர் காலத்தைக் கடத்தும் உறுதியற்ற போக்கைப் பின்பற்றி வருகிறார். அவர் உண்மையான தொலை நோக்குள்ள தலைமைத்துவப் பண்புகளை  கொண்டிருக்கவில்லை.

நமது தேசியக் கல்வி முறை, சரியான அறிவாற்றலையும் தேர்ச்சியையும் வழங்குவதை உறுதி செய்வதற்கு பதில் முஹைடினும் அவருக்கு யோசனை கூறும் -நிர்வாக, கல்வி, அரசியல் பிரிவுகளைச் சார்ந்த கொள்கை வகுப்பாளர்கள், நமது பள்ளிப் பிள்ளைகளை மொழி ரீதியாக பின்னடைவு அடையச் செய்கின்றனர். நமது சமூகம், உலகம் பற்றி தவறான கருத்துக்களை கொடுத்து வருகின்றனர். அந்த நிலை நாட்டின் மீதும் குழந்தைகள் மீதும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த இரண்டு கொள்கை முடிவுகளையும் மாற்றுவதற்கு அமைச்சருக்கு இன்னும் காலம் இருக்கிறது.

வரலாற்றுப் பாடத்தைச் சீர்திருத்தும் முயற்சிகள் உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். அதனைச் செய்ய வேண்டுமானால் அவர் முதலில் உண்மை நிலையை உணராத ஆலோசகர்களின் வழிகாட்டுதலை நிராகரிக்க வேண்டும். அந்த மூன்று சர்ச்சைகளையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது வரையில் அமைச்சு செவி சாய்க்காத பொது மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதி என்னும் தோற்றத்தை நிலை நிறுத்திக் கொள்வதா அல்லது நமது பள்ளிப் பிள்ளைகள், பெற்றோர்கள் ஆகியோரது நலன்களில் அக்கறையுள்ள கொள்கைப் பிடிப்புள்ள தலைவரா எனக் காட்டிக் கொள்வதா என்பது இனி முஹைடினை பொறுத்ததாகும்.

அந்த சர்ச்சைகளில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் சரியான முடிவுகளை முஹைடின் எடுப்பதற்குஊக்கமூட்ட வேண்டும். அதனால் நமது கல்வி முறையின் தரமும் உயரும்.

——————————————————————————–
டாக்டர் லிம் தெக் கீ கொள்கை வரைவுகளுக்கான மைய இயக்குநர் ஆவார்.

TAGS: