ஓசோனை ஓட்டையாக்காதீர்!

 

ஓசோனை ஓட்டையாக்காதீர்!  சர்வதேச ஓசோன்  தினக் கட்டுரை 16.09.2009 International Ozone Day. 

Untitled1

சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய கதிர்களை தேவையான அளவு புவிக்கு வழங்குகின்ற ஓரு படலமே ஓசோன் படலமாகும். இவ் ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரமே இன்று ஜீவராசிகள் எதிர் நோக்குகின்ற மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இவ் ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1987 செப்ரெம்பர் 16 இல்  கனடாவில் உள்ள மொன்றியலில் பல நாடுகளின் பிரதி நிதிகள் ஒன்றிணைந்து ஓசோன் படையின் அழிவைத் தடுக்க சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டனர். இதில் இருபத்திநான்கு நாடுகள் கைச்சாத்திட்டன. அத்தினமே, 1995 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

புவியைச் சுற்றி பல்வேறு வாயுக்களைக் கொண்டிருக்கும் படையே வளிமண்டலம் ஆகும். புவியினுடைய ஈர்ப்புச் சக்தியினாலேயே இவ் வளிமண்டலம் புவியைச் சுற்றிக் காணப்படுகின்றது. வளிமண்டலமானது மாறன்மண்டலம், படைமண்டலம், அயணமண்டலம் என்ற படைகளைக் கொண்டு காணப்படுகின்றது.

மாறன்மண்டலத்திற்கும், படைமண்டலத்திற்கும் இடையே 12 – 45 கிலோமீற்றர் வரையான ஸ்ட்ரட்ரோ ஸ்பியர்  பிரதேசத்தினுள்  காணப்படும் மென்படையே ஓசோன்படை எனலாம். ஒரு மெல்லிய புகைமண்டலம் போல ஓசோன் இங்கு பரவிக் காணப்படுகின்றது. அடர்த்தி குறைந்த ஒரு வாயு ஓசோன் ஆகும். இப் பகுதியில் இயல்பாக உள்ள ஒட்சிசன் மூலக் கூறு மீது சூரியனின் புறஊதாக் கதிர் வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டு ஒட்சிசன் அணுவாகப் பிரிக்கப்பட்டு, பின் இந்த அணுக்கள் ஒட்சிசன் மூலக் கூற்றுடன் இணைந்து ஓசோன் (O3) வடிவமாக உருவாகின்றது. ஓசோனை முதன் முதலாகக் கண்டறிந்தவர் சி.எப் ஸ்கோன்பின் என்பவராவர்.1

 ஓசோன் அமைந்துள்ள மாறன்மண்டலமே புவியின் வானிலை, காலநிலை நிலைமைகளுக்கு முக்கியமானதாகும். இப்படையானது சூரியனில் இருந்து வீசப்படும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்புக் கவசமாகச் செயற்படுகின்றது. வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தியை டாப்சன் அலகினால் அளவிடுகின்றனர். ஓசோனின் அடர்த்தியை கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றுள் டாப்சன் ஸ்பேக்ட்டோ மீற்றர், ப்ருவர் ஸ்பேக்ட்டோ போட்டோ மீற்றர், ஜோடு மீற்றர், பில்டர் ஓசோன் மீற்றர் எம்.83, பில்டர் ஓசோன் மீற்றர் எம்.124, மாஸ்ட், ஆக்ஸ்போட்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் என்பவை சிலவாகும்.

oson3அறிவியலாளர்கள் 1920 இல் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு, மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் சேர் வூட்ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செற்பாடுகளினால் ஓசோன்படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓசோன் படையில் துவாரமேற்பட்டிருப்பது தொடர்பாக 1982 ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவின் “கலிபே” என்ற இடத்தில் ஆராய்ச்சி நடாத்திய பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். உறைபனிக் காலத்தில் துவாரங்கள் தோன்றுவதாக NIMBUS 7 எனும் செயற்கை செய்மதியினால் கண்டறியப்பட்டது. 1984 ஒக்டோபர் மாதம் மீண்டும் ஆராய்ந்த போது முன்னரிலும் பார்க்க 30 வீதம் விரிவடைந்திருந்தமை கண்டறியப்பட்டது.

 ஓசோனைத் தேய்வடையச் செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே ஓசோன் படையின் அழிவிற்கு (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப் பொருட்கள் பிரதானமாக மனிதனின் செயற்பாடுகளினாலேயே வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரா காபன் (CFC Chloro floro carban),   கார்பன் தெட்ராகுளோரைட் (Carbon Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ காபன் (HCFC), மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite), போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குப் பொறுப்பாய் உள்ளன.

 ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருட்களால் வெளியேற்றப்படும் (ODS Ozone Depliting Substances) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திற்கோ சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் அனைத்து மக்களுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மானிடக் காரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் அழிவைத் துரிதப்படுத்தி, இயற்கை சமநிலை குலைகின்றது.

oson4

 இவ் ஓசோன் படையின் அழிவுக்கான காரணங்கள் பற்றி நோக்குகையில், நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை  ஓசோன் மண்டலத்தில் ஒரு படையாகப் படிந்து தாக்கம் புரிகின்றது. அத்துடன் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள் என்பனவற்றில் இருந்து வெளியேறும்  CFC இதற்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. வர்ணப் பூச்சுக்கள், இலத்திரனியல்  கைத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், துப்பரவாக்கல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம், ஐரோப்பிய நாடுகளில் கோதுமைத் தானியத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி நாசினிகள், அதிவேக விமானங்கள், அணுப் பரிசோதனை போன்றவை ஓசோன் படலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை விட ஏனைய வாயுக்களும் இதில் பங்களிப்புச் செய்கின்றது.

oson5

 ஹொலோன், மெத்தில் புரொமைஸ், காபன் மெற்றா குளோரைட், மெத்தில் குளோரோ போம் என்பனவும் ஹைரோகாபன்களாகும். அவற்றின் அழிவுகளின் மூலம் கிளோரித், பிரோமித் போன்ற ஹெசவின் பிரிவொன்றும் உருவாகும். இவை மண்ணிலிருந்தும் கடல், நீராவி என்பவற்றில் இருந்தும் வெளிப்படுகின்றது. இது தவிர இயற்கையாக எரிமலைகள், பருவமாற்றங்கள், சூரியவட்டம், காற்றின் வேகம் இவற்றினாலும் ஓசோன்படை பாதிப்படைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைத்தொழில் பேட்டைகளில் இருந்து உருவாகும் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களாக குளோரோ புளோரா காபன், மெதேன், நைதரசன் ஒக்சைட் போன்ற வாயுக்கள் 100 – 125 ஆண்டுகள் வரை வளிமண்டலத்தில் நிலைத்திருக்கும் தன்மை வாய்ந்தன. எனவே, இவை படிப்படியாக ஓசோன் படலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து சுயாதீன ஒட்சிசன் மூலக்கூறுகளை உருவாக்கி ஒட்சிசன் படலத்ததைப் பிரிகையடையச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கீழ் வளிமண்டலத்தில் இப் பொருட்கள் எமது சுற்றாடலுக்கு எது வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. எனவே கைத்தொழிலுக்காக இவற்றின் பாவிப்பு அதிகளவாகக் காணப்படுகின்றது. எனினும் இவை சுற்றாடலில் கலந்ததன் பின்பு கீழ் வளிமண்டலத்தில் உள்ள ஏனைய வாயுக்களும் தாக்கங்களை ஏற்படுத்தாது.

படிப்படியாக மேல் வளிமண்டலம் வரை இந்த வாயு, அதிகளவான சக்தியினை சூரிய ஒளிக்கதிர்கள் ருஏ (Ultra Violet) உடன் ஒன்றிணைந்து கிளோரின் அல்லது பிராமிக்த் ஹெலயிட் ஓசோனுடன் செயற்பட்டு கிளோரின் அல்லது பிரோமின் மொனோ ஒக்சைட்டின் உற்பத்தி செய்யும். இங்ஙனமாக உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் சிதறி ஹெலயிட் அணுவினை அழிக்கும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதன் மூலம் தொடர்ச்சியாக ஓசோன் அணுக்கள் அழிக்கப்படும் என விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளோரிக் அணுவிற்கு ஒரு  மில்லியன் ஓசோன் அணுக்கள் குறைவதினால் ஓசோன் படலத்தின் தடிப்புக் குறையும். எனவே, இங்ஙனம் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைதலை ஓசோன் துவாரம் என அழைப்பார்கள். ஓசோன் துவாரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து முன்மொழிந்தவர் அமெரிக்க இரசாயனவியலாளரான சேர்.வூட்ரவ்லண்ட் என்பவராவார்.

 oson6ஓசோன் துவாரத்தின் தற்போதைய நிலையினை ஆய்வாளர்கள் செயற்கைக் கோளின் துணையுடன் ஆராய்ந்து வருகின்றனர். அந்தாட்டிக்காவில் ஓசோன் துவாரத்தின் பரப்பு 1980 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டுள்ளது. ஓசோன் துவாரத்தின் பரப்பு ஆகஸ்ட் மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ அளவில் ஆரம்பித்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாத இறுதியில் குறைய ஆரம்பித்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஓசோன் துவாரம் முழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் ஓசோன் துவாரத்தின் பரப்பு அதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்த நிலைமாறி, 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ ஆக அதிகரித்திருந்தது. இந்த பரப்பளவு அவுஸ்ரேலியாவின் பரப்பளவினை போல் மூன்று மடங்காகும். ஆனால் 2002 ஆம் ஆண்டில் இதன் பரப்பளவு வெகுவாகக் குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆக இருந்தது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக் குறைந்த பரப்பளவு கொண்ட ஓசோன் துவாரம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 ஓசோனில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் உயிர்ச்சுழலுக்கு  பொருத்தமற்ற ஒளிக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால், மனிதனுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதாவது, தோல்புற்று நோய், கண்களில் வெள்ளை உண்டாதல், அதன் மூலம் கண்பார்வை அற்றுப்போதல், மனிதனின் நோய்த் தடுப்பு முறைகளில் தாக்கங்கள் ஏற்படுதல், நோய்த்தடுப்பு, உடல் சக்தி குறைதல் போன்றவையாகும். இதனைவிட தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், அவற்றின் பலாபலன்கள் குறைதல், மீன் இனம், ஊர்வன ஆகியவற்றின் முட்டைகள் மிக விரைவாக அழிவடைதல், UV கதிர்களின் வீச்சினால் அப்பகுதிகளில் உள்ள மீனின் உணவுகளான பிளான்டன்கள் அழிவடைதல் ஆகியவைகளினால் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் வளம் குறைவடைந்துள்ளது.

 CFC வாயுவும், காபன்டைஸ் ஒட்சையிட் வாயுவும் அதிகளவான சக்தியினை கொண்டவையாகும். இந்த வாயுவின் முக்கிய தொழிற்பாடு வெப்பத்தினை சீராக வைத்திருத்தலாகும். இவ்வகையான வாயு ஒன்று பாச்சப்படுதலின் காரணமாக வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் முனைவுப் பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் உயர்வடைந்துள்ளது. காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்ஙனமாக ஒன்றொடொன்று தொடர்புடைய சுற்றாடல் பிரச்சினைகள் அதிகளவு ஓசோன் படையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளது. எவ்விதத்திலும் ஓசோன் படலத்தின் சிதைவின் இறுதிப் பிரதிபலன் பூமியில் வாழும் சகல உயிரினங்களினதும் அழிவாகும்.

oson7ஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்புக் கவசமாகத் தொழிற்படுகின்றது. ஓசோன் வாயுவிற்கு பங்கம் ஏற்படுத்தும் பொருட்களைப் பாவனையில் இருந்து நீக்கிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, குளிரூட்கள், கொலோன்  உற்பத்திக்கு CFC க்கு பதிலாக மாற்றுப் பொருட்களாக ஓசோன் விரும்பத்தக்க HFC (ஹய்ரோ புளோரோக் காபன்), வகைகளைப் பாவித்தல். தெளிபொருளாக ஹய்ரோ காபன் பாவித்தல், கமத்தொழிலுக்கு பாவிக்கப்படும் மெத்தில் போமலிங் பதிலாக வேறு பாவனைகளை மேற்கொள்ளுதல்.  தீயணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் காபன்டைன் ஒட்சைட் போன்ற மாற்றுப் பொருட்களைப் பாவித்தல், வளர்முக நாடுகளில் வெளியேற்றப்படும் CFC உள்ளடங்கலான பொருட்களை இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்றன இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

 ஓசோன் படையின் பாதுகாப்புத் தொடர்பாக 1976 இல் ஐ.நாவின் சுழல் திட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டது. 1977 இல் இது குறித்து வல்லுனர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஓசோன் படலப் பாதிப்பைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், உலக நிலவிய அமைப்பும் சேர்ந்து ஓசோன் படலத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைந்தனர். ஓசோனைப் பாதிக்கும் நிலைகளைத் தடுப்பதற்கான உலக நாடுகளிடையே ஒரு அனைத்துலக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சி 1981 இல் தொடங்கியது. அத்துடன் 1985 மார்ச்சில் நடைபெற்ற வியன்னா மாநாடு முடிவுகள் உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 இதனையடுத்து 1987 இல் கனடாவில் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் பொருட்கள் குறித்து,  மொன்றியல் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மாநாடுகள் 1990 இல் லண்டனிலும், 1992 இல் கெர்பன்கேகளிலும் நடத்தப்பட்டது. 1995 இல் CFC இனை நிரத்திரமாகத் தடைசெய்வதற்கான ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் இப்பிரச்சினை இதனுடன் தீர்ந்து விடவில்லை. CFC இன் பயன்பாட்டை ஐரோப்பிய சமூகம் 2015 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றது.

oson81990 களில் சுவிஸ்லாந்தில் சுமார் 52.8 மில்லியன் தொன் பாதகமான வாயுக்கள் வெளியிடப்பட்டதாக அறியப்பட்டுள்ள போதும், 2008 ஆம் ஆண்டில்; 48.4 தொன்னாக குறைவடைந்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையில் சுவிசில் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிடப்படுள்ளது.

மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் சூழல் – நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளைக் கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதினை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகளும்  சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருப்பது, சூழல் நட்புத் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயப்பித்துள்ளது. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அனைத்துலக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை (Coding) Harmonized System  (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களை தற்போது உற்பத்தி செய்யவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகிற்கே பாதுகாப்பு படையாகக் காணப்படும் இவ் ஓசோன் படையானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் உண்மையினைப் புரிந்து கொண்டு அனைத்துலக நாடுகளும் தமது சுயாதீன சிந்தனைகளைச் சற்று தியாகம் செய்து இவ் ஓசோன் படையின் பாதுகாப்பில் அக்கறை காட்டுமானால் ஓசோன் படையினைப் பாதுகாப்புடன் பேணமுடியும். வளரும் பல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். “தூய்மையான இருப்பிடம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை” மனிதன் இயற்கையை விட்டும், தூய்மையை விட்டும் தூரமாய் செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. ஆகவே, ஒவ்வொரு தனிமனிதனும் இதனை உணர்ந்து செயற்படுவானேயானால், இயற்கை எம் மீது தொடுக்கும் போரில் இருந்து விடுபட முடியும் என்பது திண்ணம்.

நன்றி

து.ரஜனி