தாய்மொழிப்பள்ளிகளுக்கு மேலும் ஒரு மிரட்டல்

kulaமு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செம்டெம்பர் 23, 2015.

 பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள ஒரே மொழி பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு  அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் அப்துல்  வாஹிட் ஒமார் கூறியதாக  நேற்று  உத்துசான் நாளிதழ்  முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை உணர்வு  ஆரம்பப் பள்ளிகளிலேயே தொடங்கப்படவேண்டும்  எனவும் அதற்கு  எல்லா இன மாணவர்களும் ஒரே போதனா மொழி வழி பயின்றால் அது  நாட்டின்  பொருளாதார  வளர்ச்சிக்கு வித்தாய்  அமையும்  எனவும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு ஆப்பு  வைக்க வேண்டும்  என்ற மறைமுகப் போராட்டம்  சமீபத்தில் அதிகமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு  இதைத்தான்  இப்போதைய துணைப் பிரதமர் ஹமிடியும் கூறியிருந்தார்.

ஒரே மொழிப்பள்ளிக்கூடங்கள் என்றால் அது மலாய்ப் பள்ளிகள்தாம்  என்று  பிரதமர்  துறை அமைச்சர்  குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவர்  சீனப்பள்ளிகளையோ தமிழ்ப்பள்ளிகளையோ குறிப்பிட்டிருக்க மாட்டார் என்று உறுதியாக நம்பலாம்.

ஒற்றுமைக்கும்  தாய்மொழிப்பள்ளிகளுக்கும்  தொடர்பு  இருப்பதாக  எந்த ஓர் ஆய்வும் சொல்லவில்லை  என்பதனை நாம்  எத்தனையோ முறை  கூறிவிட்டோம்.

 

கழிவறையில் உண்ணச் சொல்லும் கலாச்சாரம் ஒற்றுமையை வளர்க்குமா?

 

நிகழ்கால பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி நன்றாக அமைய வேண்டும் என்ற  எண்ணத்தில்  சிறப்பாக செயல் படும் பள்ளிகளுக்கே அனுப்பிவைக்கின்றார்கள். அவர்களின்  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்வது போல  சீனப்பள்ளிகளும்  தமிழ்ப்பள்ளிகளும்  சிறந்த  அடைவு  நிலையை  கண்டு வருகின்றன. குறிப்பாக கணிதம்,  அறிவியல் பாடங்களில் தமிழ், சீன மொழிப்பள்ளிகள் ,தேசிய பள்ளிகளை விட அதிக முன்னேற்றம் கொண்டவையாக உள்ளன.

மேலும், தேசியப்பள்ளிகளில்  நடக்கும்  சில  நடவடிக்கள்  மக்களின்  மத்தியில்  அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளன.  உதாரணத்திற்கு மலாய்க்காரர் அல்லதா மாணவர்களை கழிவறைகளில்  உண்ணச் சொல்வது, பெருநாள் காலங்களில் பள்ளிக்கூடங்களில்  மாடு  வெட்டுவது, மணவர்களை  இனங்களின் பெயரால்  துவேஷிப்பது போன்ற நடவடிக்ககள்  மக்கள் மத்தியில் எதிர்மறையான  தாக்கத்தை  ஏற்படுதியுள்ளது.

மதச்சார்பற்ற பள்ளிகள் என்ற  தோற்றத்தை  இழந்து இப்போதைய  தேசியப் பள்ளிகள் இஸ்லாம் மதம் சார்ந்த பள்ளிகள்  போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவும்  பல  மலாய்க்கார அல்லாத பெற்றொர்கள் தங்களின்  பிள்ளைகளை தேசியப் பள்ளிக்கு அனுப்ப தயங்குவதற்கான காரணம்.

ஒரே மொழிக்கொள்கை என்று  கூறும்  இது போன்ற  அம்னோக்காரர்கள்  இண்டர்நேஷனல் பள்ளிகள் காலான்  போல  முளைத்து  அங்கு  ஆங்கிலம்  போதானா மொழியாக  இருக்கும் பொழுது  எந்த  மொழிப் பள்ளிக்கு மக்களை அமைச்சர்  போகச் சொல்லுகின்றார் என்று  விளக்கினால்  நன்றாக இருக்கும் .

பணம் உள்ளவர்கள்  மட்டுமே தங்கள்  பிள்ளைகளை இண்டர்நேஷனல் பள்ளிகளுக்கு பயில அனுப்புகின்றார்கள் . அப்படியானால் அமைச்சரின் கூற்றுப்படி மேன்மக்களுக்கு  ஒற்றுமை  தேவைப்படாது போல் இருக்கிறது..

மலாய்ப் பள்ளிக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பும் நடுத்தர வர்கத்திற்கும் கடைநிலையில்  உள்ளவர்களுக்கும்தான் இந்த போதனை என்ற எண்ணமும் எழுகின்றது.

தாய்மொழியில்  பயிலும் மாணவர்கள் 6 ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலைப்பள்ளிகளிலும்  பல்கலைக்கழகங்களிலும் மலாய்  மொழியில்தான்  பயிலப் போகிறார்கள்  என்பதுவும்  தெரிந்த விடயமே. அப்படி  இருக்கும்  பொழுது வெறும்  முதல் ஆறு ஆண்டுகள்  மட்டுமே தாய்மொழி  வழி  பயில்வதனால் அது  எவ்வகையில்  இன  ஒற்றுமைக்கு  ஊறு  விளைவிக்கப்போகிறது என்பது  புரியவில்லை.

சீனமும்  தமிழும்  உலகின்  மூத்த மொழிகள் அவை  இந்த நாட்டில்  பள்ளிகளில்  போதிப்பது  மலேசியாவிற்கு  பெருமை.Perkasaonestreamschool2

தாய் மொழி வழி  போதித்தால் மாணவர்கள் இலகுவாக  பாடங்களை  புரிந்து கொள்வார்கள்  என  யுனெஸ்கோ அறிக்கையும் , பல முன்னணி பல்கலைக்கழக ஆய்வுகளும்  தெரியப்படுத்துகின்றன.

வேற்றுமையில்  ஒற்றுமை என பறை சாற்றும் மலேசியாவிற்கு தாய்மொழிப்பள்ளிகள்  இல்லையென்றால் இந்த சுலோகத்தை விளம்பரப்படுத்த  வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

உண்மையான  பொருளாதார  வளர்ச்சியும்  இனங்களின்  ஒற்றுமையும் தாய் மொழிப்பள்ளிகளை  அழிப்பதனால்  வருவதல்ல என்பதனை பிரதமர்துறை அமைச்சர் அப்துல்  வாஹிட் ஒமார் புரிந்து  கொள்ள வேண்டும்.

 

மாரா கல்வி நிலையங்களில் ஏன் ஒரே இன மாணவர்கள்?

 

ஏறக்குறைய 90 ஆயிரம்  மலாய்  மாணவர்கள்  சீனப்பள்ளிகளில்  பயிலுகின்றார்களே அவர்களுக்கு  அப்துல்  வாஹிட் ஒமார் என்ன சொல்ல விரும்புகிறார்?

சீன மொழிப் பள்ளிகள் தரமான கல்வியை  வழங்குகின்றன என்று  மலாய்ப் பெற்றோர்கள் எண்ணுவதால் அங்கு  அனுப்புகின்றார்களே அவர்களை  இவரால்  கட்டுப்படுத்த முடியுமா? அல்லது  சீனப்பள்ளியில் படிக்க மேலும்  அதிகமான  மலாய் மாணவர்கள் அனுப்படவேண்டும் , அப்படி செய்தால் ஒற்றுமை  இன்னும்  வளரும் என்று மலாய்  பெற்றோர்களுக்கு அறிவுறை சொல்லப்போகிறாரா ?

இந்த ஓற்றுமைக் குறைவுக்கு அரசாங்கக் கொள்கைகளும்  ஒரு  முக்கிய காரணமாக  அமைகின்றன. ஒரே இனத்தை  சார்ந்த மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன்  கூடிய  பள்ளிகள், ஒரே மதத்திற்கான தனிப்பட்ட  பள்ளிகள் என மாணவர்களை கூறு  போட்டு கல்வி  புகட்டினால் எப்படி  ஒற்றுமை  வளரும்?

மாரா 1967ல் ஆரம்பத்திலிருந்தே  இன்று  வரையில்  ஒரே இன மாணவர்களைக் கொண்டே  கல்வி  போதித்து  வந்துள்ளது.  இந்திய,  சீன மாணவர்களுக்கு  அங்கு இடமில்லை . பதின்ம வயதில்  ஒற்றுமையின் மகத்துவத்தை  புரிந்து  கொள்ள  தயாரயிருக்கும் மாணவர்களை தனியாகப் பிரித்து கல்வி போதித்தால் எப்படி  ஒற்றுமை  வளரும் ?

இதில்  இன்னுமொரு வேதனையென்னவென்றால் , வெளிநாட்டு மாணவர்கள் மாராவில்  படிக்கலாம் ஆனால்  உள்நாட்டில்  குடிமக்களாய்  இருக்கு இந்திய  சீன மாணவர்கள் அங்கு  பயில முடியாது. அரசாங்கமே இப்படி  மக்களை இன வாரியாக  பிரித்து விட்டு, பிறகு தாய் மொழி பள்ளிகள்  ஒற்றுமைக்கும் , வளர்ச்சிக்கு  தடையா இருக்கின்றன  என்று  பிதற்றினால் எங்கு போய்  முட்டிக்கொள்வது ?

யு ஐ டி எம் பல்கலைக்கழகத்தில்  மலாய் மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்பது  எழுதப்படாத சட்டம் . சீன/இந்திய மாணவர்களுக்கு  அங்கு இடமில்லை. இது  எப்படி  ஒற்றுமையை வளர்க்கும் என்பதை பிரதமர்  துறை  அமைச்சர்  விளக்குவாரா ?

மெட்ரிக்குலேஷனில்  பயில  வெறும்  10% சீன இந்திய மாணர்களுக்கு  மட்டும்  வாய்ப்பளிக்கப்படுகிறது மக்கள் தொகையில்  40% இருக்கும்  சீன,  இந்திய  சமூகங்களுக்கு  வெறும் 10% மட்டுமே வாய்ப்பளித்தால்  ஒற்றுமை  வளர்ந்துவிடுமா?

இது போன்ற  காலத்திற்கு  ஒவ்வாத , மனித  குலத்திற்கு எதிரான கொள்கைகளையும் நடவடிக்ககளையும்  அரசு  தூக்கியெறிய வேண்டும்.

ஒற்றுமை என்பது கட்டாயப்படுத்தி சேர்த்து வைப்பதானால் வருவது  அல்ல  , அது உணரப்பட வேண்டும் மக்கள் மனதில், அரசாங்கம் தங்களை சமமாகவும் நியாயமாகவும்  நடத்துகின்றது என்ற  உணர்வு  எப்பொழுது  எழுகிறதோ அப்பொழுதுதான் இந்த  நாட்டில்  உண்மையான ஒற்றுமை  ஏற்படும்.