கா.ஆறுமுகம். ஒரு திருடன் சுவர் மேல் ஏறி பார்க்கும் போது, உள்ளே இருந்த ஒரு நாய் அவனைப் பார்த்தது. ஆனால் குரைக்கவில்லை. திருடனும் குதித்தான். அப்போதும் அது குரைக்கவில்லை. கலவாட சன்னல் பக்கம் போனான். அப்போதும் குரைக்கவில்லை. சரி நாயிக்கு இரண்டு பிஸ்கட் போடுவோம் என்று பையிலிருந்ததை எடுத்துப்போட்டான்.
உடனே நாய் சத்தமாக குரைக்க ஆரம்பித்தது. பயம் கவ்வ, நாயிடம் கேட்டான், “இது நியாயமா?” என்று. அதற்கு நாய் சொன்னது, “எல்லாம் சரிதான், ஆனால், எனக்கு ஏன் பிஸ்கட் போட்டாய், அப்போ நீ ஏதோ தீயதைச் செய்ய போகிறாய். அதற்கு என்னை உடந்தையாக்கவா!” என்றது நாய். (இது பட்ஜெட் சார்பான ஒரு வாட்ஸ்அப் காணோளியில் கண்டதின் சாரம்.)
2016-இன் பட்ஜெட் பத்தி சொல்ல வேண்டுமானால், நாம் நன்றியுள்ள மக்களாக இருக்க வேண்டுமாம். அவ்வளவுதான், அந்த அளவில்தான் உள்ளது பட்ஜெட்.
சுமார் ரிம 26,720 கோடி (267.2 பில்லியன்) 2016-இல் செலவு செய்யப்படும். அதாவது, ஒரு 5 நபர்கள் கொண்ட குடும்பம் ரிம 50,000 செலவு செய்வதற்கு சமமாகும். அதாவது நாம் ஒவ்வொருவரும் (குழந்தைகள் உட்பட) நாள் ஒன்றுக்கு ரிம 137 செலவு செய்வதாகும். இதற்கு ஈடாக வரவும் இருக்க வேண்டும். ஆனால் வரவு ரிம 22,570 கோடியாகும் (225.7 பில்லியன்). இந்தப் பத்தாத தொகை நாட்டின் கடனோடுச் சேர்ந்துவிடும்.
நாடு மக்களுடையது. அதன் வருமானம் மக்களுக்கானது. ஆகவே, இந்த அரசாங்கம் செலவு செய்யும் பணம் நம்முடையதாகும். அதனால்தான் நிதி அமைச்சர் பட்ஜெட்டை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்து, மக்கள் தேர்ந்தெடுத்த நாடளுமன்ற உறுப்பிணர்களிடம் இருந்து ஒப்புதல் வாங்குகிறார்.
நாட்டை வழிநடத்த நாம் நாடளுமன்றம் வழி ஓர் அமைச்சரவையை அமைத்து அதன் வழி அரசாங்கத்தை வழிநடத்துகிறோம். அடிப்படையில் இதற்கான இயக்க சக்தியை வழங்குவது மக்கள்தான்.
ஆனால், நடைமுறையில் இப்படி கிடையாது. நமது நாட்டில், பிரதமர்தான் சக்தி வாய்ந்தவர். அவர் அசைந்தால் எல்லாம் அசையும். அதற்கான சக்தியை கொடுத்ததும் மக்கள்தான்.
நமது சக்தி வாய்ந்த பிரதமர்தான் நாட்டின் நிதி அமைச்சரும் கூட. 1எம்டிபி என்ற அரசாங்கம் அமைத்த ஒரு வாணிப நிருவனத்தின் ஊழல் சார்பாக வெளியான செய்திகளின் படி ரிம 260 கோடியை தனது சொந்த வங்கிக்கணக்கில் வரவாக பெற்றவர்.
பட்ஜெட் தொகையான ரிம 26,720 கோடியைப் பிரித்து மக்களுக்கு கொடுத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (சராசரி 5 நபர்கள் கொண்ட குடும்பம்) ரிம 50,000 கிடைக்கும். இந்த அளவில் உள்ள பணத்தைச் செலவு செய்து 2016 ஆண்டை அரசாங்கம் ஓட்ட உள்ளது.
இந்தச் செலவுகளின் வழி நமது நிலமை எப்படி செழிப்படையும்? நாம் எப்படி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வது, அதாவது நமக்கான ரிம 50,000-ஐ அரசாங்கம் எப்படி செலவு செய்ய வேண்டும்? அதன் வழி நமக்கான பலன் என்ன என்பதுதான் கேள்வி.
சிலவகையான செலவுகள் அத்தியாவசியமானவை. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, கல்வி, பாதுகாப்பு, மருத்துவம், போக்குவரத்து இப்படி பல உள்ளன. தனியார்மயமாக்கப்பட்ட பிறகு இதன் வழி மக்களுக்கான பெரும் சேவைகள் பலவகையில் குறைக்கப்பட்டன. இருப்பினும் கொழுத்து இருக்கும் அரசாங்க இயந்திரத்தை ஓட்ட ரிம 21,520 கோடியும் நாட்டின் மேம்பாட்டிற்கு ரிம 5,200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே அடிப்படை அரசாங்க சேவைகளுக்கு அப்பால் நமக்கு அரசாங்கம் எப்படிப்பட்ட வகையில் நிதி நிருவாகத்தை அமைப்பது, அவை எப்படி மக்களை மேம்படுத்தும், வறுமையை ஒழிக்கும், ஓர் உயர்ந்த வருமானம் பெரும் சமூகமாக உருவாக்கும், சுற்றுப் புறத்தை பாதுகாக்கும், தலைக்கு மேலே ஒரு கூரை வேண்டும் என்பவரின் தாகத்தை தீர்க்கும், பாதுகாப்பான சூழலையும், தரமான சுகாதரத்தையும் வழங்கும் என்பது போன்ற வினாக்களுக்கு விடை தரும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும்.
ஆனால், வளமான நமது நாட்டில், வேலை வாய்ப்புகள் கை நழுவுகின்றன. வாயிக்கும் வயிற்றுக்கும் எட்டாத நிலையில் உள்ள குறைவான சம்பளமும் அதே வேலையில் விலைவாசி உயர்வும் சுமார் 40 சதவிகித மக்களை அழுத்துகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலை கல்விக்கு பிறகு கல்வி என்பதை வாணிபமாக மாற்றப்பட்டதால் சேமிப்பு உறிஞ்சப்பட்டு கடனாளியாகிறார்கள். வீடு வாங்க நினைப்பவர்களின் நிலை இலவு காத்த கிளியாகி விடுகிறது. ஜிஎஸ்டி வழி வரி செலுத்தும் நிலை, டோல் என்ற சாலை கட்டண வரி இப்படியாக சுமார் 40 சதவிகித மக்கள் கடன் சுமையுடந்தான் வாழ்கிறார்கள்.
மக்கள் அப்படி இப்படி என்று தட்டுத்தள்ளாடி காலத்தை ஓட்டுகிறார்கள். இந்த கீழ்மட்டத்தில் வாழும் 40 சதவிகித (கீவா40) மக்களையும் அரசாங்கம் அடையாளம் கண்டு பட்ஜெட் எப்படி அவர்களை உயர்த்தும் என்றும் கூறுகிறது.
கீவா40-இல் உள்ள ஒவ்வொரு குடும்பதிற்கான அந்த ரிம 50,0000 என்னவானது? அவர்களின் துயரைப் போக்க அரசாங்கம் அப்படி என்னதான் செய்யப்போகிறது?
2016இல் இந்தியர்களுக்கு தெக்குன் என்ற திட்டத்தில் 10,000 நபர்கள் பயனடைய ரிம 10 கோடி (ரிம 100 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இன்னொரு ரிம 10 கோடி இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு (SEDIC) ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர, பிரிம் எனப்படும் உதவித்தொகை வழங்கப்படும். ரிம 1,000 க்கும் குறைவாக வருமானம் பெரும் குடும்பங்களுக்கு ரிம 1,050 கிடைக்கும். ரிம 3,000க்கும் குறைவாக வருமானம் பெரும் குடும்பங்களுக்கு ரிம 1,000 மும், ரிம 3,001 முதல் ரிம 4,000 வரை பெரும் குடும்பங்களுக்கு ரிம 800 கிடைக்கும்.
மேலும் அரசாங்கம் குறைந்தபட்ச சம்பள அளவை ரிம 900 –லிருந்து ரிம 1,000 க்கு கூட்டியுள்ளது.
இவற்றின் மதிப்பீட்டை கணித்தால் கீழ்மட்டத்தில் வாழும் 40 சதவிகித (கீவா40) மக்களுக்கு பட்ஜெட் தரும் நேரடி பயன் பிரிம் வழி கிடைக்கும் ரிம 800 முதல் ரிம 1,050 மட்டும்தான். அதாவது குடும்ப ஒதுக்கீடான ரிம 50,000 –இல் கிடைப்பது வெறும் 2 விழுக்காடுதான். அப்படியென்றால் மீதமுள்ள 98 சதவிகிதமும் இந்த கீவா40-இல் வாழ்வோருக்கு நேரடி பயன் இல்லாத நிலையில்தான் பயன் படுத்தப்படுகிறது.
பட்ஜெட்டில் தொழிற்துறை கல்விக்கு ரிம 480 கோடியும், இராணுவத் தளவாடங்கள் வாங்க ரிம 1,730 கோடியும், அரசாங்க ஊழியர் சம்பள உயர்வுக்கு ரிம 110 கோடியும், பிரதமர் துறைக்கு ரிம 2,300 கோடியும் ஒதுக்கீடுகளில் அடங்கும். இவற்றில் பெரும்பாலனவை கீவா40-இல் வாழ்வோருக்கு பயன் தரும் வகையில் இல்லை.
1990-ஆம் ஆண்டு முதல் மலேசியா ஒரு துரித வளர்ச்சிக் கண்ட நாடக முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் அந்த முன்னேற்றம் எல்லா மக்களையும் சென்று அடையவில்லை. ஒரு சாரார் வளர சுமார் 40 சத விகித மக்கள் அதைலிருந்து விடுபட்ட நிலையில் பெயர் போட்டு வருகிறார்கள். குறைந்தபட்ச சம்பள அடிப்டையில் அயல்நாட்டு தொழிலாளர்களை இலட்சக்கணக்கில் கொண்டு வந்து குவித்தது இந்த கீவா40-இல் இருக்கும் மக்களுக்கு ஒரு பேரிடியாகவே உள்ளது.
இந்த ஆண்டும், ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டால் மக்களின் சுமையை அகற்ற இயலாது. அதோடு விலைவாசி ஏற்றமும், பணவீக்கமும், பொருளாதார மந்தமும் அதிகமானால், கீவா40- இல் உள்ள மக்கள் தங்களது வாழ்க்கையைச் சாமாளிக்க மேலும் சிரமப்படுவார்கள்.
தொடக்கத்தில் சொன்ன கதையில் நாய் வாலாட்டும் என்று திருடன் நினைத்திருப்பான், ஆனால் அது வாலாட்ட வில்லை!
நாடு இதேநிலையில் தொடர வேண்டுமா, வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இனி வரும் காலங்களில் நம் நாட்டிற்கு தலைமை தாங்கும் எவரும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது என்பதை சட்டமாக வரையறுக்கப்பட வேண்டும் .அரசாங்க திட்டங்கள் யாவும் கீழ் நிலையில் உள்ள மலேசியர்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும் .இன அடிப்படையில் இருக்கக்கூடாது .
இந்நாட்டில் வாழும் மலாய்கர அரசியல் வாதிக்கும் த மிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. I
அட பட்ஜெட்டை விடுங்க ! 2.6 பில்லியன் “ஊழல் நன்கொடையை” மலேசியர் அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளித்தால், மக்கள் நன்றியுள்ளவர்களாக மாற வாய்ப்பு உண்டு.
அமீனோ அரசாங்கத்திற்கு சக்தி கொடுத்தது அரசாங்க ஊழியர்களில் பெரும்பகுதியினரும், புறநகர் மற்றும் கிராமப்புற மலாய்க்காரர்களும் இண்டியன்களும். பணவீக்கமும், வேலை இல்லா திண்டாட்டமும் மேற்கூரியவர்களைக் எப்பொழுது கடிக்கின்றதோ அன்றுதான் அவர்கள் நாய் கடித்துக் குதறுவது போல் அரசாங்கத்தை கடித்துக் குதருவார்கள். அதுவரை இவர்கள் செய்த பாவத்திற்கு நாமெல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
நிச்சயமாக, நாங்கள் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாகவே இருப்போம். பன்றியைத் தின்றாவது நாங்கள் வாழ்ந்து காட்டுவோம். பயப்பட வேண்டாம்!
சார், உங்க பெயரை கட்டுரைக்கு கிழே போடுங்க சார்! படிக்கும் பொது உங்க பெயருக்கு அடுத்து திருடன் வந்த அவ்வளவா நல்ல இல்லை…
நாய் கதை அருமை,
குறள் 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.. .
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
இது அரசுக்கும் தம் மக்களுக்கும் சொல்லும் கதை.நாய் கதையில் வரும் பிஸ்கெட் என்ற சப்சிடி முற்றாக அகற்றபட வேண்டும்,ப்ரீம் அகற்றபட வேண்டும்.அரசு அரசியல் இன்றி செயல்பட வேண்டும்.மக்கள் தன் தகுதி வுணர வாய்பளிக்கும்,வாழ்க நாராயண நாமம்.